வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 15

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

டி.எம். சௌந்தர்ராஜனின் குரலில் பதிவான மூன்று பாடல்களையும் ஒன்றுமே பேசாமல்
கேட்டார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

அந்தக் குரலில் இருந்த கம்பீரம், தெள்ளத் தெளிவான தமிழ் உச்சரிப்பு - அது வரை பாடி வந்த பாடகர்களின் குரலில் இருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டு தொனித்த ஆளுமைத் திறன்.

"இந்தக் குரலுக்கு ஏற்றபடி பாவனை காட்டி உன்னால் நடிக்கமுடியுமா?"- என்று தனது நடிப்புத் திறமைக்கே ஒரு சவால் விடுவது போல அமைந்த பாடகனின் குரலாகத்தான் அது அந்த நடிப்புச் சக்ரவர்த்திக்கு பட்டது.

பாடல்களைக் கேட்டு முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை அவர். ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தது போல இருந்தது அவர் முகம்.

ஏதும் பேசாமல் எழுந்தவர் அங்கிருந்த டி.எம்.எஸ்.ஸின் அருகில் வந்து அவர் தோளைத் தட்டிக்கொடுத்து, "எனக்கான எல்லாப் பாட்டையும் நீயே பாடிடு." என்று சொல்லிவிட்டு
நகர்ந்துவிட்டார்.

அன்றிலிருந்து கிட்டத்தட்ட ஒரு கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேல் நடிகர்திலகத்தின்
பாட்டுக் குரலாகப் பரிமளித்தார் டி.எம்.சௌந்தரராஜன்.

அதற்கான ஆரம்பம் ஜி. ராமநாதன் இசை அமைத்த "தூக்கு தூக்கி" படத்தின் பாடல்களால் தான் நடந்தது.

இன்னும் சொல்லப்போனால் "பராசக்தி" முதல் "தூக்கு தூக்கி"வரை வெளிவந்த நடிகர் திலகத்தின் படங்கள் எல்லாம் அவரது நடிப்புத் திறமைக்காகத்தான் அதுவரை பெரிதும் பேசப்பட்டன. பாடல்கள் எல்லாமே சுமார் ரகத்தைச் சேர்ந்தவைகளாகவே மதிப்பீடு செய்யப்பட்டன.

ஆனால் பாடல்களுக்காகப் பெரிதும் பேசப்பட்ட, பாடல்களாலேயே பெரிய வெற்றியை அடைந்த நடிகர் திலகத்தின் முதல் படம் "தூக்கு தூக்கி"தான்.

தனது படங்களைப் பற்றி சுயமதிப்பீடு செய்தபோது தூக்கு தூக்கி படத்தைப் பற்றி அவர் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்:

"அதில் பாடலுக்குத்தான் முக்கியத்துவம். அந்தப் படத்தின் ஹீரோவே பாட்டுத்தான். அந்த இசை கலந்த படத்தில் நானும் இருந்தேன் என்பது எனக்குப் பெருமையே தவிர அதில் உள்ள பாடல்களுக்குத் தான் எல்லாப் பெருமையும் சேரும்"

அந்த அளவுக்கு ஒரு இசை சாம்ராஜ்யமே நடத்தி இருந்தார் ஜி. ராமநாதன்.

இந்தப் படத்தில் லலிதாவுக்கு பின்னணி பாடியவர் எம்.எஸ். ராஜேஸ்வரி. பத்மினிக்கு பி. லீலா. ராகினிக்கு எம்.எல்.வசந்தகுமாரியும், ஏ.பி. கோமளாவும் பாடினர். வில்லனாக வரும் டி.எஸ். பாலையாவுககும் ஒரு பாட்டு வி.என். சுந்தரத்தின் குரலில் ஒலிக்கிறது. பாடல்களை மருதகாசி, உடுமலை நாராயணகவிராயர், தஞ்சை ராமையாதாஸ்
ஆகியோர் புனைந்திருந்தனர்.

எந்தப் பாடலை யார் எழுதினார்கள் என்பது படத்தின் டைட்டிலில் தனியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாடல்களுக்கு மிகவும் எளிமையாக, ஜனரஞ்சகமாக இசை அமைத்து நமது பாரம்பரிய இசையை பட்டிதொட்டிக்கும் எடுத்துச் சென்றுவிட்டார் ஜி. ராமநாதன்.

ஆம். நமது தொன்மையான கர்நாடக இசையை பண்டிதர்களும், இசை நுணுக்கம் அறிந்தவர்களும் மட்டுமே ரசிக்க முடியும் என்று இருந்த நிலையை மாற்றி சாதாரணமான, பாமர மனிதர்களும் ரசிக்க முடியும் என்பதை இந்தப் படத்தின் பாடல்களின் மூலம் அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் அவர்.

"கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம்? வேறிதிலே உந்தன்
கவனம்?" - பாடலில் மறுபடியும் "பீம்ப்ளாஸ்" ராகத்தை தனக்கே உரிய முறையில்
அழகாகக் கையாண்டு டி.எம்.எஸ்.-எம்.எஸ். ராஜேஸ்வரியை பாடவைத்து ராமநாதன்
கொடுத்திருக்கும் ஒரு அற்புதமான இணைப்பாடல் இது.

"கொண்டுவந்தால் தந்தை."
"கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் தாய்"
"சீர் கொண்டுவந்தால் சகோதரி"
"கொலையும் செய்வாள் பத்தினி"
"உயிர் காப்பான் தோழன்"

- இந்த ஐந்து வாக்கியங்களும் கதாநாயகனின் வாழ்க்கையில் எப்படி உண்மையாகின்றன என்பதை சொல்லும் கதை.

வடநாட்டு வியாபாரியும் கதாநாயகனின் மனைவியும் பாடும் காதல் டூயட் (கொலையும் செய்வாள் பத்தினி என்பதை வேறெப்படி நிரூபணம் செய்வதாம்?!) "மேரே பியாரி நிம்பள் மேலே" - தஞ்சை ராமையாதாஸ் எழுதிய இந்தப் பாடலை வி.என். சுந்தரம் - எம்.எஸ். ராஜேஸ்வரி இணைந்து பாடியிருக்கின்றனர்.

ஹிந்துஸ்தானியும் தமிழும் கலந்து ஒலிக்கும் இந்தப் பாடலுக்கு ஹிந்துஸ்தானி காபி, ஆனந்த பைரவி ஆகிய ராகங்களை பயன்படுத்தி தாளக்கட்டுடன் கொஞ்சம்,
விருத்தமாகக் கொஞ்சம் என்று இரண்டும் கலந்த கலவையாக பாடலை அமைத்திருக்கிறார் ஜி.ராமநாதன்.

"கண்டால் கொள்ளும் விஷமாம்" என்று விருத்தமாகத் தொடங்கி சொற்கட்டுடன் தொடரும் "பெண்களை நம்பாதே. கண்களே பெண்களை நம்பாதே." பாடலும் இந்த வகையில் தான் அடங்கும்.

ஜி. ராமநாதனும் கே.வி. மகாதேவனும் தான் இந்தப் பாணியை அடிக்கடி பயன்படுத்தி வந்த இசை அமைப்பாளர்கள்.

"வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து" என்று தொடங்கும் ஆண்டாளின் நாச்சியார் திருமொழிப் பாடலை முதலில் திருமதி. எம்.எல். வசந்தகுமாரி விருத்தமாகப் பாடியிருக்கிறார். அந்த விருத்தத்தை ராமநாதன் அமைத்திருக்கும் விதமே அலாதி. அந்த மோகனமும், ஆரபியும் தான் எம்.எல்.வி. அவர்களின் குரலில் இரண்டு நிமிடங்களுக்குள் எத்தனை எத்தனை ஜாலங்கள் புரிகின்றன!

தொடர்ந்து அதே விருத்தத்தை பத்மினியின் நடனத்துக்காக பி. லீலாவைப் பாடவைத்தார் ஜி. ராமநாதன். காம்போதி ராகத்தில் முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமாக தாளக்கட்டுடன் ஒலிக்கும் பாடலுக்கு முகப்பிசையும், இணைப்பிசையும் காதுகளை நிறைக்கின்றன.

கர்நாடக இசைப் பிரியர்களுக்காகவென்றே இந்தப் பாடலையும், "சுந்தரி சௌந்தரி நிரந்தரியே" பாடலையும் அற்புதமாகக் கொடுத்திருக்கிறார் ஜி. ராமநாதன்.

"ஐயா சாமி. எனக்கு இப்படிப்பட்ட நுணுக்கங்கள் எல்லாம் தெரியாது. என்னை மாதிரி ஆளுங்களுக்கு பாட்டுப் போடுங்க." என்று கேட்கும் ரசிகனுக்கு..?

இருக்கவே இருக்கிறது "குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்.", " ஏறாத மலைதனிலே" -
முன்னதில் எளிமைப்படுத்தப்பட்ட ஷண்முகப்ரியாவை டி.எம்.எஸ்., பி.லீலா, ஏ.பி. கோமளா, வி.என். சுந்தரம் ஆகிய நால்வர் கூட்டாகச் சேர்ந்து கலக்குகின்றனர் என்றால்...

'ஏறாத மலைதனிலே" - ஒரு அப்பட்டமான கிராமிய மெட்டு. காவடிச் சிந்து வகையைச் சேர்ந்தது. டி.எம். எஸ். தனித்துப் பாடும் இந்தப் பாடல்தான் படத்திலேயே மிகவும் பிரபலமான பாடல்.

ஆனால், இப்படிக் கிராமியமாக, தெம்மாங்குப் பாடல்களைக் கொடுத்தாலும் அவற்றுக்கான ராகங்களை விட்டு இம்மி கூட விலகாமல் கவனித்துக்கொள்வது ஜி.ராமனாதனின் ஸ்பெஷாலிட்டி.

சங்கீதம் என்பது எல்லாருக்கும் பொதுவானது. நுணுக்கம் அறிந்தவர் மட்டும் தான் அதை ரசிக்க அதில் மூழ்க முடியும் என்பதில்லை. ராக தாள ஞானம் சற்றும் இல்லாத மனிதர்கள் கூட கொடுக்கிறபடி கொடுத்தால் நமது பாரம்பரிய இசையை ரசித்து உணர முடியும்.

வேண்டுமானால் அவர்களுக்கு ராகங்களின் பெயர்கள் தெரியாமல் போகலாம். அதனால் என்ன? நல்ல சங்கீதத்தை அவர்களால் ரசிக்க முடிகிறதே? அது போதுமே?

இப்போதெல்லாம் பள்ளிகள் தோறும் நமது தொல்லிசையை மாணவர்கள் மத்தியில் கொண்டுசெல்லவேண்டும் என்று டி.எம்.கிருஷ்ணா, சௌமியா, பாம்பே ஜெயஸ்ரீ போன்ற இசைவல்லுனர்கள் முயற்சி செய்து இயக்கங்கள் நடத்தி வருகிறார்கள். அவர்கள் ஜி. ராமனாதனின் பாடல்களையும் கூட அதற்கு தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொல்லிசையை திரை இசை மூலம் பாமர ரசிகனுக்கும் கொண்டு சென்ற முதல் இசை அமைப்பாளர் அவர் தான்.

******

வெகுஜன வரவேற்பை பெரிதும் பெற்றிருந்தாலும் அந்தக் காலத்தில் பத்திரிகைகளின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானது "தூக்கு தூக்கி".

ஆனால் - பாடல்கள் அதன் பலமாக அமைந்து படத்தை படுத்துவிடாமல் காப்பாற்றியதோடு நில்லாமல் மாபெரும் வெற்றிப் படமாகவும் செய்துவிட்டன.

டி.எம்.எஸ். அவர்களின் திரை உலக வாழ்க்கைக்கு ஒரு பலமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த படமாக அமைந்தது இந்தப் படம்.

சற்றேறக்குறைய அதே சமயம் இன்னொரு இளம் பாடகரும் ஜி. ராமனாதனின் அபிமானத்துக்கு உரியவராகி இசை உலகில் சாதனை படைக்க வந்தார்.

இவரும் ஒரு ராஜா தான். முன்னவர் சௌந்தரராஜன் என்றால் இவர் கோவிந்தராஜன். சீர்காழி கோவிந்தராஜன்.

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</