வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 13

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

வெற்றிக்கான பாதைகள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்.

ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட துறையில் வெற்றி காணவேண்டும் என்று விருப்பம் இருக்கலாம். ஆனால் அவரால் வேறொரு துறையில்தான் மிகச் சிறப்பாக பரிமளிக்க முடியும்.

திறமை என்பது ஒரு மனிதனுக்கு அவனது இயல்போடு –(ஆங்கிலத்தில்“nature”
என்பார்களே ) - ஒத்து வரக்கூடிய ஒன்றாக இருந்தால்தான் அப்படி இயல்பை ஒட்டிய துறையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு சிகரம் தொடமுடியும்.

மாறாக மனம் விரும்பும் மார்க்கம் அவனது இயல்புக்கு ஒத்துவராமல் போனால் என்னதான் முயன்றாலும் சரி அவனால் அதில் வெற்றி காண முடியாது.

காரணம் - மனம் ஆயிரம் நினைக்கும்; லட்சங்களை விரும்பும். அது எல்லாமே நடந்துவிடுமா என்ன?

அவரவர் இயல்போடு ஒட்டிய துறையில் சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் மட்டுமே வெற்றிவானில் சிறகடித்துப் பறக்க முடியும்.

மாறாக "இக்கரைக்கு அக்கரைப் பச்சை" என்பதுபோல மனம் விரும்பும் அனைத்தையும் சாதிக்க முயலும் மனிதன் தோல்வி அடைவதை - சரிவைச் சந்திப்பதை - தவிர்க்க முடியாது.

இந்த நிலையில் தான் இருந்தார் ஜி. ராமநாதன்.

அவரது ஊணோடும், உணர்வோடும், உயிரோடும் இரண்டறக் கலந்திருந்தது இசை. இசை. இசை மட்டுமே தான். அதைத் தவிர வேறு இல்லை. அப்படி அவருக்கு இயல்பாகிப்போன இசைத்துறையில் ஈடுபடும்போது எதிர்ப்பட்ட சவால்களையும், எதிர்பாராத குறுக்கீடுகளையும் அவரால் வெகு சுலபமாக எதிர்கொண்டு வெற்றி காண முடிந்தது.

"மந்திரிகுமாரி"யில் பாடலை நீக்க முயன்றபோது அதிபர் சுந்தரத்தையே எதிர்த்துப் போராடி தான் நினைத்ததைச் சாதிக்க முடிந்தது.தயாரிப்பாளரின் சந்தேகத்தை மீறி ஜிக்கியை கதாநாயகிக்காக பாடவைக்க முடிந்தது. மறுக்கப்பட்ட டி.எம்.எஸ். அவர்களின் குரலுக்கு ஒரு அங்கீகாரம் வாங்கிக் கொடுக்க முடிந்தது.

இதற்கெல்லாம் காரணம் - இசை அவரது நடைமுறை வாழ்க்கையோடு ஒன்றி அவரது இயல்பாகவே மாறிவிட்டிருந்ததால்தான்.

ஆனால் அதிலேயே சிகரங்களைத் தொட வாய்ப்புகள் வந்து குவிந்த நேரத்தில்...

அப்படி கிடைத்த வாய்ப்புகளை சிறப்பாகக் கையாண்டு பொருளும், புகழும் குவித்துக்கொண்டிருந்த நேரத்தில்..

தனது இயல்புக்கு முற்றிலும் மாறுபட்ட படத் தயாரிப்புத்துறையில் இறங்கினார் அவர்.

ஜி. ராமனாதனின் "ஸ்ரீ சாய் கானாமிர்தா பிக்சர்ஸ்"ஸின் "புதுயுகம்" - தயாராகிக்கொண்டிருந்தது.

வெறும் இசை அமைப்பாளராக இருந்தபொழுது இருந்ததை விட இப்பொழுது பொறுப்பும், பணிச்சுமையும் அதிகமாகி அவரை அழுத்த ஆரம்பித்தது.

மாடர்ன் தியேட்டர்ஸில் அதிபர் டி.ஆர். சுந்தரம் அவர்களின் நம்பிக்கைக்குரிய இசை அமைப்பாளராக இருந்த வேளையில் அதிபரின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வந்தவருக்கு ஒரு படத்தை தயாரிப்பது என்பது சுலபமான வேலை என்று தோன்றி இருந்திருக்க வேண்டும்.

ஏற்கெனவே "ஜமீன்தார்" படத்தின் தோல்விக்குப் பிறகாவது தனக்கு எளிதான இசைத் துறையில் தீவிர கவனம் செலுத்தி இருந்திருந்தால் அவரை மிஞ்ச ஆளே இருந்திருக்க முடியாது.

"புது யுகம்" படத்துக்கு இசை அமைப்பும் அவரே. ஒரு பெரிய இசைமைப்பாளாராக இருந்த அவர்
வேறொருவர் தயாரிக்கும் படம் என்றால் "இந்தப் பாட்டை இன்னார்தான் பாடவேண்டும்" என்று பரிந்துரைப்பதில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவது இல்லை.

மாறாக தனது சொந்தப் படத்தில் அதுவரை தன் இசையில் பாடிவந்த எல்லாப் பாடக பாடகியருக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று நினைத்தால் தயாரிப்புச் செலவினம் அதிகரிக்கத் தானே செய்யும்?

புது யுகத்தில் பாடியவர்கள் யாரெல்லாம் தெரியுமா? எம்.எல். வசந்தகுமாரி, பி.லீலா. ஏ.எம். ராஜா, கண்டசாலா, திருச்சி லோகநாதன், டி.எம். சௌந்தரராஜன், எஸ்.சி. கிருஷ்ணன், வீ.டி. ராஜகோபால்.. போதுமா?

அனைவரும் பாடவேண்டும் என்றால் கதைப்போக்கை அதற்குத்தகுந்த மாதிரி விஸ்தீரணம் செய்தாக வேண்டுமே. செய்தார்.

எஸ்.வீ. சுப்பையா, நரசிம்ம பாரதி, எஸ்.ஏ. நடராஜன், எம்.எஸ். திரௌபதி, கிருஷ்ணகுமாரி - என்று நடிக நடிகையர்கள்.

செலவு கூடிக்கொண்டே போனதனால் தனது சேமிப்பு முழுவதையும் செலவழிக்க ஆரம்பித்தார் ஜி. ராமநாதன்.

மாடர்ன் தியேட்டர்ஸ் வளாகத்தில் முதலாளி சுந்தரம் அவரது கப்பல் காருக்கு இணையாக அவர் நிறுத்தியிருந்த "டியூக்" காரை விற்க வேண்டியதானது.

இப்படி சொந்தப் படத்தயாரிப்பு ஏற்படுத்திய மன அழுத்தம் காரணமாக - வேலைப்பளுவின் காரணமாக - ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருந்த படங்களின் இசை அமைப்பையும் சரிவரக் கவனிக்க முடியாத சூழ்நிலை.

புதுப்பட இசை அமைப்புக்கான வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்க வேண்டியதாயிற்று.

அந்த சமயத்தில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முன்னேறிக் கொண்டிருந்தார் சி. ஆர். சுப்பராமன். 1951 -இல் வெளிவந்த மணமகள், நல்ல தம்பி, மோகினி, வேலைக்காரி ஆகிய படங்கள் அவரை முன்னுக்கு கொண்டுவந்து கொண்டிருந்தன.

அது எந்த அளவுக்கு என்றால் - "மோகினி" படத்தில் சுப்பராமன் இசை அமைத்த லலிதா-பத்மினியின் நடனப் பாடலான "ஆஹா. இவர் யாரடி." என்ற ராகமாலிகைப் பாடலைக் கேட்டுவிட்டு - சுப்பராமனின் வீடுதேடிச் சென்று. "இந்தப் பாட்டை நீங்க அமைச்சிருக்குற விதத்துலே உங்க மேதாவிலாசம் தெரியறது. உண்மையிலேயே நீங்க ஒரு பிறவி மேதை." என்று ஜி. ராமநாதனே பாராட்டும் அளவுக்கு இருந்தது.

ஒரு பக்கம் சி.ஆர். சுப்பராமன், எஸ்.எம். சுப்பையா நாயுடு, எஸ்.வி. வெங்கட்ராமன், இன்னொரு பக்கம் எஸ். ராஜேஸ்வரராவ், மற்றொரு பக்கம் ஆர். சுதர்சனம் மாஸ்டர் என்று மும்ம்னைப் போட்டி நிலவ ஆரம்பித்த நேரம்.

போதாத குறைக்கு இளைய தலைமுறையைச் சேர்ந்த டி.ஜி. லிங்கப்பா, கே. வி. மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, டி.ஆர். பாப்பாஆகியோரும் களத்தில் இறங்க
சரியான வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக சி.ஆர்.சுப்பராமனின் திடீர் மரணம் ஒரு வெற்றிடத்தை திரை உலகில் ஏற்படுத்தி இருந்தது.

அந்த வெற்றிடத்தை நிரப்புவதில் கவனத்தைச் செலுத்தத் தவறிவிட்டார் ஜி. ராமநாதன். அப்படியே அவர் கவனித்திருந்தாலும் அவரால் அப்போது பெரிதாக எதையும் செய்திருக்க முடியாது. காரணம்.. சொந்தப் படத் தயாரிப்பு. எடுத்துக்கொண்டிருந்த படத்தை குறித்த நேரத்தில் முடித்து வெளியிட்டாக வேண்டுமே.

1951 , 1952, 1953 - ஆகிய வருடங்கள் ஜி. ராமநாதனின் வாழ்க்கையில் சோதனையான கால கட்டங்கள்.இந்த வருடங்களில் அவர் இசை அமைப்பில் வெளிவந்த படங்கள் மிகக் குறைவு. வழக்கம்போல மாடர்ன் தியேட்டர்சின் "திரும்பிப் பார்", கவிஞர் கண்ணதாசன் கதை வசனம் பாடல்கள் எழுதிய "இல்லறஜோதி", ஆகிய படங்கள் ஜி.ராமநாதனின் தனி இசைஅமைப்பில் வெளிவந்தன.

"வாழப் பிறந்தவள்" - படத்துக்கு சிறுபகுதி தான் அவர் இசை அமைத்தார். அதன் பிறகு எஸ். ராஜேஸ்வரராவ் அவர்களுக்கு வாய்ப்பு சென்றது.

"ரோஹிணி" - என்ற படத்துக்கு அவர் ஆரம்ப ஒப்பந்தம் ஆனாரே தவிர இசை அமைக்கும் பொறுப்பு கே.வி. மகாதேவனிடம் சென்றது.நடிகை மாதுரி தேவி தயாரித்த இந்தப் படத்துக்கு ஒரு ஹிந்திப் படப் பாடல்களை ராமநாதனிடம் குறிப்பிட்டு அதே மெட்டுக்களை தமிழில் கொடுக்கும் படி அவர் கேட்டுக்கொள்ள,"இப்படி காப்பி அடிப்பதற்கு நான் தேவை இல்லை." என்று கூறி அவர் ஒதுங்கிக்கொண்டு முன்னுக்கு வரத் துடிப்போடு இருந்த எச்.எம்.வி.யில் துணை இசை அமைப்பாளராக இருந்த கே.வி.மகாதேவனை பரிந்துரைத்துவிட்டு விலகிக்கொண்டார்.ஆனாலும் படத்தின் டைட்டிலில் ஜி.ராமநாதனின் பெயர் இருந்தது.

ஒருவழியாக புது யுகம் வெளிவந்து பலத்த அடி வாங்கியது.

ஆனால் இந்தத் தோல்வியால் தளர்ந்து விடவில்லை ஜி.ராமநாதன்.

அவருக்குத்தான் ஒரு வெற்றி அடுத்து வந்து தொடர் தோல்விகளில் இருந்து மீட்டு கைதூக்கி விட்டுவிடுமே. அந்த வெற்றி ராசி பலத்த தோல்வி கண்டிருந்த இந்த நேரத்திலும் அவருக்கு கைகொடுத்தது.

"புதுயுகம்" -முடிவடையும் நேரத்தில் லேனா செட்டியார் அவர்கள் தனது "கிருஷ்ணா பிக்சர்ஸ்" பானரில் என்.டி. ராமராவ், பத்மினி, எஸ்.வி. சஹஸ்ரநாமம், லலிதா, டி.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரை வைத்து "மருமகள்" படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார். படத்துக்கு இசை சி.ஆர். சுப்பராமன். முக்கால்வாசி படம் முடிந்த நேரத்தில் சுப்பராமன் மரணம் அடைந்ததால் என்னசெய்வது என்று திகைத்த லேனா செட்டியாருக்கு ஜி.ராமநாதனின் நினைவு வந்தது. நாடகங்களுக்கு ஹார்மோனியம் வாசித்து வந்த காலத்திலிருந்தே அவருக்கு ஜி. ராமநாதனை நன்றாக பழக்கம். ஆகவே அவரை இசை அமைப்புக்காக அணுகினார் லேனா செட்டியார்.

மறுக்கமுடியாத ஜி. ராமநாதன் தனது சொந்தப் படத் தயாரிப்புக்கு இடையேயும் ஒன்றிரண்டு பாடல்களுக்கு இசை அமைத்துக் கொடுத்தார். படத்தின் பின்னணி இசையமைப்பை சுப்பராமனின் பிரதான சிஷ்யர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி பார்த்துக்கொண்டனர்.

இந்தப் படத்தில் ஆரம்ப காட்சியில் சிறுவயது பெண்ணும், பையனும் பாடுவது போல "சின்னச் சின்ன வீடு கட்டி, சிங்கார வீடுகட்டி, செல்லமாய்ச் சேர்ந்து நாம் வாழுவோமே" என்று ஜிக்கி, ஏ.பி. கோமளாவை படவைத்து ஒரு அருமையான இசைப் பதிவைக் கொடுத்திருந்தார் சி. ஆர். சுப்பராமன்.

அதே பாடலை வளர்ந்தபிறகு பிரிந்துவிடும் காதல் ஜோடிகள் சோகமாகப் பாடுவதாக ஒரு காட்சி அமைப்பு. இந்தக் காட்சிக்கு இசை அமைத்த ஜி. ராமநாதன் தனது தனி முத்திரையை பதிக்கத் தவறவில்லை.

பொதுவாக இப்படி ஒரே பாடல் இருமுறை இடம் பெறும் காட்சி என்றால் ஒரே மெட்டை துரித காலத்தில் அமைத்து சந்தோஷத்தையும், அதையே மென்னடையில் அமைத்து சோகத்தையும் வெளிப்படுத்துவார்கள்.

ஆனால் சி.ஆர். சுப்பராமனின் இசை அமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு மெட்டை இப்போது அமைத்து அதனை ஏ.எம். ராஜா, பி.ஏ. பெரியநாயகி ஆகியோரை பாடவைத்து சோகச் சூழ்நிலையில் அற்புதமாக வெளிக்கொண்டு வந்தார் ஜி. ராமநாதன்.

விளைவு - பெரிதும் வெற்றியடைந்த பாடல் இன்று வரை பேசப்படுகிறது. (என்னுடைய துரதிர்ஷ்டம்.. இந்தப் பாடலுக்காக படத்தின் குறுந்தகடை வாங்கிப் பார்த்தால் பல்லவியோடு பாடல் வெட்டப் பட்டிருந்தது. ஆனால் பல்லவியின் எடுப்பே மனதை கவர்கிறது.)

மருமகள் படம் இரு மொழிகளில் (தமிழ், தெலுங்கு) வெளிவந்த மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக ஜி. ராமநாதனின் இசையை நினைத்த லேனா செட்டியார் தனது அடுத்த படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பை சொந்தப் படத் தோல்வியால் பாதிக்கப் பட்டிருந்த ஜி.ராமநாதனுக்கு கொடுத்தார்.

ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல புதிய உத்வேகத்துடன் எழுந்தார் ஜி.ராமநாதன்.

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.