வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 10

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

"அவர் (ஜி. ராமநாதன்) ஒரு ராகத்தில் பாடல் போட்டால் முதல் இரண்டு வரிகளிலேயே ராகம் முழுக்க வந்துவிடும்." - பிரபல வயலின் கலைஞர் எல். வைத்தியநாதன்.

மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரத்தின் முக்கியமான குண விசேஷம் என்னவென்றால் அவர் ஒருவரை முழுமையாக நம்பிவிட்டார் என்றால் அவரிடமே அவர் சார்ந்த துறை சம்பந்தமான விஷயங்களை முழுக்க ஒப்படைத்துவிடுவார். அதில் தலையீடுகள், குறுக்கீடுகள் செய்து அவரை சங்கடப் படுத்த மாட்டார்.

ஜி. ராமநாதனிடம் அப்படிப்பட்ட நம்பிக்கை சுந்தரத்துக்கு இருந்தது. ஆகவே மாடர்ன் படங்களில் ராமநாதனின் இசை தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது.

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியிலும் அப்படிப்பட்ட இசை படம் முழுதும் வியாபித்திருந்தது.

இந்தப் படத்தின் பாடல்களுக்கு ராமநாதன் கையாண்ட ராகவடிவங்கள் ஒவ்வொன்றின் சிறப்புகளும் சொல்லில் வடிக்க முடியாத சிறப்புடையவையாக மிளிர்கின்றன.

அவருக்கு கிடைத்த நட்சத்திரங்களும் அதுபோலவே. கதாநாயகி வி.என். ஜானகிக்கு பின்னணி பாடிய பாகீரதி, சொந்தக் குரலில் பாடி நடித்த எஸ். வரலக்ஷ்மி, பி.எஸ். கோவிந்தன், சி.டி. ராஜகாந்தம், காளி என். ரத்தினம் ஆகியோரிடம் இருந்து "தி பெஸ்ட்" என்று சொல்வோமே அந்த "பெஸ்ட்" வெளிவரும் அளவில் ஜி.ராமநாதன் வேலை வாங்கி இருப்பது பாடல்களைக் கேட்கும்போதே தெரிகிறது.

பெஹாக் ராகத்தின் சாரத்தை அப்படியே சாறாகப் பிழிந்து அவர் அமைத்த "காதலாகினேன் எவர் ஏது சொன்ன போதும் நான்..." என்ற எஸ். வரலக்ஷ்மி பாடிய பாடல் இன்றும் காலங்களை வென்று நிலைத்திருப்பது ஒன்றே போதும் ராமநாதனின் தன்னிகர் இல்லாத திறமையைப் பறைசாற்ற.

இந்தப் படத்தில் ராமநாதன் வழங்கிய ராகமாலிகைப் பாடல்கள் கட்டாயம் கேட்கப் படவேண்டியவை. கல்யாணி, அடாணா, பேகடா, காம்போஜி, பெஹாக், தேஷ், செஞ்சுருட்டி, சிந்துபைரவி, சாமா, மோகனம் என்று பலதரப் பட்ட ராகங்களை வெகு அருமையாக கையாண்டிருக்கிறார் ஜி. ராமநாதன்.

"தாயே தயாநிதியே" - என்று பி.எஸ். கோவிந்தன் பாடும் பாடல் முழுக்க முழுக்க லலிதா ராகத்தில் அமைந்த கர்நாடக சங்கீதப் பாடல் பண்டிதர்களுக்கு என்றால் பாமரர்களுக்காக "வச்சேன்னா வச்சதுதான்" என்ற சி.டி.ராஜகாந்தத்தின் பாடலின் மூலம் எப்படிப் பட்ட இசையையும் தன்னால் அளிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜி.ராமநாதன்.

அதுபோலவே அவருக்கு மிகவும் பிடித்த பீம்ப்ளாஸ் ராகத்தில் ஒரு அருமையான இணைப்பாடலாக எஸ்.வரலக்ஷ்மி, பி.எஸ். கோவிந்தன் பாடும் "மாதர் மனோன்மணியே" பாடல் விளங்குகிறது.

இந்தப் படத்தில் தானே ஒரு முனிவர் வேடத்தில் வந்து பாடி நடித்தும் இருக்கிறார் ஜி. ராமநாதன்.

"நல்லதை சொல்லிடுவேன், அதை நயமுடன் கேட்டிடுவீர். வெல்வது சத்தியமே" என்று அவர் சொந்தக் குரலில் பாடியதை கேட்டால் அவர் எப்படிப்பட்ட இசை மேதை என்பது விளங்கும்.

எனது துரதிர்ஷ்டம்.. இந்த இடுகைக்காக நான் வாங்கிய குறுந்தகடில் பிரபலமான
"காதலாகினேன்" பாடலும் "மாதர் மனோன்மணியே" பாடலும் இடம் பெற்றிருக்கவில்லை. ஆனாலும் "காதலாகினேன்" பாடலை ஜெயா தொலைக்காட்சியிலும்,பொதிகை தொலைக்காட்சியிலும் பார்த்தும் கேட்டும் ரசித்திருக்கிறேன். பலமுறை வானொலியிலும் கேட்டு ரசித்திருக்கிறேன்.

இந்த இடத்தில் எனது ஆதங்கத்தை மறுபடியும் வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. பழைய சாதனைகளை முற்றிலும் புறக்கணித்து புதியதை புகழ்ந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில் இவற்றையும் சரியாக பொக்கிஷமாக பாதுகாக்க தவறி வருகிறோம்.

காலக்கண்ணாடியில் ரசம் மங்கிப் போனவையாக ஜி.ராமநாதன் போன்ற மாமேதைகளின் பாடல்களை மறந்தும் மறைத்தும் விட்டிருக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு இவற்றை அறிமுகப் படுத்தவேண்டியது நமது கடமை என்பதை நாம் மறந்தது ஏனோ?. இந்த விஷயத்தில் நம்மவர்களை விட மேல்நாட்டினர் பாராட்டப் படவேண்டியவர்கள். அவர்கள் காலக்கண்ணாடியில் பழைய சாதனைகளை நிறம் மங்க விடுவதில்லை. அவற்றை பத்திரமாக பாதுகாத்து பொக்கிஷமாகப் போற்றி வருகிறார்கள்.

எதுஎதிலோ அவர்களை காப்பி அடிக்கும் நாம் இந்த அருங்குணத்தையும் அவர்களிடம் இருந்து காப்பி அடிக்க தவறி விட்டோம். நஷ்டம் நமக்குத்தான்.

இனி.. மறுபடி ஜி.ராமநாதனிடம் செல்வோம். நாற்பதுகளின் இறுதியில் புதிய அலை உருவானபோது அதில் லாவகமாக எதிர் நீச்சல் போடும் வித்தையைக் கற்றுக்கொண்டார் ஜி. ராமநாதன்.

விளைவு. அதுவரை "ஹிந்தி" மெட்டுக்களின் பிரதிகளையே ரசித்து வந்த நம்மவர்களுக்கு "நமக்கென்று தனிச் சொத்தாக ஒரு இசை இருக்கிறது. நமது மண்ணின் மனம், பாரம்பரியச் சிறப்பு இவை எல்லாம் அதில் விரவிக் கிடக்கிறது. " என்று நமது தொன்மை வாய்ந்த கர்நாடக இசையையும் கிராமியப் பண்களின் வடிவங்களையும் தனது திரை இசை மூலம் அனைவருக்கும் புரியவைத்தார் ஜி.ராமநாதன்.

பாடல்களிலும் பின்னணி இசையிலும் தன்னுடைய வல்லமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வண்ணம் செயல்படத் துவங்கினார் ஜி. ராமநாதன்.

விளைவு.. படவாய்ப்புகள் குவியத் துவங்கின. படம் வெற்றிபெற்றாலும் ஜி.ராமநாதனின் இசையும் அதற்க்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கும். தோல்வி கண்டாலும் (ஒரு படத்தின் தோல்விக்கு பல காரணங்கள் இருக்கும்..) அந்தப் படத்திலும் அவரது பங்களிப்பு வெற்றிகரமானதாகவே இருக்கும்.

அந்த வகையில் மகத்தான வெற்றிபெற்ற அபூர்வ சிந்தாமணிக்கு பிறகு யு.ஆர். ஜீவரத்தினம் ஆண்டாளாக நடித்த "ஸ்ரீ ஆண்டாள்" படப்பாடல்கள் அமைந்தன.

தற்போது வழக்கொழிந்து போன படங்களின் வரிசையில் இடம் பிடித்தது இந்தப் படம்.

அதனை அடுத்து வந்த படங்களும் அப்படியே.. ஆதித்தன் கனவு, போஜன், இன்பவல்லி, மாயாவதி இந்தப் படங்கள் எல்லாம் வெளிவந்தபோதே தோல்வியைத் தழுவிய படங்கள்.

"மாயாவதியில்" ஒரு முக்கியமான அம்சமாக திரு வாமனன் அவர்கள் குறிப்பிடுவது கதாநாயகி அஞ்சலிதேவிக்கான அனைத்துப் பாடல்களையும் எம்.எல். வசந்தகுமாரி அவர்களையே ஜி. ராமநாதன் பாடவைத்தது தான்.

அடுத்து வந்த பி.யு.சின்னப்பா நடித்த "மங்கையர்க்கரசி" என்ற படத்தில் "நாத தனுமநிசம்" என்ற சித்தரஞ்சனி ராக தியாகையர் கிருதியை அப்படியே தழுவி "காதல் கனிரசமே" என்று படைத்தார் ஜி.ராமநாதன். இன்றும் இந்தப் பாடல் நிலைத்திருக்கிறது.

பி.யு. சின்னப்பா அவர்கள் நடித்து ஆனால் அவரது மரணத்துக்கு பிறகு வெளிவந்த "சுதர்சன்" - படப் பாடல்களில் ஜி.ராமநாதனின் இசை பலத்த வரவேற்பை பெற்றது.

பண்டரிபுரத்தில் இருந்த பாண்டுரங்க பக்தரின் கதை என்பதால் மராத்திய மண்வாசனைக்காக "அபங்கங்கள்" அமைந்த மெட்டுக்களை அழகாக
கையாண்டார் ஜி.ராமநாதன்.

மாண்ட், தேஷ், சிந்து பைரவி என்று வடக்கத்திய ராகங்கள் இருந்தாலும் தனது தனித்தன்மையை ராகமாலிகை அமைப்பில் காட்டினார் ஜி. ராமநாதன். முகாரி, சுத்தசாவேரி, பந்துவராளி ஆகிய ராங்களில் ஒரு பாடலை பி.யு.சின்னப்பா, கண்ணாம்பா ஆகியோரை பாடவைத்தார் ஜி. ராமநாதன். கண்ணாம்பாவின் சொந்தக் குரலில் ஒரு சோகமான தாலாட்டு பாடலையும் அருமையாக பாடவைத்தார் ஜி. ராமநாதன்.

இந்தப் படத்தில் ஒரு பாண்டுரங்க பஜனை கோஷ்டியின் கூட்டுப் பாடலில் கோரஸ் பாடகராக மதுரையைச் சேர்ந்த ஒரு பாடகரை சிறு வேடத்தில் அறிமுகப் படுத்தியபோது...

பின்னாளில் அந்தப் பாடகர் தனது குரலால் தமிழ் திரை உலகையே ஒரு கால் நூற்றாண்டுக்கும் மேலாக தன்வசப் படுத்திக்கொண்டு விடக்கூடியவராக ஆகப்போகிறார் என்பதை ஜி. ராமநாதன் மட்டும் அல்ல.. அந்தப் பாடகருமே கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

அறுபதுகளில் தமிழ் திரை இசை உலகையே தன இசையால் வசப்படுத்திக்கொண்ட பெருமைக்குரிய டி.எம். சௌந்திரராஜன் அவர்கள் தான் கோரஸ் பாடகர்களில் ஒருவராக "சுதர்சன்" படத்தில் ஜி. ராமநாதனால் அறிமுகப் படுத்தப் பட்ட பாடகர்.

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</