வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 8

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

"இப்போவெல்லாம் டியூன் போட வெளியூருக்கு போறாங்க. ராமநாத அய்யருக்கோ ஹார்மோனியத்துலே கையை வைத்தாலே டியூன் ஓடோடி வரும்" - பின்னணிப் பாடகி ஏ. பி. கோமளா.

வருடம் 1944 . தீபாவளித் திருநாள். சென்னை பிராட்வே திரை அரங்கம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் அந்தப் பகுதியைக் கடக்க படாதபாடு பட்டன.

அன்றுதான் எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த புதியபடம் திரைக்கு வந்திருந்தது.

காலைக்காட்சி முடிந்து வெளியே வந்தவர்களில் ஒரு பகுதியினர் வீடு திரும்ப மனமில்லாமல் மீண்டும் மதியக்காட்சிக்கான வரிசையில் நிற்க ஆரம்பித்தனர். படம் பார்த்துவிட்டு வந்தவர்களில் பலர் தங்களையும் பாகவதரைப் போலவே பாவித்துக்கொண்டு "அந்தப்" பாடலைப் பாடிய படியே கலைய மனமில்லாமல் கலைய ஆரம்பித்தனர்.

சென்னை பிராட்வே திரை அரங்கில் மட்டும்தான் இப்படி என்று இல்லை. படம் திரையிடப்பட்ட அனைத்து ஊர்களிலும் இதே நிலைதான்.

அனைவர் உதடுகளிலும் "அந்தப்" பாடல் தான். அந்நாட்களில் படம் திரையிடப்படும் அரங்கங்களில் எல்லாம் ஒலிபெருக்கி வைத்து படத்தின் பாடல்களை ஒலிபரப்புவார்கள்.அதுபோலவே திரும்பத் திரும்ப "அந்தப்" பாடல் ஒலிபரப்பப் பட்டது. அன்று அங்கு மட்டும் என்று இல்லை. மூலை முடுக்குகளில் உள்ள தேநீர்க் கடைகளில் எல்லாம் கிராமபோன் ரெக்கார்டு வடிவில்"அந்தப்" பாடல் ஒலித்தது.. ஒலித்தது.. தமிழ் நாடு முழுதும் ஒலித்துக்கொண்டே இருந்தது..

அந்தப் படத்தில் எத்தனையோ பாடல்கள் இருந்தாலும், "அந்த" ஒரு பாடலுக்கு கிடைத்த வரவேற்பு இருக்கிறதே அது தனிதான். பாடலின் மகத்துவமோ என்னவோ, படம் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டது. வெற்றி என்றால் சாதாரண வெற்றி அல்ல.

1944,1945,1946 ஆகிய மூன்று தீபாவளிகளைக் கடந்து சென்னை பிராட்வே திரை அரங்கில் ஓடிக்கொண்டே இருந்தது.

அந்தப் படம் "ஹரிதாஸ்". பெருவெற்றி பெற்ற அந்தப் பாடல் "மன்மத லீலையை வென்றார் உண்டோ?'

"அந்தக் காலத்தில் படங்கள் குறைவு. திரை அரங்குகளும் குறைவு. ஆகவே பொழுதுபோக மக்கள் திரையிடப்பட்டிருக்கும் படத்துக்குத் தானே  வரவேண்டும். அதனால்தான் "ஹரிதாஸ்"படம் அப்படி ஓடியிருக்கிறது" இதன் வெற்றியை ஏற்க மறுப்பவர்கள் இப்படி பேசலாம்.

அப்படிப் பார்த்தோமானால் "ஹரிதாஸ்" படத்துக்கு முன்னால் வந்த வந்த படங்கள் கூட இப்படி ஓடி இருக்கலாமே. ஹரிதாஸ் வெளிவந்த 1944க்கு பிறகு 1947 வரை படங்களே வராமலா இருந்தன? அவற்றை இப்படி பார்த்திருக்கலாமே? - இன்னும் சொல்லப் போனால் அந்நாளைய "குண்டூசி" என்ற பிரபலமான திரை மாத இதழ் "ஹரிதாஸ்" படத்தை மிகக் கடுமையாக விமர்சித்தது. அதனையும் மீறி படம் பெற்ற வெற்றி வெறும் குருட்டு அதிர்ஷ்டத்தால் வந்தது அல்ல.

கருப்பு வெள்ளைப் படமான "ஹரிதாஸ்" பெற்ற வெற்றி போல வேறு எந்தப் படமும் இதுவரை வெற்றி அடையவில்லை. புண்டலீகன் என்ற பாண்டுரங்க பக்தனின் கதையை வெகு நேர்த்தியாக குழப்பம் இல்லாத முறையில் சம்பவக் கோர்வைகளைப் பின்னி அருமையாக கொடுத்திருந்தார் படத்தின் இயக்குனரான சுந்தர்லால் நட்கர்னி. அவருக்கு உறுதுணையாக இளங்கோவனின் வசனங்களும் பாபநாசம் சிவன் அவர்களின் பாடல்களும் இருந்தன.இசை அமைக்க ஜி.ராமநாதன்.

பாகவதருடன் இந்த மூவர் கூட்டணி அமைந்தால் வெற்றி நிச்சயம் என்பது அனைவரும் எதிர்பார்த்ததுதான். ஆனாலும் இப்படி ஒரு வெற்றியா?

பாடல்களிலும் "மன்மத லீலையை வென்றார் உண்டோ?' பாடல் ஏற்படுத்திய தாக்கம் அபரிமிதமானது.

படம் வெளிவந்து அறுபது ஆண்டுகளைக் கடந்த பிறகும் அந்தப் பாடல் நிலைத்து நிற்கிறதே. .?

இது எப்படி யாரால் சாத்தியமாயிற்று...?
எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடியதாலா?
அது ஒரு காரணம் என்றால்....அந்தப் படத்தில் இதே பாகவதர் பல பாடல்களைப் பாடி இருக்கிறாரே?

"வாழ்விலோர் திருநாள்", "அன்னையும் தந்தையும் தானே", என்னுடல் தன்னில் ஈ மொய்த்தபோது", "கிருஷ்ணா முகுந்தா முராரே"," நிஜமா இது நிஜமா?" - என்று ... அனைத்துமே ஹிட் பாடல்கள் தான்.

ஆனால் இவை அனைத்தையும் தாண்டிய "சூப்பர் ஹிட்" பாடலாக "ஹரிதாஸ்" என்றாலே உடனே "மன்மத லீலையை வென்றார்" தானே முன்வந்து நிற்கிறது!

அதுதான் "ஜி. ராமநாதன்". அவரைத்தவிர வேறு யார் கையில் இந்தப் பாடல் கிடைத்திருந்தாலும் இப்படி ஒரு கதிர் வீச்சை பெற்றிருக்க முடியாது.

ஆரம்பத்தில் இந்தப் பாடலை இயற்றிய பாபநாசம் சிவன் இதனை வராளி ராகத்தில் அமைத்திருந்தார். ஆனால் பாடல் வரிகளைப் பார்த்ததும் இசை அமைப்பாளர் ராமநாதனிடம் இருந்து பீறிட்டுக்கொண்டு வந்த "சாருகேசி" அனைவரையும் "சபாஷ்" போட வைத்தது.

"சாருகேசி" ஒரு அற்புதமான - அதே சமயம் - அதுவரை கர்நாடக சங்கீத உலகிலேயே அதிகம் கண்டுகொள்ளப்பாடாத ஒரு மேளகர்த்தா ராகம். ஆனால் ஜி. ராமனாதனின் இந்தப் பாடலின் மூலமாக அதற்க்கு ஒரு புது மவுசும் பிராபல்யமும் கிடைத்தன என்றால் அது மிகை அல்ல.

எதற்கும் ஒரு நேரம் வரவேண்டும் என்பார்கள். அந்த நேரம் சாருகேசி ராகத்துக்கு "மன்மத லீலையை வென்றார் உண்டோ" பாடல் மூலமாகத்தான் வரவேண்டும் என்று இருந்ததோ என்னவோ?

இதற்காக "சங்கீத பிதாமகர்" அமரர் செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் ஜி.ராமநாதனின் வீடு தேடி வந்து "சங்கீத உலகத்துக்கு நீங்க செய்திருக்கிற மிகப் பெரிய சேவை இது" என்று பாராட்டி விட்டுச் சென்றார்.

அவ்வளவு நேர்த்தியாக இந்த ராகம் ஜி. ராமநாதனால் கையாளப்பட்டிருந்தது.

காதல் ரசத்துக்கு ஒரு மன்மத லீலையை வென்றார் என்றால்... பக்தி ரசத்துக்கோ பஞ்சமில்லாத பாடல்களை பாபநாசம் சிவன் அவர்கள் அற்புதமாக நெஞ்சை அள்ளும் வரிகளால் எழுத.. ஜி. ராமநாதன் அவற்றுக்கு இசையால் வடிவம் கொடுத்த விதம்... அலாதி.

"என்னுடல் தன்னில் ஈ மொய்த்தபோது.." யதுகுல காம்போஜி, அடாணா ஆகிய ராகங்களில் விருத்தமாகத் தொடங்கி "அருமைத் தாயே தந்தையே.."என்று முடியும் இடத்தில் இடம் பெரும் தாளக்கட்டும் பாடலும் ஜி.ராமநாதனின் தன்னிகரில்லாத திறமைக்கு ஒரு சாட்சி. பொதுவாக விருத்தமாக அமைந்த பாடல்களை வெகுவாக யாரும் ரசிக்க மாட்டார்கள்.
ஆனால் இந்தப் பாடல் அதற்கு ஒரு விதி விலக்காக அமைந்து அமோக வரவேற்பை பெற்று .. காட்சி அமைப்புக்கே உயிர் கொடுத்தது. பெற்ற தாய் தந்தையரின் பெருமையை பறைசாற்றும் இந்த பாடல் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மனதை பெரிதும் கவர்ந்த பாடல்.

"அன்னையும் தந்தையும் தானே" - பாடலும் உச்சகட்டக் காட்சியில் இடம் பெற்ற "கிருஷ்ணா முகுந்தா முராரே" பாடலும் மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்து மூன்று தீபாவளிகளை கடந்து படம் ஓடும் அளவுக்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்தது.

ஆனால் இந்தத் தொடருக்காக "ஹரிதாஸ்" பட குறுந்தகடை வாங்கிப் பார்த்தபோது என்னுள் ஒரு அதிர்வு ஏற்பட்டது. இப்படி படத்தின் வெற்றிக்கான பாடல்களை அற்புதமாக கொடுத்த ஜி. ராமநாதனின் பெயர் படத்தின் டைட்டிலில் இடம் பெறாமல் விலக்கப்பட்டிருந்தது. சங்கீதம் என்ற ஒரு அம்சமே டைட்டிலில் காணப்படவில்லை.

ஆனாலும்..ஜி. ராமநாதனின் பெயர் திரை இசை உலகில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டு விட்டது.

அந்த அளவுக்கு ஹரிதாஸ் படத்தின் வெற்றி அமைந்திருந்தாலும் அதனை அந்தப் படத்தில் சம்பந்தப் பட்டவர்களால் உற்சாகமாக அனுபவிக்க முடியாமல் போனதற்கு காரணம்... இந்த "கண் திருஷ்டி, கண் திருஷ்டி" என்கிறார்களே.. அதுவாக இருக்கலாமோ?

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</