வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


ஒரு மனிதனின் மன நிலையை அப்படியேப் புரட்டிப்போடும் வல்லமை படைத்தது இசை. இசையை நேசிக்கும், சுவாசிக்கும் சிலரின் வாழ்க்கை இந்த சமுதாயத்திற்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது. இசையை தொடர்ந்து கேட்கும் மனிதர்களின் வாழ்நாள் அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது. இசையை உற்று கவனியுங்கள். சாதாரண சப்தங்கள் தான் உங்கள் நாடி நரம்பையே அசைத்து பார்க்கும் வல்லமை படைத்ததாக மாறுகிறது. எப்படி? எந்த ஒன்றையும் சரியான பாதையில் ஒருமுகப்படுத்தி செலுத்தினால் அதனால் இந்த உலகில் அனைத்தையும் வென்று விடலாம் என்பதே இசை நமக்கு சொல்லித்தரும் பாடமாகும்.

மனிதனிப் பொறுத்தவரை யோகா. சப்தங்களை பொறுத்தவரை இசை. மனிதன் செய்யும் யோகக்கலை மனிதனையும் அவன் சார்ந்த சமூகத்தையும் வாழவைக்கிறது. ஆனால் சப்தங்கள் செய்யும் யோகா இவ்வுலகின் ஆண்ட சராசரங்களையும் கட்டுக்குள் வைக்கிறது. இசையை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்காக...

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இசைத்துறையை தமிழ் ஸ்டுடியோ தன்னால் இயன்ற வரை பெருமைப் படுத்த முயல்கிறது.

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
இசை
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


லலிதா ராம்

பெங்களூரில் பொறியாளராய்ப் பணியாற்றும் லலிதா ராம் - இசைத் துறையிலும் வரலாற்றுத் துறையிலும் ஆர்வலர், ஆய்வாளர். இவ்விரு துறைகளைப் பற்றியும் இங்கு தொடர்ந்து எழுதவுள்ளார். திரைப்பட இசையில் பொதிந்து இருக்கும் பாரம்பரிய இசை நுணுக்கங்களைப் பற்றி இணையத்தில் எழுதத் தொடங்கி விமர்சனங்கள், இசைக் கலைஞர்கள், இசைக் கருவிகள் பற்றி கட்டுரைகள் பல இணையத்தில் எழுதியுள்ளார். விகடன் பிரசுரம் வெளியிட்ட 'இசையுலக இளவரசர் ஜி.என்.பி' என்ற இவரது நூல், ஜி.என்.பாலசுப்ரமணியம் என்ற கலைஞனின் இசை வாழ்க்கையை விரிவாகப் படம்பிடித்துள்ளது. ஹிந்து, தினமணி, தினத் தந்தி, ஆனந்த விகடன் ஆகிய இதழ்கள் இந் நூலைப் வெகுவாகப் பாராட்டியுள்ளன.

மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தில் ஆய்வாளராய் விளங்கும் இவர், நண்பர்களுடன் சேர்ந்து நான்கு வருடங்களாக வரலாறு.காம் என்ற இணைய மாத இதழை நடத்தி வருகிறார். கல்வெட்டுகள், கட்டிடக் கலை, சிற்பங்கள், ஓவியங்கள், பயணக் கட்டுரைகள் என பலதரப்பட்ட கட்டுரைகள் தென்னிந்திய வரலாற்றை இணையத்தில் உலவ விடுகின்றன. முனைவர் கலைக்கோவன் எழுதிய மூன்று வரலாற்று நூல்களையும், தொல்லியல் இமயம் ஐராவதம் மகாதேவனின் பணிப் பாராட்டு மலரையும் வரலாறு.காம் வெளியிட்டிருக்கிறது.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS இசை TS லலிதா ராம் தொடர்கள் வாயில்

ஜி.என்.பி-யின் கிராமஃபோன் ரிக்கார்டுகள்

லலிதா ராம்  

1900-களில் வாழ்ந்த ஜாம்பவான்கள் பலரைப் பற்றி கேள்விப் பட முடிந்தாலும், அவர்களுடைய இசையைக் கேட்பதென்பது அரிதான விஷயம். ஜி.என்.பி-யின் விஷயத்தில், அவர் கொடுத்த ரிக்கார்டுகள் இருபதுக்கு மேல் கிடைக்கின்றன. அவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

முதல் வகை 1930-களின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டவை. தோடியில் 'அம்ப நாதுவி', காம்போதியில் 'சுப்ரமண்யாய நமஸ்தே', சுத்த சாவேரியில் 'தாரிநி தெலுஸு கொண்டி', சாவேரியில் 'பராசக்தி', ஆனந்த பைரவியில் 'ஓ ஜெகதம்பா', போன்ற ரிக்கார்டுகள் இந்த கால கட்டத்தில் வெளி வந்தவை. அனைத்துப் பாடல்களும் அன்றைய நிலையில் பிரபலமான பாடல்கள். இந்த ரிக்கார்டுகளில் ஜி.என்.பி-யின் ஸ்ருதி கிட்டத்தட்ட நாலரைக் கட்டையில் இருக்கிறது. அதி துரிதமான சங்கதிகள், கேட்பவருக்கே மூச்சு முட்டும் வகையிலான பிருகாக்கள், என்று பல விஷயங்கள் இந்த ரிக்கார்டுகளில் தெரிந்தாலும், ஜி.என்.பி-யின் சங்கீதம் எப்படி சில வருடங்களுக்குள் வளர்ந்து உயர்ந்த நிலையை அடைந்தது என்பதை பறை சாற்றும் வகையில்தான் இந்த ரிக்கார்டுகள் இருக்கின்றன.

இரண்டாம் வகை ரிக்கார்டுகள் 1940-களில் வெளி வந்தவை. இந்தப் பாடல்களுள் பல பாடல்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது ஜி.என்.பி-தான் என்று கூறலாம். இந்த சமயத்தில், சுமார் இரண்டரை கட்டைக்கு இவரது ஸ்ருதி குறைந்திருந்தாலும், 1930-களில் பேசிய அதே பிருகாக்கள் இந்த காலாகட்டத்திலும் கேட்க முடிகிறது. முன்பு இருந்ததைவிட அதிக கனமும், பல அழகிய சங்கதிகளைல் நகாசு வேலை புரியும் சங்கீத அறிவும் இவருக்கு வாய்த்திருப்பதையும் இந்த ரிக்கார்டுகள் சுட்டுகின்றன. சண்முகப்ரியா, பூர்வி கல்யாணி, கல்யாணி, ஹிந்தோளம் போன்று பல பிரபலமான, விஸ்தாரமாகப் பாடக்கூடிய ராகங்களில், பல எளிய பாடல்கள் இந்த கால கட்டத்தில் வெளி வந்தன. 'சொன்னதைச் செய்திட' (ராகமாலிகை), 'கண்ணனை காண்பதெப்போ' (ராகமாலிகை), 'காரணம் கேட்டு வாடி' (பூர்வி கல்யாணி), 'கண்ணனே என் கணவன்' (கல்யாணி), 'நல்ல சகுனம் நோக்கிச் செல்லடி' (சண்முகப்ரியா), போன்ற பல அழகிய தமிழ்ப் பாடல்கள் வெளி வந்து மக்கிளிடையே பிரபலமாயின. 1947-க்கு முன் தேச பக்தியைத் தூண்டும் வகையில் 'ஜெயதி ஜெயதி பாரத மாதா' (கமாஸ்), 'சமரஸ பாவன' (பீம்ப்ளாஸ்) போன்ற பாடல்களும் இக்காலகட்டத்தில் வந்தவையே. இந்தப் பாடல்கள் ஜி.என்.பி பாடியதற்கு முன் எப்படிப் பாடினரென்று தெரியாவிடினும், ஜி.என்.பி அமைத்த மெட்டுக்களும், சங்கதிகளுமே நிலைத்து, இன்றும் பாடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஜி.என்.பி புகழின் உச்சியில் இருந்த காலகட்டத்தில் வந்த அனைத்து ரிக்கார்டுகளுமே பிரபமடைந்தன என்றாலும் 'வாஸுதேவயனி' ரிக்கார்டும், 'திக்கு தெரியாத காட்டில்' ரிக்கார்டும், 'ராதா சமேத கிருஷ்ணா' ரிக்கார்டும், 'ஹிமகிரி தனையே' ரிக்கார்டும் ஜி.என்.பி-யின் பெயரை என்றும் நிலைக்கும் நிலைக்கு இட்டுச் சென்றன என்று கூறினால் அது மிகையாகாது.

ஜி.என்.பி-யால் மெருகேற்றப் பட்டு, கச்சேரி மேடைக்கு வந்த 'வாஸுதேவயனி' கிருதி, 1940-ஆம் வருடம் 78 rpm இசைத் தட்டாக வெளியானது. கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை வயலின், பாலக்காடு மணி ஐயர் மிருதங்கம். மொத்தமே எட்டு நிமிட நேரத்திற்குத்தான் பதிவு செய்யக் கூடிய இசைத் தட்டில், ஒரு ராகம் பாடி, அதை கிரஹித்து வயலின் ராகம் வாசித்து, கீர்த்தனைகளை சங்கதிகளுடன் பாடி, கல்பனை ஸ்வரம் பாடி, தனி ஆவர்த்தனமும் கொடுத்து, கேட்பவருக்கு நிறைவையும் கொடுப்பதென்பது, 'next to impossible', என்பார்களே, அந்த வகையில் சேரும். அதை இந்தக் கூட்டணி செய்து காட்டியது என்பதைச் சொல்லவும் வேண்டுமா என்ன?

இந்த ரிக்கார்டு, 1940-ம் வருடத்தில் மட்டும் பத்தாயிரம் ரூபாய் ராயல்டியை ஜி.என்.பி-க்குக் கொடுத்தது.

அதி வேகமாய்ப் பாடுவதற்கும் விறுவிறுப்பாகப் பாடுவதற்கும் உள்ள நுட்பமான வித்தியாசத்தை, அவரின் 1930களில் வந்த ரிக்கார்டுகளையும் 1940களில் வந்த ரிக்கார்டுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே உணர்ந்துவிட முடியும்.

மூன்றாம் வகை ரிக்கார்டுகள் 1950-களில் வந்தவை. பழுத்த பழமான பின் கொடுத்திருக்கும் 'சாதிஞ்சனே' (ஆரபி), 'சாமஜ வரகமனா' (ஹிந்தோளம்), 'ஆனந்த நடேச' (தோடி) போன்ற ரிக்கார்டுகள் இந்த காலகட்டத்தில் வந்தவையாகும். இந்த இசைத்தட்டுகளும் அற்புதமாகவே இருப்பினும், 1940-களில் இருந்தது குரலுக்கு ஒப்பிட்டால், இவை ஒரு மாற்று குறைவுதான் என்று சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட ஒரு கட்டை ஸ்ருதியிலேயே இந்த ரிக்கார்டுகள் இருக்கின்றன. குரல் 1940-களில் இருந்ததைப் போல இல்லாவிடினும், அவருக்கேவுரிய பிருகாக்களை அக் குரல் பொழியத் தவறவில்லை. இன்னம் சொல்லப் போனால் 1950-களில் வெளி வந்த ஹிந்தோளம் 40-களில் வந்த ஹிந்தோளத்தைக் காட்டிலும் பாவபூர்வமாகவும் அழகிய ஸ்வராக்ஷரங்களுடன் (பல்லவியில் 'ஸா-ம', அனுபல்லவியில் 'ச-ம-நி-க-ம-க') இன்னும் நேர்த்தியாகவும் அமைந்திருக்கிறது என்று கூடத் தோன்றுகிறது.

இது நாள் வரை, மேற் சொன்ன ரிக்கார்டுகள் ஒரு சில ரசிகர்களிடம் மட்டுமே இருந்து வந்தன. 1930-களில் வந்த ரிக்கார்டை ஒவ்வொன்றையும் ஆயிரக் கணக்கான ரூபாய்க்கு விற்றவர்கள் இன்னும் நம்மிடையில் இருக்கிறார்கள். இந்த வருடம், ஜி.என்.பி-யின் நூற்றாண்டை ஒட்டி கர்நாடிகா நிறுவனம், 1930-களிலும் 1940-களிலும் வெளியான ஜி.என்.பி ரிக்கார்டுகள் பலவற்றை குருந்தகடாகத் தொகுத்து வெளியுட்டுள்ளது. கிடைப்பதற்கரியனவாய் இருந்தவை இன்று சுலபமாக எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. (ஜி.என்.பி-யின் புகழ் பெற்ற ரிக்கார்டுகள் என்று முன்பு குறிப்புட்டுள்ள நான்கு ரிக்கார்டுகளுமே தொகுப்பில் இடம் பெறாததுதான் ஒரே குறை).

கர்நாடக இசைப் பாடல்கள் அடங்கிய 78 rpm ரிக்கார்டுகளைத் தவிர, சகுந்தலை படத்தில் எம்.எஸ் உடன் சேர்ந்து பாடியிருக்கும் இரண்டு டூயட் பாடல்களும் (இவையும் 78 rpm ரிக்கார்டுகள்தான்), 1950-களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஜி.என்.பி-யின் கச்சேரிகளில் இருந்து சில பாடல்களும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பூச்சி ஸ்ரீநிவாஸ ஐயங்காரின் 'ராமா நின்னே', ஷ்யாமா சாஸ்திரியின் 'ப்ரோவவம்மா', தியாகராஜரின் 'ஏதாவுனேர்ச்சிதிவோ' கிருதியும் 'பராமுகமேலரா' கிருதியும் இடம்பெற்றுள்ளன. மேற் சொன்ன எதுவுமே இடம் பெறாமல், இந்தத் தொகுப்பில் எஞ்சியிருக்கும் உருப்படியான தேவமனோகரி ராகம் தானம் பல்லவி மட்டுமே இடம் பெற்றிருந்தால் கூட, இந்தத் தொகுப்பை கர்நாடிகா நிர்ணயித்திருக்கும் விலைக்கு இரண்டு மடங்கு அதிகமான விலை கொடுத்துக் கூட வாங்கலாம்.

G.N.Balasubramaniam - A Centennial Retrospective என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இசைத் தொகுப்பின் விலை 249 ரூபாய். இணையத்தில் வாங்க:

http://carnatica.net/shopping/product_info.php/cPath/22/products_id/136?osCsid=64ba2be817ba4ce2530531329ae1f65b

தொடர்ந்து இசைப்போம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.