வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி

கவிஞர் விக்ரமாதித்தன் நம்பி.. தமிழின் மிக முக்கியமான ஆளுமை.. எப்போதும் விக்ரமாதித்தன் ஒருவரை கவிஞர் என்று அங்கீகரித்தால் அவரது கவிதை சக்தி வாய்ந்த சொல்லாடல்களின் கூடலாக இருக்கும். எப்போது விக்ரமாதித்தன் நம்மை கவிஞர் என்று சொல்லுவாரோ என்று பல பெருங்கவிகள் ஏங்கியக் காலங்கள் கூட உண்டு... இப்போதும் தொடர்ந்து நல்ல கவிதைகளை அடையாளம் கண்டு அதனை ஊரறிய செய்து வருகிறார் விக்ரமாதித்தன். அந்த வகையில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு கவிஞரின் சில கவிதைகளை எடுத்துக் கொண்டு அது பற்றி விவாதிக்க இருக்கிறார்.

 
     
     
     
   
அரும் பெறல் மரபின் கரும்பு இவண்...
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண:

விக்ரமாதித்தன் நம்பி

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TSஅரும் பெறல் மரபின் கரும்பு இவண்... தொடர்கள் வாயில்

அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - ஞானக்கூத்தன்

விக்ரமாதித்தன் நம்பி  

சன்னமும் நுணுக்கமான மனம்சார்ந்த கவிதை - ஆச்சி

ஐப்பசி என்கிற துலாமாதம் வந்தது.
சொந்தக்காரர்களுக்கெல்லாம்
துலாஸ்நாநம் செய்து புண்ணியராகும்படிக்கு
அப்பா கடிதம் எழுதிப் போட்டார்
காலரா ஊசியும் கையுமாய் ஒரு வெள்ளைக்காரர்
மற்றும் அவரது உதவியாளர்
தெருவில் தகுந்த இடம் பார்த்து நின்றனர்.
எடுத்துச் செல்லும் அடுப்பில்
வெந்நீர் கொதிக்கிறது. தமிழ் சிப்பந்தி
தெருவில் வருவோர் போவோரை
காலரா ஊசி போட்டுக் கொள்ள
இன்ஸ்பெக்டர் சொல்வதாய் அழைக்கிறான்.
உள்ளுர் வாசிகள் ஓடுகின்றனர்.
சொந்தக்காரர்கள் வந்துவிடுவார்.

செலவுக்குப் பணம் வேண்டும்.
அப்பா என்னை சிவானந்தம் பிள்ளை
வீட்டுக்குப் போய் ட்யூஷன் பணத்தை
முன்கூட்டித் தரும்படி கேட்கச் சொல்கிறார்.

பிள்ளைமார் பையன்களை நானறிவேன்.
அவர்கள் வீட்டைப் பார்த்ததில்லை.

சிவானந்தம் பிள்ளை வீட்டுக்குப் போனேன்.
வீட்டு வாசலில் கட்டப்படாத கூண்டு வண்டி.
வைக்கோல் மேயும் பெரிய காளைகள்.
பிள்ளைக்குக் குதிரை பிடிக்காதாம்.
உள்ளே யாரென்று கூவினேன்.

உள்ளே யாரென்று கூவினேன்.
மாமா என்பதா மாமி என்பதா?
ஆச்சி வெளியே வந்தார். என்னை
யாரென்று கேட்டார். வந்த காரணம்
என்ன என்றார். வீட்டுக்குள்
கிருஷ்ணா முகுந்தா என்று பாடிற்று
வானொலிப் பெட்டியோ கிராம போனோ.

உள்ளே வா என்றார். வெளியிலேயே
இருக்கிறேன் என்றேன் அரிசி மாவினாலா
இழைத்த கோலங்கள் எங்கும் தெரிந்தன.
அரிசி, காய்கறி, சாப்பாட்டுப்
பலா இலை ஒரு கட்டு
வாழைப்பழங்கள்,. வெல்லம் இவற்றைப்
பையில் போட்டு ஆச்சி வைத்தார்.
ட்யூஷன் பணத்தை எண்ணிக் காட்டினார்
வாங்கிக் கொண்டு புறப்படும் போது
காப்பி சாப்பிடு தம்பி என்றார்.
தாமதம் இல்லாமல் வேண்டாம் என்றேன்.
குடிக்கக் கூடாதென்று அம்மா, அப்பா
சொன்னார்களா என்றார் ஆச்சி
இல்லை என்றேன் தலையை நிமிர்த்திப்
பேசு தம்பி என்றார் ஆச்சி.
அப்பா குடிப்பாரா? சீண்டவா? உண்மையா?
எனக்கு வேண்டாம் என்றேன்
உறுதியாக மறுத்ததில் எனக்கு சந்தோஷம்.

அம்மா எப்படி இருப்பார்? என்றார் ஆச்சி.
பூவுடன் சம்பந்தப் படாத
வாசனை ஒன்று ஆச்சிக்கிருந்தது.
அம்மாவின் உருவம் மனதில் வந்தது.
அம்மா அழகுதான் என்றார் ஆச்சி.
உண்மைதான். ஆனால்
ஆச்சி அழகாய் இருப்பதைப் பார்க்க
மனத்தில் எனக்குக் குறை.

- ஞானக்கூத்தன்
(பென்சில் படங்கள் தொகுப்பு, பக்கம் 76-77)


சிறுவயது நிகழ்ச்சி ஒன்று, சித்திரமாக – விவரிப்புகள் வழியே. மனம்சார்ந்த கவிதை என்பதே இதன் சிறப்பு மனநுட்பம் கூடியதும் ஆகும். கடைசிப் பத்திதான் கவிதையின் மையமே. பொதுவாக, ஞானக்கூத்தன் கவிதைகள் எல்லாமே எளிமையானவையும் நேரடியானவையும் தாம் - சோதனை முயற்சியாலனவை நீங்கலாக. இதுவும் அப்படித்தான். இந்த இயல்புகளாலேயே எல்லோரையும் சென்றடையக் கூடியவை. தமிழ் வாழ்வைச் சொல்லும் கவிஞன் அங்கீகாரம் பெறுவது, தன்னைப் போலவே நடக்கும், நவீன தமிழ்க் கவிதையில் ஞானக்கூத்தன் ஸ்தானம் இப்படித்தான்.

மாயூரத்தில் துலாஸ்னானம் விசேஷம். முந்தைய தலைமுறையினர் தங்கள் ஊர்த் திருவிழா, தேரோட்டம் முதலானவற்றிற்கு உறவினர்களை அழைப்பது வழமை. அதுபோலத்தான், இந்தக் கவிதையில் வரும் அப்பாவும் கடிதம் எழுதுகிறார்.

விருந்தாளிகள் வந்தால் கூடுதல் செலவாகத்தானே செய்யும். தத்தம் சக்திக்கேற்பப் புரட்டிக் கொள்வதும் வழக்கம் தான். இங்கே ட்யூஷன் பணம் முன்கூட்டிக் கேட்டு வாங்கும்படியாகிறது. பையனை அனுப்பி வைக்கிறார்.

கவிதையே எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது.
எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துப் பேசத்தானே கவிதைரசனை.

கவிதையின் இரண்டாவது பத்தியில் காலம் காண்பிக்கப் பட்டிருப்பதைச் சுட்ட வேண்டும், அந்தக் காலத்தில் காலரா ஊசி போடுவார்கள், ஊர் ஊருக்கும், கவிதையில் உள்ள நிகழ்வு எந்தக் காலத்தில் என்பதை அறிய உதவுகிறது, .இது.

பிள்ளைமார் பையன்களை நானறிவேன்
அவர்கள் வீட்டைப் பார்த்ததில்லை.
இந்த வரிகள் சொல்வதும் நுணுக்கமானதுதான்.

சிவானந்தம் பிள்ளை வீட்டுக்குப் போனேன்.
வீட்டு வாசலில் கட்டப்படாத கூண்டு வண்டி.
வைக்கோல் மேயும் பெரிய காளைகள்.
பிள்ளைக்குக் குதிரை பிடிக்காதாம்.
வெற்று விவரணங்கள் இல்லை இவை – கடைசி வரி கூறிவிடுகிறது.
கிருஷ்ணா முகுந்தா என்று பாடிற்று என்பதிலும் காலத்தைக் காணலாம்.
உள்ளே யாரென்று கூவினேன்.
மாமா என்பதா மாமி என்பதா
மனம் கொள்ளும் தயக்கம்.
இதே போலத்தான் -

உள்ளே வா என்றார். வெளியிலேயே
இருக்கிறேன் என்றேன் என்ற வரிகளும்.

கடைசிப் பத்திக்கு முந்தைய பத்தி முழுக்கச் சின்ன வயதின் கூச்சமும் பாரம்பர்யமிக்க குடும்பத்தின் குண நலனும் அருமையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
கடைசிப்பத்திதான் கவியுளம்.
கடைசி வரிதான் கவியழகு.

யோசிக்கும் வேளையில், ஞானக் கூத்தனின் மனம் சார்ந்த கவிதைகள் அத்தனையுமே சன்னமும் நுணுக்கமும் கூடியவை என்பதை உணரமுடிகிறது. காலத்தில் நின்று நிலைக்கக் கூடியவையும் அவையாகத்தாம் இருக்கும். மனம் சார்ந்த கவிதைகள்தாம் எப்பொழுதுமே மன்பதையில் நிலைபேறு கொண்டிருக்கின்றன - ஒரு கவிஞன் என்னென்ன எழுதினாலும்.

பென்சில் படங்கள் தொகுப்பிலேயே நிறைய நல்ல கவிதைகள் படிக்கக் கிடைக்கின்றன. முதலில் கவிதைகள் படிப்பதற்குத்தான் பிறகு, ரசிப்பதற்கு அதாவது, Reading pleasure க்குத்தான். அப்படிப் பார்க்கையில், ஞானக்கூத்தன் ஏமாற்றமளிக்காத கவிஞர்தான். வேறென்ன வேண்டும்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </