வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

 

 
     
     
     
   
வலது புறம் செல்லவும்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


அகத்தியன்

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் 90 களில் முக்கியமாக பேசப்பட்டவர் இயக்குனர் அகத்தியன். இவரது இயற்பெயர்கருணாநிதி என்பதாகும். இவரதுசொந்த ஊர் தஞ்சாவூர்
மாவட்டம் பேராவூரணி ஆகும். இவரதுமுதல் படம் ரவிராகுல் நடித்த "மாங்கல்யம் தந்துனானே "என்ற படமாகும் இந்தபடம்1991 ஆண்டு வெளிவந்தது. 1993 ஆண்டு பிரசன்னா மதுமதி ஜோடியாக நடித்த "மதுமதி' வெளிவந்தது. இந்தப் படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வில்லனாக நடித்தார். மூன்றுஆண்டுகள் டைவெளிக்குபின்னர்1996
இல் சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் அஜித்-சுவாதி ஜோடியாக நடித்த வான்மதி"
படத்தை இயக்கினார்.

தேவா இசையில் இந்தப்படத்தின் பாடல்கள் ஹிட்டாகின. அதே1996 ஆண்டு வெளிவந்த
"காதல்கோட்டை"படம் தமிழ்திரை உலகத்தை இவர்பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது. படம்மிகப்பெரிய வெற்றியை
கொடுத்தது .இந்தப்படத்திற்க்காக அகத்தியனுக்கு சிறந்த இயக்கம்
மற்றும் சிறந்த திரைக்கதைக்கான இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. அகத்தியனுக்கு மட்டும்மல்லாமல் அஜித்துக்கும் தேவயானிக்கும் சிவசக்திபாண்டியனுக்கும் இந்தப்படம்ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். இந்தப்படம் தமிழ்சினிமாவின் டிரென்ட் செட்டராக அமைந்தது. பின்னர் இதே ஆண்டில்
தீபாவளிக்கு வெளியான "கோகுலத்தில் சீதை"படம் மூலம் மீண்டும் தான்
ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்தார் . இந்தப்படமும் மிகச்சிறப்பான படமாக அமைந்தது.

நடிகர் கார்த்திக்கும் இந்தப்படம் பேர் சொல்லும் விதமாக அமைந்தது.
இந்தப்படத்தில் கார்த்திக்கின் கதாபாத்திரம் மிக அருமையாக அமைக்கப்பட்டிருக்கும்.

கார்த்திக்,மணிவண்ணன்மற்றும்
சுவலட்சுமி ஆகியோர் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்கள்.1997 இல் "விடுகதை வெளியானது. 1998 இல்பிரசாந்த் இஷாகோபிகர் நடிப்பில் வெளிவந்த "காதல் கவிதை" நல்ல பெயர்வாங்கி
தந்தது. இளையராஜா இசையில்இந்தப்படத்தின்
பாடல்கள் மிகச்சிறப்பாக இருந்தன.
அதன் பின்னர்ஹிந்தியில் இரண்டு
படங்கள் இயக்கினார் . மீண்டும் 2002 இல் "காதல் சாம்ராஜ்யம்" என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர் 2004 இல் ஜெய்ஆகாஷை வைத்து "ராமகிருஷ்ணா" 2005 இல் நந்தாவை வைத்து "செல்வம்" என்ற படத்தை இயக்கினார்.

அகத்தியன் கடைசியாக எடுத்த படம்
விக்ராந்த், பாரதி நடிப்பில் வெளிவந்த
"நெஞ்சத்தைகிள்ளாதே". சரவணன் நடித்த "சந்தோசம் " படத்தின் திரைக்கதை இவர் எழுதியதே. சில படங்களில் பாடல்களும் எழுதி உள்ளார்.

இவரின் ஒரு மகளான விஜயலட்சுமி
சென்னை 28 , கற்றது களவு, அதே
நேரம் அதேஇடம், அஞ்சாதே ஆகிய
படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியோடு
"சுல்தான் திவாரியார்" அனிமேஷன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவரது இன்னொரு மகள் நிரஞ்சனி
costume designer ஆக இருக்கிறார்.

இன்னொரு மகளான மக்கள் தொலைக்காட்சி கார்த்திகாவின்
கணவர் திரு விஷால் நடித்த "தீராத விளையாட்டுப்பிள்ளை" படத்தின் இயக்குனர் ஆவார். அகத்தியன் தற்போது "அவர்களும் இவர்களும்" என்ற படத்தில்
நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே கோகுலத்தில் சீதை
படத்தில் ஒரு காட்சியில் தோன்றினார்.

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS வலது புறம் செல்லவும் TS அகத்தியன் தொடர்கள் வாயில்

வலது புறம் செல்லவும் - 6


இயக்குனர் அகத்தியன் 02-05-2011, 22:58 PM

கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார், ஒளவையார் - அதியமான் என்று மறுபடியும் அங்கிருந்து நாம் நட்பைப் பார்க்க வேண்டாம். அவையெல்லாம் நீங்கள் அறிந்த நட்புக்கள். திருக்குறளும் அப்படித்தான்.

தவள நாட்டு இளவரசனும் பவள நாட்டு இளவரசனும் ஓர் குருகுலத்தில் படிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் அங்கே நண்பர்கள் ஆவார்கள். குரு தூங்கும்போது அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும். உலா வருவார்கள். அவர்களின் பேச்செல்லாம் தங்கள் நாடு பற்றியதாகவே இருக்கும். தான் அரியணை ஏறும்போது என்னவெல்லாம் செய்வேன் என்பது முதல் அவர்களின் நாட்டில் உள்ள பாரம்பரிய பழக்க வழக்கங்கள், வீர விளையாட்டுக்கள், விளையாட்டுக் கல்லின் எடை, கள் அருந்தி அந்த விளையாட்டுக்கல்லைத் தூக்கினால் கிடைக்கும் தண்டனை, எப்போதாவது கலவி குறித்த கல்வி இதுதான் அந்த நண்பர்களின் அரட்டையும் பேச்சுமாய் இருந்தது. குருகுலம் முடிந்து தங்கள் நாடு திரும்பிய பிறகு இறகுப் பேனாவால் எழுதப்பட்ட லிகிதங்களைப் (கடிதம்) பரிமாறிக் கொள்ளும்போதுகூட, கற்ற கலையில் தேர்ந்ததன் அளவு எப்போதாவது அண்டை நாட்டு இளவரசியின் அழகு பற்றிய குறிப்புக்கள் ஆகியவையே இடம் பெற்றன. மீண்டும் நேரில் சந்திக்கும்போதும் இந்த அளவிலேயே நட்பு விரிந்தது.

சற்று பின்தள்ளி மொகலாயர்கள் வந்தார்கள். வென்றார்கள். பாபர், அக்பர், ஷாஜகான், ஜஹாங்கீர், ஒளரங்கசீப் போன்ற உன்னதத்திலும் உன்னதமான உலகம் போற்றும் மன்னர்கள் ஆண்டார்கள். அவர்களில் ஒருசிலர்தான் மதுவிற்கும், ஒப்பியத்திற்கும் அடிமை ஆனார்கள். அப்படிப்பட்ட இளம் பாதுஷாக்கள் நட்புக்கொண்ட போதுகூட மதுவோடு மங்கை இருந்ததே தவிர நட்பில் ஒழுக்கக் கேடுகள் இருந்ததில்லை. ஒருவன் மனைவியை அவன் நண்பன் தன்னிடம் விழ வைப்பது இல்லை. உறவுகளுக்குள் குழி பறிப்பது அறவே இல்லை.

நண்பர்கள் குடித்துக் குடித்து இறந்துதான் போனார்கள். இறந்தது மனிதர்களே அன்றி நட்பாக இருந்ததில்லை. பொதுமக்கள் விழாக்காலத்தில் மதுவருந்தும்போது விழாக்களிப்பும், எங்கேயோ சண்டையும் ஏற்படுமே தவிர நட்பு நட்பாகவே இருந்தது. அப்போது மதுவும்கூட எங்கேயோ எப்போதோதான் அவர்களுக்குக் கிடைத்தது.

இரண்டாம் உலகப்போர் பற்றி விதவிதமாக லட்சம் புத்தகங்கள் எழுதினாலும் ஹிட்லரைத் தவிர்க்க முடியாது. அப்படித்தான் வலதுபுறம் செல்லுங்களில் மதுவும்.

ஆக மது பெருக்கெடுத்து ஓடும்வரை எல்லா உறவுகளும் சுமுகமாகத்தான் ஓடிக்கொண்டிருந்தன.

அடுத்து பிரிட்டிஷ், போர்ச்சு, டச்சு இவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு நட்பு வேறு ஒரு திசையில் பயணிக்க ஆரம்பித்தது. ஐரோப்பியரின் மேல்வர்க்கத்துக்கே உரிய கூடிக் குடித்து கும்மாளம் அடிப்பது இந்தியாவுக்கு அறிமுகம் ஆனது. அந்தக் குழுக் கும்மாளத்தில் விளையும் முறைகேடுகளை அந்த சமூகம் கலாச்சாரம் என்ற பெயரில் அங்கீகரிக்கப் பழக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த இந்திய சமூகம் அப்போதுதான் மெல்லக் கெட ஆரம்பித்தது. மொகலாயர் காலத்துக்கு முன்பும் சரி, பின்பும் சரி மனைவியைப் பொது இடத்தில் முத்தமிடும் பழக்கம் இந்தியாவில் இருந்ததில்லை. ஆங்கிலேயர்கள் அவர்களின் கலாச்சாரப்படி பொது இடங்களில் முத்தமிட்டுக் கொண்டார்கள். அதைப் பார்த்த இந்தியன் கிளர்ச்சி அடைந்தான். விடுதலைக்காக ஏற்பட்ட கிளர்ச்சிக்கும் இந்தக் கிளர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை.

இந்தியன் வீட்டுக்குப் போய் அதேபோல மனைவியை முத்தமிடப் பழகிக் கொண்டான். அப்போதெல்லாம் கணவனும் மனைவியும் வெளியே போகும்போது இடைவெளி விட்டு நடந்துபோகும் பழக்கம் பின்பற்றப்பட்டது. ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு அந்த இடைவெளி குறைந்து இணையாக ஆணும் பெண்ணும் பொது இடங்களில் நடக்க ஆரம்பித்தனர். பின் உரசிச் செல்ல ஆரம்பித்தனர். பின் ஓட்டிச் செல்ல ஆரம்பித்தனர். இன்றோ பொது இடங்களில் கட்டிப்பிடித்து
"---------------------------------------------- தன் தேனுதட்டைத்
தேய்க்கின்றாள் தேய்க்கின்றாள் மாறி மாறி
இரை கொண்ட கோழி தன் மூக்கைக் கல்லில்
இப்படியும் அப்படியும் தேய்த்தல் போல
(மாங்கனி)"
என்ற கவிஞர் கண்ணதாசனின் கவிதையை அரங்கேற்றம் செய்யும் அளவிற்கு சமூகத்தில் முன்னேற்றம். அன்று அம்மாக்கள் சண்டைபோட்டு திட்டி, கதறினார்கள். நாம் கெட்டுப்போய்க் கொண்டிருக்கிறோம் என்று. இன்று காதலியை பொதுஇடங்களில் (பீச். பூங்கா, தியேட்டர்) ஒருவன் முத்தமிடும்போது துணைக்கு வந்த நண்பன் அதைப்பார்த்து கிளர்ச்சி அடைகிறான். துணைவரும் தோழிக்கும் இதே கிளர்ச்சி நிலைதான்.

அப்போதெல்லாம் நாடகக் கொட்டகையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே கீற்றுப் போட்டு தடுத்திருப்பார்கள். வள்ளி திருமணத்திலும், பவளக் கொடியிலும் அவர்களுக்கு எந்தக் கிளர்ச்சியும் கிடைத்திருக்காது. அதில் கிளர்ச்சியூட்டும் சம்பவங்கள் என்ன இருந்திருக்கப் போகிறது? ரத்தக்கண்ணீர், தூக்கு மேடை எல்லாம் பயத்தைத்தான் ஏற்படுத்தியிருக்க முடியும். அரிச்சந்திரா பார்த்தால் புத்தி வந்தது.

அடுத்து திரைப்படம் தோன்றியது. திரைப்படம் தோன்றிய ஆரம்ப காலத்தில் புராணப் படங்கள்தான் அதிகமாக வந்தன. ஆனால் திரை அரங்குகளில் பென்சு டிக்கெட்டும் சேர் டிக்கெட்டும் வந்தன. ஆணும் பெண்ணும் அருகருகே அமர்ந்தார்கள். படம் ஆரம்பிக்கும்போது இருட்டு வந்தது. யாரும் அறியாமல் பொது இடத்தில் பெண்ணை ஆணும், ஆணைப் பெண்ணும் தொடும் திருட்டு வந்தது. அதை அருகே இருந்தவன் பொறாமையோடு பார்த்துக் கிளர்ந்தான். அருகே இருந்தவன் நண்பனாகவும் இருந்தான்.

புராணப் படங்களும் புராதனக் கதைகளும் மறைந்தன. திரைப்படங்களில் ஆண் பேண்ட் அணிந்தான், பெண் கச்சை அணிந்தாள்.

மன்மதலீலையை வென்றார் உண்டோ? வாடிக்கை மறந்தது ஏனோ? என்றெல்லாம் கேள்விகள் பிறந்தன.

(ராமகிருஷ்ணா படத்தில்.
விருப்பமில்லையா என்ற பாடலில்,
திரையரங்கின் இருட்டுனக்கு விருப்பமில்லையா?
நான் திருடிக் கொள்ள அருகிருப்பேன் விருப்பமில்லையா?
,,,,,,,,
உச்சத்திலே முகம் பார்க்க விருப்பமில்லையா?
நான் உச்சியிலே முத்தமிட விருப்பமில்லையா?
என்று நானே எழுதியிருக்கிறேன். நண்பர்களே.. இது
பதிவு தான். விமர்சனம் இல்லை)

எது மன்மதலீலை? எதெல்லாம் வாடிக்கை என்று யோசித்துக் கிளர்ந்தார்கள். நண்பன் நண்பனின் மனைவியைப் பார்த்து, தங்கையைப் பார்த்து, பாடல்கள் கேட்டுக் கிளர்ந்தான். நட்புக்குள் காமம் புகுந்தது.

வெள்ளைக்கார நாடுகளில் விஞ்ஞானம் வளர்ந்தது, அவர்கள் கலாச்சாரம் நமக்குத் தொற்றிக் கொள்ள. அவர்கள் விஞ்ஞானத்தை நாம் கற்றுக் கொண்டு வேறு மாதிரி வளர்ந்தோம். ஆங்கிலப் படங்களில் முத்தக் காட்சியும், நாசுக்கான உறவுக் காட்சியும் இடம் பெற்றன. அந்தக் கலாச்சாரத் தாக்குதலால் நாம் அவளோட ராவுகளும் சத்திரத்தில் ஒரு ராத்திரியும் எடுத்தோம். பார்த்தோம். கிளர்ந்தோம். திரை அரங்குகளுக்கு லுங்கி அணிந்து ஆண்கள் வந்தார்கள். இறுதிக் காட்சிக்கு முன்னால் பெண் கவனமாக நாடாவை முடி போட்டுக் கொண்டாள். பல வருடங்களுக்கு முன்னால் சென்னையில் ஒரு திரையரங்கில் இடைவிடாது படம் ஓடும். அத் திரையரங்கு பாலியல் தொழிற்கூடமாகவே மாறிப்போயிருந்தது.

வி. சி. ஆர். வந்தது. நிகழ்வுகள் பதியப்பட்டன. இங்கே அதில் அந்தரங்க நிகழ்வுகளைப் பதிவு செய்து பார்க்க ஆரம்பித்தனர். வி. சி. ஆர். அந்தரங்கங்கள் வி. சி. பி. ஆகி வலம் வந்தன. விரும்பிப் பார்க்கப்படும் படங்களாக மனிதர்களின் அந்தரங்க உறவு இங்கே ஆகிப்போயின.

நட்புக்களில் விரிசல் விழ விஞ்ஞானம் பெரும் பங்கு வகித்தது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். கையடக்க சி.டி., டி.வி.டி. பிளேயர்கள் வந்தன. செல்போன் உள்ளே நுழைந்தது. மெமரிக் கார்டுகள் வந்தன. செல் போனில் கேமிரா வந்தது. எல்லாவற்றையும் படம் பிடித்து மெமரி கார்டில் தக்க வைத்து, வேண்டும் போதெல்லாம் பரிமாறிக் கொள்ளும் கலாச்சாரம் வந்தது.

இந்தியாவில் நெட் கபேக்களில் மாணவ மாணவியர் அதிகமாய்ப் பார்ப்பது "யூ டீயுப்பில்" உள்ள நீலப்படங்களைத்தான் என்ற புள்ளி விவரம் நமக்குப் பெருமை சேர்த்தது. நீலப்படங்களைத் தாண்டி கேன்டிட் கேமிரா மூலம் அந்தரங்களை எடுத்து பரிமாறிக் கொள்வதில் இன்று நட்புக்கள் முளைக்கின்றன. அறிமுகம் ஆகாமலே நட்புக்கொள்ள இன்று விஞ்ஞானம் உதவுகிறது. அப்படி முளைக்கின்ற நட்புக்கள் காமத்திற்காய் தவம் இருக்க ஆரம்பிக்கின்றன. சந்திக்கும்போது, புகைபிடித்தல், குடித்தல். போதை மருந்துகளைப் பயன்படுத்துதல், பாதுகாப்பில்லாத பாலியல் உறவில் ஈடுபடுதல், என கிளை விரிக்கின்றன. நட்பு காமத்திற்குள் சிக்கிக்கொண்டு நசிந்து கிடக்கிறது.

நட்பு கூடும் நட்பாகவும் கூடா நட்பாகவும் இருக்கிறது. கூடும் நட்பு எல்லாமே விரைவாக கூடா நட்பாகி விடுகிறது. அதுவும மதுவோடு கூடும் நட்பும், மங்கையோடு கூடும் நட்பும் எளிதாகவும், விரைவாகவும் கூடா நட்பாகி விடுகிறது.

இன்னொரு கூடா நட்பும் இருக்கிறது. அப்பா அம்மா வெளியூர் செல்லும் நேரங்களிலோ அல்லது மனைவி தாய் வீடு செல்லும் நேரங்களிலோ நண்பர்கள் மதுவருந்த அந்த நண்பனின் இல்லத்தை தேர்ந்தெடுக்கின்றனர். மதுவோடு xxx சி.டிக்களும் அந்த அமர்வில் இடம் பெறுகின்றன. அந்த இல்லத்தில் அமர்ந்து மதுவருந்தி, அந்த நீலப்படங்களைப் பார்க்கின்றனர்.

அந்த இல்லத்து நண்பன் மனைவியோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் அங்கு இருக்கலாம். போதையோடு படத்தைப் பார்த்துக்கொண்டு அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் நண்பனுக்கு இவன் இதையெல்லாம் இவளிடம் அனுபவித்திருப்பான் என்ற எண்ணம் தோன்ற வாய்ப்பிருக்கிறது. நீலப்படப் பெண்ணுக்கும் புகைப்படப் பெண்ணுக்கும் உள்ள உடல் அமைப்புகளை ஆராய வாய்ப்பிருக்கிறது. அங்கே தங்கையின் புகைப்படமோ அக்காவின் புகைப்படமோ இருந்தாலும் மனம் ஆடை அவிழ்த்துப் பார்க்க வாய்ப்பிருக்கிறது. அவர்கள் அவன் கற்பனையில் அந்த நீலப்படத்தில் தோன்ற வாய்ப்பிருக்கிறது. அந்த நேரத்தில் அந்த வீட்டின் பாத்ரூமைப் பயன்படுத்தும் ஒருவன் துவைக்கப் போட்டிருக்கும் பெண்ணின் உடைகள், உள்ளாடைகள் அங்கிருந்தால் நுகர்ந்து கட்டிப்பிடித்து காமம் தணிக்க வாய்ப்பிருக்கிறது. அந்தக் கணமே அந்த நட்பு கூடா நட்பு ஆகிவிடுகிறது.

நண்பனின் மனைவியை "வாங்க.. போங்க" என்று அழைக்கும் நண்பர்களிடம் ஒரு நம்பகத்தன்மை இருக்கலாம். தங்கச்சி என்று வாய்நிறைய அழைக்கும்போது தெரிகிற பாசம், சிஸ்டர் என்றழைக்கும் போது ஏனோ தெரியவில்லை உளவியல் ரீதியாக தன்னைத் தற்காத்துக் கொள்ளவோ என்ற ஐயம் எழுகிறது. அந்த தற்காப்பு உடைந்துபோய் நண்பனையோ, அவன் மனைவியையோ ஏமாற்ற அந்த சிஸ்டர் சில இடங்களில் சில சமயங்களில் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு விடுகிறது.

சில நண்பர்கள் இருக்கிறார்கள். நம் இல்லத்தில் நாம் சற்று நகர்ந்தவுடன்,
"நேத்து எத்தனை மணிக்கு வந்தான்?" என்பார்கள்.
"சீக்கிரா வீட்டுக்கு போறேன்னு கெளம்பினானே?
"அவ்வளவு லேட்டா ஏன் வந்தான்?"
"நான் சொன்னேனு சொல்லாதீங்க, நீங்களே தெரிஞ்சுகிட்ட மாதிரிகேளுங்க"
அடுத்த சந்தர்ப்பத்தில்,
"எனக்கென்னமோ பயமா இருக்கு உங்க எதிர்காலத்த நெனைச்சா"
மெல்லப் பற்றவைப்பார்கள். இந்த சமயலறைக் கரப்பான் பூச்சிகள் உணவுகளை நாசப்படுத்திவிடும்.

"வெளியூர் போனேன். இந்த சேலையைப் பாத்த உடனே உங்க ஞாபகம் வந்துச்சு. அதான் வாங்கிட்டு வந்தேன்".
வலை விரிப்பாகவும் இருக்கலாம்.
"வீட்டுக்கு ஒழுங்கா பணம் குடுக்குறானா?, ஏதாவது பிரச்சனையா சங்கடப்படாம சொல்லுங்க நான் உதவி பண்றேன். பின்னால பாத்துக்கலாம்". வலிய வரும்போது வலி வரப்போகிறது என்று அர்த்தம்
இருபது வருடங்களுக்கு முன் என் நண்பராய் இருந்த ஒருவரின் இல்லத்தில் அவரோடு அமர்ந்திருந்தேன். எனக்குத் தெரிந்த அவருக்கு நெருக்கமான இன்னொரு நண்பரும் இருந்தார். இன்னொரு நண்பர் அந்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணிடம் காபி கேட்டார். உடனே வந்தது. இல்லத்து நண்பர் சொன்னார். "நான் கேட்டா அரை மணி நேரமாகும். உங்களுக்கு உடனேவருது". அவர் சிரித்தார். அவர் முன் இருந்த காபியை தான் எடுத்துக் கொண்டு அவருக்கு வேறு காபி போடச் சொன்னார். குடித்தார் முகம் மாறினார்.

"என் வீட்ல எனக்கே இவ்வளவு நல்ல காபி கெடைக்கிறதல்ல". "உங்களுக்கு எப்படி? என்றார்".
"பதில் சொல்ல முடியாமல் அந்த நண்பர் தயங்க இவரோ என் கூடவே இருக்கீங்க. வீட்ல என்னைப் பத்தி செய்தி வாசிக்கிறீங்கனு தெரியது. அதனாலதான் இந்த மரியாதை". கௌம்புங்க உடன் நட்பை முறித்தார்.

இவை எல்லாம் பெண்களுக்கும் பொருந்தும்.

ஒரு அவசரத்தில் ஒருவன் ஒரு நண்பனுக்கு உதவுகிறான். பின் உதவியவனுக்கு அவசரம். உண்மையான நட்பாக இருந்தால் ஓடி வந்து உதவும். உதவாத நட்பை அல்லது உதவ இயலாத நட்பை மனம் எதிர்பார்க்கிறதா? அதுவும் நல்ல நட்புக்கு அடையாளமில்லை.

மனைவி, நண்பன் உதவவில்லையே என்று தலையணை வழியே சேதி சொல்லலாம். கவனத்தில் கொண்டால் நட்பில் விரிசல் விழும், அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மனைவிக்கு ஒரு புன்னகை மனதுக்குள் நண்பனைப் பற்றிய உயர்ந்த எண்ணம். இப்படி ஒருவனால் வாழ முடியும் என்றால் அவன் மகான்.

அதே சூழ்நிலையில் நண்பனின் மரியாதையைக் காப்பாற்ற வேறு எங்கோ உதவி பெற்று இதோ என் நண்பன் உதவினான் என்று நண்பர்களைப் பெருமைப் படுத்தும் ஒருவனை ஞானி என்று சொல்லலாம். இந்த மகான்களும், ஞானிகளும் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். நல்ல நட்பை வாழவைக்கிறார்கள்.

நண்பனின் அப்பா, அம்மா நமக்கு அப்பா, அம்மா ஆவதும் நம் அப்பா அம்மா நண்பனுக்கு அப்பா, அம்மா ஆவதும் நட்பில் மட்டுமே நடக்கக் கூடிய சாத்தியம். நடக்கும் அதிசயம்.

சில சமயங்களில் நண்பனின் தங்கை காதலியாக மாறிவிடுவதும் உண்டு. அது அங்கீகரிக்கப்படுவதும் உண்டு. அசிங்கப்பட்டு நட்பு களங்கப்படுவதும் உண்டு. நண்பனின் தங்கை காதலியாக மாறுவது சமயங்களில் தவிர்க்க முடியாததாக இருக்கலாம். நண்பனின் மனைவி காதலியாக மாறுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

திரு எம். ஏ, காஜா ஒரு திரைப்படம் இயக்கியிருந்தார். அவரிடம் உதவியாளனாகச் சேருவதற்கு என்னைத் தூண்டிய படம். ஒரு விடுகதை ஒரு தொடர்கதை. நட்பை எந்த எல்லையில் நிறுத்த வேண்டும் என்று அது சமூகத்திற்குச் சொன்னது. ஒரு உயர்ந்த நட்பு எவ்வளவு பொறுமையும், பெருமையும் உடையது என்றும் அது சொன்னது.

ஒரு இல்லத்தில் எதன் நிமித்தமாகவோ உள்ளேயோ, மொட்டைமாடியிலோ ஒரு பார்ட்டி கொண்டாடினால் அந்த நண்பர்கள் குழுவில் வளைவு நெளிவுகளை ரசிக்கும் ஒரு நண்பன் இருக்கத்தான் செய்கிறான். ரசிக்க ஆரம்பிக்கிறவன் வளைவு சுழிவாக துரோகம் செய்கிறான். பின் வன்முறை கொண்டாடுகிறது நட்பு.

ஒரு இல்லத்தில் ஒருவன் இல்லாதபோது ஓரிரு முறை வருகிறவன் நண்பன். ஓயாமல் வருகிறான் என்றால் அவன் நட்பில் களங்கம் இருக்கிறது. எங்கேயோ தவறும் இருக்கிறது.

எவ்வளவு புனிதமான நட்பாக இருந்தாலும், வெளியூர் செல்லும்போது இல்லாளையோ, தங்கையையோ நான்கு நாட்களுக்கு மேல் நண்பனின் இல்லத்தில் தங்க வைத்தால் யாராவது ஒருவரிடத்தில் சபலமும் சலனமும் தோன்ற வாய்ப்பு வரும், திரு சிவக்குமார், திருமதி லட்சுமி இணைந்து நடித்த தண்டிக்கப்பட்ட நியாயங்கள் என்று ஒரு படம். மேலே குறிப்பிட்ட கருத்துக்கு அந்தப் படம் ஒரு உதாரணம். ஒரு அழகான குடும்பம் சிதைவதை அந்தப்படம் சித்தரிக்கும்.

பெண் நட்புக்கும் இது பொருந்தும். தன் தோழியைப் பற்றி தன் கணவன் ஒரு முறை விசாரித்தால் அது நலம் விசாரிப்பு. ஓயாமல் விசாரித்தால், ஒப்பிட்டுப் பேசினால் அது நலம் வேண்டும் விசாரிப்பு. பெண் நலமடைய விழித்துக் கொள்ள வேண்டும்.

தோழிக்கு உதவ கணவனை அனுப்பிய பெண்ணின் வாழ்க்கைப் பிரச்சனைதான் திரு பாக்கியராஜின் மௌனகீதங்கள். சங்ககாலத் தோழன் தோழி இதெல்லாம் இப்போது ஒத்துவராது. தூது செல்லும் நண்பன் நண்பனின் காதலியைக் கவர்ந்து கொள்வதும், தோழி தோழியின் காதலனை வளைத்துக் கொள்வதும் இப்போதெல்லாம் எண்பது சதவீதம் நடக்கிற விஷயங்களாக உள்ளன.

தொடர்ந்து ஒருவன் இன்னொருவனுக்கு மது வாங்கிக் கொடுத்து நண்பன் ஆகிறான் என்றால் அந்த இன்னொருவனிடம் இருக்கும் ஏதோ ஒன்று களவு போகப் போகிறது என்று அர்த்தம்.

எவ்வளவு நல்ல நட்பாக இருந்தாலும் வீட்டில் உள்ள தொலைபேசி எண்ணைக் கொடுக்காமல் இருப்பது நலம் என்று தான் தோன்றுகிறது. நமக்கென்று ஒரு கைபேசி இருக்கும்போது இல்லத்தின் தொலைபேசி வழியாக வரும் தொந்தரவுகளையும் துரோகங்களையும் தவிர்க்கலாம்.

எந்த அவசர சூழ்நிலையிலும் மனைவி, தங்கை, மகள் கைபேசியில் இருந்து மற்றவர்களை அழைக்காமல் இருப்பது நட்புக்கும் மனதுக்கும் நலம் பயக்கும்.

நான் இயக்கிய ஒரு படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலை சென்னையில் நடைபெற்றது. ஒருவர் இரண்டு இல்லத்தரசிகளை அறிமுகப்படுத்தி வைத்தார். என் கைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார்கள். அவர்களின் எண்களைக் கொடுத்தார்கள். இரண்டு நாள் கழித்து அழைத்தார்கள். நாற்பத்தியெட்டு மணி நேரம் ஆகிவிட்டது. எப்படி எங்களை உங்களால் அழைக்காமல் இருக்க முடிந்தது என்றார்கள். சந்தித்தோம். கணவர்களுக்கு போதையும் வாடையும் தெரியக்கூடாது என்பதற்காக அளவாக நாலு லார்ஜ் வோட்கா மட்டும் அருந்தினார்கள். என் வணக்கத்துக்குரிய ஒருவர் அழைத்துச் சொன்னார், விபரீத நட்பென்று. உடன் விலகினேன். அப்போது அவர், இப்போதெல்லாம் நண்பனுக்கு நண்பன் துரோகம் செய்வதைவிட இல்லாள்கள் நட்புக்கு துரோகம் செய்கிறார்கள் மகனே என்றார்.

அவசரம் கருதி கொடுக்கப்படும் பெண்களின் கைபேசி எண்களுக்கு எங்கிருந்தோ அழைப்பு வருவது இப்போது பரவலாகி விட்டது.

"ஓ மன்னிக்கவும் தப்பா நம்பர் போட்டுட்டேன்". அரை மணி நேரம் கழித்து.
"உங்க குரல் ரொம்ப இனிமையா இருந்துச்சு. நீங்க பாடகியா?"
புகழ்ச்சி நட்பில் முடிந்து நட்பு கருக்கொள்ளும். நட்பு கலைந்து கரு கலையும். பெண்கள் இந்த நட்புக்களைத் தவிர்க்க வேண்டும.

சில நாட்களுக்கு முன்னால் கதை விவாதத்துக்காகப் பாண்டிச்சேரி போயிருந்தேன். ஒரு கடற்கரையோர விடுதியில் தங்கியிருந்தோம். மறுநாள் காலை அந்த விடுதியின் வரவேற்பறையில் நின்று கொண்டிருந்தபோது இரண்டு ஆட்டோக்கள் வந்து நின்றன. அடைத்துக்கொண்டு அமர்ந்திருந்த இளைஞர்களும் இளைஞிகளும் இறங்கினர். நேராக அறைக்குள் போய் அடைத்துக் கொண்டனர். விசாரித்தேன். அத்தனை பேரும் தாம்பரம் தாண்டி இருக்கின்ற கல்லூரியின் மாணவ மாணவியர். நட்பின் பெயரால் தங்களைப் பகிர்ந்து கொள்வதும், மாற்றிக்கொள்வதும். தடை செய்யப்பட்ட போதை மருந்துகளைப் பயன்படுத்துவதும் (அங்கேயே கிடைக்கும் என்றார்கள்) நிர்வாணமாகக் கட்டிப்பிடித்து உறங்குவதும், மறுநாள் போதை கலையாமல் எழுந்து போய் விடுவதும் வாடிக்கையான விஷயம் இவர்களுக்கு என்றார்கள். நாங்கள் உடனடியாக "கிரின்பார்க்" மாற்றிக்கொண்டோம்.

எங்கோ இருந்து பெற்றோர்கள் பணம் அனுப்ப இவர்கள் பெற்றோர் ஆக ஒத்திகை பார்க்கும் அவலம், நட்பின் பேரால் நடந்தேறும் சீரழிவு, நட்பை எந்த அளவிற்கு தரம் தாழ்த்தி வைத்திருக்கிறது. எதிர்காலத்தில் அவன் யாரையோ மணமுடிப்பான். அவளும் அப்படித்தான். இறந்த காலப் பழக்கத்தால் நிகழ்காலம் தடுமாறும். குடும்ப உறவுகள் சிதையும். விவாகரத்துக்கள் பெருகும். நட்பு இப்போதெல்லாம் எதிர்காலத்தை சீரழிக்கும் ஒரு கருவியாக ஆகிப்போய்விட்டது.

தங்கள் தோழிகளுக்காக தேங்காய் எண்ணை பாட்டிலில் வோட்கா கொண்டு வரும் கில்லாடித்தனத்தை தனியார் கல்லூரிப் பெண்கள் கற்று வைத்திருக்கிறார்கள். பெட் பாட்டில்களில் தண்ணீர் ஊற்றியும் வோட்காவை எளிதாக எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

உயர்ந்த இட இல்லதரசிகள் நட்பின் பேரால் சனி, ஞாயிறுகளில் கிண்ணம் ஏந்தி பின் கிண்ணங்களை ஏந்துகின்றனர். அந்த முதல் கிண்ணம் சியர்சில் ஆரம்பிக்கிறது. ஒரு நான்கைந்து முறை மது நிரப்பி, பின் மனது தளும்பி, விடியும் வரை உடல்கள் சியர்ஸ் சொல்லி மோதிக் கொள்கின்றன. மோதுதலும், வழிதலும் பஞ்சமின்றி நடக்கிறது நட்பின் பேரால். நட்பு என்பது காமம் சார்ந்த பொழுதுபோக்கு, மது சார்ந்த பொழுதுபோக்கு என்று இன்றைய சூழலில் மாறிப்போனது. அப்படி மாறிப்போகாத நட்பும் இருக்கிறது. நான் சீரழிவுகளை மட்டுமே பதிவு செய்கிறேன். சிறப்புகளைக் காயப்படுத்தவில்லை.

சைமன் கமிஷன் வருகை இந்திய மக்களைக் குமுறி எழச் செய்தது. போராட்டத்தில் லாலாலஜபதிராய் தடியடியில் மண்டை பிளக்கப்பட்டு மரணமடைகிறார். காரணமானவன் காவல்துறை அதிகாரி சாண்டர்ஸ்.

துல்லியமாகத் திட்டமிட்டு, காவல்நிலையம் விட்டு வெளியே வரும் சாண்டர்சை ராஜகுரு கழுத்தில் சுடுகிறார். சாண்டர்ஸ் கீழே விழுகிறான். பகத் சிங் சுடுகிறார். காரியம் முடிந்து தப்பிக்கின்றனர்.

உடனடியாக அவர்கள் லாகூரிலிருந்து வெளியேறியாக வேண்டும். சுகதேவ், பகவதிசரணின் மனைவி துர்காதேவியை அணுகுகிறார். பகத் சிங்கை தப்பிக்க வைக்க துர்கா தேவி பகத்சிங்கின் மனைவியாக நடிக்க வேண்டும் என்று வேண்டுகிறார். பகவதி சரணோ ஊரில் இல்லை. அன்றைய சமுதாயச் சூழலில் ஒருவனின் மனைவி இன்னொருவன் மனைவியாக நடிப்பதா? துர்காதேவி யோசிக்கவே இல்லை. தான் பகத்சிங்கின் மனைவியாகி தன் குழந்தையையும் தூக்கிக் கொண்டு புகை வண்டியில் பகத் சிங்கோடு பயணிக்கிறார். விசுவாசமுள்ள வேலைக்காரனாக பக்கத்தில் ராஜகுரு. பகவதி சரணுக்கு செய்தி தெரிவிக்கப் படுகிறது. கல்கத்தா ரயில் நிலையம் வந்தடைகின்றனர். பகவதி சரண் வந்து வரவேற்கிறார். தன் மனைவியின் துணிச்சலைப் பாராட்டுகிறார். நட்பு அங்கே நாட்டுக்காக சேவை செய்தது.

எத்தனையோ நட்புக்களைப் பார்த்த இந்திய மண் இது. வ.உ.சியின் நட்புக்காக சிறைத்தண்டனை பெற்ற சுப்பிரமணிய சிவா வாழ்ந்த மண் இது. ஜீவாவும் காமராசரும் நட்புக் கொண்ட மண் இது. ராமகிருஷ்ண பரமஹம்சர் அன்னை சாரதாதேவியை நட்பாகக் கொண்டாடிய பூமி இது. இப்போது சொல்லலாம். கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும், ஒளவையும், அதியமானும் நட்பை விதைத்த நிலம் இது. நம் நட்பையும் நல்ல நட்பாக விதைப்போமே.

அடுத்த வாரம்..நட்பு பயணத்தில் என் காலடித் தடங்கள்.

நட்புடன்
அகத்தியன்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

    </