வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
(தமிழ்ப்பெண் மொழி வழி ஓர் அகழ்வாய்வு)

பெண்ணெழுத்து தமிழ்ச்சூழலுக்கு ஏற்கெனவே நிரம்ப அறிமுகமாகியிருந்தாலும் அதன் புரிந்து கொள்ளல் தளத்தில் உள்ள முரண்களைக் கட்டவிழ்ப்பது அவசியம் எனப்படுகிறது. பெண்மை என்பது ஒற்றைத்தன்மை உடையதன்று, அது பன்முகத் தன்மை உடையது என்பதான, பின்நவீனத்தின் கருத்தாக்கத்தை எதன் மீதும் சுமத்திப் பார்க்கும் காலக்கட்டத்தில் தான் பெண்ணெழுத்து தமிழகத்தில் ஓங்கியது. குழந்தைகள் விளையாடும் உடைந்த பொம்மையைக் கூட பின்நவீனத்துவப்பண்பு கொண்ட கலைப்பொருள் எனக் கொண்டாடும் நகைப்பைக் கொடுக்கும் இடத்தில், பெண்ணெழுத்தை அறிமுகம் செய்யும் இடத்தையும் கால அவகாசத்தையும் நான் உங்களிடையே எடுத்துக் கொள்ள இருக்கிறேன்.

இவ்விடத்தில் ‘பெண்’ என்ற தனது பால் அடையாளத்தை நிலைநிறுத்த எழுத்தைப் பயன்படுத்திய பெண்களுடன் ஏற்கெனவே அவ்வடையாளங்களுடன் எழுதிய, எழுதிக்கொண்டிருந்த பெண்கள் வந்து இணையும் இடத்தில் அவ்வொற்றை அடையாளம் என்பது காத்திரமடையாமல் நீர்த்துப் போகும்படியான ஒரு செயலூக்கம் பெற்றிருந்ததைத் தமிழ்ச்சூழல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது அல்லது சொரணையற்று இருந்தது. இந்நிலையில் நம் பெண்கள், தம் பிரதிகளை மீண்டும் மீண்டும் எழுதிக் கலைக்கவேண்டியிருந்தது. மணல் மீதான தடங்களைப்போல கலைந்து கொண்டே இருந்தன, அப்பிரதிகள். மண் அடுக்குகளின் ஆழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும், புதைக்கப்பட்டிருக்கும் தம் உடலைக் கண்டடையும் முடிவற்ற முயற்சியின் வெளிப்பாடாகவும் இருந்தன அப்பிரதிகள். இவ்விடத்தில், பெண் ‘எழுத்தை’, இரண்டாம் கட்டத்தில் எழுத வந்தப் பெண்கள் அவ்விதம் தான் தமக்குப் பயன்படுத்திக் கொண்டனர், ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து முதல் முறையாக எழுத வந்த பெண்கள், இவர்கள். சமூகவெளியில் முதன் முறையாகத் தம் உடலை நிலைநிறுத்திக் கொள்ளும், கட்டமைத்துக் கொள்ளும் அவர்தம் பணி, அவர்கள் எழுத்தின் வழியாகவே, அதிகார நிறுவனங்களுக்கு வெளிப்படையாகத் தெரியவந்தது. அதிர்ச்சியை அளித்தது. இது நிகழ்ந்த காலக்கட்டத்தில் அதிகார நிறுவனங்கள், பெண்ணுடல்களுடன் நேரடியாகவே மோதத் தொடங்கின.

ஆனால், அதற்கு முன்பிருந்தே எழுத்தைத் தங்களின் ஊக்கமாகவும் அதிகார நிறுவனங்களை எதிர்ப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்திய இரண்டாம் தலைமுறைப் பெண்கள், ’பெண்’ என்ற ஒற்றை அடையாளத்தையே எப்பொழுதும் வலியுறுத்தி வந்தனர் என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொள்வோம். ஒற்றை அடையாளப் பெண்கள் இதர, அதிகார நசிவுக்குள்ளான பெண்களுடன் ஒருபுறம் தங்களை இணைத்தவாறே மறுபுறம் ஆதிக்கக்குறிகளையும் தங்கள் உடலில் வளர்த்துக் கொண்டும் இருந்தனர். இந்நிலையில் பெண்களில் ஆதிக்கக் குறி வளர்த்த பெண்கள், ஆதிக்கக் குறி வளர்க்காத பெண்கள் என்ற இருவகையினர் உருவாகினர். ஏற்கெனவே, அதிகாரம், முறையற்ற பாலின்பச் சுவை, உடல் மீதான தொடர் வன்முறைக்கான வேட்கை போன்ற ஆண்மைய வாதத்தினால் பெண்களின் பேசுபொருட்கள் ஒருக்காலும் விளிம்பிலிருந்து மையத்தை எட்ட முடியாத சுழற்சி நிலையிலும், இயக்க நிலையிலுமே இருந்தன. அவ்வகையில், சமூகத்தின் மேல் தட்டு அங்கீகாரங்களுக்கும் சலுகைகளுக்கும் உரியவர்களான பெண்கள் தாங்கள் மீட்டுக்கொண்டு வந்த மணலுடலில் குறி வளரக் கண்டனர். அது பாலுறுப்பு என்பதால், அது எப்பொழுதும் மறைவிடத்தில் உள்ளது என்பதால் அது பெரிய பொருட்டாக்கிப் பேசப்படவேண்டியதில்லை என்று கருதியதுடன், தம் பெண்ணியப்பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுவைத்துவிட்டு, தம்முடலை ஒரு பேசுபொருளாக ஆக்கும், அதை திடப்படுத்தும் தலையாய வேலையையும் விட்டுவிட்டு மீண்டும் தங்கள் தங்கள் உடலை ஆணின் வேட்கைக்கு இரையாகச் செய்யும் மரபார்ந்த வேலைக்குத் திரும்பிவிட்டனர்.

பெண்ணெழுதும் பிரதியோ அப்பிரதியைப்படைக்கும் பெண்ணோ முக்கியமன்று. இப்பிரதி உருவாக்கம் பெறும் வழிமுறை தான் முக்கியம். பிரதியை வியத்தலும், அதைத் தூற்றுதலும் அல்லது பிரதியை விடுத்து அதை உருவாக்கிய பெண்ணின் உடலையும் வாழ்க்கையையும் ஒரு பிரதியாக்கித் தூற்றுதல் அல்லது புறக்கணித்தல் போன்ற நிகழ்வுகளையெல்லாம் தமிழ்ச்சமூகம் வேண்டி விரும்பி தன் ஆதிக்கக் குறி வளர்த்த தருணங்களாகக் கொள்ளலாம்.

ஆனால், பெண்ணின் சமூக அடையாளம், அவள் ஆக்கிய பிரதியின் கருப்பொருட்களின் பொருள்விளக்கம் இவையிரண்டுமே, அப்பெண் உருவாகிவந்த பண்பாட்டுத் தளத்தின் வழியே தான் நுகரப்படுகிறது. இதை வேண்டாமென்று பெண்களும், இது அவசியமில்லை என்று வாசகர்களும் ஒருபொழுதும் புறக்கணித்து விடமுடியாது. ‘மொழி’ யைப் பெண் பெறுவது ஓர் அதிகாரமாகவே கருதப்பட்ட சமூகத்தில் பிரதியை உருவாக்கிய பெண்ணுக்கு எழுத்துமொழியுடனான அல்லது வழக்கு மொழியுடனான புழக்கம் எத்தனை தலைமுறையினது என்பதும், முந்தைய தலைமுறையிலேயே அவளுக்கு மொழி வாய்த்திருந்தது எனில் அத்தலைமுறையிலேயே அவளுக்கு மொழி அதிகாரத்தைத் துய்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது அப்பெண் அம்மொழியை வைத்து தனக்கும் தன்னையொத்த உடலுடைய பெண்களுக்கும் என்ன செய்து கொண்டாள் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளப் படவேண்டிய கேள்வி. இந்தக் கேள்வியை இன்னும் எளிதாக அணுகுவது அப்பெண்ணுக்கு அவசியப்படும் விடுதலையின் வேட்கையை அளவிட உதவியாக இருக்கும். அதற்குக் காலத்தைத் தலைகீழாக நாம் அணுகவேண்டியிருக்கும். முதல் தலைமுறையாக மொழியைக் கைக்கொள்ளும் பெண் எனில் அப்பெண்ணின் கருப்பொருட்களே முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஏனெனில், இன்னும் வாசிக்கப்படாததும், முன் வைக்கப்படாததும், புறக்கணிக்கப்பட்டதுமான மூலகங்கள் அங்கே தான் நிறைந்து கிடக்கின்றன.

மேற்கண்ட புரிதலுடன், தமிழ்ச்சூழலில் பெண்ணெழுத்து நிகழ்வை அணுகலாம். மிகை வெளி, இவ்வுலகை ஒரு ‘முழுமை’ எனப்பார்ப்பதற்கான தனிப்பட்ட முறைமை, நன்கு செழித்தும் கொழுத்தும் வளர்ந்திருந்த முதலாளித்துவப் பண்பாட்டு நிலையைப் பகுத்தாய்வதற்கான தத்துவார்த்தக் கருத்துகளின் ஒரு தொகுதி, எப்பொழுதும் கலகத்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்பும் வேட்கையை நிறைவேற்றிக் கொள்வதற்குமான வசதியும் வழங்கப்பட்ட பசியாறிய உடல்கள், பணிவு மறுக்கும் தன்மை, புரிதலின் செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவது, ஒருங்கிணைப்பைக் காப்பாற்றுவதில் அதிக ஆர்வமற்றது, ஏற்கெனவே திடமான குருதிப்பாய்ச்சலுக்கு உள்ளான ஆதிக்கக் குறிகளை வளர்த்திருந்த இனத்துடன் சென்று சேரும் ஆர்வத்தைச் செயல்படுத்திக்கொள்வது, எனத் தீவிரமாக தன்னிலையிழந்து தமிழ்ச்சமூகம் செயல்பட்டுக் கொண்டிருந்தக் காலகட்டத்தில் பெண்ணெழுத்து அறிமுகமாகிறது. அதுவரையிலும் பெண்ணுடலைத் தன் புனைவுகளுக்குள் ஒரு கச்சாப்பொருளாக மட்டுமே ஆண் படைப்பாளிகள் படைத்து வந்தனர். ஆக. பெண்கள் தம் மொழியால் அத்தகையப் புனைவுகளையெல்லாம் தம் எழுத்துக் கரத்தால் அழிக்கின்றனர். அப்புனைவுகளில் இடம்பெற்றவை எல்லாம் எம் உடல்களோ, ஏன், எம் உடல்களின் சாயல்களோ கூட இல்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆண்களின் புனைவுகளில் உலவிய பெண்ணுடல்கள், ஆண்களின் வசதிக்காகவும், ஆண் குறிகளின் அதிகாரத்தை இயக்குவதற்காகவும் அவர்கள் புலன்களுக்கு இன்பமூட்டும் நுகர்வுத்தன்மைகளுடன் உருவாக்கப்பட்ட அங்க அடையாளங்களுடையதுமான ஒரு தட்டையான உடல் தான். இந்நிலையில் பெண்ணெழுத்து என்பது தன்னுடலின் வலிமையையும் தன்னையொத்த பெண்கள் உருக்கொண்ட உடலையும் எழுதுபொருளாக்கும் முதல் வகையான பணியைச்செய்கிறது. இங்கு எழுத வரும் பெண்களும், அவர்கள் எழுத்து உருவாக்கம் பெறும் நடைமுறையும், ஏன் அவர்கள் உருவாக்கும் பிரதியுமே கூட தனித்த அளவில் முக்கியத்துவம் பெறுவதுடன் உச்சப்பட்ச செயற்பாடும் அடைகின்றன.

மேற்கண்ட நிலையில் உருவாகிய பிரதிகள் எவ்வாறெல்லாம் வாசிக்கப்பட்டன எனும் புரிதலுக்குச் செல்லலாம். அப்பிரதியை வாசித்தவர்கள், அவரவர் மனதில் அப்பிரதியை உருவாக்கியப்பெண் பற்றிய என்னென்ன சமூகப் பண்பாட்டு பிம்பங்கள் துலங்கினவோ, அந்தச் சமூகப் பண்பாட்டு பிம்பங்களுக்கு என்னென்ன ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்திருந்தனரோ அதையே கண்ணாடியாக அணிந்து கொண்டு வாசித்தனர். அவர்கள், தங்களின் அகஉலகத்திற்கு ஊட்டி வளர்த்திருந்த கருத்தாக்கத்தையோ, சமூகக் கூறுகளையோ, பண்பாட்டு ஏற்றத் தாழ்வுகளையோ எங்குமே கேள்வி எழுப்பாமல் சந்தேகிக்காமல், தங்கள் முன்வைக்கப்பட்ட பிரதிகளின் மீது அச்சுமைகளை ஏற்றினர். அவற்றைச் சந்தேகித்தனர், அஞ்சினர். அவதூறு செய்தனர். தங்கள் புனைவுகளில் உலவிய பெண் பிம்பங்களும் அவற்றின் வழியாக அவர்கள் தங்களுக்குச் சேமித்து வைத்திருந்த அதிகாரங்களும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை மறைக்கப் பரிபூரண அமைதி காத்தனர். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், யோனியையும் முலைகளையுமே வீடாகவும் வெளியாகவும் மாற்றியிருந்த பெண்களின் காதுகளில், ’யோனிகளும் முலைகளுமே கூட மாயை!’ என அழுந்த அழுந்தக் கூறி அவற்றின் வழியாக அச்சத்தைச் சித்திரித்த பக்திப்பாடல்கள் தொடர்ந்து ஒலித்த இந்துக் குடியிருப்புகளிலிருந்து வந்த படைப்பாளிகளாயிருந்தனர். ஆகவே, தங்களின் கவனத்தை, சமூகப் பிரக்ஞையை, அவர்களுக்கு அது வரை செயலூக்கம் வழங்கி வந்த இந்திய இறையாண்மை, இந்திய சமயம், இந்தியப் பண்பாடு என்ற இந்திய முகத்துடன் தங்களை ஒட்டுமொத்தமாய் இணைத்துக் கொண்டனர். அப்படி அவர்கள் தங்களை இந்திய இறையாண்மையின் இந்து இதயத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டார்களானால், பெண்கள் முகத்தில் வெளிப்படும் பலதரப்பட்ட உணர்ச்சிகளை நேரடியாக எதிர்கொள்ளவே வேண்டியிருக்காது. ஏனெனில் அவ்வுணர்ச்சிகள் அவர்களுக்குள் கடுமையான குற்றவுணர்வை ஊட்டக்கூடும். அவர்தம் பண்பாட்டு அதிகாரத்துடனான உறவைத் துண்டித்து நிரந்தரமானதொரு தனிமையைக் கொடுக்கக்கூடும். மொழி வழியாகத் தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினால் உண்டாகும் பதட்டத்தை எல்லோரும் அறியும்படியாகும். ஆண் குறி வழங்கிவரும் மறைமுகமான பெருமையையும் அதிகாரத்தையும் சுவைக்கமுடியாது போய்விடும். இன்னும் சொல்லப்போனால் எந்த மொழியை வைத்துத் தன் அதிகாரத்தை வளர்த்துக் கொண்டார்களோ அந்த மொழியே முற்றிலும் அந்நியமாகப் போய்விடும். ஏனெனில் இது வரை அவர்கள் கற்பித்து வந்த அர்த்தத்தில் இருந்த சொற்களையெல்லாம் பெண்கள் வேறுவேறு அர்த்தங்களில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தம் பயன்பாட்டிற்கு ஏற்ற கலைச்சொற்களையும் உருவாக்கிக் கொண்டனர். ஆகவே, புனைவாளர்கள் தங்கள் முகம் திருப்பிக் கொண்டார்கள்!

ஆனால், தமிழ்ச்சூழலில் ஒரு தவறான அர்த்தப் புரிதல் நிகழ்ந்து விட்டது. பெண் விடுதலைக்கான இந்த எழுத்து வகை, பாலியல் வேட்கையின் வெளிப்பாடாகவும் அதற்கான வெளிப்படையான கோரலாகவும் பெண்களாலேயே புரிந்து கொள்ளப்பட்டிருப்பது தான் அது. அத்தகைய பாலியல் வேட்கையை பெண்கள் தாமாய் முன்வைக்கும் உரிமையைப் பெற்றுவிட்டாலே, ஆண் குறிகள் தம்மீது செலுத்தி வந்த அதிகாரத்தை எதிர்த்து விடலாம் என்ற அர்த்தமாயும் எடுத்துக்கொண்டனர். அப்படியொரு பாலியல் வேட்கையையும் விடுதலையையும் ஏற்கெனவே சாதியச் சந்தையின் மேல் தட்டில் இருக்கும் ஆதிக்கச் சாதிப் பெண்கள் நுகரவில்லையா என்ன? அது முழுமையான விடுதலையை பெண்ணினத்திற்குச் சாத்தியப்படுத்திவிட்டதா என்ன? ஆக, மொண்ணையாக அதை பாலியல் வேட்கை என்றும் பாலியல் விடுதலை என்றும் பேசுதல் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் அவரவர் சாதி சார்ந்த அதிகார போதையில் நிகழும் அரைகுறைப் புரிதலே. பாலிமை உறுதிப்பாட்டை அடைவதற்கான முயற்சியில் ஒடுக்கப்பட்ட சாதிய, பொருளாதார அடுக்குகளின் கீழ்த்தட்டில் இருப்பவர்களுக்கும் இவை தடைகளாக எழுகின்றன. ஆக, இக்கட்டத்தில் பாலியல் உரையாடல்களின் அர்த்தங்களையும் பாலிமையின் பண்புகளையும் பாலியல் சொற்களின் குறியீடுகளையும் விரைந்து மாற்ற வேண்டியிருக்கிறது. மொழியின் கூர்மையை இன்னும் தீட்டிக் கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது. பாலியல் வேட்கை பற்றிய வெற்று உரையாடல்கள் எல்லாம் புணர்ச்சியின் உச்சக்கட்டத்தைப் போலவே தீவிரச் சோர்வைத்தாம் தரக்கூடும், அதை அடைவதற்கான வழிமுறைகளும் அலகுகளும் தேவைகளும் இல்லாத போது.

பாலியல் வேட்கை என்பதை முன்வைக்கும் பெண்நிலை வாதம் முற்றிலுமானதோர் ஒற்றை அடையாளத்தைப் பெண்ணுக்குக் கேட்பது. ஆண்களை மட்டுமே எதிரிகளாகப் பாவித்து, இதர சமூகப் பெண் வர்க்கத்தினரை புறந்தள்ளுவது. இவர்கள் தாம் ”பெண்” சம்பந்தப்பட்ட எதுவுமே பெண்ணியப் பிரச்சனையென்று பொத்தாம்பொதுவான விஷயங்களையும் பேசுபொருளாக்குவதுடன், பெண்ணிலை வாதத்தை கூர்மையடையாமல் மழுங்கடையச்செய்கின்றனர். பொருளாதார, சாதிய நிலைகளில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்களின் முதன்மையான பிரச்சனை பாலியல் வேட்கை இல்லை, பாலியல் உரிமை. அத்தகைய பாலியல் உரிமைகளில் அவர்கள் கோரும் வேட்கை என்பது மிகச்சொற்பமான, அற்பமானதோர் உரிமை. அன்றாடம் கணநேரமும் உழைக்கும் பெண்ணின் பாலியல் நுகர்வுக்கான இயல்பூக்கம் எப்பொழுதுமே ஆரோக்கியமானதாகவும் அவ்வேட்கையை நிறைவு செய்துகொள்ளும் அனுபவமும் வாய்த்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயமென்ன இருக்கிறது?. ஆனால், உடலுக்கு உணவையும் ஆரோக்கியத்தையும் வழங்குவதற்கான அடிப்படை வசதிகள் அற்ற சமுதாயத்திலிருந்து எப்படி உடலுக்கு பாலியல் இன்பத்தை வழங்க முடியும்? பசி வந்திடப் பறந்து போம்!

தீவிரநிலைப் பெண்ணியம், மார்க்சியம் போன்ற கருத்தாக்கங்களை பெண்களின் உடல் சார்ந்த அரசியலைப் பேசுவதிலும் குறிப்பாக, கீழைத் தேயப்பெண்களின் காலங்காலமான செயற்பாடுகளை அர்த்தப்படுத்துவதிலும் இருக்கும் போதாமைகளை நினைவில் கொண்டும், அக்கருத்தாங்களை முற்றிலும் உதிரியான அளவில் புரிந்து கொண்டும் தாம் இதை முன்னுரைக்கிறேன். இந்நிலையில் நாம் அடையவேண்டிய பெண் விடுதலை என்பது, பெண்ணின் பொருளாதார விடுதலையைக் கருத்தில் கொண்டது, அதன் கடந்த கால சாத்தியங்களை நினைவில் கொண்டது, இன்றைய பெண்ணுக்கான அறஞ்சார்ந்த வாழ்வையும் அதில் பெண்ணுக்கான பாலுரிமையையும் உள்ளடக்கியது.

அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின் தான் பிற சமூகத்தினரிடம் ’பெண் விடுதலை’ நிகழ்த்தப்போகும் அதிர்வுகள் குறித்த இம்மாதிரியான பதற்றங்களும், குழப்பங்களும், தடுமாற்றங்களும் அதிகமாகியிருப்பதை உணர்கிறேன். பட்டியல் இனம் தவிர்த்த பிற சாதியினர் தங்கள் அதிகாரத்தையும் நிலைநிறுத்துதலையும் புணரமைக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதைப் போல தீவிரமாக இயங்கத் தொடங்குகின்றனர். இதில் இயல்பாகவே பெண்களின் ஒட்டுமொத்த பிரதிகளும் அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தனரோ அந்தப் பின்னணி சார்ந்து இரு வகையினராகப் பிரித்து நுகரப்படுகின்றன.

இதில் நாம் உண்மையிலேயே படித்துணரவேண்டியதும் நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடும், தொன் பொருண்மைத்துவமும் தொல் அறவியலும் சார்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே நினைவுகளில் மீண்டும் மீண்டும் பதியப்பட்டிருந்த மரபார்ந்த பெண்பிம்பங்களின் நினைவுகளிலிருந்து நம் பெண்களை மீட்டெடுக்கவேண்டியிருக்கிறது. ஆதிக்கப் பெண் பிம்பங்களான பாஞ்சாலியின் தூமையில் உழலும் பூமியாகவும் சீதையின் சாபத்தினால் பீடிக்கப்பட்ட மண்ணில், அவள் உண்டாக்கிய தீயின் வெக்கையில் உழல்பவர்களாகவும் நம் மண்ணையும் நம் மக்களையும் சித்தரிக்கும் பிம்பங்களிலிருந்தும் பெண்கள் தங்கள் உடல்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் மரபார்ந்த இன ஒடுக்குமுறையையும், அதற்காகக் கட்டமைக்கப்பட்ட சாதிய அடக்குமுறையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. இதுவே, இம்மண்ணின் தொல் தெய்வம் என்றால், வைதிக அடையாளங்களைத் துறந்த தெய்வமென்றால் அதன் தூமையலாத செங்குருதியில் உழலும் உடல்கள் நீங்கள் என்று எவரையும், ஏன் எந்த ஓர் ஆதிக்க சாதிப்பெண்ணையும் நாம் அடையாளப்படுத்தி அவர்களுக்கு, அறிவு புகட்டமுடியுமா என்ன? எந்த அதிகார நிறுவனத்தின் குறுக்கீடும் இல்லாமல் இயல்பான பாலியல் உந்துதலை, ஊக்கத்தைச் செயல்பாடாக்கும் உரிமை தான் பெண்களை மிகவும் வலுவாக்கும். இன்று பெண் கவிதையின் அடிநாதமாய் வியக்கப்படும் ஆண்டாளின் பாடல்களே கூட தனக்கு மறுக்கப்பட்ட ஆணுடல் மீதான வேட்கையை இறைவன் மீது ஏற்றிப் பாடியதே. இந்த ஆண்டாளுக்கு எல்லா அடிப்படையான உரிமைகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இருக்க, பாலியல் வேட்கையை வெளிப்படுத்தும் வாயிலான யோனி மட்டுமே அடைக்கப்பட்டிருந்ததே அவள் உணர்வெழுச்சிக்குக் காரணமாயிருந்தது.

ஆகவே, ஆண்டாளின் உடலும் எம் பெண்டிரின் உடல் அல்ல. யோனியை எவருக்கும் குத்தகைக்கு விடாத உடல் தீரத்தை நாம் எதிர்கொள்ளவேண்யிருக்கிறது. காலங்காலமாக ஆண்களும் அதிகாரமும் அடைக்கலமான நம் யோனிகளை அதன் அதிகார உடல்களிடலிருந்து பறித்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த யோனிகளைக் காரணம் காட்டித்தான் நம்மீது பண்பாட்டின் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. ஆக, நம் பெண்டிரின் யோனிகளே, அறமும் சமூக நீதியும் உட்பொருளான தொல்நெறியுடன் நம்மை இணைத்துக்கொள்வதான நுழைவாயில்கள். மேலும் அந்தயோனிகள் வழியாகத் தொடர்ந்த புனல்கள் தாம் நமது உடல்களுக்கு, உடல் வளமைக்கு தீராத பாலூக்கத்தைத் திறந்து கொடுக்கின்றன.

மேலும் வாசகர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கலவியையும் பாலியல் வேட்கையையும் பேசுமிடத்தில் மட்டுமே நம் உடலை மீட்டுக் கொண்டுவிட்டதாகி விட முடியாது. நம் உடலை வலையாகப் பின்னிக்கொள்ளும் பிற ஆண், பெண் சார்ந்த பாலியல் அடக்குமுறைகளிலிருந்தும் வன்முறைகளிலிருந்தும் கூட நம் உடலை கைப்பற்ற வேண்டியிருக்கிறது. அதன் உள்ளீடாக இருக்கும் பாலியல் அரசியல்களையும் விவாதப் பொருளாக வேண்டியிருக்கிறது. தன் உடல் என்பதே கூட மற்ற உடல்களுடன் ஊற்றாக இருக்கும் யோனிகளுடன் தொடர்ந்ததொரு தீராத உறவைக் கொண்டிருக்கிறது. ஆகவே, மற்ற வேறுபட்ட தளங்களிலும் இருக்கும் பெண்ணுடலையும் மீட்டு வராமல் ஒரு பெண்ணுக்குத் தன் உடல் உரிமையும் விடுதலையும் என்பது சாத்தியமே இல்லை.

மேற்விவரித்த, விவாத முன்னிலையில், ‘ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்’ என்ற தொடரை எழுதப் போகிறேன். இது 1990 – களில் நிகழ்ந்த பின்நவீனத்துவ வாதத்தின் தேய்வையும், அப்பொழுது பெருவாரியாக அழுத்தமாக தமிழ்த்தளத்தில் நிகழ்ந்த ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து எழுத வந்த பெண்ணெழுத்தையும் பொருட்படுத்தி விவாதம் செய்யும். மேற்கத்திய கருத்துக்கோட்பாடுகளைப் புறந்தள்ளும் அல்லது அதன் பொருத்தப்பாடு கருதி விவாதிக்கும். மேற்குத் திசைக்கு முற்றிலும் எதிரான திசையில், ஐந்தாயிரம் வருட தொன்மையான தமிழ் அறச்சீர்மையான வெளியில் பயணித்தவாறே அகழ்வாராய்ச்சி செய்யவும் துணியும். வாருங்கள் நண்பர்களே! தேங்கிக் கவனிப்பாரற்றுக் கிடக்கும் அதன் நீர்வெளியில் நிரம்பத் தழைத்த பாசிகளை விலக்கிய வண்ணமே உள்நுழைந்து அகழ்வாராயாலாம், வாருங்கள்!

 

 

 

 

     
     
     
   
ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


குட்டி ரேவதி

குட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார்.

இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர்.

இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர்.

இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.
கவிதை நூல்கள்

பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000)

முலைகள் (2002)

தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)

உடலின் கதவு (2006)

கட்டுரை நூல்

காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் தொடர்கள் வாயில்


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 15

ஃபஹீமா ஜஹான் – நம் அன்னையரின் ஆதித்துயர்

குட்டி ரேவதி  


’ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்’ என்ற கட்டுரைத் தொடரைத் தொடரமுடியாத அளவிற்கு அன்றாடம் கால்களையும் கைகளையும் ஏன் மூளையின் நரம்புகளையெல்லாம் கூடப் பின்னிக்கொண்டிருந்தன. ஆனால், இத்தொடரை தொடர வேண்டிய, ‘அறப்பொறுப்பை’ நினைவூட்டிக் கொண்டே இருந்தார், தமிழ் ஸ்டூடியோ அருண். இயந்திர கதியில் முனைய விரும்பாததால், சிறிது காலத்திற்குப் பின் தொடர்கிறேன். மன்னிக்கவும். இக்கட்டுரைத் தொடரை நெருக்கமாகப் பின்பற்றிக் கொண்டிருந்த நண்பர்களும் எழுத்தாளர்களும் வாசகர்களும் மீண்டும் இக்கட்டுரையிலிருந்து என் முதுகில் ஏறிக்கொண்டால், சந்தோசமாய்ச் சுமப்பேன் எனக்கூறிக் கொள்கிறேன்!

நம் அன்னையரைத் தெய்வமாகக் காணும் மரபைப் பெற்றிருக்கிறோம் நாம். நம் மொழியின் நினைவலைகள் அப்படியான பிம்பங்களாய்த் தாம் நம்முள் சேகரமாயிருக்கின்றன! நாடி நரம்புகளில் எல்லாம் அவளின் தொடுகையை உணரும் ஆவலில் குழந்தைப்பருவங்கள் மீது மோதி மோதிக் கவிழ்பவர்கள் நாம். என்றாலும், ஒரு பிம்பத்தை மட்டுமே நம்மால் உருவாக்கமுடிந்தது! அவள் தன் வலியையும் வேதனையையும் இம்மாதிரியான, ‘வழிபாட்டு’ பிம்பத்திற்கான நேர்ச்சையைப் போல அவள் கொடுக்கவேண்டியிருந்தது.

‘வலி’ உயிர்வாழ்வுக்கான மூச்சு. வலியை உணராமல் எந்த உயிர்வாழ்வும் இப்பூமியில் சாத்தியமில்லை தான். குழந்தை ஈனும் போதான பிரசவத்தின் வலியை, பெண் உயிர் தன் மகத்துவமாகவும் சிறப்பான பண்பாகவும் உடலின் வல்லமையாகவும் உயிர்த்தொடர்ச்சியாகவுமே எடுத்துக்கொள்கிறது. ஆனால், சமூகம் அதை ஆதாயமாக்கி, தன் அடக்குமுறைக்கான உயவுப்பொருளாக, ’தாய்மையையும்’, பலிபீடத்தில் ‘தாயையும்’ வைக்கும் போது அதை எதிர்க்கவேண்டிய கட்டாயமாக்கி இருக்கிறது.

சிந்துச் சமவெளியில் கிடைத்த முத்திரை வடிவம் ஒன்றும், குப்தர் காலச் சுடுமண் வடிவம் ஒன்றும் தாய் என்ற சமூக நிலையை உயர்த்திப்பார்த்ததற்கான சான்றுகளாக இருக்கின்றன. ஆனால், அது வேளாண் தொழில் பெண்களின் கண்டுபிடிப்பு. அதன் காரணமாகத் தான் பெண்கள் வழிபாட்டு நிலையைப் பெற்றிருக்கின்றனர்’ (தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, உலகாயதம்) என்று பொருள் புரிந்து கொள்கின்றனர். அந்த முத்திரையில், பெண் ஒருவரின் பிறப்புறுப்பிலிருந்து செடியொன்று முளைத்து வருவதாகப் பதிந்த சித்திரம் உள்ளது. சுடுமண் வடிவத்தில், பெண்ணின் கழுத்திலிருந்து தாமரை முளைத்து வருகிறது. இந்த இரண்டு ஆதாரங்களையுமே சரியான முறையில் புரிந்து கொள்வது மிக மிக அவசியம். பெண் ஆண் உயிர் தோன்றிய காலம் தொட்டே, பெண் உடல் தான் உயிரின் பிறப்பிடமாக இருந்திருக்கிறது, என்பதைச் சுட்டிக்கட்டுவதே இது.

அது மட்டுமன்றி, இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையினரால் ஆதிச்ச நல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட அகழாய்விலும் கிடைத்த தாய்த்தெய்வம் பொறிக்கப்பட்ட சுடுமண் பானைப்பகுதி கூடுதல் ஆதாரமாகும்.

’ஆண் குறி மையப் புனைவை எதிர்த்த, சிதைத்தப் பிரதிகளில்’ அன்னையரின் குரலை பெரும்பான்மையும் முதன்மைப்படுத்திய ஃபஹீமாவின் கவிதையைப் போல வேறு ஒரு குரல் இல்லை. ‘அடையாள அரசியல்’ ஒருவர் எங்கெங்கே தன் அடையாளத்தை வலுப்படுத்தவேண்டும், எங்கெங்கே மறுக்கவேண்டும் என்பதை ஆராயாமல் அறியாமையின் மெளனம் காக்கிறது. இதனால், உண்மையிலேயே, ‘அடையாளம்’ அரசியலாகாமல் அடையாளத்தின் சமன்பாடுகளை மட்டுமே மீண்டும் மீண்டும் சுமக்கவேண்டியதாயிருக்கிறது. அதுவே, ’பெண்’ எனும் அடையாளத்திலும் நிகழ்ந்தது.

‘பெண்ணிய’ அரசியலின் முக்கியமான கோட்பாடாக, பெண்மை மறுப்பை முன்வைத்தப் பெண்ணியம், தாய்மை என்பதையும் புறந்தள்ளியது. இன்று உலகெங்கிலும், நிறைய பெண்கள், தம் கருப்பையை புறந்தள்ளியிருக்கின்றனர். வெகு சன நுகர்ச்சிக்கான பெண்ணுடல் அழகு, தான் நம்பும் போலியான சுய வல்லமை, இயற்கையின் வழி நின்று சமூக நிறுவனத்தின் அடக்குமுறையை எதிர்க்கும் நம்பிக்கையின்மை, ஆணாதிக்கச் சமூகம் எதிர்பார்த்த ஆதிக்க மனோ நிலைக்கு மறைமுகமாகத் தன்னையும் இழந்த விழிப்புணர்வு இன்மை என இன்ன பிற காரணங்களால் பெண் தன்னை மீண்டும் மீண்டும் அடகு வைக்க உந்தும் சதி வெல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பெண் உடலின் வாயிலான யோனி மட்டும் ஆண் நுகர்வுக்கான வழியாகவும், இயற்கையின் உள்ளுணர்ச்சியைப் போற்றும் அங்கமாக இருக்கும் போது, கருப்பை எனும் இயற்கையுடனான ஒப்பந்தத்தை மட்டும் நிறைவேற்றாது வஞ்சித்தது ஏன்?

இலங்கையைச் சேர்ந்த கவிஞர் ஃபஹீமா ஜஹான், இவரது முதல் கவிதைத்தொகுப்பு, ‘ஒரு கடல் நீரூற்றி..’ பனிக்குடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ‘பனிக்குடம்’ இதழில் சில கவிதைகளைப் பெற்று அறிமுகமாகி, மெல்ல மெல்ல அவருக்குப் பழக்கமானேன். அவரது கவிதைகள் முழுக்க, தாயை நோக்கிய, தாயைப் பார்த்து அனுதாபமுறும் குரல் தொனித்துக் கொண்டே இருக்கிறது.

அது வெறுமனே அவரது தாயை மட்டும் நோக்கிய குரல் அன்று. அல்லது எல்லா தாய்மார்களையும் குறிப்பிட்டுக் காட்டி, அதைப் பிரச்சாரமாக்கும் எத்தனமும் அன்று. மாறாக, இயற்கை, தன் தேசம், நிலம், தன் அன்னை, பெண்டிரின் முதிர்ந்த உடல் என எல்லா நிலைகளிலும் நம்மைப் பேணிய உருவெடுத்தவரை நோக்கிப் பாடுகிறது.

அம்மையே உனைக் கொன்ற பழி சுமந்தவர்களாய்…

ஆண்களை மயக்கும் மாயவித்தைகளை
நீ அறிந்திருக்கவில்லை
ஓரவிழிப் பார்வைகளோ
தலை குனியும் தந்திரங்களோ உன்னிடமிருக்கவில்லை
தெளிவும் தீட்சணியமும் உன் பார்வையிலிருந்தது
உறுதியும் தைரியமும் உன் நடையிலிருந்தது
அலங்காரமும் ஒப்பனையும் உன்னிடமில்லாதிருந்தது
எளிமையும் பரிசுத்தமும் நிரம்பியதாய்
உன் வாழ்க்கையிருந்தது

இளம்பெண்ணாக அப்பொழுது
வயல்வெளிகளில் மந்தைகளோட்டிச் செல்வாய்
அடர்ந்த காடுகளிலும்
வெள்ளம் வழிந்தோடிய ஆற்றங்கரைகளிலும்
விறகு வெட்டித் தலைமேல்
சுமந்து திரும்புவாய்
அப்போதந்தக் காடுகளில் வாழ்ந்த பேய்பிசாசுகள்
தூர இருந்து கனைத்துப் பார்த்துப் பின்
மறைந்துபோவதாய்க் கதைகள் சொல்வாய்
வீட்டிலும் வெளியிலும் உன் குரலே ஓங்கியொலித்தது

காலப் பெருஞ்சுழியில் – நீ
திரிந்து வளர்ந்த அடவிகள் யாவும் மெல்ல அழிந்தன
பளிங்கு போல் நீரோடிய அருவிகள் யாவும்
அசுத்தமாகிப் பின் தூர்ந்துபோயின
கடந்தகாலம் பற்றிய உன் கதைகளிலெல்லாம்
கசப்பான சோகம் படியலாயிற்று

உன் பொழுதின் பெரும்பகுதி
படுக்கையில் முடங்கிப் போனது
ஓய்வற்றுத் திரிந்த உனது பாதங்கள்
பயணிக்க முடியாத் திசைகள் பார்த்துப்
பெருமூச்செறிந்தன
வேலைகளை எண்ணி
உனது கரங்கள் துடிக்கும் பொழுதுகளில்
இயலாமைகள் கண்டு புலம்பத்தொடங்குவாய்

நோய் தீர்க்கவெனச்
சந்தடிகள் நிரம்பிய நகருக்குக் கூட்டிவரப்பட்டாய்
உன் காற்றும் நீரும் மண்ணும் ஆன்மாவுமிழந்து
நகரடைந்தாய் நீ மட்டும்
உணர்வுகள் அடங்கி ஓய்ந்த பின் ஒரு நாள்
உறவுகள் கூடி உனைத் தூக்கிச் சென்றனர்
உனக்கான மண்ணெடுத்த பூமி நோக்கி
அம்மையே
இப்போது நாம் வாழ்கிறோம்
எல்லோர் கைகளிலும் பொம்மைகளாக

அந்தப் பெண்டிர், உடலால் சுதந்திரத்தை முழுதும் அனுபவித்தவராக இருந்திருக்கின்றனர். நாள்பட நாள்பட, விடுதலையின் காற்றை இழந்து, வீட்டின் குப்பையாக மண்டிப்போகும் அவளின் சுயத்தைப் பதிவு செய்வதன் மூலம் தன்னிருப்பையும் கேள்விக்குட்படுத்துகிறார். ‘வீட்டிலும் வெளியிலும் உன் குரலே ஓங்கியொலித்தது / காலப் பெருஞ்சுழியில் – நீ / திரிந்து வளர்ந்த அடவிகள் யாவும் மெல்ல அழிந்தன / பளிங்கு போல் நீரோடிய அருவிகள் யாவும் / அசுத்தமாகிப் பின் தூர்ந்து போயின’ போன்ற வரிகளில் தாயின் மாற்றத்தின் கணங்களை நூல் பிடிக்கும் இவர், அதன் விளைவாகத்தான் சொல்கிறார், கடைசி வரிகளில், ‘இப்போது நாம் வாழ்கிறோம் / எல்லோர் கைகளிலும் பொம்மையாக’. என.

‘விடுதலை’ உணர்வு மட்டும் தான் தனிமனிதரோடு தீர்ந்து போகாதது. தொடர்ந்து, ‘காட்டுத் தீயாய்’ பரவக்கூடியது. இதைத் தான், பாரதி கூட, ‘அக்கினிக் குஞ்சு’ என்று சொல்லியிருக்க வேண்டும். அது தன் உற்பத்தி ஆற்றலை அழித்துக் கொள்வதே இல்லை. உற்பத்தி செய்யமுடியாத குஞ்சாவது இல்லை. உற்பத்தியை முடித்துக் கொண்ட மூப்பும் இல்லை. உற்பத்தியைத் தன் மூலமாக்கிய பெண்ணுயிர், ‘விடுதலை’ உணர்ச்சியைத் தொடர்ச்சியாக்கி வைக்கிறாள். சக மனிதரோடும், சமூக உயிர்களோடும் அங்கங்களோடும் நிரந்தரப் பிணைப்பில் இருத்துகிறாள். ஒரு பெண் தாயின் தருணத்திற்கு அழைத்துச் செல்லும் போது, சமூகத்தில் இது நிகழ்வதற்கான போராட்டத்தையே தன்னுள் எடுக்கிறாள் என்று அர்த்தம்!

இருண்டு போகின்ற நாமும் ஒளி வழங்கும் அவளும்

அவரவர் வேலைகளில் வீடு மூழ்கியிருந்த
மழைக்கால இரவொன்றில்
நிசப்தத்தையும் இருளையும்
உள்நிறுத்திப் போயிற்று மின்சாரம்

வழமை போலவே அம்மாவின் அருட்கரங்களில்
ஒளி காழும் உத்தியாக மின்சூள் அகப்பட்டிருந்தது

இரவுச்சாப்பாட்டில் ஒரு கவளம்
மீதியாயிருந்தென் பீங்கானில்
கையில் தேடியெடுத்திருந்த மெழுகுவர்த்திக்குத்
தீச்சுடரொன்று தேவைப்பட்டிருந்தது இளையவளுக்கு
எழுதிக்கொண்டிருந்த மூத்தவளுக்கோ
இறுதிச் சொல்லில் ஓரெழுத்து எஞ்சியிருந்ததப்போது
அவரவர் தேவை கூறி அம்மாவைக்
கூப்பிட்ட கூச்சலில்
இருண்ட இல்லம் ஒலியலைகளால் நிரம்பிற்று

முதலில் எனது பீங்கானில் விழுந்து தெறித்த
ஒளிக்கற்றைகளின் துணையுடன்
இளையவளின் மெழுகுதிரி சுடர்விட்டெரிந்தது
மூத்தவளின் கடைசி எழுத்துக்கும் அம்மா
ஒளி காவி நடந்த பின்னர்
சட்டென நுழைந்தது வீட்டினுள் மின்சாரம்

மறுபடியும் இருளினுள் வீடமிழ்ந்தபொழுது
சமையலறையினுள் சிக்கியிருந்த அம்மாவுக்கு
ஒளிச்சுடரொன்றினை ஏந்தி யாருமே நடக்கவில்லை
எவரின் உதவியும் இன்று
இருளினுள்ளேயிருந்து
எல்லோருக்குமான உணவைத் தயாரித்தாள் எனதன்னை

’தியாகம்’ பெண்களின் அற உணர்வை வெளிப்படுத்தும் ஒரு முறையாக இருந்திருக்கிறது. அது தாய் நிலையின் ஒரு செயல்பாட்டு நிலையாகவும். இருக்கிறது. ‘தியாகத்தை’ அறிவுறுத்தி அவள் வாழ்வதில்லை. மாறாக, அவள் தியாகத்தைச் செயல்படுத்துகிறாள். சமூக உற்பத்தியின் ஓர் அந்தரங்கப் பங்காகவும் பொறுப்பாகவுமே, தாயின் ‘தியாகம்’ வெளிப்படுகிறது. வேட்டைக்குச் சென்று உணவைக் கொணர்ந்த காலம் முதல், வேளாண்மையை ஒரு பண்பட்ட பண்பாடாக ஆக்கியது வரை பெண் உணவை, பகுத்துண்டு வழங்கியது வரை அவளின் எல்லா செயல்களிலும், ‘தியாகம்’ என்பது இன்றியமையாததாக இருக்கிறது.

‘சுய பலி’, ‘விரதம்’ ‘நேர்ச்சை’ போன்ற பண்பாட்டுக்கூறுகள் இனவரைவியலில் அடிப்படையாக, ‘தாய்த் தெய்வங்களாக’ நின்றவர்களுக்கு படைக்கப்பட்டவையே! ஏனெனில், தாய் அதைத்தான் தாயாக நின்று செய்கின்றாள். ஃபஹீமாவின், ‘இருண்டு போகின்ற நாமும் ஒளி வழங்கும் அவளும்’ என்ற கவிதை மிகவும் அழகான ஒழுக்க நடையில், அந்தத் தாயைச் சூழ்ந்திருக்கிற இருளையும் அவள் பிறருக்கு வழங்குகின்ற ஒளியையும் வரைகிறது. இவர் கவிதைகளில், எதன் பொருட்டும் ஒரு தொனியை வலிந்து கொண்டு வராது அதே சமயம் இயல்பான எழுச்சியினால் புதிய, அற்புதமான தொனிகளைக் கண்டடையும் பயணத்திலும் ஈடுபடுகிறார்.

இதை எழுதும் போதே அப்படியான அவரது இன்னும் சில வரிகள் நினைவுக்கு வரிகின்றன. ’அவசரப்பட்டு நீ / ஊரைக் காணும் ஆவலிலிங்கு வந்துவிடாதே / வதைத்து எரியூட்டப்பட்ட சோலைநிலத்தினூடு / அணிவகுத்துச் செல்லும் காதல் தேவதைகள் / அமைதியைப் பேணுகின்றன / அந்த ஏகாந்தம் குடியிருக்கும் / மயானத்தைக் காண உனக்கென்ன ஆவல்? / வந்துவிடாதே’ என்ற வரிகளில் தொனிக்கும், கனிவு, எதிர்ப்பு, யதார்த்தம் ஏக்கமே என பல மனநிலை ஒருங்கிணைந்த உணர்ச்சிகள் மண்டிக்கிடக்கும் படைப்பாக்கங்களைப் படைத்தளிக்கும் விளிம்பு நிலை, போராட்ட நிலை, ஒடுக்கப்பட்ட நிலையில் வாழும் படைப்பாளிகள் நமக்கு அளிக்கும் கொடையே இவை! இம்மாதிரியான வெள்ளத்தினூடே நீந்திச் செல்லும் நாமும் புதிய செவுள்களையும் சுவாசத்தினையும் புத்துணர்ச்சியையும் அனுபவத்தையும் பெறுகிறோம், இல்லையா?

ஆதித்துயர்

நிழல் மரங்களற்றுச்
சூரியன் தவிதவித்திடும் நெடுஞ்சாலையோரம்
வெயிலை உதறி எறிந்தவாறு
நடக்கிறாள் மூதாட்டி

குதிக்கால்களால்
நெடுங்களைப்பை நசுக்கித் தேய்த்தவாறு
காற்றைப்பின் தள்ளிக் கைகளை வீசுகிறாள்

வெய்யில்
மிகப்பெரும் தண்டனையை
வழி நீளப்பரவ விட்டுள்ளது
வேட்டை நாய் போல
அவள் முன்னே
ஓடிச் செல்கிறது நிழல்

பதிந்தெழும் ஒவ்வொரு சுவட்டிலும்
தேங்கித் துடிக்கிறது
ஆதி முதல் அவளைத் தொடரும் துயர்

எனக்கு மிகவும் பிடித்த, ஃபஹீமாவினுடைய கவிதை! இதை விடத் துல்லியமாக, அன்னையின் ஆதித்துயரைச் சொல்லமுடியாது! என்றென்றைக்குமாக வெயிலின் நெடுஞ்சாலையில் நடந்து செல்லப் பணிக்கப்பட்ட மூதாதையின் துயர் எங்கெங்கும் நம் நினைவுகளில் எதிரொலித்த வண்ணம், நம்மால் உணரப் படுமென்றால், அதுவே நாம் ஒரு சமூகப் பொறுப்பாளராக மாறியிருக்கிறோம் என்பதற்கான ஒரு அடையாளம்!

அம்மா

இருக்கும் இரு கரங்களும்
போதாதெனப் புலம்பும் அம்மாவின் முதுகின்
பின்னால்
எப்பொழுதும் துரத்திக் கொண்டிருக்கும்
இரக்கமற்றச் சொற்களும்
இங்கிதமில்லாக் கட்டளைகளும்
ஓய்ந்திருக்கும் இடந்தன்னைப் பறித்துக்
கொண்டிருக்கும்
ஓராயிரம் பணிவிடைகளும்

மனமுடைந்து போன சொற்கள்
முட்டி மோதுகின்ற வீட்டில்
எப்பொழுதும் வெடித்துவிடத் தயாராக
நடமாடித் திரிகிறது பொறுமை

வலிய பாதங்களை அதிர வைத்து
நடந்து போகிறது
அனைத்தையும் மறுதலிக்கும்
ஒரு புறக்கணிப்பு

ஓங்கி வைக்கப்படும் பொருட்களிலிருந்தும்
அறைந்து சாத்தப்படும் கதவுகளிலிருந்தும்
புறப்பட்டு வருகிறது
அடுத்தவர் மீதான ஆத்திரங்கள்

கற்களை மாத்திரமே வைத்துக்
கட்டப்பட்ட வீட்டின்
விசாலமான கதவு, யன்னல்கள் வழியே புகுந்து
திரைச்சீலைகளை வீசியெறிந்து
முகஞ்சுழித்தவாறு வெளியேறிப் போகிறது
அன்பில் தோயாத ஒரு வெப்பக் காற்று

சிதறடிக்கப்பட்ட பிள்ளைகளின் வாழ்வையும்
உடைத்து வீசப்பட்ட அன்பின் வரைபடங்களையும்
வீடெங்கும் இறைந்து கிடக்கும்
ஒருவனின் வக்கிரங்களையும்
சேகரிப்பதிலேயே
களைத்துப் போகிறாள்

வருத்தம் கவிழ்ந்த உடலுடன்
என்றாவது அவள் வீழ்ந்து தூங்கும்
ஆழ்ந்த உறக்கத்தை அதிரவைத்துக் கலைக்கும்
தண்ணீர்க் குவளையொன்றுக்காகவோ
அற்பச் சொல்லொன்றுக்காகவோ
கூச்சலிடும் ஒரு குரல்
நடைப்பிணம் போல எழுந்து வரும்
அவளது பாதங்களில் பின்னும்
யுகங்களாகச் சிதைக்கப்பட்டுவரும் நிம்மதியொன்று

என்றோ விதியாகித் தொடரும்
நியதிகளில் நசுங்குண்டவாறு
இரவு நெடுநேரம் வரைத்
துயிலை விரட்டி விரட்டிக் காத்திருப்பாள்
எல்லோரும் உண்டு முடித்து எஞ்சும்
குளிர்ந்த உணவுக்காக

கருங்கல் சிலையொன்று
அதிகாரம் செய்தபடி அலைகின்ற வீட்டில்
மோதி மோதியே செத்துவிட்டன
அவள் வளர்த்த எல்லா மான்குட்டிகளும்

பெண்ணிய உரிமைகளை பட்டியல் படுத்துவதில், தாய்மை நிலையைக் கையாள்வது எப்படி என்று அதற்கான போராட்டத்தைத்தொடக்குவதில் பெண்களுக்கு கடந்த நூற்றாண்டில் பெரிய சிரமம் இருந்தது. பெண்ணின் பல்வேறு சமூக நிலைகளை இன்று நாம் ஓரளவிற்குக் கையாளக் கற்றுக் கொண்டாலும், ‘தாய்மை’ நிலை என்பது, போற்றுதல் நிலை மற்றும் அவல நிலை என்ற இருநிலைகளுக்குள்ளும் உள்ளாவதாலும், ’சமூக உற்பத்தியில்’ ஆணுடனான இயைபு நிலையையும் இணக்க நிலையையும் சார்பு மற்றும் உடைமை நிலையாக மாற்றிக்கொண்டதால் ஓரிடத்தில் ‘பெண்ணியம்’ இயற்கைக்கு எதிராகவே திரும்பிவிட்டனர். அதே சமயம், தாம் கோரிய உரிமைகளுக்கான சமூகக் கதாபாத்திரத்தை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்கவேண்டியிருந்ததும் ஒரு காரணமாகும். அதற்கான ஒரு கால இடைவெளியும் அவர்களுக்குத் தேவைப்பட்டது. ஒவ்வொரு உரிமையாகத்தான் போராடிப்பெற்றும், அதையே தன்னொத்த பெண்களுக்குக் கிடைப்பதற்காகவும் போராடுவதும் எனப் பலமுனைகளிலிருந்து தம் போராட்டங்களை நிகழ்த்தவேண்டியிருந்த சமயத்தில், பெண்களால் அத்தனை பெண் கதாபத்திரங்களையும் ஏற்கமுடியாமலிருந்தன. மகள், மனைவி, தாய், சகோதரி என்ற பல கதாபாத்திர நிலைகளிலும் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. இதில், தாய்மை என்பது ஒரு பெண்ணின் பருவத்தின் பிற்காலத்தில் ஏற்க வேண்டிய சமூகப்பொறுப்பு என்பதால் அவள் மனநிலை அதை மிகவும் தயங்கியபடியே, உதாசீனப்படுத்தியது.

அழிவின் பின்னர்

வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தின்
அடிக்கட்டை மீது
அமர்ந்துள்ளது பறவை

இன்று அதனிடம்
பறத்தலும் இல்லை
ஒரு பாடலும் இல்லை

அதன் விழிகளின் எதிரே
வெயில் காயும்
ஒரு பெருவெளி விரிந்துள்ளது

அந்த மனிதர்களைச் சபிக்கிறதோ
தனது கூட்டை எண்ணித் தவிக்கிறதோ

விடுதலையை இழந்த பறவையின் கையறு நிலையைச் சொல்லும் இக்கவிதையின் வழியாக, மானுடத்தின் பொதுத்தன்மை குறிக்கப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை அவரது எல்லா கவிதைகளையும் வாசித்தபின், நான் கண்டறிவது, ‘வெட்டி வீழ்த்தப்பட்ட மரம்’ என்பது, ’தாய்’ அன்றி வேறு யாருமில்லை!

ஃபஹீமாவின் கவிதைக்குரல், தாயின் துயரைப் பாடும், அதன் துயரங்களை அடையாளப்படுத்திக் காட்டும் தாயின் அளவிற்கே அக்கறையான குரல். பெண்ணின் உடலரசியலில் எப்படி பெண் உடல் உழைப்பு புறக்கணிக்கப்பட்டதோ அதே அளவு, ’தாய்மை’ எனும் பாலியல் ஆற்றலும், இயற்கையின் ஊக்கமும் உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையை வெளிப்படையாக, பிரச்சாரமாக முன்வைக்காமல் கவிதையின் மொழியின் அத்தனை அழகுகளுடனும் வெளிப்படுத்துகிறது.

ஒரு போர் நிலத்திலிருந்து, ஒரு தாயின் குரலன்றி வேறெந்த குரலை முன் வைத்தாலும் அது முழுமையுறுவதில்லை. தன் வயிற்றில் ஈன்ற குழந்தை, தன் முன்னே இரத்தம் சிந்துவதையும், கொல்லப்படுவதையும், பசியுறுவதையும், கதறுவதையும் அதன் தாய் மட்டுமே காணப்பொறுக்க மாட்டாள். அந்நிலத்திலிருந்து கேவலுடன் வெளிப்படும் ஒரு தாயின் நிழலை தன் எழுத்தெங்கும் சுமந்து திரியும் ஃபஹீமாவின் கவிதைகள், பெண் உடல் மீதான வன்முறை மட்டுமன்றி, மனித உடல் மீதான வன்முறையையும் அதன் முனகல்களையும் கூட பதிவு செய்திருக்கின்றன.

இன விடுதலையைப் போராட்டத்தை, ‘பயங்கரவாதமாக’ நோக்கும் ஆணாதிக்கக் கருத்தியல்களைக் கொண்டு ஃபஹீமாவின் கவிதைகள் உள்நுகரப்பட்ட ஆபத்தும் நிகழ்ந்துள்ளது. இதை அவரது நூலுக்கு அளிக்கப்பட்ட முன்னுரையில் காணலாம். இந்திய தேசிய வாதத்தை முன்னிறுத்தும் சிந்தனையும் தத்துவமும் ஊறிக்கிடக்கும் கருத்தியல் மூளையைக் கொண்டு அணுகும் போது ஃபஹீமாவின் கவிதைகளை, பெண்களின் அடிப்படையான உரிமை நிலைப்பாடுகளிலிருந்து பிரித்துச் செல்லும் அபாயமும் நிகழலாம். ஆனால், உலகெங்கும் பெண் எழுத்துக்கு நிகழ்ந்த கொடுமை இது தான்! ‘ஆண்’கருத்தியல் வாதிகள் அல்லது ‘ஆணாதிக்கக் கருத்தியல்வாதிகள், பெண்களின் எழுத்தை நோக்கும் விதத்தில் போட்டுக் கொண்ட கண்ணாடிகள் நிறம், மனித இனத்திற்கே எதிரானது! ‘அறம்’ செய்ய விரும்பாமல், அதைப் பாடாமல் ஒரு பெண்ணின் எழுத்து வேறென்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்?

-------------------------------------------------------------------------------------------------

குறிப்பு: ஃபஹீமா ஜஹான் இலங்கை மெல்சிரிபுரவைச் சேர்ந்தவர். கணித ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவர், ‘ஒரு கடல் நீரூற்றி (2007), அபராதி (2009), ஆதித்துயர் (2010) ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.