வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் தொடர்பற்றி

சதுரங்க ஆட்டத்தில் ஆடும் இரு நபர்களுக்கும் தெரியாத பல வழிமுறைகள் அங்கு நின்று வேடிக்கை பார்க்கும் நபர் நன்றாக அறிந்திருபார். அந்த வழிமுறைகளை, “இப்படி செய்திருக்கலாம் என அவர் சொல்லியதும்” சதுரங்க ஆட்டம் ஆடுபவர்களே சற்று ஆடித்தான் போவார்கள். பிரச்சனையில் இருப்பவர்கள் பிரச்சனையின் பிடியிலேயே இருப்பதால் அவர்களின் பார்வைக்கு சரியான பாதை தென்படாது. நம் வாழ்க்கையும் சதுரங்க ஆட்டம் போன்றதுதான். பல விதமான சிக்கல்களில் சிக்கியிருக்கும் நம்மை அதிலிருந்து விடுவிக்க ஆச்சரியப்படுத்தும் விதமான பல ஆலோசனைகளுடன் அந்த மூன்றாம் நபராக வருகிறார். டாக்டர் B. செல்வராஜ்.

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள்
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


முனைவர்.பா.செல்வராஜ்

முனைவர்.பா.செல்வராஜ், கோவை அரசு கலைக் கல்லூரி உளவியல் துறையில் உதவி பேராசிரியராகப் தற்போது பணிபுரிந்து வருகிறார்.

அத்துறையில் செயல்பட்டு வரும் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் மையத்தில் மனநல ஆலோசகராக கடந்த 11 ஆண்டுகளாக பணிபுரிந்து மாணவர்கள், அவர்தம் பெற்றோர், ஆசிரியர்கள், அவர்தம் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கி வருகிறார். உணர்ச்சியறிவு, சாதனை ஊக்கம், புதுவித சிந்தனை ஆகியவற்றைப் பற்றி ஆய்வு செய்த இவர் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளில் இக்கருத்துக்கள் பற்றிய பயிற்சிகளை நடத்தி வருகிறார். மக்களுக்குப் பயனக்களிக்கக்கூடிய உளவியல் விசயங்களைப் பற்றி அவ்வப்போது பத்திரிக்கைகளில் கட்டுரை, பேட்டி ஆகியவை மூலமாக தெரிவித்து வருகிறார். மனதை மேம்படுத்தும் மனோதத்துவம் என்னும் இவரின் நூல் அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பினைப் பெற்றதாகும்.

கோவை போலீஸ் பயிற்சிக் கல்லூரி, போலீஸ் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றில் கௌரவ பேராசிரியாரான இவர் பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு உளவியல் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். உளவியல் தொடர்பான அறிவியல் ஆய்வு கட்டுரை ஒன்றினைப் பதிப்பித்துள்ளார். இவரின் வலைப் பூ உளவியல் கருத்துக்கள் நிறைந்த சிறந்த வலைப் பூவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் தொடர்கள் வாயில்


உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் –10

பா.செல்வராஜ்  

நாற்பத்தி ஐந்து வயதுள்ள ஓர் குடும்பத்தலைவர் தனக்கு உளவியல் ஆலோசனை வேண்டி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நேரம் கேட்டார். அவர் ஆலோசனைக்கு வர வசதியான நேரம் ஒதுக்கித்தந்தேன். இரண்டு நாட்கள் கழித்து என்னைச் சந்தித்த அக்குடும்பத்தலைவர் நல்ல தோற்றம் கொண்டவராக இருந்தார். ஆனால் கவலையான முகமும் சோர்வானா மனமும் கொண்டிருக்கிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. அவர் பெயர் ராமச்சந்திரன். அறையில் வந்து அமர்ந்தவுடன் ராமச்சந்திரன் தன் பிரச்சனைகள் அனைத்தையும் எழுதி எடுத்து வந்திருந்த வெள்ளைத்தாள் ஒன்றை என்னிடம் கொடுத்தார். இரண்டு பக்கங்கள் முழுமையாக எழுதப்பட்டிருந்தது. அதைப் பெற்றுக்கொண்ட நான் பொறுமையாகப் படித்து அவரின் பிரச்சனைகளை தெரிந்து கொண்டேன்.

ராமச்சந்திரனுக்கு திருமணமாகி இருபதாண்டுகள் ஆகின்றன. திருமணமான அவருக்கு மனைவியைப் பிடிக்கவில்லை. அவரின் மனைவி ராமச்சந்திரன் எதிர்பார்த்ததுபோல் கிடையாது. அப்பெண்ணுக்கு எதிலும் ஆர்வம் கிடையாது. துணிமணிகள், நகை, வீடு, வெளியே செல்லுதல் என எந்த விசயத்திற்காகவும் கணவனை நச்சரிப்பதில்லை. இவையாவற்றிற்காகவும் அலட்டிக்கொள்ளவும் மாட்டார். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வெறுமனே படுத்துக் கொள்வார். தொலைக்காட்சி பார்ப்பதும் கிடையாது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த பெண் தற்போது கல்லூரி முதல் ஆண்டு படிக்கிறார். இளைய மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறார். இரு பெண்களும் படிக்கச் சென்றுவிட்டால் அவர் மனைவிக்கு தூங்குவதைத் தவிர வேறு வேலை எதுவும் கிடையாது. ராமச்சந்திரன் ஒரு தொழிற்சாலை நடத்தி வருகிறார். அவரிடம் நிறைய பேர் வேலை செய்கிறார்கள். காலையில் 8 மணிக்கு தன் தொழிற்சாலைக்கு சென்றால் மதியம் சாப்பாடுக்காக ராமச்சந்திரன் வீட்டுக்கு வருவார். மதிய உணவு முடித்துவிட்டுச் சென்றால் பின் இரவு நேரம் கழித்துதான் வீடு திரும்புவார். தான் நேரமின்றி, ஓய்வின்றி உழைத்துக்கொண்டிருக்க இவள் வெறுமனே தூங்கிக்கொண்டு இருக்கிறாளே, தினமும் சில மணி நேரங்கள் தொழிற்சாலையின் அலுவலகம் வந்து நிர்வாகம் கற்றுக்கொள்ளலாமே, எனக்கு உதவியாக இருக்குமே என்ற வருத்தம் ராம்ச்சந்திரனுக்கு உண்டு.

அவர் மனைவி வீட்டு வேலைகளிலு சிறந்தவராக இல்லை. எதிலும் அக்கரையும் நேர்த்தியும் கிடையாது. எடுத்த பொருட்களை அந்தந்த இடத்திலேயே திருப்பி வைப்பது கிடையாது. செல்போனில் பேசினால் கூட பேசிய இடத்திலேயே போட்டுவிட்டு போய்விடுவார். பின்னர் மீண்டும் அழைப்பு வரும் சமயத்தில்தான் போனை தேடத்தொடங்குவார். ராமச்சந்திரன் ஏதாவது அறிவுரையோ, யோசனையோ சொன்னாலும் அவற்றை மதிப்பது கிடையாது.

இத்தனை ஆண்டுகள் இவற்றையெல்லாம் சகித்துக்கொண்ட ராமச்சந்திரன் தற்போது தன் மனைவியை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார். அவர் மனைவியும் விவாகரத்திற்கு தயாராகவே இருக்கிறார். சட்டபூர்வமாக விவாகரத்து செய்து கொள்ளும் முன்னர் தன் முடிவு சரியானதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவே தற்போது ராமச்சந்திரன் உளவியல் ஆலோசனை வேண்டி வந்துள்ளார்.

கடிதத்தை படித்து முடித்து அதை மேசை மேல் வைத்து விட்டு “சரி உங்கள் பிரச்ச்னை என்ன?” என ராமச்சந்திரனைக் கேட்டேன். அப்போதுதான் தெரிந்தது அவரால் சரியாக பேச முடியவில்லை என்று. மிகுந்த சிரமப்பட்டே அவரால் தெளிவாக பேச முடிந்தது. அவர் அளித்த கடிதத்தில் எழுதியிருந்த அனைத்து பிரச்சனைகளையும் ராமச்சந்திரன் மீண்டும் ஒருமுறை கூறினார்.

நீங்கள் விவாகரத்து பெற வேண்டும் என முடிவெடுத்திருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அதற்கு முன்னர் உங்கள் குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள் என கூற முடியுமா? அவர்களும் உங்கள் மனைவியை உதவாக்கரை என்றுதான் நினைக்கிறார்களா? எனக் கேட்டேன்.

குழந்தைகள் அப்படிக் கருதவில்லை. அவர்களைப் பொருத்தவரை அம்மா தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார். எங்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து விடுகிறார். பிறகு ஏன் அம்மாவை குறை கூறுகிறீர்கள் என என்னைத்தான் கேட்கிறார்கள். நான் என் மனைவியைப் பற்றிய குறைகளை என் மூத்த மகளிடம் கூறுவதுண்டு. அவ்வாறு குறை கூறும்போது அம்மா அப்படித்தான் இருப்பார்கள் என்பது நமக்கு தெரிந்ததுதானே! பிறகு ஏன் அதை நினைத்து வருத்தம் கொள்கிறீர்கள் அப்பா. அதை நினைக்காமல் வேறு வேலைகளை பார்க்க வேண்டியதுதானே? என என் மகள் கூறுவாள். என்பதே ராமச்சந்திரனின் பதிலாக இருந்தது.

உங்கள் மனைவியின் குடும்பம், மற்றும் உங்கள் குடும்பத்தை பற்றிய விபரங்களை கூறுங்கள் எனக் கேட்டேன். ராமச்சந்திரன் பெரிய குடும்பம் ஒன்றின் மூத்த மகன். அவருக்கு கீழே மூன்று தம்பிகளும் ஒரு தங்கையும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தாய் தந்தையர் கடைசி மகனுடன் வசிக்கின்றனர். அவர்களுக்கும் ராமச்சந்திரனின் மனைவிக்கும் உறவு மகிழ்ச்சியடையும்படி இல்லை. அவர் மனைவியின் குடும்பமோ அளவானது. அவர் மனைவியின் குடும்பத்தைப் பற்றி ராமச்சந்திரனுக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. பண வசதி இருந்தாலும் பண்பாடு இல்லாதவர் மாமனார். மனிதர்களை மதிக்கத் தெரியாதவர். அவர் மகனுக்கு 40 வயதாகிறது. இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. மாமனாரும் அதற்கான முயற்சி எடுப்பதாக தெரியவில்லை. வீனாய் போனவர்கள் என அவர்களை நினைத்து நொந்து கொண்டார்.

அனைத்தையும் கேட்ட நான் “நீங்கள் உங்கள் மனைவி, அவர் குடும்பத்தினர் ஆகியோரைப் பற்றி சொன்ன அனைத்தும் உங்கள் பார்வையில் நீங்கள் சொல்லுபவை. உங்கள் மனைவியிடமும் பேசியாக வேண்டி உள்ளது. எனவே உங்கள் மனைவி ஆலோசனை பெற விரும்புவாரானால் அவரை ஒரு முறை அழைத்து வாருங்கள். அவரிடமும் நாம் பேசிய பிறகு நாம் முடிவெடுத்துக் கொள்ளலாம் என கூறினேன். ராமச்சந்திரன் என் மனைவியும் ஆலோசனைக்கு வர தயாராகவே உள்ளார். அவரை ஒரிரு நாட்களில் அழைத்து வருகிறேன் எனக் கூறிவிட்டு சென்றார்.

மூன்று நாட்கள் கழித்து ராமச்சந்திரனின் மனைவி ஆலோசனை மையத்திற்கு வந்தார். அவர் பெயர் சிவகாமி. புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்துள்ளார்.கவலை தோய்ந்த முகமும், உருகிய உடலும் பிரச்சனைகள் அப்பெண்மணியை எங்கனம் பாதித்துள்ளன என்பதை தெளிவாக விளக்கின. அவரும் ஒரு வெள்ளைத்தாளில் இரண்டு பக்கம் அளவுக்கு தன் பிரச்சனைகளை எழுதி எடுத்து வந்திருந்தார். தன் கணவனிடம் உள்ள பிரச்சனைகளையெல்லாம் விளக்கிய சிவகாமி இறுதியாக தன் கணவர் ஓர் கணவனாக இருக்க இலாயக்கற்றவர் என முடித்திருந்தார். அவரிடம் கேள்விகள் சிலவற்றை கேட்டபோது அரைகுறையாகவே பதில் கூறினார். மேலும் ஒவ்வொரு முறை பதில் கூறும் போதும் பாதிவரை சொல்லிவிட்டு உதட்டை கடித்து பேசுவதை நிறுத்திக்கொள்வார்.

தற்போடைய பிரச்சனைக்கு என்ன காரணம் என சிவகாமியிடம் கேட்டேன்.

சிவகாமிக்கு கணவர் தன்னை புரிந்து கொள்வதில்லை, தன்னை மதிப்பதில்லை என்ற ஆதங்கம் தொடக்கத்திலிருந்தே உள்ளது. கணவர் தான் சம்பாதிப்பதை அதிகமாக தன் அம்மா, அப்பா தம்பி தங்கைக்கு கொடுத்து விடுகிறார். அவர்களின் பால் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார் என்ற எண்ணும் உண்டு. இப்படி சம்பாதிப்பதை எல்லாம் தன் வீட்டிற்கே கொடுத்துவிட்டால் இரண்டு மகள்களுக்கு என்ன மிஞ்சும்? என்ற கோபம் தீவிரமாகி அதுவே ராமச்சந்திரன் மீது கடும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சிவகாமியின் தந்தை தோட்டம் ஒன்றை விற்பனை செய்துள்ளார். அதில் சிவகாமிக்கு சேர வேண்டிய பாகமாக ரூபாய் இருபது லட்சத்தை தன் மகளிடம் கொடுத்துள்ளார். அப்பணத்தை சிவகாமி தன் கணவருக்கு தராமல் தன் பெயரில் வங்கி லாக்கரில் வைத்துள்ளார். அப்பணத்தை தன்னிடம் ஒப்படைக்கவில்லை எனப்தால் ராமச்சந்திரன் சிவகாமி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.

உளவியல் உண்மைகள்:

ராமச்சந்திரன் மற்றும் அவர் மனைவி ஆகியோரிடையே தகவல் பரிமாற்ற குறைபாடு உள்ளது. கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை என்பது தெளிவாக புலனாகிறது. ராமசந்திரனுக்கு சரியாக பேச வராததும், சிவகாமி பேசும்போது அடிகடி உதட்டைக் கடித்துக்கொள்வதும் அவர்கள் தகவல் பரிமாற்றத்தில் குறைபாடு கொண்டுள்ளனர் என்பதற்கான அறிகுறிகள். தொடர்ந்து தான் சொல்வதை சிவகாமி அலட்சியப்படுத்தியே வந்ததால் “இவளிடம் என்ன சொல்லி என்ன பயன்? நாம சொன்னால் கேட்கவா போகிறாள்! என நினைத்துக்கொண்டு ராமச்சந்திரன் வாயைத்திறந்து பேசுவதே கிடையாது. அதனாலேயே அவருக்கு சரியாக பேச்சு வராமல் போய்விட்டது. இதை அவரிடம் விளக்கி அடிக்கடி மனைவியிடம் பேச வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறினேன். சிவகாமி மட்டுமல்ல அவரின் இரண்டு பெண்களும் கூட எடுத்த பொருட்களை எடுத்த இடத்தில் வைப்பதில்லை. ஆனால் குழந்தைகள் எது செய்தாலும் கோபப்படாத ராமச்சந்திரன் மனைவி என்ன செய்தாலும் கோபப்படுவதற்கு காரணம் மனைவியின் மீதுள்ள வெறுப்பே. அதற்காக ராமச்சந்திரனுக்கு புதிய உத்தி ஒன்றை சொல்லிக்கொடுத்தேன். அவர் இனிமேற்கொண்டு தனக்கு மூன்று மகள்கள் என நினைத்துகொள்ள வேண்டும். அவர் மனைவிதான் அவருக்கு முதல் மகள். மற்ற இரு மகள்களும் பொருட்களை ஆங்காங்கே போட்டு வைத்தாலும் கோபப்படாமல் எடுத்து வைக்கும் ராமச்சந்திரன் இனிமேற்கொண்டு தன் ம்னைவி ஏதேனும் தவறு செய்தாலும் என் முதல் மகள் தவறு செய்திருக்கிறாள் அவளுக்கு நான் உதவி செய்கிறேன் என்ற மனப்பாண்மையோடு அத்தவறுகளை அணுக வேண்டும்.

பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்தாலும் தற்போது மட்டும் விவாகரத்து செய்துவிடலாம் என்று ராமச்சந்திரன் நினைக்க என்ன காரணம்? அதற்கு காரணம் சிவகாமியின் அப்பா கொடுத்த இருபது லட்சம்தான். மாமனார் தன் கையில் பணத்தை கொடுக்காமல், மனைவியிடம் கொடுத்துவிட்டாரே! அப்படியானால் என் மீது அவருக்கு நம்பிக்கை இல்லையா! மருமகன் என்ற ஸ்தானத்தில் உள்ள எனக்கு என்ன மரியாதை இருக்கிறது! அப்படித்தான் மாமனார் என்னிடம் கொடுக்க வில்லை என்றாலும் மனைவி எடுத்துச் சொல்ல வேண்டாமா? பணத்தை என்னிடம் ஒப்படைத்திருக்க வேண்டாமா? இவளும் லாக்கரில் பதுக்கி வைத்துக் கொண்டிருக்கிறாள் என்றால் இவளோடு நான் பிழைப்பதில் இனியும் என்ன மரியாதை இருக்கிறது? என்பது மாதிரியான சிந்தனைகளே ராமச்சந்திரன் மனதில் ஆத்திரத்தை உண்டாக்கி விவாகரத்து முடிவை எடுக்கத் தூண்டியிருக்கிறது.

உங்கள் மனைவி உங்களிடம் தராவிட்டால் கூட இறுதியில் அது உங்கள் குழதைகளுக்குத்தான் கிடைக்கப்போகிறது மேலும் ஆரம்பத்திலேயே உங்களிடம் ஒப்படைக்கப்படாத பணத்தை இனிமேலும் நீங்கள் கேட்டு வாங்குவது உங்களுக்கு கெளரவமல்ல. அவர்களே கொடுத்தாலும் அதை நீங்கள் பெற மறுத்துவிடுவதே உங்களுக்கு பெருமை. எனவே இருபது இலட்சம் பிரச்சனையை இன்றோடு விட்டு விடுங்கள். அந்தப் பணம் உங்களை விட்டு எங்கும் போகாது என்று ராமச்சந்திரனுக்கு எடுத்துக் கூறினேன்.

இவைகள் அனைத்தையும் பின்பற்றுவதாகவும், தன் விவாகரத்து முடிவை தள்ளிப் போடுவதாகவும் ராமச்சந்திரன் ஒத்துக்கொண்டார்.

ராமச்சந்திரனின் மனைவியிடமும் கணவனிடம் வெளிப்படையாக பேச வேண்டியதன் அவசியத்தையும், அவ்வாறு வெளிப்படையான அணுகுமுறை இல்லாததன் காரணமாகவே உங்கள் மனதில் நினைப்பதை சொல்ல முடியாமல் உதட்டை உதட்டை கடித்துக் கொள்கிறீர்கள். இருபது இலட்ச ரூபாய் பண விசயத்தில் நீங்களும் உங்கள் தந்தையும் நடந்துகொண்ட முறை தவறானது. உங்கள் கணவருக்கு உரிய மரியாதையை நீங்கள் கொடுக்க வில்லை. அதனாலேயே அவர் மனம் மிகவும் புண்பட்டுள்ளது ஆயினும் பரவாயில்லை உங்கள் இரு குழந்தைகளின் நலனை மனதில் கொண்டு நீங்கள் மகிழ்ந்து வாழ்வதே நல்லது எனக் கூறினேன். கணவன் – மணைவி இருவறையும் ஒரு சேர அமர வைத்தும் இக்கருத்துக்களை விளக்கினேன். அப்பா – அம்மா இருவரும் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டு விடு மகிழ்ச்சியாக இல்லாமல் இருந்தால் வயது வந்த பெண்கள் காதல் வயப்பட வாய்ப்புண்டு என்பதையும் அவர்களுக்கு எச்சரித்தேன்.

உளவியல் ஆலோசனை பெற்று கணவன் – மனைவி இருவரும் இணைந்து மகிந்த இரண்டு மாதத்தில் மீண்டும் ராமச்சந்திரன் என்னை தேடிவந்தார். இம்முறை சற்று பதட்டமாக. உங்கள் பெண் காதல் வயப்பட வாய்ப்புண்டு என நான் கூறியது சிறிது வேறு விதமாக நடந்திருக்கிறது. அதை தனியாகப் பார்ப்போம்!

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</