வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. எழுத்தாளர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்த முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

தொடர் பற்றி
---------------------


தமிழ் எழுத்தாளர்களை பற்றிய முழுமையான தொகுப்பை உருவாக்குவது என்பது இமைமுடியை கட்டி இமயமலையை இழுப்பதற்கு ஒப்பாகும். இந்த பேருண்மை புரிந்தும் நாங்கள் இத்தகைய ஒரு முயற்சியில் இறங்கியிருப்பதற்குக் காரணம், எவ்வித சார்பும் அற்று இதுவரை இதற்கான முன்முயற்சிகள் தொடங்கப்படவில்லை என்ற ஆதங்கம் தான். இதுவரை நிகழ்ந்துள்ள தொகுப்பு முயற்சிகள் ஏதேனும் ஒரு துறை சார்ந்தோ, பிரிவு சார்ந்தோ, அல்லது ஒரு இசம் சார்ந்தோ மட்டுமே நடந்துள்ளன. நாங்கள் எந்த இசத்துக்குள்ளும் சிக்காதவர்கள். இப்பணி தமிழின் செழுமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான சிறிய தொடக்கப்புள்ளி. படைப்பாளிகளுக்குள்ளான பகிரதலுக்கும், படைப்பு மேம்பாட்டுக்கும் இது உதவக்கூடும்.

இதுவும் பல காரணங்களால் சர்ச்சைக்குள்ளாகலாம். ஆனால் தவறுகள் சுட்டப்படுமானால் அவைகளை திருத்திக்கொள்வதில் நமக்கு எந்த பிரச்னையும் இருக்கப்போவதில்லை. கூடுமானவரை அத்தகைய சூழல் ஏற்படாத வண்ணம் உழைக்க சித்தமாக இருக்கிறோம். இது நீண்டகால வேலை. உங்களின் விமர்சனங்கள் இப்பணியை மேம்படுத்தவும், எங்களை ஊக்கப்படுத்தவும் உதவும்.

மூன்று பிரிவாக எழுத்தாளர்களை வரிசைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். 1. பாரதிக்கு முன்னான எழுத்தாளர்கள். 2 பாரதிக்கு பின்னான எழுத்தாளர்கள். 3. சமகால எழுத்தாளர்கள். தொடக்கத்தில் வரிசைப்படுத்துவதில் சில தவறுகள் நேரலாம். ஆனால் எதிர்காலத்தில் உன்னதமான வெளிப்பாடாக இது அமையும் என்று நம்புகிறோம். அதைக் காலமும், வாசகர்களும் தான் தீர்மானிக்கப் போகிறார்கள்.

 
     
     
     
   
எழுத்தாளர்கள்
1
 

ஆசிரியர் பற்றி

முடச்சிக்காடு புதியபாரதி

எழுத்தால் இந்த சமூகத்தை புணரமைக்க முடியும என்று நம்பும் இளம் பத்திரிகையாளர். பெரும் பின்புலம் இல்லாத ஒரு கிராமத்தில் இருந்து பலத்த பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இவரை தற்காலிகமாக மீட்டுள்ளது சென்னை மாநகரம். அரசியல் ஈடுபாடு மிக்கவர். சுற்றுச்சூழல் ஆர்வலர். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் பிறந்த இவர், இயற்கை வேளாண்மை பற்றி விழிப்புணர்வு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இவரது கவிதைகள் "நாங்களும் சில பூக்களும்" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 'கூடாரம்' என்ற பெயரில் இலக்கிய இதழ் நடத்திய அனுபவமும் உண்டு. தமிழின் பிரதான வார இதழில் 2 தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகள் நூலாக வரவுள்ளன. இருளர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைநிலை, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி ஆய்வு செய்து வரும் இவர் அது பற்றிய நூலொன்றை விரைவில் வெளியிட இருக்கிறார். தமிழக ஆறுகளின் இயற்கைச்சூழலும், இப்போதைய இழிநிலையும என்றொரு நூலும் தயாராகி வருகிறது. சென்னையின் பிரதான கானா பாடகர்களில் ஒருவரான ' மரணகானா விஜியின்' சர்ச்சைக்குறிய வாழ்க்கை வரலாறை தொகுத்து "சாக்கடை சரித்திரம்" என்ற பெயரில் நூலாக வெளியிட இருக்கிறார்.

 
   
   
  ---------------------------------  
 

புதுமைப்பித்தன்

உலகின் சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் எவரோடும் சமமாக வைத்துப் பேசப்படக்கூடிய எழுத்து புதுமைப்பித்தனுடையது. திருநெல்வேலியில் 1906&ல் பிறந்த இவரது பெயர் விருத்தாசலம். முதல் கதை, மணிக்கொடி இதழில் 1934\ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு தொடர்ந்து பதினாலு ஆண்டுகள் சிறுகதை, கவிதை, நாடகம், சினிமா, அரசியல் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கதைகள் என பன்முகத் தன்மைகொண்ட கலைஞனாக விளங்கினார். இவரது கதைகளை தமிழ்வாழ்வின் நாடித் துடிப்புகள் எனலாம். கடவுளைக்கூட காபி கிளப்புக்கு அழைத்துச் செல்லும் அபூர்வமான பகடி கொண்ட எழுத்து புதுமைப்பித்தனுடையது. காசநோய் தாக்கி 42 வயதில் மரணமடைந்த இந்த அபூர்வ கலைஞன், புதிய தமிழ்ச் சிறுகதைகளுக்கு மூலவித்தாக தனது படைப்புகளை விட்டுச் சென்றிருக்கிறார்.

 
  ---------------------------------  
  ல. ச. ராமாமிர்தம்  
 

லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. லா. சா. ராமாமிர்தம் ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதிவந்த அவரை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் "சாகித்ய அகாதெமி விருது" பெற்றுத் தந்த சுயசரிதை ""சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.

லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய மற்றும் அயல் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார். அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.

 
  ---------------------------------  
  சி.சு.செல்லப்பா  
     
 

சி.சு.செல்லப்பா தமிழின் சிறப்புவாய்ந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். எழுத்து என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.

பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், சுதந்திர தாகம் போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  எழுத்தாளர்கள் எழுத்தாளர்கள் வாயில்

வ. ராமசாமி

முடச்சிக்காடு புதியபாரதி,  ilamurasu@gmail.com  

அக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. இலக்கிய வட்டாரத்தில் வ.ரா. என்று அழைக்கப்பட்டவர். அக்ராகரத்து அதிசய மனிதர் என்று பகுத்தறிவு பாசறையில் அடையாளப்படுத்தப் பட்டவர். 'மணிக்கொடி' என்ற இதழைத் தொடங்கி தமிழ் இதழியல் மற்றும் இலக்கிய வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர். தன் உரைநடை எழுத்துத்திறனால் பாரதியை சிலிர்க்க வைத்தவர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பாரதியை தேசியக் கவியாக அங்கீகரித்தவர். இப்படி வ.ராமசாமி அய்யங்காருக்கு பல முகங்கள்.

எழுத்தின் மூலம் நுட்பமான மன உணர்வுகளை பதிவு செய்யும் கலைக்கு முந்னோடிகளாக இருந்தவர்களில் ஒருவர் வ.ரா. தஞ்சாவூர் மாவட்டம், திங்களூர் கிராமத்தில் 17.09.1889ல் பிறந்தவர் வ.ரா. அப்பா வரதராஜ அய்யங்கார். தாயார் பொன்னம்மாள். திங்களூரை ஒட்டியுள்ள உத்தமதானபுரம் திண்ணைப் பள்ளியில் தொடக்க கல்வி பயின்ற வ.ரா, பின்னர் திங்களூர் நடுநிலைப் பள்ளியிலும் திருவையாறில் இருந்த சென்ட்ரல் உயர்நிலைப் பள்ளியிலும் அடுத்தக் கட்டப் படிப்புகளை படித்தார். பின்னர் தஞ்சாவூர் புனித பீட்டர் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தார். இப்படிப்பில் அதிக ஆர்வம் காட்டாத வ.ரா, இறுதித்தேர்வில் தோல்வி அடைந்தார். அதன் பின் கல்வியில் ஈடுபாடு காட்டவில்லை.

கல்லூரியில் வ.ரா படித்த காலம், சுதந்திரப் போராட்டம் வீறு கொண்டு நடந்த காலம். திருவரங்கத்தைச் சேர்ந்த கொடியாலம் ரெங்கசாமி அய்யங்காரோடு இணைந்து சுதந்திரப் போரில் தீரமுடன் செயல்பட்ட தலைவர்களுக்கு நிதி உதவி செய்யும் பணியில் ஈடுபட்டார். இதுபோன்ற ஒரு தருணத்தில் புதுவை சென்ற வ.ரா அங்கு பாரதியை சந்தித்தார். சில மணி நேரமே பாரதியோடு கழித்தாலும் அதன் பின் பாரதியின் தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை வ.ரா. 3 வருடங்கள் பாரதியுடனேயே தங்கி அவருக்கு சேவகம் செய்தார்.

பாரதியோடு தங்கியிருந்தாலும் எழுத்தில் தனக்கென தனித்திறனை மேம்படுத்திக் கொண்ட வ.ரா, உரைநடைத் தமிழில் படிப்போரை ஈர்க்கும் திறன் கைவரப்பெற்றார். பங்கிம் சந்திர சட்டர்ஜியின் குறுநாவலை மொழி பெயர்த்து வெளியிட்டார். இந்த அரிய முயற்சி அறிவுஜீவிகளை திரும்பி பார்க்க வைத்தது. பாரதியாரும் வெகுவாக பாராட்டி உற்சாகமூட்ட, தொடர்ந்து ஆக்கப்பணிகளில் ஈடுபட்டார்.

சுதந்திரப் போராட்டத்தில் வ.ராவின் பணி பொன்னெழுத்தால் பொறிக்கத் தகுந்தது. குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தின் பல போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்றவர்.

தனக்கு தவறெனத் தோன்றும் எக்கருத்தையும் பகிரென வெளிப்படுத்த தயங்காதவர் வ.ரா. 1919ம் ஆண்டு காந்தி தமிழ்நாடு வந்திருந்த போது பாரதியார் காந்தியாரை சந்தித்தார். அப்போது காந்தியின் அருகில் இருந்த ராஜாஜி பாரதியாரை காந்திக்கு முறைப்படி அறிமுகம் செய்து வைக்கவில்லை. காந்திக்கு காவலனாக வெளியே நின்று கொண்டிருந்த வ.ரா, இதை அறிந்து வெளிப்படையாக ராஜாஜியைக் கண்டித்தார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று 6 மாதம் கொடும் சிறை அனுபவித்தார். அந்தக்காலம் வரைக்கும் தீவிரவாதக் கொள்கையை கை கொண்டிருந்த வ.ராவின் போக்கு சிறை வாழ்க்கைக்குப் பிறகு சற்று நிதானமடைந்தது.

காங்கிரஸ், போராளிகளின் இயக்கமாக இயங்கிய தருணத்தில் அதன் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சென்றவர்களில் வ.ரா முதன்மையானவர். சுதந்திரப் போராட்டக்காலத்தில் பல்வேறு முதன்மையான பத்திரிகைகளில் அனல் தெறிக்க எழுதினார். அவரின் லாவகமான எழுத்துகள் அடித்தட்டு இந்தியனின் சுதந்திர வேட்கையை தட்டி எழுப்பின. மகாகவி பாரதியார், காங்கிரஸ் வரலாறு உள்பட பல்வேறு நூல்களையும் எழுதினார்.

சுதந்திரப் போராட்டக் காலத்தை விட வ.ராவின் மணிக்கொடி காலம் மிகவும் முதன்மையானது. மணிக்கொடி எழுத்தாளர்கள் என்றொரு பரம்பரையையே உருவாக்கினார். தன்னிகரற்ற படைப்பாளியாக பிரகாசிக்கும் புதுமைப்பித்தனுக்கு பெரும் பின்புலமாக இருந்தது வ.ரா தான். எத்தனையோ படைப்பாளிகளை பார்க்கிறோம். இளம் படைப்பாளிகளை எட்டிக்காயாக நினைத்து ஏறெடுத்தும் பார்க்காத அவர்களின் இயல்புகளை காண முடிகிறது. ஆனால் வ.ரா தேடித்தேடி இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தார். அவரைச் சுற்றி எப்போதும் எழுதப் பழகும் ஒரு இளைஞர் வட்டம் இருக்கும்.

இலங்கையில் இருந்து வெளிவரும் வீரகேசரி இதழில் பணியாற்றியுள்ள வ.ரா பஞ்சாப்பை சேர்ந்த புவனேஸ்வரியை ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். மிகவும் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இளம் வயதிலேயே மனு தர்மத்துக்கு எதிரான போர்க்குரலாக வளர்ந்தார் வ.ரா. பாரதியாருக்கு உதவியாளராக பாண்டிச்சேரியில் இருந்த போது பாரதியின் ஆலோசனைப்படி தனது பூணூலை கழட்டி எறிந்தார். பொதுவாழ்வில் தூய்மையைக் கடைபிடித்த வ.ரா எழுத்தொன்றும், வாழ்வொன்றுமாக வாழாதவர். அவரின் பேச்சும், வாழ்க்கையும் ஒத்தே இருந்தது. இவரின் இல்லற வாழ்வு மிகவும் சோகமயமானது. இவரின் இரண்டு ஆண் குழந்தைகளும் மிகச்சிறு வயதிலேயே இறந்து விட்டார்கள். அதையும் தாண்டி கொள்கை வழுவாது வாழ்ந்த வ.ராவின் மதிப்புக்குறிய உயிர், 29.08.1951ல் தூக்கத்திலேயே பிரிந்தது.

வ.ரா, கோதைத்தீவு உள்ளிட்ட நான்கு நாவல்களை எழுதியுள்ளார். இவருடைய சிறுகதைகள் "கற்றது குற்றமா" என்ற பெயரில் நூலாக வந்துள்ளன. நாவல், சிறுகதை, மொழி பெயர்ப்பு, வரலாறு என உரைநடைத் தமிழின் அத்தனை பிரிவுகளிலும் தீவிர பங்காற்றியுள்ள வ.ரா, பாரதியாரைப் போலவே அவர் சார்ந்த இனத்தாரிடையே மிகவும் புறக்கணிப்புக்கு உள்ளாகினார். அவமதிக்கப்பட்டார். ஆயினும் அது அவரின் இயல்பை பாதிக்கவில்லை. பாரதியை இளக்கண கவிஞர் என்று ஏற்றுக்கொள்ள ஒரு பிரிவினர் மறுத்தனர். இதை வன்மையாகக் கண்டித்த வ.ரா, ஷேக்ஸ்பியர், ஷெல்லி, இரவீந்திரநாத் தாகூர் ஆகியோரைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று காரைக்குடியில் நிகழ்ந்த ஒரு மாநாட்டில் வீராவேசமாக உரையாற்றினார். அவர் இலக்கணக்கவி அல்ல, அவர் தேசியக்கவி என்று பல இதழ்களில் எழுதினார்.

தொடர்புடைய சுட்டிகள்: 

http://www.andhimazhai.com/news/printnews.php?id=294


http://www.kalachuvadu.com/issue-84/bharathi04.asp


http://ta.wikisource.org/wiki/வ._ரா._வின்_நூற்றாண்டு_நினைவில்


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.