வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
நேர்காணல்கள்
1
 
 
     
     
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  நேர்காணல்கள் நேர்காணல்கள் வாயில்


பெண் என்ற ஒற்றை அடையாளம் ஆதிக்கச் சிந்தனைப் பெண்களுக்கானது! - கவிஞர் குட்டிரேவதியுடன் ஒரு நேர்காணல்

(‘புறனடை’ இதழில் வெளியான கவிஞர் குட்டிரேவதியின் நேர்காணல்.)

ரவிச்சந்திரன், பிரவீண், ராஜ், கஜேந்திரன், ஜே.ஜெய்கணேஷ்  


"வர்க்கப் போராட்டங்களின் வழியே, வர்க்கங்களை கடந்து செல்வது மார்க்சியம் "

பெண் கவிஞர்கள் நவீன கவிதையை இன்று ஒரு புதிய பருவத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். குட்டிரேவதி தனித்துவம் மிக்க கவித்துவமும் கலைத்தன்மை மிக்க அரசியலும் உள்ள படைப்பாளி. மொழியின் படைப்பூக்கம்மிக்க மறு ஆக்கம், பெண் என்னும் பால் நிலையின் புதிய புனைவுத்தளங்கள், அதன் புதிய கவித்துவங்கள் , சிறப்புக் குறியீடுகள், சாதியத்திற்கு எதிராக ‘உடல்’ என்பதை அரசியல் பிரக்ஞை மிக்க ஆயுதமாக ஏந்தல் எனப் பல திறப்புகள் கொண்டது அவரது படைப்புலகம். தமிழ் நவீனத்துவம், அதனுடனான அவரது உறவு-முரண், அவரது கவிதை, அதன் அரசியல் திசை, உடலரசியல், உடலரசியலுக்குள்ளான உட்போக்குகள், உடல்-இயற்கை உறவில் அவர் கட்டமைக்க விழையும் அறம், தனது சூழலின் காலத்தின் மீதான அவரது சலனங்கள் முதலியவற்றை நெருக்கமான விரிவான ஓர் உரையாடலின் வழி ஒரு முழுமையோடு விவாதிக்க ’புறனடை’ விழைகிறது.

புறனடை: நவீனத்துவ படைப்பியக்கத்திற்குள் பல்வேறு மரபுகள் இருந்து வந்துள்ளன. பிரதானமான இரண்டைச் சுட்ட வேண்டுமென்றால், மிகவும் உள்வட்டமாக இயங்கிய குறிப்பாக, சமூகம் வரலாறு முதலிய பருண்மையான பிரதேசங்களிலிருந்து அந்நியப்பட்ட, கலைத்தூய்மைவாதம் பேசிய ஒரு நவீனத்துவ உருவாக்கம் நிகழ்ந்தது.. இதில் சம்ஸ்கிருத மற்றும் பார்ப்பனீய மேலாண்மை இருந்தது. மணிக்கொடி, எழுத்து, கசடதபற என இதைச் சுட்டலாம். மறுபுறம் இதற்கு எதிரான கைலாசபதி, வானமாமலை தொடங்கி இடதுசாரி அறிவியக்கம் ஒன்று செயல்பட்டது. எண்பதுகள் தொடங்கி இந்த மரபில் வந்தவர்கள்தான் அமைப்பியல், பின் அமைப்பியல் , பின் நவீனத்துவம் என அறிமுகப்படுத்தி பல உரையாடல்களை எழுப்பினார்கள். வரலாற்றுப் பரிமாணமற்ற, அரசியல் உள்ளீடற்ற சாதிய முனைப்புகள் மிக்க தமிழ் நவீனத்துவத்தை இவர்கள் கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தினார்கள். தொண்ணூறுகளுக்குப் பின் இந்த இடைவெளிகள் மெல்ல கரைந்து வந்தன. தமிழ் நவீனத்துவம் பற்றிய உங்கள் மதிப்பீடென்ன? தமிழ் நவீனத்துவ வரலாற்றுக்குள் உங்களது படைப்பு மற்றும் அரசியலுக்கான மரபு எந்த மூலங்களிலிருந்து உருவாகிறது. ?

குட்டி ரேவதி: நீங்கள் கூறும் இரண்டு விஷயங்களின் மீதுமே எனக்கு விமர்சனம் இருக்கிறது. கலைத்தூய்மைவாதம் பேசியவர்கள் முற்றிலுமான பார்ப்பனீயச் சிந்தனையோடும் செயல்பாட்டோடும் இயங்கினார்கள். அவர்களின் ஆக்கங்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியல் சமூக வரலாறுகள், அவர்களின் இருப்பு குறித்த உள்ளுணர்வு, அல்லது அதனுடைய விதைகள், தாக்கங்கள், பிரதிபலிப்புகள் எதுவுமே இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். சாக்கடையே என்றாலும் அது அக்கிரஹாரத்திலிருந்து பாய்ந்தது என்று புளகாங்கிதப்பட்டார்கள். மறுபுறம், மார்க்சியம் தொடங்கிப் பின் நவீனத்துவம் வரையிலான விஷயங்களைப் பேசியவர்களிடமும் ஒரு செயற்கையான வடிவமைக்கப்பட்ட சிந்தனையாகத்தான் இலக்கியம் இருந்திருக்கிறது. அது ஓர் இயல்பான ஊக்கத்தையோ படைப்பூக்கத்தையோ தருவதற்கான எந்தவிதமான கலைக்கூறுகளையும் உள்வைத்திருக்கவில்லை. மனித மனதுடன் நிரந்தரமான உரையாடலை நிகழ்த்துவதற்கான ஊக்கமற்ற பீரங்கிச்சத்தங்களாகத்தான் இருந்தன. இது இரண்டையும் நிராகரித்து அவ்வப்போது உதிரியாக சிலர் இயங்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். இன்றைய ஆக்கங்களின் மூலம் என்பதே கூட இவ்விரண்டுச் செயல்பாடுகளையும் நிராகரித்த இடத்தில் இருந்தும் சமூகத்தின் அவலங்களைக் கூர்ந்து கவனித்த அக்கறையிலிருந்தும் தாம் தொடங்குகிறது. நான் பிரமிளை, அவ்விதம் தன் ஒற்றைக் கையால் நிராகரித்த பெருங்காற்றாகப் பார்க்கிறேன். சாதியாகட்டும், மதமாகட்டும், உடலாகட்டும் அனைத்தின் மீதான ஒடுக்குமுறைக் கட்டமைப்புகளையும் தகர்த்துக்கொண்டே இருந்தவர்கள்தான் மேலே குறிப்பிட்ட இரண்டையும் நிராகரித்தார்கள். இதனால்தான் இவர்களும் அக்காலத்திலேயே மேற்குறித்த இரண்டு தரப்பினராலும் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள், புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில், இரண்டுமே சமூகத்தைக் குறித்த முழுமையானதோர் அக்கறைக்கான கருவியாக உருவாகவில்லை.

‘கலைத்தூய்மைவாதம்’ என்பது பார்ப்பனியச் சிந்தனையாளர்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு ‘புனிதக்கருத்தியல்’. ஆனால் அதன் எதிர்ப்பக்கம் உருவானதும் படைப்பூக்கமற்ற ஒரு தட்டையான கருத்தாக்கமாக இருந்தது. இது இரண்டுக்கும் இடையிலான கலவை, ஓர் ரசவாதம் இல்லாமல் இருந்தது. கலையும் சிந்தனையும் ஒன்றுடனொன்று கலவாமல் இருந்தது. இப்போது பேசப்படுகிற தலித்தியம் என்ற, ‘சாதி மறுப்பு இலக்கிய’ எழுச்சியும் பயணமும் கூட ஒரு திட்டவட்டமான வேலியிடப்பட்டப் பாதையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. குறுக்கப்பட்ட ஓர் அரசியல் பாதை, இலக்கியப் பாதை (அதாவது தலித் இலக்கியம் என்ற அடையாளப்படுத்தல்) குறுக்கப்பட்ட ஒரு தலித் வரலாறு என்று செல்கிறது. இலக்கியத்தை கலைமயப்படுத்த மக்களுக்கான ஒரு செயல்பாடாக மாற்ற, ஒன்றோடொன்று உறவாடி ஒரு புத்தெழுச்சியை உருவாக்கிட முடியாத அளவுக்கு, சமூகத்தின் எல்லா ஊடகங்களிலும் இதற்கெதிரான திட்டவட்டமான ஓர் எதிர்ப்பு நிலை தான் இன்றும் நிலவுகிறது. ஏனென்றால் இன்னும் அந்தப் பார்ப்பனிய மரபில் வந்தவர்கள், பார்ப்பனீயச் சிந்தனையில் ஊறியவர்கள் ஓய்ந்துபோகவில்லை. அவர்கள் இன்று இதர சாதியினரிடமும் உருவாகிவிட்டனர். எல்லோரும் இன்றும் செயலூக்கத்துடன்தான் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், பார்ப்பனீயச் சிந்தனையாளர்களின் இரண்டாம் சுற்றுக்கான காலக்கட்டம் இது. மீண்டும் தங்களைத் தாங்களே ஒருங்கிணைத்துக்கொண்டும், நிலைநிறுத்திக்கொண்டும் குவிமையைப்படுத்திக் கொண்டும் இயங்குகிறார்கள். இன்று நிகழ்ந்துகொண்டிருக்கும் செயல்பாடுகளின் தொடர்ச்சியைச் செரித்துக்கொண்டும் உள்வாங்கிக் கொண்டும் அதை இன்னொரு வடிவமாக மாற்றுவதற்கான எந்த ஒரு செயல்பாட்டையும், முனைப்பையும் அவர்களால் எடுக்கவே முடியவில்லை. அவர்கள் அந்தந்த அறைகளோடு முடங்கிப்போய்விடுகிறார்கள்.

இப்பொழுது உடலரசியல் என்கிற விஷயத்திற்கே நாம் நேரடியாக வந்து விடலாம், உடலரசியல் என்று பேசவந்த பெண் கவிஞர்களுடைய குரல்கள் கூட சீராக எதிரொலிக்காமல் பார்த்துக்கொண்டார்கள். அதாவது அடுத்தடுத்து ஒலிப்பதற்கான ஒரு வாய்ப்போ ஓர் இயக்கமாக, உரையாடலாக உருவாவதற்கான சூழல் எழாமல் தங்களைத் தாங்களே இறுக்கிக்கொண்டார்கள். இதற்கு பதில் அளிப்பதற்காக அவர்களுக்குள் எழும் இயல்பான உயிரியல் எழுச்சியைக் கூட குரல் செருமிக் கட்டுப்படுத்திக் கொண்டார்கள். ஏனெனில், இது நேரடியாக ஆதிக்கச் சாதியினரின் உடலையே தொடும், சமத்துவத்தை மற்றெல்லோருக்கும் தந்துவிடும் என்று அச்சமுற்றார்கள். ஆனால், உடலரசியல் என்பது ஒரு படைப்பூக்கமிக்க இயக்கமான பின் அதனுடன் தம்மை வந்து இணைத்துக் கொள்வதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்தார்கள்.

புறனடை:. உடலரசியல் என்றால் அதற்குள்ளான உள் வேறுபாடுகள் அறியப்படவில்லை. உடலரசியல் எனபது ஒற்றைப் பரிமாணத்தோடுதான் பார்க்கப்படுகிறது இல்லையா? அதற்குள்ளான வேறுபாடுகள் அறியப்படவில்லை என்கிறீர்களா ?

குட்டி ரேவதி: ஆமாம் அதனுடைய வேறுபாடுகள், அதாவது அதனுடைய நுண்மாறுபாடுகள் எதுவும் அறியப்படவில்லை. பலவகையான உடலரசியல் கருத்தாக்கங்கள் ஒரே தளத்தில் இயங்கமுடியும் தாம். அப்படியான விஷயங்களைக் கண்ணுறுவதற்கான ஒரு சகிப்புத்தன்மை கூட இல்லாமல் அனைத்தையும் மேற்குறிப்பிட்ட கலைத்தூய்மைவாதிகளாகட்டும், எதிர்தரப்பினராகட்டும், ஒட்டுமொத்தமாக நிராகரித்ததனால்தான் இந்த முத்திரை தொடர்ந்து நம்மிடமே தங்கிவிட்டது. அதை நாமே தூக்கிச்செல்ல வேண்டியதாக இருக்கிறது. தலித் இலக்கியம், தலித் அரசியல் இயக்கங்கள், தலித் வரலாறுகள் இது எல்லாவற்றையும் நாம் ஒட்டுமொத்தமாக உள்வாங்கிச் செரித்து, பின் நவீனத்துவத்திற்கும் அப்பாற்பட்ட ஓர் செயல்பாட்டு முறைக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும். அது ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கமாக, கூட்டுச்சிந்தனையாக இன்னும் உருவாகவில்லை. அதற்கான ஒரு புது முத்திரையை உருவாக்குவதற்கான ஒரு நடவடிக்கைக்குள்ளேயே கூட நாம்மால் போக முடியாத படிக்குச் சூழலையும், தங்கள் இயக்கங்களையும், புழக்கங்களையும் இறுக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது குறிப்பாக, சாதி மறுத்த, எதிர்த்த சிந்தனையாக இருக்க வேண்டும்.

ஆனால் அதைப் பேச வந்தால் பார்ப்பனீயச் சிந்தனையாளர்களுக்கு தாங்கள் ஏற்கனவே நுகர்ந்த அதிகாரங்களை எல்லாம் விட்டொழிக்க வேண்டியிருக்கும். அதற்கு அவர்கள் தயாராக இல்லை. மறுபக்கம் கலைத்தூய்மை வாதம் பேசவில்லையே தவிர இடதுசாரி இயக்கத்தில் வந்தவர்களும் அதில் தலைமையை எடுத்தவர்கள், சிந்தனைவாதிகளாக தங்களை முன்னிறுத்தியவர்கள் பெரும்பாலும் அந்த பார்ப்பனீயச் சிந்தனையின் வம்சாவழியினராகத்தான் இருந்தார்கள். இந்தக் கண்ணோட்டத்தில் இந்த இரண்டு மரபையுமே நாம் கூர்மையாக விமர்சிக்க வேண்டி இருக்கிறது. எனக்கு எதிரான ஒரு சிந்தனை உள்ளவர்களிடமும் என்னோடு ஒத்திசைவு உள்ளவர்களிடமும் கூட இணைந்து செயல்படுவதற்கான ஒரு வெளியாக இல்லை என்பதாகத்தான் இன்றைய தொய்வு நிலையாக நான் பார்க்கிறேன். எல்லோரும் தங்கள் சிந்தனைகளாலேயே கெட்டிப்பட்டு, இறுகிப்போயிருக்கிறார்கள். உதிரிகளாகத்தான் நாம் எல்லோருமே இருக்கிறோம். அந்த உதிரித்தன்மையே முந்தைய தலைமுறையினரின் அதிகாரச் செயல்பாட்டினுடைய விளைவின் தொடர்ச்சிதான். அதை எதிர்ப்பது என்னுடைய தொடர்ந்த வேலையாகவும் இருக்கிறது.

குறிப்பாக, காலங்காலமாக, ‘பெண்’ என்ற ஒற்றை அடையாளத்தைப் பிற பெண்கள் மீதும் திணித்து அவர்களையும் அந்த ஒற்றை அடையாளத்திற்குள் இழுக்கும் ஆதிக்க சாதிப் பெண்கள், ‘உடலரசியல்’ என்ற அரசியல் அடைமொழி இயக்கும் விவாதங்களுக்குள் மட்டும் உள் நுழையாமலிருப்பது ஏன்? அல்லது அதை, ‘பாலியல் வேட்கை’ என்ற உள்ளீடற்ற அடையாளத்தைக் கொடுத்துக் காயடிப்பதும், வரப்புகளையும் வெட்டி விடுவதும் ஏன்? ஒடுக்கப்பட்ட சமூகம் என்பதே கூட வேறுவேறு இனக்குழுக்களாகப்பிரிந்து இயங்கி தமக்கான உரிமைகளை வென்று எடுக்க வேண்டும் என்ற நிலையில், இத்தகைய வேறுபட்ட இனப்பின்னணியிலிருந்து வரும் பெண்ணுக்கான உடலரசியல் முற்றிலும் ஒரு கடினமானதாக இருக்கும். எனக்கான, ‘உடலரசியல்’ மற்றும், ‘பாலுரிமை’ நான் அறிவிப்பதையே, ஓர் இருளப் பெண்ணுக்கேயானதும் எனத் திணிப்பது நகைப்புக்கு இடமானது இல்லையா?

புற.:. இது இரண்டுமே ஆரோக்கியமான ஒரு புள்ளியில் இணைவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா? உதாரணமாக நீங்கள் , மாலதி மைத்திரி, லக்‌ஷ்மி மணிவண்ணன், சங்கர ராமசுப்பிரமணியன், இவர்களுடைய படைப்புச் செயல்பாடுகள் கலையியலுக்கான நிறைவையும் கொண்டதாக இருக்கிறது, அதே சமயம் வரலாறு சமூகம் பற்றிய நுட்பமான அரசியல் பிரக்ஞையோடும் இயங்குகிறது. இந்தப் போக்கு முன்பு இல்லாத ஒன்று அல்லவா ?

குட்டி ரேவதி: நீங்கள் குறிப்பிடும், இத்தகைய கலை + சமூகக் கூட்டுப்பணியே கூட, அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின்பான அதிர்வலைகளின் தொடர்ச்சியால் நிகழ்ந்தது. அதாவது, 1990 -க்குப்பின்! நாங்கள் எல்லோரும் தீவிரமாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உதிரிகளாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். இது அந்தக் காலகட்டத்தில் இல்லை. ஆதிக்கச் சிந்தனையாளர்களின் நடவடிக்கைகள் எல்லாமே ஒரு கூட்டியக்கமாக இருந்துள்ளது. சிற்றிதழ் இயக்கம் என்பது குறுகிய வட்டத்தில் இருந்திருந்தாலும் அது ஒரு கூட்டியக்கச் செயல்பாடாக இருந்துள்ளது. மறைமுக நோக்கத்துடன், உடன்படிக்கைகளுடன் செயல்பட்டிருக்கிறார்கள். நவீனத்துவம் பேச வந்தவர்களில் ஒருவருக்கொருவர் தம் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டு பலப்படுத்திக்கொண்டதும் அல்லாமல், அதனால் ஆதாயம் அடைந்த சிலரையேனும் நிச்சயமாக நீங்கள் அடையாளப்படுத்த முடியும். ஆனால், இன்றியங்கும் நாங்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொண்டு இயங்கமுடியாத அளவிற்கு சமூக அழுத்தங்களும் அடையாள அழுத்தங்களும் தீவிரமாக உள்ளன. அதுபற்றிய விழிப்புநிலையுடன் தான் நாங்கள் இருக்கிறோம். ஆனால் நாங்கள் இப்படி உதிரிகளாக இயங்குவதுகூட தற்கால நவீன இலக்கிய இயக்கத்தின், செயல்பாட்டின் தொடர்ச்சிக்கான வழிமுறை என்றே நினைக்கிறேன். ஒருவேளை இது அதற்கான காலக்கட்டமாக இருக்கலாம்!

புற :. படைப்பாளிக்கும் எழுத்துக்கும் அறம் என்ற ஒன்றை எப்போதும் வலியுறுத்தி வருகிறீர்கள். படைப்பாளி எத்தகைய அறத்தை முன்னிறுத்த வேண்டும். படைப்பாளியின் சமூகப் பாத்திரம் எத்தகையதாக அமைய வேண்டும். உங்களுடைய கவிதைகளில் அறம் என்பதை எப்படி அர்த்தப்படுத்துகிறீர்கள்?

குட்டி ரேவதி: அறத்திற்கான தேடல் தொடர்ச்சியான ஒன்று என நினைக்கிறேன். ‘அதிவேக உணவு’ வடிவில் பொட்டலமாக வழங்கப்படமுடியாதது. அன்றாடம் பயிற்சியின் மூலம் தான் ஒவ்வொரு மனிதனும் அறிந்துணர வேண்டியது. மேலும், அதை பொதுவானதொரு பெயர்ச்சொல்லாக என்னால் வரையறுக்க முடியாது. அது நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கைமுறை, என்னுடைய இருப்பு, என்னுடைய வெளிப்பாடு, என்னுடைய கவிதையின் வெளிப்பாடு இது அனைத்தும் பொருந்தி ஒரு கூட்டுமயமாகதான் இருக்கிறது. நின்ற இடத்திலேயே என்னால் நிற்க முடியவில்லை. ‘அறம்’ என்ற வாழ்நெறியையும் வாழுந்தோறும் உருட்டி உருட்டித்தான் உருவாக்க வேண்டியிருக்கிறது.

ஒரு கூழாங்கல் தான் உருவாவதற்கு எவ்வளவு காலங்கள் எடுத்துக்கொள்கிறதோ அதே மாதிரியான ஒரு தன்மையில்தான் நான் அறம் என்கிற பாதையையும் பார்க்கிறேன். நான் வரையறுக்க முயலும் பொழுதே அது ஓர் உறைந்த புகைப்படம் போல, உயிர்த்துடிப்பு நின்றுவிட்டதாக ஆகிவிடுகிறது. காலம் உறைந்த கட்டத்திற்குப் போய் விடுகிறது. ஆனால் ‘வாழ்நெறி’ என்பது நிமிடத்திற்கு நிமிடமான ஒரு செயல்பாடாகவும் சிந்தனையாகவும் இருக்கிறது. அப்படி அதை வரையறுக்க முடியுமெனில் அதனுடைய ஒற்றைப் பரிமாணமாகத்தான் இருக்கும். அப்படித்தான் நான் அறத்தைப் பார்க்கிறேன். சமீபத்தில் பௌத்தத்தில் மிகவும் ஈர்க்கப்பட்டு அதனோடு தொடர்ந்து பயணித்துக்கொண்டு இருக்கிறேன், தொடர்ந்து வாசித்துக்கொண்டும் இருக்கிறேன். அதற்கான நிறைய பரிசோதனை முறைகளும் இருக்கின்றன. அறம் என்பதை புத்தர், இயற்கையின் அடிப்படை நியதியாகவே சொல்கிறார். இயற்கையின் பார்வையில், கொல்லும் உயிரும் கொல்லப்படும் உயிரும் சூழல் மற்றும் தேவை கருதி, தங்களின் பணியையும் இடத்தையும் மாற்றிக்கொள்வதைப்போல! ஒரு சூழலில் கொல்லப்படும் உயிராக இருப்பது, பிறிதொரு சூழலில் இயற்கையின் சமன் நிலை கருதியும், தன் தகவமைப்பின் பொருட்டும் கொல்லும் உயிராகிறது ஆனால் அதைப் புரிந்துகொள்கிற வாழ்க்கையிலிருந்து நாம் வெகு தூரம் விலகி இருக்கிறோம். அந்த இடைவெளியை எப்படிக் கரைப்பது என்கிற முயற்சியில்தான் நாம் இன்று ஈடுபட்டிருக்கிறோம் என்று நம்புகிறேன்.

மேலும், நான் ‘அறம்’ என்று குறிப்பிடும் ஒன்று, உங்களுடையதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது என்பதை நாம் வெளிப்படையாகப் பார்க்கிறோம். ஆனால் அப்படி இல்லை. இயற்கையின் நியதியில், அறம் என்பது நீங்கள் எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் அது ஒரு பொதுவான உண்மைக்கு உங்களை அழைத்துச் செல்லவேண்டும். அந்தக் கட்டத்தை நோக்கித்தான் நாம் நகர்ந்துகொண்டு இருக்கிறோம் என்றும் சொல்லலாம். ஆனால் அதை நான் இப்போது செம்மையாக வரையறுக்க விரும்பவில்லை. நான் ‘அறம்’ குறித்த கோட்பாட்டளராக மாற விரும்பவில்லை, அதைப் பழகுபவராகவே இருக்கவிரும்புகிறேன்.

புற:. உலகப் பொதுவான அறம், காலப் பொதுவான அறம் என்ற ஒன்று இருக்க முடியும் என்கிறீர்களா ?

குட்டி ரேவதி: அப்படி ஒன்று இருக்கமுடியாது! அந்த உலகம், காலம் என்ற வரையறைகள் கூட, மனிதச் சிந்தனைகளின் வரையறைகளுக்கு அப்பாற்பட்டவையாக இல்லை. எனும்போது, நான் முந்தைய பதிலில் குறிப்பிட்டு இருப்பது போல, தருணம் இயற்கையின் பார்வையில் மாற்றி மாறி கொல்பவரையும், கொல்லப்படுபவரையும் இடம் மாற்றுகிறது. அதுதான் இயற்கையின் ரகசியங்களில் ஒளிந்திருக்கிறது, நிறைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஒரு மரம், செடி , கொடி அவைகளுக்கான செயல்பாடுகள் எல்லாம் அதற்கு உட்பட்டுதான் இயங்குகிறது. மனிதர்களாகிய நாம் மட்டும்தான் அதிலிருந்து மிகவும் விலகி இருக்கிறோம். இயற்கையோடு ஒட்டாமல், பொருந்தாமல், இருக்கிறோம். நிறைவடைந்த செயலாக எந்த ஒன்றும் இல்லை. அது ஒரு தொடர்ந்த நடைமுறைப் பயிற்சியின் வழியாகத்தான் அதன் எல்லைகளை நெருங்க முடியும்.

புற:. தமிழ் நவீனத்துவ இயக்கங்களில் நீங்கள் உங்களை எதனோடாவது அடையாளப்படுத்திப் பார்க்கிறீர்களா ? உங்களுக்கான மரபின் தொடக்கமாக ஏதாவது ஒரு புள்ளியைச் சுட்ட முடியுமா? உதாரணமாக நீங்கள் பிரமிள் என்றீர்கள்.....

குட்டி ரேவதி: பிரமிள் என்பவரை என்னைப் பொறுத்தவரை நான் ஓர் “இலக்கிய முத்திரை”யாகத் தான் பயன்படுத்துகிறேன். அவர் உயிரோடு இருந்தால்தான் அம்முத்திரையைத் தகர்க்க முடியும் என்பதாக. இன்று பிரமிளைப் பேசுவதினாலேயே, அவருடன் நம்மைத் தொடர்புப்படுத்திக்கொள்வதினாலேயே நம்மை விலக்கிவைக்கிற போக்கும் இருக்கிறது. அதை முழுதும் நான் தனியாகவே அனுபவிக்கிறேன். என்னைத் தன்னோடு தொடர்புப்படுத்திக்கொண்டு, என்னைத் தன்னோடு இணைத்துப் பார்த்த, என் சிந்தனைகளோடு ஒத்திசைவு கொண்ட பல எழுத்தாளர்களும் கூட இத்தகைய செயல்பாட்டால் என்னிடமிருந்து விலகிப் போயிருக்கிறார்கள். இதன் காரணங்களை நான் அறியாமல் இல்லை. பிரமிளின் தொடர்ச்சி நான்! நம் அறிவு மரபின் தொடர்ச்சி என்பதே சனாதனச்சிந்தனைகளின் மீதான கல்லெறிதல் தான்!

நானும் பிரமிளினுடைய சமகாலத்தில் என்ன நிகழ்ந்தது, அவர் என்ன மாதிரியான மனநிலையில் இருந்தார் என்றெல்லாம் துல்லியமாக அறிந்திருக்கிறேன். அவரின் சமகாலத்தில் வாழ்ந்த ஒரு படைப்பாளி இல்லை நான். எனக்குக் கிடைத்தது அவருடைய படைப்புகள்தாம். பிரமிளின் படைப்புகளில் கூர்மையான ஆழமான ஓர் அரசியல் திசை இருக்கிறது. சாதியத்தின் ஆதிக்கச்செயல்பாட்டை, கருத்தாக்கங்களின் வழி இலக்கிய வெளியில் இயங்கிய சனாதன அணுகுமுறையை நேரடியாக, உச்சபட்சமான ஒரு கலைத்தன்மையுடன் உடைக்கிற ஒரு செயல்பாடு இருக்கிறது. அதை நான் உள்வாங்கிக்கொள்கிறேன். அதை என் ஊக்கமாக்கிக் கொள்கிறேன். இங்கு தேவதேவன், சிவகாமி, என்.டி.ராஜ்குமார் முதலியோரையும் குறிப்பிட விரும்புகிறேன். என்.டி.ராஜ்குமாரின் கவிதைகளை உடலரசியல் எனபதன் நீட்சியாக அதன் இன்னொரு வகைமையாகத்தான் பார்க்கிறேன். இதில் ஆண் பெண் எழுத்தாளர் என்ற வேறுபாடெல்லாம் இல்லை. உடலை ஓர் ஆயுதமாக வைத்து சாதியத்தை தகர்ப்பதற்கான ஒரு மொழி உங்களிடம் இருந்தால் நீங்களும் அந்த இயக்கத்தில் தான் இருக்கிறீர்கள். அப்படிப் பார்க்கும்போது இந்த மரபு இரண்டாயிரம் வருடங்களாக எங்கெங்கெல்லாம் துளித்துளியாக இருந்ததோ அதனோடெல்லாம் என்னை நான் இணைத்துக்கொள்கிறேன். இந்த மரபிலிருந்து நான் வெளியே போகவே விரும்பவில்லை. ஏனெனில் இது ஆதிக்க மனநிலையுடன் கலையும் படைப்பும் சமூகமும் அரசியலும் எங்கெங்கெல்லாம் செயல்பட்டதோ அதை முற்றும் முழுதும் எதிர்த்த மரபு. விடுதலை வேட்கை நிறைந்ததொரு மரபு. அந்த இடத்தில் நான் நிற்கிறேன்!

பிரமிளை நான், ஓர் ‘இலக்கிய முத்திரையாக’, அடையாளப்படுத்துவதற்கான அவசியம் இன்னும் இன்னும் அழுத்தம் பெறுகிறது என்று தான் கூறுவேன்.

புற:. பிரமிளை பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கு மிகுந்த ஊக்கம் தரும் படைப்பாளியாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். உங்கள் முதல் தொகுப்பு வெளியானபோது அதில் பிரமிளுக்கும் உங்கள் படைப்புலகுக்கும் இடையில் ஒரு தொடர்ச்சி உணரப்பட்டது. க. நா.சு, வெஙட்சாமினாதன் முதலியோரின் விமர்சனப் பார்வைகளையும், தமிழ் நவீனத்துவத்தின் சனாதனத்தன்மைகளையும் படைப்புக்கு வெளியில் ஒரு விமரிசகராகவும் இயங்கிக் கடுமையாக ஆய்வுப்பூர்மான விசாரணைக்குட்படுத்தியவர் பிரமிள். ஆனால் மறுபுறம் அப்போது அறிமுகமாகிக் கொண்டிருந்த அமைப்பியல், பின் அமைப்பியல் குறித்தும் குறிப்பாக படைப்பு மற்றும் படைப்பாளி பற்றி அது முன்வைத்த கருத்துக்களையும் அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். படைப்புருவாக்கம் பற்றிய அமைப்பியலின் விஞ்ஞான பாணியிலான அணுகுமுறையை அவர் கடுமையாக எதிர்த்தார்...

குட்டி ரேவதி: படைப்பு மீதான விஞ்ஞானப்பூர்வமான ஆய்வு என்பதை இனி அப்படியே மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இனி ஒரு ‘படைப்பாளி’ மீதான விஞ்ஞானப்பூர்வமான ஓர் ஆய்வைத்தான் நாம் நிகழ்த்த வேண்டும். படைப்பாளி தன் மீதும், படைப்பாளியின் மீது சமூகமும் விஞ்ஞானப்பூர்வமான தொடர்ந்த ஆய்வையும் விமரிசனத்தையும் நிகழ்த்த வேண்டிய கால கட்டம் இது. அந்தக் காலகட்டத்தில் அத்தகைய விமரிசன நெறியைத் தான் பிரமிள் கொண்டிருந்தார். பிரமிள் தனியொருவராக நின்று அதை எதிர்கொண்டிருக்கலாம்.

நாம் ஒருவரின் படைப்பைத் தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. படைப்பாளி தான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். சமூகத்தின் ஏற்றத்தாழ்வு குறித்த நம்பிக்கைகளை நாம் ஏற்றுக் கொண்டிருந்திருக்கிறோம். சமூகத்தின் ஆதிக்கச் சாதியின் நிலையிலிருந்து தான் உயர்ந்த படைப்பாக்கம் உருவாக முடியும் என்ற பாலபாடத்தை எல்லோரும் புகட்டியிருக்கிறார்கள். நீங்கள் படைப்பு மீது என்னவகையான கோட்பாட்டு விமரிசனங்கள், விஞ்ஞானபூர்வமான ஆய்வுகள் எல்லாம் வைக்கிறீர்களோ அதையெல்லாம் இனி படைப்பாளிக்கு இடம் மாற்ற வேண்டும். அதற்கு சங்கடங்கள் நெருக்கடிகள், அதற்குப் பாதையே இல்லையென்றாலும், அதை நாம் செய்ய வேண்டிய காலக் கட்டாயம் இது.

இத்தகைய அணுகுமுறைக்கான எல்லா அவசியங்களையும் மூலகங்களையும் சமீபத்தில் அம்பேத்கரிடமும், நவீன பௌத்தத்திலும் நான் துல்லியமாகக் கண்டறிந்திருக்கிறேன். படைப்பு என்பது ஒரு தனிமனிதனின் விளைச்சல் தான்! என்றாலும் அது ஒரு கலைப்படைப்பா என்று ஆராய்வதை விட அது எங்கிருந்து வரும் கலைப்படைப்பு என்பதை தீர விசாரிப்பது முக்கியம். சமூக மாற்றத்திற்காகவென முன்வைக்கப்படும் கொள்கைகளும், அறிக்கைகளும் எவர் வாயிலிருந்து, எவர் உடலிலிருந்து எப்படி வெளிப்படுகிறது என்பது முக்கியம். சாதியின் பெயரால் ஏற்றத்தாழ்வு நிறைந்த இச்சமூகத்தின் படிகளில் ஒருவர் எந்தப் படியில் நின்று கொண்டு தன் படைப்பை முன் வைக்கிறார் என்பதைக் கணக்கிடாமல் கருத்தில் கொள்ளாமல் அவர்தம் படைப்பின் தரத்தைப் பேசுபொருளாக்குவதில் என்ன இருக்கிறது? இந்தப் படிநிலையை அவர் உருவாக்கவில்லை. சமூகத்தால் உருவாக்கப்பட்ட படிகளில் அவர் அங்கே நிற்கும் படி நிற்பந்திக்கப்பட்டிருக்கிறார், என்றால், அவருக்கு முன்னுரிமை கொடுத்து அவர் படைப்பை அணுகுவது தான் விஞ்ஞானப் பூர்வமாக இருக்கும். எனில், விளிம்பு நிலையிலிருந்து ஒடுக்கப்பட்ட வெளிகளிலிருந்து இயங்குபவர்களின் படைப்புகளில் தான் சமூகத்திற்கான புத்தெழுச்சியும் படைப்பூக்கமும் பெற்றிருக்கும்.

சமீபத்தில், தலித் அல்லாத, ஆங்கிலத்தில் எழுதும் தமிழ்ப் படைப்பாளி தன்னை, ஒரு தலித் என்று சொல்லி உலகெங்கும் தன் கருத்துகளை விற்று வந்தார். இதில் அவர் என்னவிதமான படைப்புகளை வழங்கினார் என்று பார்க்கவேண்டிய அவசியமில்லை. நேர்மையாக தலித் படைப்பாளிகளுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளையும் நீதிகளையும் அவர் அவமதித்துள்ளார். ஆகவே இனி ஆய்வை படைப்பாளி மீது செய்யவேண்டும். படைப்பாளியைத் தான், ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்யவேண்டும்!

புற:. படைப்பு பற்றிய அந்த சிந்தனைகள் இன்று காலாவதியாகிவிட்டது என்கிறீர்களா ?

குட்டி ரேவதி: ஆமாம், நிச்சயமாக! அப்படித்தான்! முன் தலைமுறை படைப்பாளிகளின் உழைப்பையும் பங்களிப்பையும் நான் உணராமல் இல்லை. அவர்கள் இல்லாமல் இன்றைய இந்தக் கட்டம் சாத்தியமில்லை என்ற எண்ணமும் உண்டு. ஒருவேளை அவர்கள் தங்களை முற்றிலுமாக ஆதிக்கச் சிந்தனைகளிலிருந்து விடுவித்துக் கொண்டிருந்தார்களேயானால், இன்றைய இலக்கியச் சிந்தனைகளே முற்றிலும் வேறுபட்டதான திசைக்குத் திரும்பியிருக்கும்! ஆனால் கல்லறை வழியாகத்தான் மனிதன் ஜனனத்திற்குள் நுழைய வேண்டி இருக்கிறதென்றால், அதை இயற்கையின் ஒரு விதியாக நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் போல!.

புற:. உங்களுக்குள் கவிதையாக்கம் எந்த முறையில் நிகழ்கிறது ? ஒரு இடத்தில் ‘ என் நினைவுகள் தொன்மமாகும் வரை அதை நான் கவிதையாக்குவதில்லை’ என எழுதியுள்ளீர்கள்.

குட்டி ரேவதி: வாழ்க்கை ஒழுங்கற்றதாகவும் பலசமயங்களில் கவித்துவத்து லயத்திற்கு எதிரானதாகவும் இருக்கிறது. ஆகவே அந்தரங்க வாழ்வை நான் சீரற்றதாகவும் ஒழுங்கற்றதாகவும் அதன் நடையில் விட்டு வைத்திருக்கிறேன். தினமும் உட்கார்ந்து மெனக்கெட்டுக் கவிதைகள் எழுத வேண்டும், நூல்கள் கொண்டு வந்துவிடவேண்டும் என்பது மாதிரியான அவசரங்கள் எனக்கில்லை. ஆனால் ஒவ்வொரு படைப்பாளியும் தன்னை ஒருவிதமான மனஅவசத்துக்கும் ஒழுங்கிற்கும் பழக்கிக் கொள்கிறான் என்றே நினைக்கிறேன். நமக்குள் சிந்தனைகள் தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கும். அச்சிந்தனையோட்டங்களைத் தொடர்ந்தால் நூற்றுக்கணக்கான எண்ணங்கள், அனுபவத்தெறிப்புகள் உள்ளே அலையடித்துக் கொண்டிருக்கின்றன. எந்தக் குறிப்பிட்ட ஒன்றையும் நூல் பிடித்துச் செல்வது என்பது கடினம். ஆனால் சில குறிப்பிட்ட, நாம் ஏற்கெனவே நம்மைப் பயிற்றுவைத்திருக்கிற சிந்தனை சார்ந்த பொருட்களோ நிகழ்வுகளோ மீண்டும் மீண்டும் நம்மைத் தாக்கும். அலைக்கழிக்கும். அம்மாதிரியானவற்றை பற்றிக் கொள்வதற்கான எல்லா முயற்சிகளையும் எனக்குள் எடுத்துக் கொள்கிறேன். இது ஒரு விதமான எளிய பயற்சி தான். இன்னும் அதிகமாக, படைப்பூக்கம் மிக்க ஆக்கங்களுடன் நாம் நம்மை தொடர்ந்து இணைத்துக் கொண்டே இருப்பதும், அவசியம். ஒரே வகையான படைப்புகள் சில சமயங்களில் அதற்கான துடிப்பைத் தராமல் போய்விடலாம். ஆகவே வேறுபட்ட, தன் தீரமொட்டிய படைப்புகளை கலைவெளியிலும், இயற்கையிலும் தேடிக்கொண்டே இருப்பேன்.

சமீபத்தில், ‘நம்மைப் பிடித்த பிசாசுகள்’ என்று ஒரு கவிதை எழுத நேர்ந்த படைப்பனுபவத்தைச் சொல்கிறேன். என்னுடைய ‘முலைகள்’ கவிதை ஒரு கண நேரத்தில் எழுதப்பட்ட கவிதை. ஆனால் அந்தக் கவிதை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி, அர்த்தச்சலிப்புகளுக்கும் உள்ளாகிவிட்டது உங்களுக்கே தெரியும்! அக்கவிதை, அதன் உள்ளார்ந்த அர்த்த அலகுகளில் பேசப்படாமல், அதன் புறத்தோலைப் பற்றிப் பேசிப் பேசி, சலித்து அதன் அர்த்தங்களையும் பொலிவுகளையும் காயடித்த ஒரு தருணத்தையும் நான் உணர்ந்தேன். அந்தக் கவிதையைத் தூக்கி எறிந்துவிடலாம். அதை மறந்து விடலாம். ஆனால் அந்தக் கவிதையை மறப்பதற்கும் நிராகரிப்பதற்கும் இன்னொரு கவிதையை நோக்கித்தான் நாம் செல்ல வேண்டும். அந்த நடைமுறையில் தான் நான் ‘நம்மைப் பிடித்த பிசாசுகள்’ என்று ஒரு கவிதை எழுதினேன். அதை எழுதி முடித்தபோது விட்டு விடுதலையாகிய அனுபவத்தை அடைந்தேன்!

ஒரு கண நேர மடை திறக்கிற தன்மை இருக்கிறது அல்லவா, அதற்குக் காத்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் காகிதங்களோடும் பேனாவோடும் உட்கார்ந்து காத்திருக்கும் விஷயம் அல்ல இது. அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஒரு நண்பனோடு பேக்கொண்டிருக்கும்போது, உணவருந்தும்போது அல்லது நனவிலி கணத்தில் கூட அதற்கான எழுச்சித் தெறிப்பாய் நிகழலாம். ஆனால் எத்தகைய அனுபவம் நம்மை அலைக்கழிக்கிறது என்பதில் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும். ஓர் அழகியல் பூர்வமான அறப்பூர்வமான சிந்தனை நம்மை மிகவும் அலைக்கழிக்கும். ஏன் அலைக்கழிக்கிறது என்றால் நம்மால் அதைத் தொடரவோ செயல்படுத்தவோ முடிவதில்லை. அந்த மாதிரியான தோல்விகள்தான், அவை உருப்பெறுவதற்கான தனிமனித விருப்பங்கள் தாம் கவிதைகள் ஆகிறதோ என்று எனக்குத் தோன்றும். பேனாவையும் பென்சிலையும் எடுத்துஎழுதிவிடவேண்டும் என்ற உடல் சார்ந்த ஓர் எழுச்சி அப்பொழுது ஆர்ப்பரிக்கும். இயற்பியல்பூர்வமான ஒரு நிலையோடு தொடர்புடையது அல்ல இது. உணர்வுப்பூர்வமாக உங்களுக்குள் நிகழும் ஒரு விஷயம்தான். நமது உணர்வெழுச்சியின் வெளிப்பாடுகளை எல்லாம் ஒன்று கூட்டிய ஒரு புதிய பதிவே கவிதை என்றாகிறது. இந்தக் கடைசிக்கட்ட முயற்சியில் அதீதமானதோர் ஒழுங்கும், செயல்பாடும் தேவைப்படுகிறது. இப்பொழுது பிறக்கும் விடுதலை உணர்வு, எழுதப்பட்ட கவிதைக்கு முற்றிலும் வெளியே இருக்கிறது.

கவிதைகளைத் தொகுக்கும் அவசியம் நோக்கிய அவசரம், பதற்றம் என்பது எனக்கு என்றுமே இருந்ததில்லை. இத்தகைய படைப்பூக்க ஆற்றல் குறித்த பாடத்தையெல்லாம் நான் பிரமிளிடம் இருந்து திருடிக்கொள்கிறேன், இப்படி எனக்கான ஆற்றலை பலரிடம் இருந்து வரித்துக்கொள்கிறேன். அப்படிப் பலரைச் சுட்டலாம். தேவதேவனைக் கூறலாம். எழுத்தாளர் சிவகாமியையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இளைய தலைமுறைக் கவிஞர்கள் பலரிடம் இருந்தும் இந்த ஆற்றலை, ஊக்கத்தை நான் பெற்றுக் கொள்கிறேன். மற்றபடி, அவர்களின் மொழி சொற்கள் உத்திகள் அதன் சாயல்கள் எதன் தாக்கத்தையும் என்னிடம் உணர்வதில்லை. மொழியும், சொற்களும், வடிவஙக்ளும் அவரவர் சுயம் வெளிப்படுத்தும் அரசியலுக்கான தனித்த வகை இல்லையா?

புற:.. நீங்கள் தேவதேவனைக் குறிப்பிடுகிறீர்கள். பிரமிளுடைய அதிகாரத்திற்கெதிரான அழகியல் , தானே ஒரு சிறு இயக்கமாக செயல்பட்டு தமிழ் நவீனத்துவத்தின், சிறுபத்திரிகைச் சூழலின் சாதிய அதிகாரங்களை கலைப்பூர்வமான கூரிய விசாரணைக்குட்படுத்தியமை என்ற புள்ளிகளில் பிரமிளிடம் உங்களுக்கான நவீனத்துவத்தின் வேர்களைக் காண்கிறீர்கள். தேவதேவனுடனான உங்கள் கவிதை மற்றும் அரசியலுக்கான ஒரு தொடர்பை எந்தப் புள்ளியில் அர்த்தப்படுத்துவீர்கள் ? தேவதேவனிடம் அவரது கவிதைகளில் அத்தகைய அரசியல் பிரக்ஞை வெளிப்படுகிறதா? ஜெயமோகனும் தேவதேவனைக் கொண்டாடுகிறார். நீங்கள் ஜெயமோகனிடமிருந்து மாறுபட்டு தேவதேவனிடம் ஈர்ப்புகொள்ளும் தளம் எது. ?

குட்டி ரேவதி: சிறுபத்திரிகை சூழலுக்குள்ளான சாதிய அதிகாரங்களுக்கு எதிராக பிரமிளுக்கு இயங்கக் கிடைத்த வாய்ப்பை விடவும் தேவதேவனுக்கு இருக்கும் வாய்ப்பும் அதே சமயம் நெருக்கடியும் அதிகமென்றே நினைக்கிறேன். ஏனென்றால் பிரமிளின் காலத்தை விடவும் இன்று சமகாலத்தில் சாதிய அதிகாரங்கள் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியை நாம் அதிகமாகவே உணர்கிறோம். பார்ப்பனிய அதிகாரத்தை எதிர்ப்பது போலவே இன்று நமக்கு இடைநிலைச் சாதிகளுடைய பார்ப்பனியச் சிந்தனை மற்றும் பார்ப்பனிய அதிகாரத்துவத்தையும் கடுமையாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அரசியல், சினிமா, இலக்கியம் என எல்லாவற்றையும் தங்களுடைய அதிகாரப்பிடியில் வைத்திருப்பவர்கள் இந்த பார்ப்பனியச் சிந்தனைக்குத் தங்களை ஒப்புக் கொடுத்த இடைச் சாதியினரும் தாம். பார்ப்பனியச் சிந்தனை நமக்குள் இருந்தாலும் அதை நாம் கடுமையாக அழித்தொழிக்க வேண்டியிருக்கிறது.

தேவதேவனுக்கும் அந்த நெருக்கடி அதிகமாக இருக்கிறதென்று நினைக்கிறேன். சமீபத்தில் புதிய கோடாங்கி போன்ற இதழ்களில் அந்த மாதிரியான கவிதைகளை நேரடியாகவும் வெளிப்படையாகவும் அவர் எழுதியிருக்கிறார். அதில் அவரிடம் மொழி வழியான, ஒரு நகர்வும் சாதி எதிர்ப்பை அதன் படைப்புத்திறனும் அழகியலும் குன்றாமல் வெளிப்படுத்துவதன் வழியாக நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது. அம்மாதிரியான கவிதைகள் வழியாக ஓர் சமூக அசைவும் கூட நிகழ்கிறது! அவருடைய ஒட்டுமொத்த இலக்கியத்திலும் அவர்செயல்படுத்தும் அழகியல் வெளிப்பாடு, மனிதனுக்கு எதிராக மனிதன் இயங்கும் அரசியலை இயல்பாக நுட்பமான அளவில் வெளிப்படுத்தியுள்ளது. அழகியல் என்று நான் கூறுவது ஜோடனையான வார்த்தைகளை முன்வைத்து அல்ல. ஒரு தெள்ளத் தெளிவான, துல்லியமான, சிந்தனைக்கொத்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துச் சொல்வதும், அதன் வழி நிற்பதும், மனிதப் பண்பாட்டுக்குரிய ஒரு நல்ல ரசனையை அவர் கொடுப்பதும் அலாதியானது. அதன் வழியாக, சாதிய எதிர்ப்பு சார்ந்த அரசியலை கவித்துவப்படுத்துவதில் அவரிடம் முன்னோக்கிய ஒரு நகர்வு இருக்கிறது. ‘குளித்துக் கரையேறாத கோபியர்களிலிருந்து’ இன்றைய அவரது கவிதையும் சிந்தனை உலகமும் நகர்ந்து வந்திருக்கிறது.

மேலும் தேதேவன் தன்னை ஒரு தனிமனிதனாகவே தன்னை முன்வைத்து எதையுமே செய்வதில்லை. அவர் எந்த ஓர் இயக்கத்துடனும் இணைந்தும் செயல்படவில்லை. ஆனால் அவரைப் பல மனிதக் கோர்வைகளின் ஒட்டுமொத்த உருவமாக நான் பார்க்கிறேன். தேவதேவன் என்கிற தனிமனிதரை, கவிஞரை நான் மிகைப்படுத்திக் கூறவில்லை. அவரோடு எனக்கு நிறைய, அல்லது குறிப்பிட்ட அளவில் உரையாடல்களெல்லாம் நிகழ்ந்தது இல்லை. அவருடைய கவிதையே மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் நம் முன் இருப்பதால் அதற்கான அவசியமும் இல்லை. மேலும் அவரையொட்டி நிகழ்ந்த இலக்கியச் சம்பவங்களை நான் கூர்மையாக வாசிக்கிறேன். வைரமுத்துவின் விருதை அவர் நிராகரித்தது இலக்கிய அரசியல் வெளியில் மிகவும் முக்கியமானது. அவரின் தனிமனித சிந்தனைகளின் வழியும் அதன் அறநெறிப் படியும் நிற்கும் துணிவைப் பறைசாற்றக் கூடியது. அதுபோலவே, ஜெயமோகன், தேவதேவனை முன்வைக்கும்போதும், அதனால் தான் மறுக்கவேண்டிய சமரசங்களைக்கூட தேவதேவன் தன்னளவில் எதிர்கொள்வதற்கான எல்லாத் தயாரிப்புகளையும் வைத்திருப்பார், செய்துகொள்வார் என்று எனக்குத் தெரியும்.

புற:. உங்களது கவிதை வெளிப்பாட்டு முறையில் படிமங்கள் ஒரு முக்கிய இடம் வகிக்கின்றன.ஒரு அழகியல் கூறான படிமத்தை நீங்கள் எந்த இடத்தில் அரசியல்படுத்துகிறீர்கள் ?

குட்டி ரேவதி: ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்ட இருவேறு புற அலகு கொண்ட விஷயங்களின் இணைவுதான் படிமம். இரண்டு தொடர்பற்ற விஷயங்கள் தங்களுக்குள் உள்ள ஒரு பொதுக்குணத்தினால் இணைவதால் ஏற்படும் ஒரு தெறிப்பு. அன்றாடம் நம் மனதிற்குள் பல படிமங்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. ஒருவரைப் பார்த்து இவர்கள் என் அம்மாவைப் போல் இருக்கிறார்கள் என்கிறோம். அதில் உள்ள ஒரு மனித ஞாபகம் இருக்கிறது அல்லவா, அது நம்மை அதையொத்த இயல்புணர்ச்சி கொண்டவற்றையெல்லாம் தேடி படிவுகளாக்கி அடுக்குகிறது, படிமங்களாக்குகிறது. ஆதிக்க சாதிப் பெண்களைத் தவிர எல்லோருக்கும் இதுதான் மொழி வாய்த்த முதல்தலைமுறை. இதற்கு முன் பேசுவதற்குக்கூட வாய்ப்பற்ற பெண்கள், தனிமையில் வாழும் பெண்கள் எல்லோரும் தம் அனுபவங்களை ஞாபகங்களை ஏதோ ஒரு விதத்தில் சேமித்துவைத்துக்கொள்ள வேண்டும் இல்லையா. தங்களை நசுக்கும் ஒரு சம்பவம், கணவன் அல்லது ஏதோ ஓர் ஆண் அல்லது ஓர் ஆதிக்க சாதிப் பெண் வழியாக நிகழும்போது அந்த அனுபவத்தை தன்னிலையிலிருந்து எதிர்க்கும் தன் எதிர்ப்புணர்ச்சியை ஏதோ ஒன்றாக தங்களுக்குள் உருமாற்றி வைக்கிறார்கள் இல்லையா? அதை ஒரு சின்னக் காட்சிச்சித்திரமாக, சின்னமாக, படிமமாகத்தான் தான் ஆக்கி வைப்பார்கள். அது அவர்கள் நினைவுகளில் துலங்கிக் கொண்டே தான் இருக்கும். ஒரு பொழுதும் அணைந்து போகாது. அதைத் தான் நான் படிமமாக்குகிறேன். ஆதிப் பெண் வரைக்கும் அதை கிளறிக் கொண்டே செல்ல முயற்சிக்கிறேன். எனக்குக் கைக்குக் கிடைத்த மொழி வழியாக நான் காலத்தினூடாகத் திரும்பிப் போக வேண்டும். ஆதிப் பெண்ணின் நினைவு வரைக்கும் போக வேண்டும். என் பயணத்தை நீளமானதாகவும் முழுமையானதாகவும் ஆக்கவேண்டும்!

கவிதை என்பது ஓர் அந்தரங்கமான ஸ்டேட்மெண்டாக இருக்கிறது. ஒரு நாவல் அல்லது சிறுகதையில் ஆசிரியரின் ஆளுமையோடு நமக்கு ஏற்படும் பரிச்சயத்தை விட கவிதையில் கவிஞனோடு நிகழும் நெருக்கம் மிக அதிகம். என் கவிதையை என்னோடு இணைத்தும் தொடர்புபடுத்தியும் தாம் பார்ப்பீர்கள். ஆனால் நான் என்னோடு அதைக் கட்டுப்படுத்தாமல், கட்டிவைக்காமல், எல்லாப் பெண்களுடைய அனுபவங்களையும் என் அந்தரங்க வெளிக்குள் கொண்டு வருகிறேன். தனிமையில் விடப்பட்ட பெண்கள், மொழியிலிருந்து விலக்கப்பட்ட பெண்கள், தங்களுடைய வெளியை விட்டு வெளியேற முடியாத பெண்கள் என எல்லாவற்றையும் நான் ஊடறுத்துப் பார்க்கிறேன். நான், குட்டிரேவதி எழுதுகிறேன் என்றால் அது என்னுடைய அரசியலும் பொருளும் மட்டுமல்ல. நான் எங்கு என்னை அரசியல் படுத்துகிறேன் என்றால், எனக்கு மொழியுனுடைய ஒரு வாய்ப்பு கிடைக்கிறது எனும்போது அத்தனைப் பெண்களுடைய உணர்ச்சிகளும் பீறிடும் என்னுடைய கவிதையை, அதற்கான பரப்பாய் ஆக்கிக்கொள்கிறேன். எனக்கு முந்தைய என் அம்மாவின், அவரது அம்மாவின், அவரது அம்மாவின் என பல தலைமுறைகளின் கூட்டனுபவமும் வேட்கையும் வெளிச்சமும் உக்கிரமும் அதில் இருக்கின்றன. அவர்கள் தங்களை தக்கவைத்துக் கொண்ட தவிப்பு, உஷ்ணம் கொதி நிலை ... இந்தக் கூட்டனுபவமும் கூட்டு நினைவும்தாம் என் நிலம் .அதிலிருந்துதான் எனக்கான நீரையும் சத்தையும் எடுத்துக்கொள்கிறேன். நான் எழுதுவது என்பது அவர்களுக்குமானது. அப்படித்தான் என் கவிதைகளை அதன் அழகியலை நான் அரசியல்படுத்துகிறேன் மேலும், அம்மா என்று குறிப்பிடும் போது ஒற்றை யோனியை மட்டுமே குறிப்பது அன்று என்பதற்கும் அழுத்தம் கொடுக்க விரும்புகிறேன். யோனிகளின் தொடர்ச்சி துண்டிக்கப்படுவதே இல்லை. இது இப்பூமியில். இயற்கையின் நியதி!

புற:. உங்கள் கவிதைகளில் இயற்கை ஓர் ஆதாரமான இடத்தைப் பெறுவதாகத் தெரிகிறது. மழை, வெயில், மரம், மலர், கடல் என இயற்கையின் நிரந்தரப் படிமங்கள் உங்கள் கவிதைகளில் தொடர்சியாகவும் சீராகவும் அமைகின்றன. மனித உடலுக்கும் இயற்கைக்குமான இடைவெளியை கரைத்துவிட உங்கள் கவிதைகள் முற்சிக்கின்றன. உங்கள் கவிதைகளில் எல்லா உணர்ச்சி நிலைகளும் இயற்கையின் பல்வேறு கோலங்கள் , அசைவுகள் வழியாகவே கடத்தப்படுகின்றன.. இயற்கைக்கும் மனித உடலுக்கும் இடையில் எத்தகைய உறவை உங்கள் கவிதைகள் கட்டமைக்க விழைகின்றன. அதில் நீங்கள் கூறும் அறம், உடலரசியல் இவையெல்லாம் என்ன அர்த்த்த்தைப் பெறுகின்றன?

குட்டி ரேவதி: இயற்கையை என் கவிதைகள் நெருங்கிச் செல்வதற்கான தொடக்கங்கள் என்னுடைய வாழ்க்கையில் தற்செயலாக நிகழ்ந்தன. இரண்டு வருட காத்திருப்புக்கும் முயற்சிக்கும் பிறகுதான் நான் சித்தமருத்துவப் படிப்பில் சேர்ந்தேன். அந்தத் தீவிரத்திற்கும் ஆர்வத்திற்குமான காரணங்களை நான் தேடிப் பார்க்கிறேன். மனித உடலுக்குள் நுழைந்து, மனித உடலை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் வேட்க்கையும் எனக்குள் தொடர்ச்சியாக இருந்துகொண்டே இருந்தது. அதுவே, சித்த மருத்துவத் தத்துவத்துடன் என்னை இயல்பாக உணர்வுப்பூர்வமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. சித்தர்கள் கடவுளை வெளியில் வைக்கமால் ஊனுடம்பு ஆலயம் என்று மனித உடலுக்குள் தேடினார்கள். ஏனென்றால் இந்த உடலை விலக்குதல் என்பது குறிப்பிட்ட வயதிலிருந்தே சனாதனத்தின் பெயரால் பெண்களுக்கு நிகழ்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதுவரையில் போற்றப்பட்ட உடல் மீது திடீரென்று சமூகம் பல தடைகளைப் போடுகிறது. அது வெவ்வேறு தன்மைகளில் உடலை முடக்கிக்கொண்டே இருக்கிறது. இந்தப் பருவத்தில் விடுதலையை நோக்கிய ஒரு மனோபாவம் தன்னெழுச்சி எல்லாம் இயல்பாகவே எழும்போது சமூகம் போடும் தடைகளையும் நம் நடை உடை பாவனைகள் மீது அது சுமத்தும் பல சுமைகளையும் தீவிரமாக எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. இந்த நெருக்கடியின் ஒரு தீர்வை நோக்கிய ஒரு பருவத்தில் தான் சித்த மருத்துவத்தை வந்தடைந்திருந்தேன்.

திருநெல்வேலியில் படித்த காலங்களில், 94, 95 என்ற வருடங்கள் என்று நினைக்கிறேன். அப்போது காஞ்சனை திரைப்பட இயக்கத்தோடு எனக்கு ஏற்பட்ட நெருக்கமான பரிச்சயம், நண்பர்களுடைய தொடர்பு, பல திரைடயிடல்கள் எல்லாம் எனக்கு நவீன சினிமா உலக சினிமா பற்றியெல்லாம் ஆழமான அறிவைக் கொடுத்தது. இந்தக் கட்டத்தில் சினிமாதான் எனக்குள் விடுதலைக்கான விழைவை தீவிரப்படுத்தியது எனலாம். அப்போது தொடர்ந்து திரையிடலுக்காகவும் திரைப்பட விழாக்களுக்காகவும் காஞ்சனை சீனிவாசன், காஞ்சனை மணி மற்றும் நண்பர்களுடன் தொடர்ந்து பயணம் செய்யத் தொடங்கினோம். இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குப் பயணித்தோம். நகரங்களில் இருந்து, வீடுகளிலிருந்து, கட்டடங்களிலிருந்து தொடர்ந்து இயற்கையை நோக்கிய விட்டுவிடுதலையான பயணங்கள் அவை! முடிச்சுகளெல்லாம் தொடர்ந்து அவிழ்ந்துகொண்டே இருக்கும் படியான பயணங்கள் அவை! உங்கள் மேல் சமூகம் போட்ட முடிச்சுகளெல்லாவற்றையும் அவிழ்க்கிற அனுபவத்தை பயணங்கள்தாம் தரும். அப்போது இயல்பாகவே இலக்கிய வாசிப்பும் இருந்ததினால் எழுதுவதற்கான சின்ன சின்ன முயற்சிகளெல்லாம்... ரொம்ப அனிச்சையாக நிகழ்ந்ததுதான். கவிஞராக வேண்டும், எழுத்தாளராக வேண்டும் என்று எனக்கு எந்த விதமான திட்டமும், இலட்சியமும் கிடையாது.அது இயல்பாகவே நிகழ்ந்தது.

ஆனால் எதையும் வெளிப்படுத்தும்போது எதையும் நேர்த்தியாகவும் திடமாகவும் செய்ய வேண்டும் என்ற என் சுபாவம் காரணமாக இன்னும் நான் என்னைக் கவிதைக்கான அனுபவங்களுக்கும் அந்தப் பணிக்கும் என்னைக் கூர்மைப்படுத்திக்கொண்டேன். ஆனால் என்னுடைய தளம் சினிமாதான். இதுவரையில் கடந்த 15 வருடமாக நவீன சினிமா என்கிற தளத்தில் என்னைப் பெரிய அளவில் உருவாக்கிக்கொண்டு வருகிறேன். அதற்கான பயிற்சி எடுத்திருக்கிறேன். உலக அரசியல், உலகத்தின் நவீனத்துவ வரலாறு சார்ந்து ஒரு பரிச்சயம், பயிற்சி, அதனோடான ஓர் உள்மன உரையாடல் எல்லாம் எனக்கு சினிமா வழியாக பெருமளவில் நிகழ்ந்தது. இன்றும் நான் சினிமாவை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கும் ஒரு நபர்தான். தற்கால சினிமா என்பது மிகப்பெரிய அதிகாரக்களமாக இருக்கும் சூழலில் முண்டியடித்துக்கொண்டு நெருக்கியடித்துக்கொண்டு அதற்குள் நுழைய வேண்டிய அவசியம் எனக்கில்லை. அது இயல்பாக நிகழும் ஒரு கணம் நோக்கி நான் போய்க்கொண்டிருக்கிறேன். கவிதை என்பது ஒரு செவ்வியத் திருப்பம் தான். கவிதைக்குள் போனது என்பது ஒரு இயல்பான தடம்புரளல் தான். ஆனால் எதையும் தீவிரமான பயிற்சிக்கும் விசாரணைக்கும் உள்ளாக்கிக்கொள்ளும் என் இயல்பின் காரணமாகவே கவிதையின்மேல் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நவீன இலக்கியம் பற்றிய அதனுடைய வரலாறு, அரசியல் போக்குகள் எல்லாம் பரிச்சயமாகிறது.அந்த நிலையில் நீங்கள் யாரோடெல்லாம் அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள். யாரோடு முரண்படுகிறீர்கள், உங்கள் சமூக அடையாளம் என்ன, செயல்பாட்டு வடிவம் என்ன என்ற பிற கேள்விகளும் நீங்கள் உங்களை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையும் உத்வேகமும் உருவாகின்றன.

புற:. உடலரசியல் என்கிற ஒரு பொதுவான கருத்தியல் உங்கள் கவிதையில் பெறும் குறிப்பான பரிமாணம் என்னவாக இருக்கிறது. இப்போது இயற்கையுடனான உறவு என்பதை சமகால அரசியல் தேவைகளையொட்டி எப்படி அர்த்தப்படுத்துகிறீர்கள் ?

குட்டி ரேவதி: இயற்கையை நெருங்கிச் செல்வது, என்பதை பௌத்தம், அம்பேத்கரியம் இதன் வழியாகவெல்லாம் அறிந்த மனித சமத்துவம், மனித விடுதலை ஆகியவற்றுடன் கூர்மைப்படுத்திப் புரிந்துகொள்கிறேன். சாதிய ஆதிக்கச் சிந்தனை உள்ள நாடு நம்முடையது. சாதி என்பது இந்து மத்தினுடைய ஓர் அடிப்படையாக இருக்கிறது. அது திடமாக கட்டமைக்கப்பட்ட ஒரு பொருண்மை. இது மனித உடலை, என்னுடலையே நான் மறுத்துப் பார்க்கிற, விலக்கிப் பார்க்கிற, என்னுடலை ஓர் அபத்தமாக, என்னுடைய சக மனிதர்களுடைய உடலைப் பாகுபடுத்திப் பார்க்கிற ஒரு பேதத்தை அது கட்டமைக்கிறது. ஆனால் எல்லோருடைய உடலும் ஒரே மாதிரியான இயக்கம் உடையதுதான். உயிரியல் அடிப்படையில், வளர்சிதை மாற்றத்தில் எல்லா உடல்களுமே ஒரே வகையானது தான். ஆணுக்கும் பெண்ணுக்கும் கூட அடிப்படையில் இனப்பெருக்க உறுப்புகளில்தான் வேறுபாடு இருக்கிறது. நாகரிக வாழ்க்கையில் கழிவறைகளும் உள்ளாடைகளும் மட்டும்தான் வேறுபடுகின்றன. இந்நிலையில் என் உடலை மறுக்கிற சக மனித உடலிலிருந்து துண்டிக்கிற ஒரு பேதத்தைச் சாதி தான் ஏற்படுத்துகிறது. இது அனைத்தையும் கலைத்து விட்டு இயற்கையோடு ஒன்றுதல்...இதைத்தான் பௌத்தமும் அம்பேத்கரியமும் கட்டமைக்கிறது...அதுதான் இயற்கையின் விதி. இயற்கையின் விதியை அதன் சமநிலையைப்புரிந்து கொள்வது தான் அதன் ஒரு பகுதியான மனிதனின் அத்தியாவசியத்தேவை என்பதை கெளதம புத்தர் வலிந்து கூறுகிறார்.

நான் தேவதேவனைக் குறிப்பிட்டது கூட, இந்த புள்ளியில் தான்! மனித பேதங்களை முறியடிக்கிற, இயற்கையின் கூறுகளோடு தான் கலந்துவிடத் துடிக்கிற ஓர் இடைவிடாத பயணம் தேவதேவன் கவிதைகளில் இருக்கிறது. இந்தப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் மனித வாழ்வினுடைய நோக்கம், நகர்வு, அதனுடைய உத்வேகம் எல்லாவற்றையும் நாம் இயற்கையிடமிருந்துதான் வாங்கிக் கொள்கிறோம். சாதியத்தை வைத்து உடல் மீது தீண்டாமை, பிறப்பைக் காரணமாக வைத்து மனித உடலை ஒடுக்குதல், பால் அடையாளத்தை வைத்து ஒடுக்குதல் என்பது பார்ப்பனர்களுக்கு அதிகாரம் பயிலத் தேவையாக இருந்தது. அவர்கள் இந்த மண்ணின் மீதான தீராத அதிகாரத்தைக் கைக்கொள்ள, இங்குள்ள மக்களின் மீது அதிகாரத்தைச் செலுத்த அது தேவையாக இருந்தது. பார்ப்பனீயம் முன்வைத்த இந்து மதம் வழியாகப் புகட்டிய, முக்தி பேறு என்பதெல்லாம் மனித உடல், இயற்கையுடனான அதன் உறவு என்பதன் முன் அர்த்தமற்றவை. அது உடலைப் புதிராக்கி, அதன் வழியாக உடல் மீதான அதிகாரங்களைக் கட்டி எழுப்புதலுக்கான ஒரு தந்திரம் தான். உங்கள் உடலையே உங்களுக்கு உரிமை இல்லை என்று சொல்லும் முதல் தரமான புரட்டும் ஒடுக்குமுறையும் உள் பொதிந்த ஓர் ஆதிக்கச் சிந்தனை தான்!

புற:. நவீன இலக்கியத்தின் சென்ற தலைமுறைப் பெண் படைப்பாளிகள் ஏன் இன்றைய பெண்கவிஞர்களோடு, அவர்கள் பேசும் உடலரசியல் போன்ற விஷயங்களோடு தங்களை இணைத்துப் பார்ப்பதில்லை. உங்களுக்கும் அவர்களுக்குமான இடைவெளிகளை எப்படி விளக்குவீர்கள் ?

குட்டி ரேவதி: நவீன இலக்கியத்தில் எங்களுக்கு முன்பாகவும் பெண்கள் எழுதிக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். நாங்கள் புதிதாக வந்துவிடவில்லை. அம்பை, சுகந்தி சுப்பிரமணியம், இரா. மீனாட்சி, பெருந்தேவி இப்படிப் பலர் இருந்திருக்கின்றனர். எல்லோருமே எனக்கு முன்பு இயங்கியவர்கள்தாம். இவர்கள் நாம் முன்பு பேசிய கலைத்துய்மைவாதம் மிக்க நவீனத்துவ சிற்றிதழ் சூழலிலிருந்து வருபவர்களாக பார்க்கப்பட்டாலும் இவர்கள் முற்போக்காகவும் பெண்ணுரிமை சிந்தனைகளை முன்வைத்தும் இயங்கினார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அவர்கள் காலத்தில் மேலோங்கியிருந்த ஆணாதிக்கச் சிந்தனைகளை தங்கள் படைப்புகளில் முன்வைத்தனர். அது சார்ந்த கருத்தியல்களும் மேலோங்கி இருந்தன. இவர்கள் ஆண் படைப்பாளிகளோடு எம்மாதிரியான முரண்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்கும், அதற்கான நியாயங்கள் என்பதெல்லாம் உண்மையிலேயே நியாயப்படுத்த வேண்டிய விஷயங்கள். அதை நாம் அங்கீகரித்துதான் ஆகவேண்டும். ஆனால் அதற்குப் பின்பு நாம் உடலரசியல் என்று ஒன்றைப் பேசும்போது ஏன் இவர்கள் எல்லாம் விலகி இருக்கிறார்கள், கரையொதுங்கி நிற்கிறார்கள் என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது. அதாவது, ஏன் சிந்தனை அளவில் அவர்களெல்லோரும் கருத்தாக்க மையத்திலிருந்து விலகி இருக்கிறார்கள்? இது எனக்கொரு முக்கியமான கேள்வியாக இருக்கிறது. ஏன் மாலதி மைத்ரி, சல்மா, சுகிர்தராணி, குட்டி ரேவதி என்று இது ஒரு சதுரம் போல ஆகவேண்டும்? இந்த நான்கு பேருக்கும் ஒரு பொதுமை இருக்கிறது என்பதை நான் மறுக்க வில்லை. ஒடுக்கப்பட்ட மதம், சாதி , இனம் சார்ந்த தரப்பிலிருந்து கவிதை எழுத வந்துள்ளார்கள் என்கிற பிரக்ஞையுடன் தான் இவர்கள் பார்க்கப்படுகிறார்கள். அந்தப் பிரக்ஞை இப்படைப்பாளிகளுக்கும் இருக்கிறது. அதனால்தான் இவர்கள் தங்கள் உடலை மொழியாக வெளிப்படுத்துகிறார்கள்.

ஆனால் இதற்கு முன்பாக எழுதிய ஆதிக்கச் சாதிப் பெண்களுக்கு அந்த நிர்பந்தமே இல்லை. அவர்கள் தங்கள் சாதி சார்ந்த அதிகாரம், சொகுசு, இயங்குவெளி , அதை நுகர்வதற்கான சுதந்திரம், ஆதாயங்கள் எல்லாவற்றையும் அனுபவித்த பெண்களாக இருந்தார்கள். அவர்கள் தங்களுக்கு எதிராக இருந்த, தங்களை ஒடுக்கும் தன் சாதி ஆண்களோடு மட்டும்தான் முரண்பட வேண்டி இருந்தது. மற்ற சாதியைச் சேர்ந்த ஆண்களோ, பெண்களோ அவர்கள் முன்வைக்கும் ஒரு கருத்தாக்கமோ அவர்களுக்கு பொருட்டாகவும் தொடர்பு உடையதாகவும் ஏன் அவர்கள் பார்ப்பதில்லை. சாதியம் என்பது பார்ப்பனியப் பெண்கள் மீதும் தானே ஒடுக்குமுறையை நிகழ்த்தியிருக்கின்றது? ‘தேவதாசி முறை’ போன்ற அவ்வடிவங்களை உடைத்தெறிவதில், தன் சாதி ஆண்களின் அதிகாரத்தை எதிர்கொள்வதில் அவர்கள் நியாயமாகவும் திடகாத்திரமாகவும் செயல்பட்டிருக்கிறார்கள், போராடியிருக்கிறார்கள் இல்லையா? இயல்பாகவே அவர்களுடைய வீடுகளில், அவர்கள் தங்களை வெளிப்படுத்தும் பிற வெளிகளில் பிற சாதிப் பெண்களை, அவர்களின் பிரச்சனைகளைப் பேச வேண்டியத் தேவைகள் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. சுய சாதி மறுப்பைச் செயல்படுத்தும் மனப்பான்மை ஏன் அவர்களுக்குத் தோன்றவில்லை? அவர்களிடம் ஏன் அத்தகைய விழிப்புணர்வு இல்லை. இன்று உடலரசியல் பேசுபவர்களிடமிருந்து இவர்கள் விலகி நிற்க வேண்டிய காரணம் இதுதான்.

மறுபுறம் இன்று உடலரசியல் பேசும், மாலதி மைத்திரி, சல்மா, சுகிர்தராணி, குட்டி ரேவதி இந்த நான்கு பெண்களுக்குமான வேறுபாடுகளைப் பார்க்கும்போது அதுவும் மிகத் தீவிரமடைந்து தான் இருக்கிறது. எங்கள் மீதான அனைத்து தரப்பின் விமரிசனங்களையும் நாங்கள் எல்லோருமே தனித்தனியாகதான் எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. ஆனால், எங்களுக்குள்ளான முரண்பாடுகளை நானே தீவிரப்படுத்த முடியாது. எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன, நாங்கள் ஒருவரோடு ஒருவர் பொருந்தி இயங்குவதில்லை. பொதுத் தளங்களில் ஒன்றாக அடையாளம் பெறுவதில்லை போன்ற குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவை. அவ்வாறு இயங்குவதற்கான அவசியமும் இல்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால், எனக்கு என் கருத்தியல் சார்ந்து தீவிரமாக இயங்க வேண்டி இருக்கிறது. சல்மாவுக்கு அவர்களுடைய மதம் சார்ந்து... இந்தியாவில் இஸ்லாம் ஒடுக்கப் படுகிற அடையாளமாக இருக்கும் சூழலில் . சல்மாவுக்கு அவர்களுடைய மதம் சார்ந்த உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது...

மாலதி மைத்ரியும் அவர்கள் சார்ந்த தரப்பின் பிரச்சனைகளை உரிமைகளை வென்றெடுக்கும் போராட்ட உணர்வுடன் செயல்படுகிறார். எனவே எங்களுக்குள்ளான விமரிசனங்கள் என்பது பற்றி நான் சிந்திப்பதே இல்லை. ஆனால் நாங்கள் எல்லோருமே அவரவரின் தனித்துவ கருத்தியலில் மிகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் எழுத வந்தபோது, ஏற்கனவே இங்கிருந்த பெண்ணிய வாதிகள், பெண் படைப்பாளிகள் இவர்கள் எல்லோரும் அதை அணுகியமுறை எப்படி இருந்தது என்றால், அவர்களும் தங்கள் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தியவாறு தான் இயங்கிக்கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதைத்தான் தெளிவாக்கியது. முற்போக்காகத் தங்களை வெளிப்படுத்திக்கொண்ட நவீன இலக்கியப் பெண் எழுத்தாளர்களும் தங்களுடைய ஆதிக்க சாதிய அடையாளங்களை இழப்பதற்கு தயாராக இல்லை. இது எங்களுடைய உடலரசியலை இன்னும் தீவிரப்படுத்துகிறது.. நான் என் உடல், என் உடலுக்கான சுயமரியாதை, அதற்கான உணர்வுகள் எல்லாவற்றையும் தேடிக் கண்டடைவதற்கான் வெளியை இன்னும் இன்னும் விரிவுபடுத்திக் கொள்கிறேன். இப்படித்தான் உடலரசியல் பேசும் பிற பெண்களும் அவரவர்கள் வந்த சமூக அரசியல் தரப்பிலிருந்து இயங்குகிறார்கள். இதை ஒருங்கிணைந்த ஓர் இயக்கமாக எடுத்துச் செல்லும் ஒரு பெண் இயக்கத்திற்கான வாய்ப்பு தமிழ்நாட்டில் இல்லையென்றாலும் இது தளர்ந்து போகாமல் இன்னும் தீவிரப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது என்று நம்புகிறேன்.

இந்தியாவின் சமூக அரசியல் போராட்டச் சின்னங்களாகச் சித்திரிக்கப்படுகிற அருந்ததி ராய், மஹேஸ்வேதா தேவி எல்லோரும் ஒடுக்கப்பட்ட தரப்புகளுக்கான கரிசனங்களை வெளிப்படுத்தினாலும், அவர்களுடைய அறிவாற்றலும் அதை ஒரு ஸ்டேட்மெண்ட்டாகத் தான் வெளிப்படுத்துகிறது. அவர்களே முற்றும் முழுதுமாக, இந்தியாவின் சின்னங்களாக இருக்கவே முடியாது. பினாயக் சென்னை விடுதலை செய்வதிலிருந்து, மாவோயிஸ்டுகளோடு, பழங்குடி மக்களோடு இணைந்து நிற்பது வரை அருந்ததிராய் பேசும், போராடும், இணையும் எந்த விஷயத்திலும் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது என்றாலும், அதை எல்லாவற்றையும் அவர்கள் ஒரு விவர அளவில் அணுகுவதும், அந்த பிரச்சனையைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை ஒரு பிரச்சனை என்று மட்டுமே முன்வைக்கிறார்களே தவிர, ஒட்டுமொத்த இந்தியாவினுடைய அரசியல் சமூக விஷயங்களை உள்ளடக்கி அவர்களால் இன்று வரை ஒரு ஸ்டேட்மெண்டை சொல்ல முடியவில்லை..இந்தியாவை வெளிப்படையாக ஒரு தீண்டப்படாத நாடு என்று சர்வதேச அளவில் பகிரங்கமாய் அவர்கள் அடையாளப்படுத்துவதே இல்லை...அவர்களுடைய கடமையும் பொறுப்பும் அது என்று நினைக்கிறேன்...அவர்களிடம் ஏதோ ஓர் உள்ளுணர்வு தன் சாதி விஷயங்களை இழப்பதற்கு தடுக்கிறதோ, அல்லது அது தம்முடைய பணியில்லை என்று நினைக்கிறதோ என்ற ஒரு கேள்வி எனக்கு வருகிறது..

புற:. உங்கள் முதல் தொகுப்பு வெளிவந்தபோது நவீன இலக்கியவாதிகளிடம் குறிப்பாக ஆண் படைப்பாளிகளிடம் மிகுந்த பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. ஆனால் ’முலைகள்’ தொகுப்பு வந்த பிறகு இது முற்றிலும் மாறியது. மைய நீரோட்டத்தில் மட்டுமல்லாமல் நவீன இலக்கியவாதிகளிடமிருந்தும் எதிர்ப்பும் தனிமைப்படுத்தலும் நிகழ்ந்தது. இந்த மாற்றம் குறித்து...

குட்டி ரேவதி: முதல் தொகுப்பான, ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ என்னுடைய பாலிமையை முதன்மையாகக் கொண்டு உருவாகவில்லை. ஆனால், ‘முலைகள்’ என்ற தலைப்புடன் வெளிவந்த இரண்டாவது தொகுப்பு நான் ஒரு பெண் என்று என் பாலிமையை தன் தலைப்பாலேயே அடையாளம் காட்டுகிறது. அது அத்தொகுப்பில் அடங்கியிருக்கும் ஒட்டுமொத்த கவிதைகளுக்கான ஓர் அரசியல் குறீயீடாகவும், ‘முலைகள்’ என்ற ஒற்றைச் சொல்லே குறியீடாகவும் இயங்கும்போது அது பிரச்சனையாகிறது. அச்சொல் என்னுள் குறியீடாக மாறுதல் என்பது எனக்குள் மிகுந்த சுய உணர்வுடன் தான் நிகழ்ந்தது. எனக்கு முன்பாக ஏற்கெனவே படைக்கப்பட்டிருந்த நவீன இலக்கியம், அதன் படைப்பாளிகள், அதன் வரலாறு, அரசியல் போக்குகள் பற்றியெல்லாம் என் அறிதல் கூர்மைப்படும்போதும் தீவிர விசாரம் நிகழும்போதும் நான் என்னவாக இருக்க வேண்டும் என்று எனக்குள் தெளிவான கவனக்குவிப்பு ஏற்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை நான் அந்தக் கவனத்திலிருந்து விலகிப் போகவேவில்லை.

ஒரு தொகுப்பு தயாரிப்புக் காரணமாக இன்று காலையில் 2000, 2001 வாக்கில் பிரசுரமான என் தொகுப்புக்கான விமரிசனங்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ‘பூனையைப் போல் அலையும் வெளிச்சம்’ தொகுப்பிற்கு கணக்கற்ற பாராட்டுகளும் மதிப்புரைகளும் அந்த ஆண்டில் வந்திருப்பதைப் பார்த்தேன். அதற்கு வந்தள்ளதை போன்ற பதிவுகள் வேறு எந்த தொகுப்பிற்கும் இல்லை. ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகளுக்’கெல்லாம் ஒரு பதிவு கூட இல்லை. ஆனால் ‘முலைகள்’ தொகுப்பிற்கும் அதற்குப் பின்பான எனது நடவடிக்கைகளுக்கும் வந்த விமரிசனங்கள், வசைகள், அவதூறுகள் கட்டுக்கட்டாக, காகிதக் கத்தைகளாக என்னிடம் இருக்கின்றன. மிக மோசமான கடிதங்களெல்லாம் அப்போது வந்துள்ளன. மிகவும் அவதூறு நிறைந்த ஆபாசச்சித்திரங்கள் ஒட்டப்பட்ட அட்டைக் கடிதங்கள் எனக்கு வரும். ஆணுறுப்புகளின் சித்திரங்களோடு போஸ்ட் கார்டுகள் வரும். கடிதங்கள் வரும். உள்ளே அசிங்கமாக எழுதி அனுப்புவார்கள். இ- மெயிலிலும் இத்தகைய கடிதங்கள் நிறைய வரும்.

இணையத்திலும் இது பெரிய அளவில் நடந்தது. நன்கு நினைவிருக்கிறது, அப்போது ஜெயமோகன், சாருநிவேதிதா ஆகியோரிடம் மொட்டையாக, ‘முலைகள்’ பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். கடவுளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் அதிகமாக உச்சரிக்கப்படும் ஒரு சொல்லாக முலைகள் ஆகிவிட்டது என்கிறார் ஜெயமோகன். ‘பெரிய முலைகளாக இருக்கும் என்று நினைத்தேன்..ஆனால் சிறிய முலைகளாக இருக்கிறது’, என்கிறார் சாரு நிவேதிதா. யதார்த்தமான உரையாடலா, கற்பனையான உரையாடலா என்று அறிய முடியாத அளவிற்கு இணையத்தில் அப்பதிவு வெளியாகியிருந்தது.

புற:.. நீங்கள் உடலரசியல் என்று கூறும்போது அதில் உடல் மீதான சாதிமயப்படுத்தலை உடைப்பதை மையமாக வைக்கிறீர்கள். இந்நிலையில், லீனா மணிமேகலை உங்கள் கருத்தாக்கத்தை ஹை-ஜாக் செய்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்? மேலும், லீனா மணீமேகலை உடலரசியல் எனும்போது அதில் பெண்ணிய நோக்கில் மார்க்சியத்தின் இடைவெளிகளை அம்பலப்படுத்துவது மட்டுமே முதன்மைப்படுகிறது. அதில் குறிப்பாக மார்க்க்சிய மூலவர்கள் பற்றி ஆவேசமான விமர்சனங்களை வைக்கிறார். ம.க.இ.க. தோழர்கள் அதை கடுமையாக விமர்சித்தார்கள் ஆவேசமாக முரண்பட்டார்கள். லீனா மணீமேகலையின் உடலரரசியலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் ?

குட்டி ரேவதி: எவருமே இன்னொருவருடைய கருத்தாக்கத்தை அபகரிக்க முடியாது. ஒருவர் இன்னொருவருடைய படைப்பை எப்படி உரிமை கொண்டாட முடியாதோ அப்படியே கருத்தாக்கமும். மேலும், இடதுசாரிகள் விமர்சிக்கப்பட வேண்டியவர்கள்தாம். அதில் எனக்கு எந்தவித மறுப்பும் கிடையாது. நீங்கள் கேள்வியை இன்னும் தெளிவுபடுத்த வேண்டும்.

புற:. நீங்கள் சாதியொழிப்பை பிரதிநிதித்துவப் படுத்துவதாக சொல்கிறீர்கள். ஏதோவொரு வகையில் நீங்கள் மற்ற பெண் கவிஞர்களையும் அங்கீகரிக்கிறீர்கள்.ஆனால் இதில் ஏதோ ஒரு வகையில் ஒரு ஒத்திசைவும், ஒருங்கிணைப்பும் நிகழவில்லை என்றால், இப்படி நுணுகி நுணுகி உள்ளே செல்வது சாதிய திடப்படுத்தலுக்குத்தானே வழிவகுக்கும். அடிப்படையில் உங்கள் எல்லோருடைய நோக்கமும் ஒடுக்குமுறைக்கு , சாதியத்திற்கு எதிராக இருந்தாலும் .. நாம் வேறுபாடுகளை வரையறுக்கும் நமது நோக்கத்திலிருந்து விலகிப் போகிறோம் அல்லவா?

குட்டி ரேவதி: சாதியம் என்பது ஒரு சட்டையாக இருந்தால் அதை எளிதாக கழட்டி வீசிவிட்டுப் போய்விடலாம். ஆனால் அது இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இயங்கிய பண்பாட்டு நுண்மங்களையும், அரசியல் குறுக்கோட்டங்களையும் கொண்டிருக்கிறது. இவை நம், வரலாற்றுடன், புனைவுகளுடன், நமது நினைவுகளுடன் கலந்திருக்கும்போது அதை நாம் ரொம்ப நுட்பமாகத்தானே எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

புற:. நுட்பமான வேறுபாடுகளின் தேவைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவற்றுக்கிடையில் ஓர் ஒத்திசைவு உருவாகாமல் போவது நோக்கத்தை சிதறடித்து விடுகிறதல்லவா.. மேலும் சாதியொழிப்பில் அனைத்து முற்போக்கு இயக்கங்களுக்கும் சில எல்லைகள் இருக்கிறதல்லவா...உங்களுக்கும் சில எல்லைகள் இருக்கும். உங்களது கருத்தியலை வைத்து மட்டுமே சாதியத்தை ஒழித்துவிட முடியாதல்லவா? மற்ற எந்த இயக்கங்களை விடவும், நீங்கள் கூறும் பெண்ணியம், தலித் பெண்ணியம் உள்ளிட்ட சித்தாந்தங்களை விடவும் சாதியொழிப்பில் மார்க்சிய இயக்கங்களின் அடித்தளம் அதிகமான பலமுடையதாக இருக்கிறது. ஆனால் லீனா மணீமேகலை போன்றவர்கள் அதிலிருந்து விலகிச் செல்வதற்கான வாய்ப்புகளைத்தான் உருவாக்குகிறார்கள்., நீங்கள் முன்வைக்கும் சிவகாமி கூட பெரியாரை விமர்சனம் செய்வதன் மூலமாக அதைத்தான் செய்தார்கள்.இதில் உங்களுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கிறது. நீங்கள் எங்கிருக்கிறீர்கள் ?

குட்டி ரேவதி: பலதரப்பட்ட அரசியலாலும் போராட்டத்தாலும்தான் சாதியத்தை முறியடிக்க முயலும். எங்களுக்குள் அதன் ஆரம்பக்கட்டத்திலேயே ஒத்திசைவை எதிர்பார்ப்பது என்பது அவசியமில்லை. அந்த ஒத்திசைவு எப்போது வருமென்றால், இன்னும் பல கட்டங்கள் போன பிறகுதான் ஏற்படும். ஏனென்றால் இது ஓர் ஆரம்ப நிலை. இந்தக் கட்டத்திலேயே நீங்கள் உங்களுக்குள் ஒத்துப் போங்கள் என்று எதிர்பார்ப்பது ஓர் ஆதிக்க மனப்பான்மை. தங்களுக்குள்ளாகவே ஒன்றாக இல்லை என்று தாழ்த்தப்பட்டவர்கள் மீதும் இம்மாதிரியான விமரிசனங்கள் வைக்கப்படுவதும் அரசியலை பாமரத்தனமாகப் புரிந்து கொள்ளுதல் தான். இதை நான் கடுமையாக மறுப்பேன். நீங்கள் எதிர்பார்க்கிற ஒத்திசைவை நோக்கிய ஒரு தொடக்கப் புள்ளி தான், நாங்கள் எல்லோரும் கவிதையில் முன்வைக்கும் உடலரசியல் என்பது. அதை எப்படி வைக்கிறோம் என்பது இன்னும் நுட்பமான கேள்விகளுக்குட்பட்டது. முழுமையான ஒத்திசைவை உருவாக்க நாம் இன்னும் நிறைய பணியாற்றவேண்டியிருக்கிறது. இது ஒரு தொடக்கக் கட்டம். மேலும், சாதி ஒழிப்பில் ஈடுபடுவதில் முற்போக்கு இயக்கங்களுக்கும் எல்லைகள் இருக்குமில்லையா என்று நீங்கள் கேட்பதே ஏதோ சலுகையை யாசிப்பது போல் இருக்கிறது. அதுவொன்றும் அத்தகைய முக்கியமான பிரச்சனை இல்லை என்பதான அலட்சியமும் தொனிக்கிறது. ‘சாதி ஒழிப்பு’, ஓர் இயக்கத்தின் நோக்கமாக இருக்கும் பட்சத்தில் அதற்கான எல்லைகளை வரையறுத்தவர்களின் நோக்கமும் அது இல்லை என்று தானே ஆகிறது.

மேலும் இடதுசாரிகளை லீனா எப்படி விமர்சிக்கிறார் என்பது பற்றி நான் இங்கு கூறுவது அவசியமற்றது. நான் என்னளவில் எப்படி விமர்சிக்கிறேன் என்றால், இடதுசாரி அரசியலை முன்னெடுத்துச் சென்றவர்கள் எல்லோருமே ஆதிக்கச் சாதியினர்தான். இன்று வரையில் கீழ்வெண்மணிப் பிரச்சனை ஒரு சாதியப் பிரச்சனை இல்லை என்று இடதுசாரிகள் வாதமிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதற்காக மீண்டும் மீண்டும் குறும்படங்கள், திரைப்படங்கள் எடுத்து நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள். அன்று கீழ்வெண்மணியில் போராடிய இடது சாரி இயக்கத்தினர் அவர்களுடைய உழைப்பு, அர்ப்பணிப்பு இதையெல்லாம் நான் குறைத்து மதிப்பிடவில்லை. அன்று அவர்கள் களத்தில் நின்று போராடினார்கள், தியாகம் செய்தார்கள் எல்லாம் சரி. ஆனால் அப்போராட்டத்தின் பின்னின்று பார்க்கும் அவர்களின் மனோபாவம் கண்டனத்துக்குரியது. சாதியம் பற்றிய விவாதங்களுக்கான திறந்த கதவுகளை அறைந்து சாத்துவது. சாதிய ஒழிப்பில் அன்று இருந்த ஓர் அரசியல் கட்டத்திலேயே இன்றும் நாம் இருக்க முடியுமா. அதில் ஒரு வளர்ச்சி, நகர்வு, விடுதலை தேவையில்லையா?

மேலும் விமரிசனங்களை முன்வைப்பதை நாம் ஓர் அவதூறாகவும் பார்க்கக்கூடாது. இடதுசாரி அரசியலை இன்னும் கூர்மைப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அவர்களுடைய தேவையை நான் மறுக்கவே இல்லை. ஆனால் அதில் தலைமைத்துவத்தில் இருந்தவர்கள் எல்லோருமே ஆதிக்கச் சாதியினராக இருந்ததினால்தான் இன்றுவரை கீழ்வெண்மணி பிரச்சனை ஒரு சாதியப் பிரச்சனை இல்லை வர்க்கப் பிரச்சனைதான் என்று அவர்கள் வற்புறுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும் இடதுசாரி இயக்கத்திற்கான ஒரு தீவிரக் காலகட்டம் நிறைவடைந்து வேறொரு காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம். எல்லோரும் அதில் தொய்வடைந்து விட்டார்கள். இடதுசாரி இயக்கத்தை எடுத்துச் செல்வதற்கான இளைஞர்கள் யார் இருக்கிறார்கள், அதற்கான முன்னுதாரணங்கள் என்னவென்று சுட்டிக்காட்ட முடியுமா? மேலும் சிவகாமி அவர்கள் பெரியாரின் மேல் வைக்கிற விமரிசனங்கள், ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து வந்த ஒரு படைப்பாளி, தீவிர சிந்தனையாளர், அரசியல் செயல்பாடுகளில் இருப்பவர், இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் அவர் பெரியார் மீது என்ன விமரிசனங்கள் வைக்கிறார் என்பதை நாம் நுணுகிப் பார்க்க வேண்டும். பெரியாரை விமரிசித்துவிட்டார் என்று உணர்ச்சிவசமான ஆவேசம்கொள்வதில் நியாயங்கள் இல்லை.

எல்லா சமூக இயக்கங்களிலும் வேலை பார்த்தவர்கள், களத்தில் நின்று போரடியவர்கள் யாரென்று பாருங்கள். ஒரு நூற்றாண்டு இந்திய வரலாற்றில் முற்போக்கு இயக்கங்கள் அனைத்தும் களத்தில் நின்று போராடுவதற்கான மக்கள் தொகை எங்கிருந்து வந்தது என்றால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரிடமிருந்துதான். ஆனால் அவர்களுடைய பிரச்சனைகளை தலைமைத்துவமோ, அதன் சித்தாந்தமோ உள்வாங்கிக்கொள்ளவேயில்லை. மார்க்சியத்தைக்கூட இங்கே நாம் உள்வாங்கும்போது ஏற்கனவே இங்கு நிலவும் பிரச்சனைகளோடு இணைத்து உபயோகப் படுத்தியிருந்தால் இன்று பொருளாதார சமத்துவம் நோக்கியும், பொருளாதார விடுதலை நோக்கியும் எவ்வளவோ முன்னகர்ந்திருப்போம். இன்றும் மார்க்ஸ் நமக்குத் தேவை. அதில் எந்தவித சந்தேகமும் எனக்கில்லை. இன்னும் சொல்லப் போனால் இனி அடுத்தக்கட்ட அரசியல் செயல்பாட்டுக்கு இங்கு ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த சிந்தாந்த செயல்பாடுகளினுடைய ஒரு ஒருங்கிணைந்த பார்வை நமக்குத் தேவைப்படுகிறது. நமக்கு மார்க்ஸ் தேவைப்படுகிறார்.ஆனால் இங்கு நிலவும் சாதியச் சிக்கல்களை, அதன் உட்கூறுகளை கருத்தில் கொண்டு அவற்றை முதன்மைப்படுத்தி, இங்குள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கான காரணங்களை ஆராய்ந்த தளத்தில் நின்று கொண்டு தான், மார்க்ஸ் அச்சிக்கல்களை நிவர்த்தி செய்வதில் உதவக்கூடும் என்று தான் உண்மையில் நாம் மார்க்சைப் பார்த்திருக்கவேண்டும். அப்பொழுது தான் மார்க்ஸின் தத்துவத்தை முழுமையும் புரிந்துகொண்டவர்களாவோம். ஆனால், இங்கு நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்வோம், ‘நான் மார்க்சிஸ்ட் இல்லை’ என்றே மார்க்ஸே கூறியிருப்பதை!

புற:.. நாம் தொடங்கிய இடம் லீனா என்கிற விஷயத்திற்கு வரும்போது...

குட்டி ரேவதி: இல்லை, அவர் மீதான எனது விமரிசனத்தை நான் கூர்மைப்படுத்த விரும்பவில்லை ! அதற்கு இங்கு எந்தத் தேவையுமில்லை. எனது சிந்தனைகளை, சிந்தனைகளின் தொடர்ச்சியைச் சிதறடிக்கும் உங்கள் முயற்சிகளை நான் பொருட்படுத்தப் போவதில்லை! இதற்கெல்லாம், இந்தக்குறுகிய மனிதவாழ்வில் நான் கவனம்கொடுக்க முடியாது, தானே!

புற:.. இல்லை லீனாவின் படைப்புகள் அதற்கெதிராக ம.க.இ.க தோழர்கள் செயத்து இதை எப்படி பார்க்கிறோம் என்றால், லீனா இங்கு இருக்கும் இடதுசாரிகள்...எல்லாமே தினப்படி விவரங்களுடன் இருக்கிற பிரச்சனைகளை விட்டுவிட்டு..பேப்பரில் இருக்கிற மார்க்ஸ், எங்கல்ஸ், ஹெலென் டெமூத், விஷயங்களின் கதைக்கூற்று, கருப்பொருள் உட்பட மொழிபெயர்த்து ஏற்கனவே செய்யப்பட்ட புரட்சியை அதன் மீது செய்யப்பட்ட கலக எதிர்வினைகளை அப்படியே மொழிபெயர்த்து செய்வதன் மூலமாக உண்மையாக இங்கு இருக்கும் இடதுசாரிகளின் மேல் நம் களங்களில் செய்ய வேண்டிய வேலையை தவிர்ப்பதற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்..இங்கே உண்மையாக சீனிவாசராவ் மீதும் ராமமூர்த்தி மீதும் செய்திருக்க வேண்டிய வேலையை மார்க்ஸ் எங்கல்சிடம் செய்துவிட்ட வேலையின் மூலமாக செய்ததாக நிறைவு செய்துவிட்ட ஒரு பாவனையை அது கொண்டிருக்கிறது. ஆனால் உங்களுடைய எழுத்து மிகவும் தரவுப்பூர்வமாக, விமர்சனப்பூர்வமாக, பிரச்சனைப்பூர்வமாகச் சென்று தொடுகிறது. ஆனால் லீனாவினுடையது அப்படி செய்யாமலேயே அப்படியான பாவனையை அது செய்கிறது இல்லையா.

குட்டி ரேவதி: நீங்களே பதிலைச்சொல்லிவிட்டீர்கள்! பின்னும், இந்த கேள்வியை என்மீது போட்டு விவாதம் வாங்கும் முயற்சியாக இது இருக்கிறதா? இல்லை, இதை சுமூகமான ஒரு சிந்தாந்த உரையாடலுக்கு நாம் கொண்டு செல்வதற்கான முயற்சியும் நோக்கமும் இந்த நேர்காணலுக்கு இருக்கிறதா என்பதை வைத்துதான் இந்தப் பிரச்சனை குறித்து நான் தொடர்ந்து பேசமுடியும் என்று நினைக்கிறேன்.

புற:.. இல்லை, இது எந்த இடத்தில் கேள்வியாக மாறுகிறது என்றால்... ஏற்கனவே சில வேலைகளை சென்ற தலைமுறைப் பெண் எழுத்தாளர்கள் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய பங்களிப்புகளை சில முனைகளில் நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள். சில முனைகளில் அதனுடைய போதாமைகளைச் சுட்டுகிறீர்கள், விம்ர்சிக்கிறீர்கள்.அந்த தலைமுறையில் எழுத்து என்பதே ஒரு வீட்டு விலங்கு மாதிரி வீட்டு மயப்படுத்தப் பட்டிருக்கிறது. .. உங்கள் தலைமுறையில்தான் எழுத்து சமூகப்பூர்வமாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட அரசியல் தேவைக்காக ஆதரிக்கிறேன், சில குறிப்பிட்ட புதிய பரிமாணங்களில் அதை மறுக்கிறேன் என்கிறீர்கள். இப்போது லீனா பிரச்சனை, நீங்கள் பேசுகிற விஷயத்தையே நீங்கள் பேசுகிற வடிவத்தில் பேசாமல் ரொம்ப தந்திரமாக காகிதங்களில், புத்தகங்கலில் இருப்பதை மட்டும் எடுத்துக்கொண்டு பேசுகிறது. அதை ஆதரிப்பீர்களா அல்லது எதிர்ப்பீர்களா?

குட்டி ரேவதி: ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து எதிர்ப்போ, விமரிசனமோ வரும்போது பலதரப்பட்ட புள்ளிகள் அதற்கு இருக்க முடியும் தான். நாம் அதை அங்கீகரித்துத்தான் ஆகவேண்டும். உடலரசியலையே வேறுவேறு வடிவங்களில் பேசுகிற படைப்பாளிகள், கவிஞர்கள் பலவேறு தளங்களிலிருந்து இயங்குவதற்கான தேவைகள் இருக்கிறது. நான் எழுதுவது மட்டும்தான் உடலரசியல் என்று முன்னிறுத்துக்கொள்வது நான் முன்மொழிந்த சித்தாந்தையே துண்டாடுவது போன்றதால் அதில் எனக்கு விருப்பம் இல்லை. பல முனைகளிலிருந்து சாதி எதிர்ப்பும், மத எதிர்ப்பும், குடும்பம் என்கிற சமூக வரையறைகளை எதிர்க்க வேண்டிய அவசியமும் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இருக்கிறது. பெண்களைப் போலவே ஆண்களும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் நான் பார்க்கிறேன். “whenever we liberate a woman, we liberate a man also”, என்கிற இனவரைவியலாளர் மார்கரெட் மீட்டின் இனவரைவியல் சிந்தனையையும் இங்குச் சுட்ட விரும்புகிறேன். உடலரசியலின் வெளிப்பாட்டில் .பலதரப்பட்ட எல்லாவிதான பார்வைகளும் இருப்பதற்கான நியாயங்களை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். ஆனால் விமர்சனங்களையும் ஓர் ஆரோக்கியமான புள்ளியில் நின்று எதிர்கொள்ளவேண்டிய தேவையையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இடது சாரிகள் மீதான என்னுடைய விமர்சனமும் லீனாவினுடையதும் வெவ்வேறு தன்மைகளில் இருக்கிறது. ஏனெனில், அவர் முன்வைக்கும் விமர்சனம் என்பது அவர் வந்திருக்கிற பின்னணியிலிருந்து உருவாகிறது. அவர்கள் மார்க்சிய மூலவர்களை விமர்சிக்கிறார்கள் இங்கு இருக்கும் களப்பணியாளர்களை விமர்சிக்கவில்லை என்றால் அந்தக் குறிப்பிட்ட ஓர் அம்சத்தைப் பூதாகரப்படுத்தி நான் என் கருத்து சார்ந்த விவாதத்திலிருந்து விலகிச் சென்றுவிட விரும்பவில்லை. ஏனெனில் இதன் வழியாக, உடலரசியில் என்ற பொதுப்புள்ளியில் எல்லோரிடையேயும் ஓர் ஒத்திசைவை நான் விரும்பினாலும் நான் எவ்விடத்தில் இவர்களிடமிருந்து மாறுபடுகிறேன் என்ற புள்ளியை இன்னும் திடப்படுத்த விரும்புவதால், இது போன்ற விவாதங்கள் வழியாக அதைச் சிதறடிக்கிற முயற்சிகளும் இருக்கிறது என்பதால், நான் இதில் மிகவும் எச்சரிக்கையாகவே இருக்க விரும்புகிறேன். மேலும், லீனாவின் எழுத்தில் விடுதலைக்கு எதிரான ஆதிக்கச் சிந்தனையைத் தான் பார்க்கமுடிகிறது. இல்லையெனில், அது இவ்வளவு அதிகமாய் பெண்களைத் தூக்கியெறிந்து பேசியிருக்கிறது. ஆதிக்கப் பின்னணியில் இருந்து வரும் பெண்கள், தம் சுய அதிகாரத்தை நிறுவுவதற்கான போராட்டத்தை விடுதலை என்று பேசுவது சிறந்த நகை முரண் தான்.

புற:. எழுத்து என்பது பன்மைத்தன்மையோடு, வித்தியாசங்களோடு இருப்பதற்கான நியாயங்களை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் விமரிசனத்தின்போது மட்டும், ஒருங்கு திரட்டிக்கொள்வதில் உள்ள நன்மையை நாம் இழந்துவிடக்கூடாது என்று விரும்புகிறோம் அல்லவா? நீங்கள் விமர்சித்து விடுவதால் அந்த உறவோ அல்லது ஒருங்கோ எந்தவிதத்திலும் சிதைந்துவிடப் போவதில்லை. உங்கள் எழுத்தின் மூலமாக உள்ள ஒத்திசைவை உங்கள் பேச்சின் வாயிலாக, விமர்சிப்பதின் வாயிலாக சிதறிவிடுமா ?

குட்டி ரேவதி: நமது இலக்கிய சமூகத்தில், குறிப்பாக சிற்றிதழ்ப் பண்பாட்டில் இருந்து வந்த சமூகத்தில் வழக்கமான ஒரு பாணி இருக்கிறது. அவதூறுகளை நேரடியாக படைப்பாளியின் மீது போடுவது அல்லது தீவிர மெளனத்தின் வழியாக ஒரு படைப்பாளியை இறந்தவராக்குவது. அந்தப் பண்பாட்டிலிருந்து விலகி, படைப்புகள் மீதும் படைப்பாளிகள் மீதும் அவதூறுகளுடன் அணுகாமல் விமர்சனப்பூர்வமாக அணுகலாம் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன் இப்போது அவர்களுடைய படைப்புக்குள் போகலாம்.

பொதுவாகவே அவருடைய படைப்புகளில் வெறுமையான வார்த்தைக் கோர்வைகள் இருக்கின்றன. தீவிர இலக்கிய அம்சங்களை உள்நுகர்ந்த ஓர் ஆழமான அறிவும் விசாரமும் இல்லை. தீவிர கவிதையின் சமூகச் செயல்பாடு, அதனுடைய வடிவங்கள், நுணுக்கங்கள் என்று பார்க்கும்போது கவிதையாகாத தருணங்களையும் அது கொண்டிருக்கிறது. இது தான் இன்றைய நாளில் மிக முக்கியமான கவிதைக்கான அரசியல் செயல்பாடு என்பதான பிரச்சாரப் பிரகடனமும் இருக்கிறது. மார்க்ஸ் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்றாலும் அவரை விமர்சிப்பதற்கான வாசிப்பும், களப்பணியும், தொடர்ச்சிந்தனை வெளிப்பாடும் இருக்கும் நேர்மையையும் கொண்டிருக்கவில்லை. மார்க்சியத்தோடு தான் கொள்ளும் முரண்கள் எவை என்று சொல்கிற நிதானமும் இல்லை. அந்த நேர்மையும் நிதானமும் கவிதைக்கு மிக மிக அவசியம் என்று நினைக்கிறேன். ஒருவகையில் இது, ‘ஆதிக்கச் சிந்தனைக்கு எதிரான ஒரு கூறாகவும் இருப்பதால்!’. ஆனால், இவையெல்லாம் ஒரு படைப்புக்கு அவசியமில்லை என்று அவரே கூறுகிறார். இது சந்தர்ப்பங்களுக்கு ஏற்றாற் போல, ‘இலக்கிய வரையறைகளை’ச் சொல்லும் ஆதிக்க மனோபாவம் தான்!

அவருடைய எல்லா படைப்புகளையும் ஒருங்கிணைத்து வாசித்து நாம் உணர்வது என்கிற விஷயத்திலிருந்து தான் இதை சொல்கிறேனே தவிர அவரது மற்ற விஷயங்களின் மேல் எனக்கு அக்கறையும் விமர்சனமும் இல்லை. ஏனென்றால் இருவருமே வேறுவேறு தளத்தில் இயங்குபவர்கள். செருப்பு தைக்கும் ஒருவனின் பணி குறித்து கணிணி வேலை பார்க்கும் ஒருவன் குறை சொல்வது போல, இது ஒப்பீட்டளவிலும் பொருத்தமற்றது. அந்தக் குறிப்பிட்ட படைப்புகளில் அது கலைப்பூர்வமாகாமல், அதே மாதிரியான இடதுசாரிப் பிரச்சார நெடியோடுதான் அந்தக் கவிதைகளும் இருக்கிறது. மேலும் மார்க்சையும் எங்கல்ஸையும் அவர் தாக்குகிறார் என்றால் அந்தப் பெயரை வைத்துதான் அதைச் செய்கிறாரே ஒழிய அந்த கருத்துச் செறிவுக்கு உள்ளே சென்று எங்கெங்கு முரண்பாடுகள் உள்ளன, இன்றைய காலத்தோடும் சமூகத்தோடும், இந்திய மண்ணோடும் மார்க்சியம் என்கிற தத்துவம் கொள்கிற பொருத்தப்பாடுகள், வென்றெடுத்த போராட்டங்கள், கோரிக்கைகள் என்கிற நுணுக்கங்கள் அறிந்த தெளிவு வெளிப்படவில்லை. அவரது வெளிப்பாட்டு வடிவத்திற்கு அவருக்கான நியாயங்கள் இருக்கலாம். மார்க்சிடமிருந்தும் எங்கல்சிடமிருந்தும் குறிப்பாக நான் எங்கு வேறுபடுகிறேன் என்ற ஒரு கூர்மையான பார்வையையும் அதற்கான அணுகுமுறையையும் அவர் அந்தப் படைப்புகளில் வைக்கலாம். ஆனால், அதுவும் ஒரு படைப்பாளியின் விருப்பம். ஒரு படைப்பாளியை நிர்ப்பந்திக்கும் அதிகாரத்தைப் பிறர் எடுத்துக் கொள்ள முடியாது தானே!

இக்கேள்வியில், அவருடைய எழுத்து ஒரு கலைப்படைப்பாக மாறிவிட்டால், அது என்றென்றும் நிவர்த்தி செய்ய முடியாத தாக்கத்தை ஏற்படுத்திய சமூகப்பிரதியாகிவிடுமோ என்று அச்சம் இருக்கிறது.. அப்படியான ஒரு கலைவடிவத்திற்குள் நான் செல்லவில்லை என்று அவரே ஒத்துக் கொள்கிறார். இதற்கு மேல் இதை ஒரு விவாதப் பொருளாக்குவதற்கான முக்கியத்துவம் அதற்கு இல்லை என்று நினைக்கிறேன். இதை இத்துடன் முடித்துக் கொள்ளலாம்.

அதுமட்டுமன்றி, இதை அவருடைய தனிப்பட்ட குறையாகப் பார்க்கவில்லை. ஒட்டுமொத்த ஆதிக்க சாதிப் பெண்களின் மீதுமான என் விமர்சனம் இது. விடுதலைக்கான எந்தக் கட்டத்திலுமே இவர்கள் சாதியதிகாரமும் அதன் ஒடுக்குமுறையும் குறித்து தீவிரமாய் விவாதிக்கவோ அதன் குணநலன்களை தன் சுய அளவிலேயோ, இன அளவிலேயோ மாற்றிக் கொள்ளவோ தயாராக இல்லை. ‘பெண்’ என்ற தனது பால் அடையாளத்தை நிலைநிறுத்த எழுத்தைப் பயன்படுத்திய பெண்களுடன் ஏற்கெனவே அவ்வடையாளங்களுடன் எழுதிய, எழுதிக்கொண்டிருந்த பெண்கள் வந்து இணையும் இடத்தில் அவ்வொற்றை அடையாளம் என்பது காத்திரமடையாமல் நீர்த்துப் போகும்படியான ஒரு செயலூக்கம் பெற்றிருந்ததைத் தமிழ்ச்சூழல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது அல்லது சொரணையற்று இருந்தது. இந்நிலையில் நம் பெண்கள், தம் பிரதிகளை மீண்டும் மீண்டும் எழுதிக் கலைக்கவேண்டியிருந்தது. மணல் மீதான தடங்களைப்போல கலைந்து கொண்டே இருந்தன, அப்பிரதிகள். மண் அடுக்குகளின் ஆழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும், புதைக்கப்பட்டிருக்கும் தம் உடலைக் கண்டடையும் முடிவற்ற முயற்சியின் வெளிப்பாடாகவும் இருந்தன அப்பிரதிகள். இவ்விடத்தில், பெண் ‘எழுத்தை’, இரண்டாம் கட்டத்தில் எழுத வந்தப் பெண்கள் அவ்விதம் தான் தம் ஒட்டுமொத்த உரிமைக்காகவும் பயன்படுத்திக் கொண்டனர், ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து முதல் முறையாக எழுத வந்த பெண்கள், இவர்கள். சமூகவெளியில் முதன் முறையாகத் தம் உடலை நிலைநிறுத்திக் கொள்ளும், கட்டமைத்துக் கொள்ளும் அவர்தம் பணி, அவர்கள் எழுத்தின் வழியாகவே, அதிகார நிறுவனங்களுக்கு வெளிப்படையாகத் தெரியவந்தது. அதிர்ச்சியை அளித்தது. இது நிகழ்ந்த காலக்கட்டத்தில் அதிகார நிறுவனங்கள், பெண்ணுடல்களுடன் நேரடியாகவே மோதத் தொடங்கியிருந்தன.

ஆனால், அதற்கு முன்பிருந்தே எழுத்தைத் தங்களின் ஊக்கமாகவும் அதிகார நிறுவனங்களை எதிர்ப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்திய இரண்டாம் தலைமுறைப் பெண்கள், ’பெண்’ என்ற ஒற்றை அடையாளத்தையே எப்பொழுதும் வலியுறுத்தி வந்தனர் என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொள்வோம். ஒற்றை அடையாளப் பெண்கள் இதர, அதிகார நசிவுக்குள்ளான பெண்களுடன் ஒருபுறம் தங்களை இணைத்தவாறே மறுபுறம் ஆதிக்கக்குறிகளையும் தங்கள் உடலில் வளர்த்துக் கொண்டும் இருந்தனர். இந்நிலையில் பெண்களில் ஆதிக்கக் குறி வளர்த்த பெண்கள், ஆதிக்கக் குறி வளர்க்காத பெண்கள் என்ற இருவகையினர் உருவாகினர். ஏற்கெனவே, அதிகாரம், முறையற்ற பாலின்பச் சுவை, உடல் மீதான தொடர் வன்முறைக்கான வேட்கை, எந்தப் பொருளையும் தன்முனைப்புக் கொண்டு சிதைத்துவிடுவது போன்ற ஆண்மைய வாதத்தினால் பெண்களின் பேசுபொருட்கள் ஒருக்காலும் விளிம்பிலிருந்து மையத்தை எட்ட முடியாத சுழற்சி நிலையிலும், இயக்க நிலையிலுமே இருந்தன. அவ்வகையில், சமூகத்தின் மேல் தட்டு அங்கீகாரங்களுக்கும் சலுகைகளுக்கும் உரியவர்களான பெண்கள் தாங்கள் மீட்டுக்கொண்டு வந்த மணலுடலில் குறி வளரக் கண்டனர். அது பாலுறுப்பு என்பதால், அதன் வேட்கை குறித்து மட்டுமே ஒரு பொருட்டாக்கிப் பேசப்படவேண்டியிருந்தது. தம் பெண்ணியப் பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுவைத்துவிட்டு, தம்முடலை ஒரு பேசுபொருளாக ஆக்கும், அதை திடப்படுத்தும் தலையாய வேலையையும் விட்டுவிட்டு மீண்டும் தங்கள் தங்கள் உடலை ஆணின் வேட்கைக்கு இரையாகச் செய்யும் மரபார்ந்த வேலைக்குத் திரும்பிவிட்டனர். இதில் பலியானது ஒடுக்கப்பட்ட பெண்களைப் போலவே ஒடுக்கப்பட்ட ஆண்களும் தாம்.

ஆனால், தமிழ்ச்சூழலில் ஒரு தவறான அர்த்தப் புரிதல் நிகழ்ந்து விட்டது. பெண் விடுதலைக்கான இந்த அரசியல் எழுத்து வகை, பாலியல் வேட்கையின் நேரடியான வெளிப்பாடாகவும் அதற்கான வெளிப்படையான கோரலாகவும் பெண்களாலேயே புரிந்து கொள்ளப்பட்டிருப்பது தான் அது. அத்தகைய பாலியல் வேட்கையை பெண்கள் தாமாய் முன்வைக்கும் உரிமையைப் பெற்றுவிட்டாலே, ஆண் குறிகள் தம்மீது செலுத்தி வந்த அதிகாரத்தை எதிர்த்து விடலாம் என்ற அர்த்தமாயும் எடுத்துக்கொண்டனர். அப்படியொரு பாலியல் வேட்கையையும் விடுதலையையும் ஏற்கெனவே சாதியச் சந்தையின் மேல் தட்டில் இருக்கும் ஆதிக்கச் சாதிப் பெண்கள் நுகரவில்லையா என்ன? அது முழுமையான விடுதலையை பெண்ணினத்திற்குச் சாத்தியப்படுத்திவிட்டதா என்ன? ஆக, மொண்ணையாக அதை பாலியல் வேட்கை என்றும் பாலியல் விடுதலை என்றும் பேசுதல் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் அவரவர் சாதி சார்ந்த அதிகார போதையில் நிகழும் அரைகுறைப் புரிதலே. ஏனெனில், செழுமையான திளைக்க திளைக்க பாலியல் இயல்பூக்கம் கொண்டவர்கள் ஒடுக்கப்பட்ட பெண்கள். அன்றாடம் உழைக்குமுடலுக்கு பாலியல் வேட்கையைத் திருப்தி செய்து கொள்வதினும், இயல்பான பாலியல் ஊக்கத்தைச் செயல்படுத்தும் இடத்து தான் பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். பெண்பாலிமை உறுதிப்பாட்டை அடைவதற்கான முயற்சியில் ஒடுக்கப்பட்ட சாதிய, பொருளாதார அடுக்குகளின் கீழ்த்தட்டில் இருப்பவர்களுக்கும் வெறுமனே பாலியல் வேட்கை என்பதான கோரிக்கைகள் தடைகளாக எழுகின்றன. ஆக, இக்கட்டத்தில் பாலியல் உரையாடல்களின் அர்த்தங்களையும் பாலிமையின் பண்புகளையும் பாலியல் சொற்களின் குறியீடுகளையும் விரைந்து மாற்ற வேண்டியிருக்கிறது. மொழியின் கூர்மையை இன்னும் தீட்டிக் கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது. பாலியல் வேட்கை பற்றிய வெற்று உரையாடல்கள் எல்லாம் புணர்ச்சியின் உச்சக்கட்டத்திற்குப் பின்பான நிலையைப் போலவே தீவிரச் சோர்வைத்தாம் தரக்கூடும், அதை அடைவதற்கான வழிமுறைகளும் அலகுகளும் தேவைகளும் இல்லாத போது.

புற:. சிறுபத்திரிக்கைகளின் வழியான அறிவியக்கம் ஏன் தேக்கமடைந்துள்ளது? ஒரு குறிப்பிட்ட கருத்தியலின் அடிப்படையிலான ஒரு குழுவினரின் இயக்கம் என்ற நிலை மாறி பெரும்பான்மை சிறுபத்திரிக்கைகள் இடைநிலை இதழ்களாக மாறிவிட்டன. அவை எந்த நோக்கமும் காரணமும் அற்று பொத்தாம் பொதுவாக வருகின்றன. வாசகர் திரள் விரிவடைந்திருந்தாலும் எழுத்திலும் வாசிப்பிலும் ஒரு சராசரித் தன்மை ஏற்பட்டுள்ளது. எழுத்தாளர்கள் நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்து வருகிறார்கள். வாசகர்கள் ரசிகர்களாக சுருக்கப்படுகிறார்கள். படைப்பை முன்வைத்து கோட்பாட்டுரீதியான தீவிர உரையாடல்கள் நிகழ்வதில்லை. இலக்கியக் கூட்டங்கள் நட்சத்திர விடுதிகளில் நடக்கின்றன. இந்த சந்தைச் சூழலிலும் ஊடு குரல்களாக தங்கள் படைப்பு மற்றும் அரசியலில் தீவிர நிலையும் வெப்பமும் கொண்டியங்கும் படைப்பாளிகளாக நீங்கள் , மாலதி மைத்ரி, சங்கர ராமசுப்பிரமணியன் , லக்ஷ்மி மணிவண்ணன் போன்றோர் இயங்கி வருகின்றனர். தமிழில் தீவிர படைப்பியக்கத்திற்கான சூழல் அருகிவிட்டதா? இந்த எழுத்துச் சூழலின் மேல் உங்களுடைய எதிர்வினை எவ்வகையில் நிகழ்கிறது ?

குட்டி ரேவதி: இதை ஏற்கெனவே தமிழ் இலக்கியச் சூழலில் நிலவிய ஒரு விஷயத்தினுடைய தொடர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். யார் இலக்கியத்தில் ஒரு பெரு நிலையை வகித்து வந்தார்களோ அவர்கள்தான் இன்றும் முன்னிற்கிறார்கள், இதழ்கள் நடத்துகிறார்கள். இந்த இடைநிலை இதழ் என்கிற போக்கு ஏற்கெனவே இருந்ததுதான். அன்று அதை, ‘தீவிர இலக்கிய இதழ்’ என்று பெயரிட்டுக்கொண்டார்கள். அவ்வளவே! நடுத்தரமான சிந்தனைகளும் மலிவான ரசனைகளையும் முன்வைப்பதில் இவர்கள் முன்னிற்கிறார்கள். அதை நோக்கியே இன்றைய மூத்தப் படைப்பாளிகள் எல்லாம் தங்களை நகர்த்திக் கொண்டார்கள். எல்லா முக்கியமான படைப்பாளிகளும் தாங்கள் இயங்கிக் கொண்டிருந்த தளங்களில் எல்லாம் நிறைய சமரசங்களை செய்து கொண்டு, தன்னுடைய நிலையைத் தானே முறியடிக்க முயல்கிற நிலையைப் பார்க்கிறோம். மைய நீரோட்டத்தில் இருக்கும் எழுத்தாளர்களுக்கும் இவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் எல்லா வகையான மலிவான ரசனையையும் பெரும்பத்திரிகைகள் வழியாகக் கூவி விற்கிறார்கள். இவர்கள் இடைநிலை ரசனைகளை, சிறுபத்திரிகைகள் வழியாக வியாபாரம் செய்கிறார்கள். ஆனால் இந்த இரண்டு நிலைக்களுக்குமான பேரங்கள் ஒரே மாதிரியான அங்க அடையாளங்களுடனும் பாவனைகளுடனும் தாம் இருக்கின்றன. வெகுசன பாமர மக்களுக்கு எவை மயக்கம் தருமோ, எந்த மலிவான சமூக நடவடிக்கைகள் கவனம் குலைக்குமோ அதிலேயே இவர்கள் இன்னும் கூர்மையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.

சிற்றிதழ் இயக்கத்தை கையிலெடுத்தவர்கள் யாரென்று பார்த்தால் மறுபடியும் அவர்கள் ஆதிக்க சாதியினர்தாம். ஏன் அவர்கள் தொடர்ந்து இயங்க முடிந்தது, இதழ்கள் கொண்டுவர முடிந்தது, இடைநிலை இதழ்களாக நிறுவ முடிந்தது, இன்று இணையத்திற்குப் போக முடிகிறது என்றால் அவர்கள் கையில் அவர்கள் உருவாக்கி வைத்திருந்த கருத்தாக்கச் செல்வாக்கும் அதைச் சந்தையில் விற்கும் அதிகாரமும் இருந்தது தான் காரணம். ஏற்கெனவே சிற்றிதழ் இயக்கத்தினர் பெரு ஊடகங்கள் நோக்கிச் சென்றுவிட்டனர் என்று நீங்கள் ஒரு விமர்சனம் வைக்கிறீர்கள் என்றால் அவர்கள் தொடங்கும் போதே இதை நோக்கித் தான் வந்திருக்கிறார்கள். மேலும், இது இன்னும் பெரிய வடிவம் எடுப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. அவர்கள் ஆரம்பத்திலேயே அப்படியான அடிப்படைச் சித்தாந்தங்களுடன் தாம் இருந்திருக்கிறார்கள். அடுத்தடுத்து அதன் பெரிதுபடுத்தப்பட்ட வடிவங்களை நோக்கி நகர்கிறார்கள். அன்று கருத்தியல் ரீதியாகச் சரியாக இருந்தார்கள், இன்று தவறாகி விட்டார்கள் என்பதெல்லாம் நாமே எழுப்பிய மாயைகளும் அவை கலைந்த கோலங்களும் தாம். அன்று இருந்தது போலத்தான் இப்போதும் இருக்கிறார்கள். இன்று இன்னும் உரக்கச் சொல்கிற அவசியமும் நெருக்கடியும் விழைவும் அவர்களுக்கு வந்துவிட்டது, அவ்வளவுதான்! ஏனென்றால் மாற்றுக் குழுமங்களும் அவற்றின் மையங்களும் வலுப்படும்போது இவர்களுக்கு இதற்கான கட்டாயமும் தீவிரமாக இயங்கும் அவசியமும் வருகிறது. அதற்கு இந்த இடைநிலை இதழ்கள், இணையங்கள் எல்லாம் பயன்படுகின்றன...

நீங்கள் சொல்வதுபோல் படைப்பை முன்வைத்து கோட்பாட்டு ரீதியான விவாதங்கள் நடக்காமல் போனதற்கும் இதுதான் காரணம். கவிதையின் கவித்துவம் குறித்து, கவிதைக் கோட்பாடு குறித்து அதனுடைய போக்கும் அரசியலும் குறித்து அதன் இயக்கம் குறித்து ஒரு தீவிரமான உரையாடலோ விவாதமோ இங்கு நிகழவே இல்லை. அது இருந்திருந்தால் இன்னும் நல்ல கூர்மையான படைப்பாளிகள் உருவாகியிருப்பார்கள். கவிதைக்கான சமூகப்பயன்பாடும் அரசியல் பயன்பாடும் இன்னும் தீவிரப்பட்டிருக்கும். கவிஞர்கள் விருதுகளுக்காக நோன்பிருக்க வேண்டிய அவசியமே இருக்காது. அதிகாரச் சமரசங்களுக்குத் தங்களை ஒப்படைத்தப் படைப்பாளிகளும், அரசுக்கு கும்பிடு போட்டு தங்கள் படைப்பாளுமையையும் படைப்பூக்கத்தையும் இழக்க நேர்ந்த படைப்பாளிகளும் தாம் இந்த நட்சத்திர அந்தஸ்தை நோக்கி நகர்ந்திருக்கின்றனர். வாசகர்களிடமிருந்து படைப்பாளிகள் விலகி நின்றது தான். இதையும் முந்தைய தலைமுறையினர்தாம் உருவாக்கி வைத்தார்கள்.. வர்கள் அந்த சமுதாயப்படிநிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இதை செய்துகொண்டார்கள்.

இன்று எழுத்து என்பது இலக்கியப் பணியாக மட்டுமல்லாமல் , ஒரு சமூகப் பணியாகவும், அரசியல் பணியாகவும் கூட இருக்கிறது. இது முந்தைய தலைமுறைப் படைப்பாளிகளிடம் இல்லாத விஷயம். . ஆனால், இன்றைய சமகால அரசியல் இலக்கிய இயக்கச் சிந்தனைகளுடன் ஒத்துப் போக முடியாதவர்கள் தாம் இந்த ‘இடைநிலை’ என்ற இடத்திற்கு வருகிறார்கள். இன்றைய படைப்பாளியின் சிந்தனைகளோடு ஊடாட்டம் கொள்ள வேண்டிய அவசியமே அவர்களுக்கு இல்லாமல் போகிறது. ஏனென்றால் அவர்கள் என்றுமே சமூக அவலங்களுக்குப் பொருத்தமில்லாத வேறு விஷயங்களைப் பேசி வந்தார்கள். அவற்றை விட்டு விட்டு எப்படி வருவார்கள்?

361 டிகிரி, கொம்பு, குறி, புன்னகை, புதுஎழுத்து, பனிமுலை, அடவி, நீட்சி, குறளி வனம், கல் குதிரை, தக்கை, வலசை, பவளக்கொடி, காலக்கட்டம் ஆகிய சிற்றிதழ்கள், இலக்கியத் தளத்தில் புற்றீசல்களாகக் கிளம்பியுள்ளன. அதிலும், இளைய தலைமுறையினராலும் ”பரிசோதனை” எழுத்து, இயக்கம் இவற்றில் தீவிர ஈடுபாடு உடையவர்களாலும் இந்த முனைப்புகள் தீவிரம் பெற்றுள்ளன. இனியும், ‘குட்டையில் ஊறிய மட்டை’ போல் கிடந்தவர்களின் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் மட்டுமே கேட்டுக்கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் வரையறைகளுக்குள் நின்று மட்டுமே வாழ்க்கையும் மனித அறிவையும் பார்க்கக்கூடிய அளவிற்கு, அவை ஒற்றை முகத்தன்மையுடையது இல்லை. எனவே இலக்கியம் ஒரு புதிய எழுச்சிக்கு உள்ளாகும் என்று நம்பலாம்!

புற:.. நீங்கள் சித்த மருத்துவராக இருக்கிறீர்கள்.தமிழில் முதன்முதலில் ஒரு ஐடியாலஜியை லிட்டரேச்சரில் ரொம்ப ஸ்ட்ராங்காக பேசியவர்கள் என்று தமிழ் மரபிலிருந்து குறிப்பிடவேண்டுமென்றால் சித்தர்களைக் கூறலாம். அதில் அந்த அறிவிஜீவித மரபில் முதல் தொகுதியாக்கப்பட்டதிலேயே பெண்மை நீக்கம் பெண் வெறுப்பு என்பது மிக வலுவாகப் பதிவாகிவிடுகிறது. அதற்குப் பிறகு, பின்னர் வள்ளலார் வரைக்கும் அல்லது அயோத்திதாசர் பெரியார் வரைக்கும் அதனுடைய விகிதாச்சாரம் மாறிக்கொண்டே வருகிறது. சித்தர் லிட்டரேச்சர் இல் இருந்துதான் பெண்மை நீக்கம், பெண்மை வெறுப்பு என்பது ரொம்ப வலுவா தொடங்குது. ஒரு பயிற்சியாளராக நீங்கள் சித்த மருத்துவராக இருக்கிறீர்கள். இலக்கியத் தளத்தில் பெண்ணியத்தை ஒரு கருத்தாக்கமாக நுட்பமான அளவில் விவரிக்கிறீர்கள். ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சித்தர்களுடைய உடல் பற்றிய சித்தாந்தம், இயற்கையுடனான நெருக்கம் போன்ற தளங்களில் அதை உயர்த்திப் பிடிக்கிறீர்கள்.இந்த முரண்பாட்டை உங்கள் மருத்துவத் துறை சார்ந்தும், தத்துவம் சார்ந்தும், இனமரபு அறிவு சார்ந்தும் இதை விமரிசனப்பூர்வமாக எப்படி பார்க்கிறீர்கள்.?

குட்டி ரேவதி: சித்தர்களின் பெண் வெறுப்பு பற்றி பேசும்போது அது வரலாற்றுப் பூர்வமாக சுமத்தப்பட்ட ஒரு காரணம் என்று நினைக்கிறேன். சமீபத்தில் ஒரு பௌத்த தியான முறையைப் பயில்வதற்காகச் சென்றிருந்தேன். அதில் பயிலப்படும் கருத்தாக்கங்கள், சொல்லாட்சிகள் எல்லாவற்றின் எச்சங்களும் இன்றைய சித்தர் இலக்கியங்களிலும் இருப்பதைக் கவனித்தேன். நமக்கும் பௌத்தத்திற்கும் இடையிலான காலகட்டம் 2500 ஆண்டுகள். சித்தர்களுக்கும் நமக்குமான காலகட்டம் ஏழெட்டு நூற்றாண்டுகள் எனும்போது இவ்விரண்டுக்கும் இடையில் தொடர்ச்சிகள் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இடையில் சித்தர் சிந்தனைக்குள் சைவக் கலப்பு தீவிரமாக நடந்திருக்கிறது. இந்த விஷயத்தை நான் என் கல்லூரிக்கல்வியின் போதே உணர்ந்திருக்கிறேன். சித்த மருத்துவம் பயில வருபவர்கள் பெரும்பாலும் சைவ மரபினராக, ’சைவப் பிள்ளைகளாக’ இருப்பார்கள். சித்தர்களின் பாடல்களுக்கு நிறைய உரை எழுதியவர்களும் பொருள் விளக்கம் தந்தவர்களும் சைவப் பட்டறிவை அடிப்படையாகக் கொண்டிருந்தவர்கள் தாம். அந்த உரை விளக்கங்களும் அதன் மொழியுமே அவர்கள் புழங்கி வந்த ஒரு மொழியில்தான் இருந்தன. அந்தப் பொருள் விளக்கங்களில் நிறைய குறைபாடுகள் நிகழ்ந்திருக்கின்றன. பகுத்தறிவார்ந்த சித்தர் பிரதியுடன் சைவப் பிரதி எங்கு ஒன்றாகக் கலந்தது என்பதை இன்று நாம் பிரித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அந்த முயற்சியை பெரிய அளவில் இன்னும் யாரும் செய்யவில்லை. தொ.பரமசிவன் அவர்கள் ஓரளவிற்கு அதை விளக்கக்கூடியவர். இன்னும் வரலாற்று நுணுக்கங்களோடும் மொழியியலாளர்களின் திறன்களோடும் சித்தர் தத்துவ, இலக்கியப்பிரதிகளில் உள்நுழைய வேண்டி இருக்கிறது. அப்பொழுது தான் வைதீகம் பிரதிகளில் நுழைந்த முறைகளையும் அடையாளங்களையும் பிரித்தறிய முடியும். வைதீகம் நுழைந்தன் வழி தான், பெண்மை நீக்கம், பெண் வெறுப்பு, உடலை இழிவாக நோக்குதல் போன்ற சிந்தனைகளும் ஊடுருவியிருக்க வேண்டும்.

புற:. சித்தர் அறிவு அதன் தூய நிலையில் சரியாகத்தான் இருந்திருக்கும் ..சாதியத்தின் பங்களிப்பினால்தான் அது திரிபடைந்தது என்கிறீர்களா... ?

குட்டி ரேவதி: ஆமாம், சோழர்கள் காலத்தில் சித்தர்கள் அழிக்கப்பட்டதாகவும், சித்தர்கள் சோழர்களுடைய கோயிலை குறிப்பாக அதன் உருவச் சித்திரங்களை அடித்து நொறுக்கியதாகவும் செய்திகள் இருக்கின்றன. சமீபத்தில், ராஜராஜ சோழனின் பெருமை பேசும் ஆயிரமாண்டு விழா கொண்டாடும் இன்றைய அரசியல் சூழலில், இதன் முரண்பாடுகள் எங்கே தொடங்கியிருக்கும் என்று யூகிக்க முடிகிறது தானே? இதற்கு மேல், இது குறித்துப் பேசும் ஆதாரப்பூர்வமான தரவுகளுடன் முன்வந்து விவாதிக்க விரும்புகிறேன்.

புற:. ஆனால் ஒரு பொது நினைவில் வரலாற்றின் நினைவில் சித்தர் என்பதற்கான ஒரு பெண்பாற் சொல்லோ..அந்த சித்து நிலையை எய்திய..அதில் ஆளுமை பெற்ற ஒரு பெண் ஆளுமையோ நமது பொது நினைவில் இல்லை. ஒரு ஆய்வுத் தன்மையில் பயணம் செய்தால் கூட இருக்கிற மாதிரி தெரியவில்லை..

குட்டி ரேவதி: ஆமாம். ஆனால் தாய்மை எனும் நிலையை சித்தர்கள் தீவிரமாகப் போற்றியிருக்கிறார்கள். பெண்மையின் இரு நிலைகளில் சித்தர்கள் பெண்களை முற்றிலும் மறுத்தார்கள் என்று கூற முடியவில்லை. பெண்மையை தங்கள் உடலோடு உறவாடும் இடத்தில் மட்டும்தான் அதை மறுக்கிற ஒரு தன்மை இருக்கிறது. ஆனால் பெண்மையின் இரு நிலைகளில் தாய்மை நிலையை அவர்கள் உயர்த்திப் பிடிக்கிறார்கள். ‘அன்னை இட்ட தீ அடி வயிற்றில் ‘ என்கிற பதத்தை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம். மேலும் இந்தப் பதினெட்டு சித்தர்கள் என்கிற வரையறை எல்லாம் ஆதிக்க சாதிகளிலிருந்து முன்னகர்ந்த சித்தர்களை மட்டுமே உள்ளடக்கியவர்களைப் பெரும்பாலும் கொண்ட பட்டியலாக இருக்கிறது. இதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. அவர்களிடம் சைவமயப்பட்ட வைதீகச்சிந்தனையைத்தான் நாம் காண முடியும். அவர்கள் தன் விந்துவோடு, விதையோடு வேறு சாதி அல்லது குலப்பெண் உறவு கொள்வதை மறுத்தார்கள் என்பதே காரணமாக இருந்திருக்கலாம். இதற்கு அவர்களது ஆதிக்க சாதிப் பின்புலம் ஒரு காரணம். ஆகவே இவர்களை மட்டுமே பிரதிநிதிகளாகக் கொண்டு நாம் சித்தர் மரபை மதிப்பிட முடியாது. இன்று சித்தர்கள் பற்றிய ஓர் ஆழமான ஆய்வு தேவைப்படுகிறது. மேலும், இயன்றவரை சித்தர்களின் பிரதிகள் எல்லா வடிவிலும் அழிக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. ‘ஆதிக்க சமூகத்தின்’ புறக்கணிப்பிற்கு சித்தர்கள் ஆளாகியிருப்பார்கள் தானே!

என்னுடைய முந்தைய தொகுப்புக்கு நான் ‘ யானுமிட்ட தீ’ என்று தலைப்பு வைத்திருந்தேன். இது நான் சித்தர்களிடம் இருந்து எடுத்துக்கொண்ட சொல்லாட்சிதான். தற்போதைய சூழலில் அந்தச் சொல்லின் மீது படிந்து கிளர்ந்தெழும் அத்தனை அரசியல் அர்த்தங்களின் பொருட்டும் தாம் நான் அதைப் பயன்படுத்துகிறேன். ஏனென்றால் ‘யானுமிட்ட தீ மூள்க மூள்கவே ’ என்பதை அதற்கு முன்பான மூன்று வரிகளின் தொடர்ச்சியில் வைத்துப் பார்க்கும் போதும், அதில் வரும் ‘தென்னிலங்கையில்’ என்கிற பதத்தை தொடர்ந்து இயங்கும் அசைகளும்.... அது ஒரு தீராத தீயாக புனைவுகள்தோறும் கடந்த கால வரலாறுகள்தோறும் எரிந்துகொண்டிருக்கும் நினைவு... அதில் ஈழம் என்பது தொடர்ந்து எரியும் ஒரு நிலத்திற்கான படிமமாக இலக்கிய நினைவுகளில் தோய்ந்து போய்க்கிடக்கிறது. மேலும் இச்சொல்லில், என்னுடைய சுயத்திற்கான மூலகங்களையும் உக்கிரங்களையும் சேகரித்து வைத்திருக்கிறேன்.. அது என்னோடு மட்டுமல்லாமல் அது என்னைத் தாண்டிக்கடந்து போகும் உத்வேகங்களாகும் தடங்களையும் சொல்லின் பின்னால் விட்டு வைத்திருக்கிறேன். இப்படி, ‘யானுமிட்ட தீ’, பல அர்த்தத் தளங்களில், பல அர்த்த நீரோட்டங்களுடன் விரிவு கொள்வதை நான் உணர்கிறேன்.

புற:. சித்தர் பாடல் தொகுதியாக்குதல் என்பது அதுவரைக்கும் இருந்த சிறுமரபுகள், இனக்குழு மரபுகள், திணை மரபுகள், குடி மரபுகள்..அதற்குள் இருந்த மருத்தவக் குடிகள் போன்ற நுண்மையான இயற்கை அறிவு கொண்ட மரபுகளை எல்லாம் முழுமையும் அழித்தொழித்த ஒரு ஒரு பெருமத அடையாள அறிவுத்திரட்டாக நடக்கிறது. அதில் பெண், பெண்மைத்துவம் என்பது பற்றிய விடுபாடு முக்கியமானதாக இருக்கிறது. இது பிறகு உருவாகப் போகிற பெருமத உருவாக்கத்திற்கும் அடிகோலிடுகிறது. அதிலிருந்ததுதான் நமக்கு அருணகிரினாதர், தாயுமானவர் , வள்ளலார் வரைக்கும் வருகிறார்கள் .. நீங்கள் கூறும் அந்த, ‘யானுமிட்ட தீ’ என்பது அதனுடைய மூலப்பொருளில் பார்க்கும்போது... ஓர் அன்னையுடைய மூத்த மகன் நான், தீக் கொள்ளியிடும் பொறுப்பு என்னுடையது. நான் துறவியாக போய்விட்டாலும் நான் கண்டிப்பாக வருவேன்..எனக் கூறும்போது..அது மறுபடியும் ஒரு வருணாசிரம தன்மையுள்ளதாக இருக்கிறது .இதைத்தாண்டி அறிவுத் தன்மைகள் அதற்குள் ஏராளமாக இருக்கிறது என்றாலும்...

குட்டி ரேவதி: ஏற்கெனவே நான் குறிப்பிட்டது போல, ‘யானுமிட்ட தீ’ என்பதை அதன் மூலஅர்த்தத்திலிருந்து மாற்றி நான் வேறொரு திசையில்தான் கையாளுகிறேன். அதன் அர்த்தங்களையும் அது எழுப்பும் குறியீடுகளையும் இன்றைய என்னுடைய பல விஷயங்களோடும் அரசியலோடும் வேறோர், இனவொழிப்பு நிகழ்ந்த நில எல்லைக்கான அர்த்த தளத்தில் மீண்டும் கட்டமைக்க விரும்புகிறேன். தொகுப்பின் கவிதைளுக்குள்ளிருந்து அதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். சித்த மரபுக்குள் நீங்கள் கூறுகிற பிரச்சனைகளும் பெருமத அடையாளத்தை நோக்கிய நகர்வும் சைவமயப்படுத்தல் என்கிற மூலத்தில் இருந்துதான் பிரதானமாக தொடங்குகிறது. அதை நானும் உங்களைப் போலவே தான்விமர்சிப்பேன்.

நான் சித்த மருத்துவம் பயின்ற காலங்களில் சித்த அறிவு, மருத்துவம் இவற்றைக் கற்பித்தலில் சைவத்தின் சாதிய அதிகாரங்களை பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன். திருநெல்வேலியில் இது ஓர் அன்றாட இயக்கமாகவே இருந்திருக்கிறது. திருநெல்வேலி பாளையங்கோட்டை கல்லூரி வளாகத்திலேயே இந்தப் பாகுபாட்டை பார்த்திருக்கிறேன். தெற்கிலிருந்து பல உதிரி சாதியினர் சித்த மருத்துவம் கற்க வருவார்கள். அவர்களுக்குத் தங்களுக்கு முந்தைய தலைமுறையினரோடு ஓர் அறிவு மரபுத் தொடர்ச்சியை ஏற்படுத்திக்கொள்வது முக்கியமாக இருக்கும். அது தவிர சைவப் பிள்ளைகளும் சைவ முதலியார்களும் தங்களுக்கேயான அறிவுத்துறையாக சித்த மருத்துவத்துறையை மாற்றுவதில் முனைப்புடன் ஈடுபட்டார்கள். கல்லூரியின் நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பல நிலைகளிலும் இந்த இரு பிரிவினருக்குமிடையேயான மோதலும் கசப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த அனுபவங்களை நானும் கடந்து வந்திருக்கிறேன். இது நான் குறிப்பிட்ட சைவக் கலப்பு என்கிற ஆதாரப் பிரச்சனையின் ஒரு விளைவுதான்.

இந்துப் பெருமத உருவாக்கம் அங்கிருந்து தான் தொடங்குகிறது. இன்னொரு விஷயம், சித்தர்களுடையது ஒரு மதம் அன்று. மதம் உள்ளே நுழைந்தாலே அது சிறு மரபுகள் எல்லாவற்றையும் அழித்துவிடும். ஏனென்றால் அது நிறுவனமயப்படுத்தப்பட்ட ஓர் அதிகாரக் கட்டமைப்பு. ஆனால் சித்தர்களுடையது ஓர் எளிய சிந்தனை. வாழ்க்கை நெறி! உடலைத் தவிர ஒரு மனிதனுக்கு ஏதும் உடைமை இல்லை என்பதை வலியுறுத்துவது. நோயில்லா வாழ்வுக்கான ஒரு தேடல். உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையிலான ஓர் இன்பமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை சித்தர்கள் சிந்தைப்படுத்தியிருக்கிறார்கள். பௌத்தமும் இதைச் சொல்கிறது. புத்தர், உங்கள் உடலை விட்டு நீங்கள் வெளியே போகாதீர்கள் என்கிறார். ‘நிச்சங் காரிய கதா சதி ‘. என்று கூறுகிறார். இது ஒரு பாலி தொடர். Always aware of your body frame…என்று பொருள். உங்கள் உடலுக்குள் நடக்கும் இயக்கம்.. அதனுடைய உணர்வுகள்... உங்கள் உடம்புக்குள் என்ன நிகழ்கிறது என்பது பற்றிய விழிப்பு நிலையை அது வலியுறுத்துகிறது...... உடல் , மனம், சிந்தனை, - இவற்றில் ஓர் ஆரோக்கியம், சமநிலை பற்றிய சித்தர் சிந்தனைகள் தொடர்ச்சியாக அதன் மூலம் கெடாமல் இருந்தது. அவர்களுக்குப் பின் வந்தவர்கள் அதைத் தத்துவமாக பின்பற்றினார்கள் என்றெல்லாம் நான் கூற வர வில்லை. சித்தர்கள் தங்களுடைய விஷயத்தை ஒரு தத்துவமாகவோ மதமாகவோ எங்கேயும் சட்டகப்படுத்தவில்லை. அது உதிரித்தன்மையோடுதான் இருந்தது. பெண்களை அவர்கள் நிராகரித்தார்கள் என்பதிலும் அதை நுணுகி விளக்குவதற்கு வரலாற்றின் நுணுக்கங்களோடு கூடிய எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்கிற பட்சத்தில் அவர்கள் பெண்ணுடலை தங்களுடைய உடலுக்கு உயிர் மேன்மைக்கு விரோதமான ஒன்றாக பார்த்தார்கள் என்பதை நாம் கடுமையாக ஆட்சேபிக்கத்தான் வேண்டும். திருநெல்வேலியில் சைவ சித்தாந்தக் கழகங்கள் எல்லாம் எப்படி வீறு கொண்டு இயங்கியது எனப் பார்த்திருக்கிறேன். 93 இலிருந்து 98 வரையிலான காலகட்டங்களில் கூட சைவத்திற்குள் இயங்கிய சாதியத்தை...அது செயலூக்கத்துடன் இருந்ததை நான் அறிந்திருக்கிறேன்.

புற:. நமது சூழலில் சமூக இயக்கங்களிலிருந்தும் நேரடியான களப்பணிகளிலிருந்தும் படைப்பாளிகள் விலகியே இருந்துள்ளனர், இன்று ஒரு படைப்பாளி ஒரு ஆக்டிவிஸ்டாக இருக்க வேண்டியதன் பொருத்தப்பாடுகள் என்ன ?

குட்டி ரேவதி: முந்தையை தலைமுறைக்கு கல்வி அதன் வழியாக எழுத்து, அதற்குப் பின்பான படைப்பாக்க வாய்ப்பு என்பதெல்லாம் ஆதிக்க சமூகத்திற்கானதாக இருந்தது. அதிலும் பார்ப்பனர்களுக்கும் அவர்களை அண்டிப்பிழைத்த ஆதிக்க சாதியினருக்கும் தான் எழுத்து என்பது வாய்த்தது.

அவர்கள் கற்பனையான விஷயங்களையும், மேலை நாட்டிலிருந்து இறக்குமதி செய்த விஷயங்களையுமே படைத்தார்கள்! அடுத்த தலைமுறைப் படைப்பாளிகள், பின் காலனித்துவ விளைவுகளால் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றார்கள். அதன் விளைவாகத் தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் இந்த தலைமுறைக்குக் கல்வியும் எழுத்தும் கிடைத்தது.

பார்ப்பனர்களின் வீடுகளும் சமூகமும் மூன்றாம் தலைமுறை கல்வியையும் பொருளாதார வசதியையும் பெற்றுக்கொண்டிருக்கும் போது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முதல் தலைமுறையோ இரண்டாவது தலைமுறையோ தான் இப்பொழுது எழுத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர்களுக்கு இல்லாத பொறுப்பும் அக்கறையும் உழைப்பும் நமக்கு வேண்டியிருக்கிறது. ஆதிக்க சமூகத்திற்கு எல்லாமே ஆவணமாக வரலாறாக இருக்கிறது. நமக்கு எல்லாமே வாய்மொழியாகவே இருக்கிறது. இதை நிலைநிறுத்த நாம் அதிகமும் போராடவேண்டியிருக்கிறது!

எழுத்துக்கு வாய்ப்பு கிடைத்த நம் சமூக ஆள், ஒற்றை மனிதன் அன்று. அவன் ஒரு சமூகத்தையே முன்னிறுத்துகிறான். ஓர் ஆதிக்க சாதிப்படைப்பாளிக்குத் தெருவிற்கு வரவேண்டிய அவசியம் இராது. ஆனால், சிவகாமியால் அப்படி இருக்க இயலாது. அழகிய பெரியவனால் அப்படி இருக்க இயலாது. காலங்காலமாக சாதிய அதிகாரங்களைச் சுகித்த ஆதிக்கசாதிப்படைப்பாளிகள் எழுத்தில் செய்யும் சூழ்ச்சிகளை முறியடிக்கவும் வெல்லவும், அழகிய பெரியவன் போன்ற நாம் எல்லா தளங்களிலும் நின்று போராட வேண்டியிருக்கிறது.

இன்னும் இரண்டு தலைமுறையாவது தொடர்ந்து போராடினால் தான் நம் மக்கள் கொஞ்சமேனும் வாழ்வின் விடுதலையை நுகரமுடியும். நீங்கள் எந்த சாதிப் பின்புலத்திலிருந்து வந்தவர் என்று தெரியாது! ஆதிக்க சாதியினர் படைப்பிற்கும் அந்தப் பணிக்கும் ஒரு அதி மேதாவி நிலையைக் கொடுக்கின்றனர். ஆனால், நமக்கு படைப்பு தான் மூச்சு, ஆயுதம், போராட்டம், ஆவணம், மரபு!

மற்ற துறை பணியாளர்களிடமிருந்து, எழுத்தாளன் வேறுபட்டவன். மொழியின் பிரக்ஞைக்கும், எழுத்தின் பண்பாட்டுக்கும் தன்னை ஒப்படைத்துக் கொள்கிறான். மற்ற துறைகளைப் போன்றதொரு துறையாக எழுத்துப்பணி இருக்கமுடியாது! அதற்காக எழுத்தாளனை நான் சிம்மாசனத்திலும் இருத்த வில்லை ! அவனுக்குத் தெருவில் இறங்கிப் போராடவேண்டியதற்கான அவசியமும் வல்லமையும் அதிகம்!

புற:. நீங்கள் புகைப்படம், திரைப்படம் என காட்சிப்புல கலைவடிவங்களிலும் இயங்குகிறீர்கள்..இந்த நேர்காணலின் தொடக்கத்தில் அறம் பற்றிய உங்கள் பார்வையையும் உங்கள் எழுத்தில் அதை எப்படி அர்த்தப் படுத்துகிறீர்கள் என்பது பற்றியும் பேசினீர்கள். புகைப்படம் போன்ற ஒரு கட்புல கலைக்குள் அது எத்தகைய தன்மைகளோடு வெளிப்பாடு கொள்கிறது, அர்த்தப்படுகிறது எனக் கூறமுடியுமா ?..

குட்டி ரேவதி: லாரா முல்வி என்ற பெண்ணிய திரைப்படக் கோட்பாட்டாளர் சொல்லும் விஷயங்கள் கவனிக்கத்தக்கவை. இதுவரைக்குமான சினிமா, போட்டோகிராபி சம்பந்தப்பட்ட கலைச்சொற்கள்...எல்லாமே ஷாட், டார்கெட் என ராணுவச் சொற்களாக இருப்பதைப் பார்க்கிறோம்..இது ஓர் ஆண் ஆதிக்க பண்பாட்டிற்குரியதாகவும் இருக்கிறது. ஒரு நடிகை நடிக்கிறாள் என்றால் அவள் மூன்று ஆண்களின் வழியாக பார்க்கப்படுகிறாள் என்கிறார், லாரா முல்வி. இயக்குனர், கேமிராமேன், மற்றும் காமிராவின் கண்... நம்முடைய வணிக சினிமாவில் காமிராவின் நகர்வு ஓர் ஆண் மனநுகர்வின் அடிப்படையில்தான் இருக்கிறது. ஒரு பெண்ணினுடைய புட்டம் அல்லது முலைகள் தெரிவது போலத்தான் காமிரா நகர்கிறது. சினிமாவில் அறம் என்பது, காமிராவின் முன், அதில் பதிகிற ஒருவருடைய தன்னுணர்வை மதிப்பதாக இருக்க வேண்டும். ஆனால், அவரை ஒரு பொருளாகக் கையாளும் தன்மைதான் இருக்கிறது. ஒரு பூவை காமிரா முன் வைக்கும்போது அதனிடம் எந்த அனுமதியோ அனுசரனையோ தேவை இல்லை. அதே மாதிரியான ஒரு தன்மையில் தான் பெண்களும் காமிராவின் முன் வைக்கப்படுகிறார்கள்..இதில் மாற்றம் வரவேண்டும் என்றால் ..பெண்கள் சினிமாவுக்குள் நடிப்பவர்களாகவோ, தயாரிப்பவர்களாகவோ போவதைக் காட்டிலும், .சினிமா இயக்குனர்களாக அந்தக் கருத்து வடிவத்தை உருவாக்குபவர்களாக அந்தப் படைப்பாக்கத்தில் பங்குபெறுபவர்களாக போனால்தான் சாத்தியம். தற்கால சினிமாவை பெண் கையாளுவது என்பதில் நிறைய சிக்கல்களும் இருக்கின்றன....இலக்கியத்தில் மிகவும் தேர்ந்தவர்களால்கூட சினிமாவைக் கையாள முடியாமல் போயிருக்கிறது...இது இரண்டுமே வேறு வேறு அனுபவங்களை உங்களிடம் கேட்கிற ஒரு கலைவடிவமாக இருக்கிறது.

மரபார்ந்த புகைப்படக் கலையின், கட்புலக் கலையின் தன்மை வேட்டையாடுவது போலத்தான் நிகழ்கிறது. அதைத் தவிர்த்து ,நாம் யாரை புகைப்படம் எடுக்கிறோம் அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து வருகிறார்கள் என்பது பற்றிய ஓர் அறிதல் , விழிப்புணர்வு நமக்குத் தேவை... Dogme 95 என்றொரு சினிமா இயக்கம் 1995 - ல் உருவானது. அதில் சில விதிகளைப் பரிந்துரைத்தார்கள். தேவைக்கதிகமான விளக்குகளை பயன்படுத்தக்கூடாது, பதியப்படும் நபரின் எளிமைகளை அலங்காரங்களின் வழியாக சிதைக்கக்கூடாது, காமிராவை ஸ்டாண்டில் வைத்து அதற்குள் அவர்களைச் சட்டமிட்டுத் திணிக்கக் கூடாது, அவர்களுடைய இயக்கங்ளுக்கு ஏற்ப நெகிழ்ந்து கொடுக்க வேண்டும் என அவற்றில் சிலவற்றைக் குறிப்பிடலாம், dogme 95 ஒரு நூற்றாண்டுகால சினிமா வரலாற்றில் எழுச்சிமிக்க இயக்கமாக இருந்தது, லார்ஸ் வாண் டிரையர் போன்ற சிறப்பான இயக்குனர்கள் அவ்வியக்கத்திலிருந்து உருவானார்கள். இலக்கியம், சினிமா, ஓவியம் என எல்லாக் கலைவடிவங்களிலும் ஒரே மாதிரியான கருத்தியல் புரட்டல்களை நிகழ்த்திய, அதாவது ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களை, உணர்ச்சிகளை, படிமங்களை முன்வைக்கும், அவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கும் நெறியுணரும் காலக்கட்டத்திற்கு நாம் வந்திருக்கிறோம்.

நேர்காணல்: ரவிச்சந்திரன், பிரவீண், ராஜ், கஜேந்திரன், ஜே.ஜெய்கணேஷ்

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.