வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நாட்டுப்புறக் கலைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் நடைபெறும் நாட்டுப்புறம் சார்ந்த சார்ந்த நிகழ்வுகளின் ஒளி / ஒலித்தொகுப்பினையும், கட்டுரைகளையும் இந்தப் பகுதியில் காணலாம்.
 
 

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
நாட்டுப்புறக் கலைகள்
1
 
 
  அறிவிப்பு
 
  நாட்டுப்புறக் கலைகள் குறித்து இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் பெயர் குறிப்பிடப் படாத கட்டுரைகள் பல்வேறு இணையதளங்கள், மின்னஞ்சல் குழுமங்கள், அச்சு ஊடகங்கள் போன்றவற்றில் இருந்து தொகுக்கப்பட்டவை. அவர்கள் எல்லோருக்கும் எங்களின் நன்றிகள்.  
  ---------------------------------  
 

 

 

 
     
     
 

 

 
     
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  நாட்டுப்புறக் கலைகள் நாட்டுப்புறக் கலைகள் வாயில்

விளையாட்டுகள் - 2

   

பாரிவேட்டை :

பாரி என்றால் கொட்டு முழக்கத்துடன் செய்யும் இராக்காவலைக் குறிப்பதாக உள்ளது. பாரி வேட்டையிலும் கொட்டு முழக்கத்துடன் இரவில் வேட்டைக்குச் செல்லும் பழக்கமிருக்கிறது.வனவிலங்குகளின் தொல்லைகளிலிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக இரவில் காவலிருக்கும் பண்டைய பழக்கமே பாரி வேட்டையாக நிலவுகிறது. பாரி வேட்டை தற்போது தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் பிரான் மலையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விழாவாக நடைபெறுகிறது. மாசி மாதத்தில் சிவராத்திரிக்கு மறுநாள் பாரி வேட்டைக்குச் செல்வது வழக்கம்.

இவ்வேட்டை வினை கருப்பணசாமி, அய்யனார்சாமி போன்ற வேட்டைக்காரச் சாமிகளின் வழிபாட்டுடன் தொடர்பு டையதாகவும் இருக்கிறது.

விழா நாளன்று வேட்டைக் கொம்பினால் ஒலி எழுப்பப்படும். அப்போது வேட்டைக்குச் செல்வோரெல்லாம் ஒருங்கே கூடிவிடுவர். கலந்து கொள்பவர்கள் பூசைப் பொருட்களையும் சமையல் பொருட்களையும் உடன் கொண்டு வருவர். வேட்டைக்காரசாமியினை வழிபட்ட பின் மலைப் பகுதிக்குச் செல்வர். உடன் கம்பு, ஈட்டி, அரிவாள் போன்ற ஆயுதங்களையும் எடுத்து வருவர். வேட்டைநாயும் உடன் வருவதுண்டு. முதல் வேட்டையில் முயல் சாய்ந்ததாகக்
கொள்ளலாம். அதன் தலையினைத் திருப்பி ஒரு புல்லினை எடுத்து அதன் வாயில் வைப்பர். இப்புல்தான் முயலின் வாழ்வில் கடைசிப் புல் என்பதைச் சுட்டுவதற்காகவே இச்செய்கை மேற்கொள்ளப் படுகிறது.

முயலினை வேட்டையாடியவர் முயலின் காதளவுவைத்துக் தலையினை வெட்டிக் கொடுப்பார். இதற்கு 'தரம்' என்று பெயர். இவ்வாறே வேட்டையாடிய மற்றவற்றிலிருந்தும் தலையை மட்டும் வெட்டி எடுப்பர். முயலின் வயிற்றினைக் கிழித்து, ஈரலை மட்டும் வெளியே எடுத்துக் கம்பியில் கோர்த்துத் தீயில் வாட்டுவர். பின் அதனைப் பூசைப் பொருளாக வைத்து வேட்டைக்காரச் சாமியை வழிபடுவர். வேட்டை கிடைத்தமைக்கு நன்றி சொல்வர். இன்னும் அதிக வேட்டை கிடைக்க வேண்டும் என்று விரும்பி ஈரலைப் பிய்த்து நான்கு திசைகளிலும் நான்கு துண்டுகளை எறிந்து விடுவர்.

வேட்டையாடிய விலங்குகளின் தலைக்கறியினையெல்லாம் ஒன்று சேர்த்து, எடுத்துச் சென்ற சமையல் பொருட்களை வைத்து உணவு தயாரிப்பர். வேட்டையாடிய விலங்குகளின் உடல் கறியைக் கொண்டு வந்து கிராமத்து மக்களுக்கும் பகிர்ந்தளிப்பர். வேட்டையின் போது புலி, சிறுத்தை, கரடி போன்ற கொடிய விலங்கினைக் கொன்றிருந்தால், கிராமத்திற்கு வந்து வண்டியில் அவ்விலங்கினைத் துக்கி நிறுத்தி தாரை, தம்பட்டை முழங்க ஊரெல்லாம் சுற்றி வருவர். தங்கள் வீரத்தினைக் காட்டுவதற்காக இப்படிச் செய்கின்றனர். பழங்காலத்தில் அரசர்கள், குறுநில மன்னர்கள், ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் ஜமீன்தார்கள் பாரி வேட்டையினைத் தலைமையேற்று நடத்தினார்கள்.

சிலம்பம் :

சிலம்ப விளையாட்டு கம்பு விளையாட்டென்றும், நெற்றிப்பொட்டுக் கம்பு விளையாட்டென்றும், உயில் சிலம்பு என்றும் அழைக்கப் படுகிறது. தமிழ்நாட்டில் சிலம்பம் என அழைக்கப்படும் இவ்வீர விளையாட்டு, மராட்டிய நாட்டில் லாட்டி என்றும், குஜராத்தில் டால்லக்கடி என்றும், வங்காள நாட்டில் லாடிகீலா என்றும், கர்நாடகாவில் தண்டா வரிசை என்றும், ஆந்திராவில் கரடி ஆட்டம் என்றும், கேரளாவில் நெடுவடி என்றும் அழைக்கப் படுகிறது. சிலம்புதல் என்றால் ஒலித்தல் என்று பொருளாகும். கையிலுள்ள கம்பினை அடித்து ஒலியெழுப்பி விளையாடப் பெறுவதால் இவ்விளையாட்டு சிலம்பு என்று பெயர் பெற்றது. சிலம்ப விளையாட்டு பயிற்சி நிறைந்த வீரவிளையாட்டு ஆகும். இதற்கான பயிற்சியைத் தருபவர் சிலம்ப வாத்தியார் என்றழைக்கப்படுகிறார். சிலம்ப வாத்தியார் நம்பிக்கையானவர்க்கு மட்டும் சிலம்ப விளையாட்டைக் கற்றுத் தருவார். இவ்வாறு ரகசியக்கலையாக சிலம்ப விளையாட்டு போற்றப்படுவதால், இவ்விளையாட்டு வளர்ச்சியடையவில்லை எனலாம். விளையாட்டில் ஈடுபடுவதற்கு நீளமான கம்பு வேண்டும். விளையாடுபவரின் உயரத்திற்களவாய்க் கம்பின் நீளம் இருக்கும். பெரும்பாலும் மூங்கில் கம்புகளையே பயன்படுத்துவர்.

கம்பு வீசுந்திறன், காலடி எடுத்து வைக்கும் முறை, வேகமாகச் செயல்படும் திறமை இம்மூன்றும் சிலம்ப விளையாட்டின் அடிப்படைக் கூறுகளாக உள்ளன. இக்கூறுகள் அனைத்தையும் கைவரப் பெற்றவர் 'வீடுகட்டுதல்' என்ற முறையில் தேர்ச்சி அடைந்தவராகிறார். பகைவர் கம்பு தன் உடல் மேல் படாத வண்ணம் தன் கம்புவீச்சுத் திறமையால் தடுத்தலை வீடுகட்டுதல் என்றும், கோட்டை கட்டுதல் என்றும் சொல்வர். விளையாட்டின் துவக்கத்தில் வணக்கம் செலுத்துதல் என்ற முறை உண்டு. முதலில் இறைவணக்கமும், அடுத்து குருவணக்கமும் இடம் பெறும். போட்டி விளையாட்டாக இருந்தால், எதிர்த்து விளையாடக் கூடியவர்க்கும் வணக்கம் செலுத்துவர். இது தமிழர் விளையாட்டின் சிறப்பு முறையாக வழங்கி வருகிறது.

எதிரியின் கம்பு தன் உடல் மேல் படாமல் தடுத்தல், தன்னுடைய கம்பினால் எதிரியின் உடலைத்தொடுதல் ஆகிய செயல்களைக் கொண்டு வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. கம்பின் நுனியில் வண்ணப் பொடியினைத் தடவியிருப்பர். சிலம்பம் போட்டியில் விளையாடுபவர்களின் உடலில் எத்தனைத் தடவைகள் கம்பின் நுனி பட்டிருக்கிறது என்பதனை வண்ணப் பொடியின் துணைக் கொண்டு கணக்கிட்டும் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பர். தமிழகத்தில் சிலம்ப விளையாட்டு தற்காப்பு கலையாகவும், வீரவிளையாட்டாகவும், விழாக் காலங்களில் கேளிக்கையாட்டமாகவும், பாடல்பாடியும் விளையாடப் பெறுகிறது.

புலிவேடம் :

இது வீரவிளையாட்டான சிலம்பத்தின் இன்னொரு வடிவமாகும். விளையாடுபவர்கள் உண்மை யிலேயே புலி வேடந்தரித்து ஆடுவதால் இவ்விளையாட்டுக்குப் புலிவேடம் என்று பெயர் வந்தது.சிலம்ப விளையாட்டில் தனக்கு நிகர் எவருமில்லை என்றகுறிப்பினை வெளிப்படுத்துவது இவ்வீர விளையாட்டின் நோக்கமாக அமைகிறது.

புலிவேடமிடுபவர் கையில் புலிநகம் மாட்டியிருப்பர். உடல் முழுவதும் புலியினைப் போல வரிக்கோடுகள் போடப்பட்டிருக்கும். இரும்பு வளையத்துடன் கூடிய நீண்ட வாலினை இடுப்பில் கட்டியிருப்பர். இவ்வாலைப் பிடிப்பதற்கென ஒருவர் பின்னால் நிற்பார். வேடமிடுபவர் ஆடும் ஆட்டத்திற்கேற்ப முன்னும் பின்னும் அவர் நடந்து கொடுக்க வேண்டும். எனவே, வால்பிடிப்ப வரும் சிலம்பப் பயிற்சியில் தேர்ச்சி அடைந்தவராக இருப்பர். இன்னொருவரும் புலிவேடமிட்டிருப்பார். ஆனால் இவருக்கு வால் பிடிப்பதற்கென யாரும் இருப்பதில்லை. எனவே, இவர் ஒண்டிப்புலி என்று அழைக்கப்படுகிறார்.
இரண்டு புலிகளுக்குமிடையே மோதல் வந்து விடக்கூடாது என்பதற்காக மூங்கில் கம்பினைக் குறுக்கே வைத்துப் பிடித்தபடி இருவர் நிற்பர்.

சிலம்புப் பயிற்சி அளித்த ஆசிரியர் வீட்டிலிருந்து ஆட்டம் துவங்கும். நகர் மொட்டு என்றவாத்தியத்தின் ஒலிக்கேற்ப புலியாக இருப்பவரும், ஒண்டிப் புலியாக இருப்பவரும் பாவனை விளையாட்டுகளில் ஈடுபடுவர். பாவனை விளையாட்டுகள் சிலம்பப் பயிற்சியுடன் தொடர்புடைய தாக இருக்கும். சில சமயங்களில் கெளரவப் பிரச்சினைகள் ஏற்பட்டு இருபுலிகளாக இருப்பவர் களுக்கும் மோதல் வந்துவிடவும் கூடும். அச்சமயம் ஒண்டிப் புலிக்காரர் பக்கத்தில் ஓர்ஆடு நிறுத்தப்பட்டிருக்கும். புலி வேடமிட்டவர் நடுவிலுள்ள கம்பினைத் தாண்டி வந்து, அவ்வாட்டினைப் பல்லினால் கடித்துத் தன்பக்கம் துக்கியெறிய வேண்டும். ஆட்டினைத்துக்க விடாமல் ஒண்டிப்புலிக்காரர் கம்பு வீச்சினால் தடை செய்வார். புலியாக இருப்பவர் தன் கம்பு வீச்சுத் திறமையால் தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து செயல்பட வேண்டும்.

சிலம்ப விளையாட்டில் தன்னை யாராலும் எதிர்க்க முடியாது அல்லது எதிர்த்தாலும் வெல்ல முடியாது என்று நினைப்பவர் புலிவேடத்தின் போது இரட்டை வாலினைக் கட்டுவதுண்டு. அச்சமயம் உள்ளூர் காரரோ, விழாவினைப் பார்க்க வந்தவரோ போட்டிக்கு இழுத்தால் போட்டி விளையாட்டு துவங்கி விடும். விழாக் காலத்தில் நடைபெறும் இவ்வாட்டம் சிலம்ப வாத்தியாரின் வீட்டிலிருந்து துவங்கி கோயிலுடன் முடிவு பெற்று விடும். போட்டியாட்டத்தில் ஈடுபட்ட வராயிருந்தால் மனவேற்றுமை நீங்கி ஒன்றாகத் தெய்வத்தினை வணங்குவர்.

சடுகுடு :

இவ்விளையாட்டு பலிஞ்சடுகுடு எனவும், பலீன் சடுகுடு எனவும் வழக்கில் வழங்கப் பெறும். பலிஞ்சப்பளம் என ஆந்திராவிலும், வங்காளத்திலும், குடுடுடூ என மகாராட்டிரத்திலும் அழைக்கப்பட்டு வருகிறது.

பழந்தமிழ்நாட்டில் அரசர்களிடையே நிரைகளைக் கவருபவர் (வெட்சித்திணை) கவரப்பட்ட நிரைகளை மீட்பவர் (கரந்தைத் திணை) என இரு கட்சியினர் இருந்தனர். இது தரப்பினருக்குமிடையே அவரவர் நாட்டின் எல்லைக் கோடு அமைந்திருக்கும். நிரை கவர வருபவர்களை வரவிடாமல் வீரர்கள் காவல் காத்து நிற்பர்.

காவலைக் கடந்து நிரையினைக் கவர்ந்து வருதல் வேண்டும். நிரைகளை (மாட்டு மந்தையை) கவர வருபவர் தம்மை வளைத்துப் பிடிக்கும் எதிர்கட்சி வீரரிடம் போரிட்டுத் திரும்ப மீள்வர். மீறிவந்து தம் நாட்டு எல்லையினை அடைந்து விட்டால் எதிர்படையினர் ஒன்றும் செய்ய இயலாது. மாறாக, எல்லைக் கோட்டை அடையும் முன் பிடிபட்டு விட்டால் சிறையிலிடப்படுவார். போர் முடிந்தவுடன் சிறைபட்ட வீரர் மறுபடியும் தம் நாட்டை அடைவர். நிரைகவர அல்லது நிரை மீட்கச் சென்றதால் ஏற்பட்ட போரின் முடிவு வெற்றி அல்லது தோல்வியில் முடிவுறும். போருக்கு செல்வதற்கு முன் தங்கள் பக்கமே வெற்றி கிட்ட வேண்டுமென்று இருதரப்பினருமே காளியை வணங்கினர். இச்சமயம் சடுகுடுப்பை அல்லது குடுகுடுப்பை என்ற பறையால் ஒலியெழுப்பி, பலி கொடுத்து வழிபட்டனர். இப்போர்ச் செயல் பாட்டின் தொடர்ச்சியால் பலிஞ்சடுகுடு என்ற பெயர் கொண்ட விளையாட்டு பழந்தமிழரிடையே உருவானது. இன்றும் தமிழ்நாட்டு கிராமங்களில் விளையாடப்படுகிறது. வரையறுக்கப்பட்ட ஆடுகளத்தில் இருகட்சியினரையும் பிரிக்கும் விதமாய் நடுக்கோடு வரையப்பட்டிருக்கும். விளையாடுகையில் சடு...குடு...குடு என்றோ கிராமத்துப் பாடல்களையோ, வேறு நையாண்டிப் பாடல்களையோ மூச்சை அடக்குவதற்காகப் பாடுவது மரபாக உள்ளது. நடுக் கோட்டிலிருந்து பாடிப் போகிறவரை எதிர்கட்சிக்காரர்கள் பிடித்து விட்டால் அவர் களத்திலிருந்து வெளியேறி விடவேண்டும். பாடிப்போனவர் எதிர்க்கட்சிக்காரரைத் தொட்டு விட்டு பிடிபடாமல் மூச்சடக்கி வந்து நடுக்கோட்டினைத் தொட்டு விட்டால், தொடப்பட்டவர் களத்திலிருந்து வெளியேறிக் கொள்ள வேண்டும். பாடிப்போகிறவர் பாடும் பாடல்களுக்கு எடுத்துக்காட்டுகள் கீழ்வருமாறு:

(1) சடுகுடு மலையிலே ரெண்டாளு
அதிலே ஓராளு குண்டாளு
அக்கா புருஷன் கோமாளி
தங்கச்சி புருஷன் தக்காளி..... தக்காளி

(2) நான்தான் ஒப்பன்டா
நல்லமுத்து பேரண்டா
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வாரெண்டா
தங்கச் சிலம்பெடுத்து
தாலிக்கட்ட வாரென்டா...வாரென்டா

ஆடவர் விளையாட்டான சடுகுடு சிறுவர்களிடையேயும் இடம் பெறுகிறது. பழந்தமிழர் காலத்திலிருந்து விளையாடப் பெறும் சடுகுடுவின் தொடர்ச்சியாய் தற்போதைய விளையாட்டான கபடி விளங்குகிறது. கபடி விளையாட்டு இப்போது உலகம் முழுவதும் விளையாடப்படுகிறது. விளையாடுகையில் மூச்சினை அடக்குவதற்கு கபடி....கபடி என்ற பொருளற்ற சொல் பாடப்படுவதால் இவ் விளையாட்டு கபடி என்று பெயர் பெற்றது. உலகப் பொதுவான விதிமுறைகள் கொண்டு கபடி விளையாட்டு திகழ்கிறது. இந்திய கபடி அணியில் இடம் பெற்றிருக்கும் தலைச்சிறந்த வீரர்கள் தமிழ்நாட்டைச் சாந்தவர்களாகவே உள்ளனர். இந்திய அணி தற்போது உலகிலேயே முதலிடம் வகிக்கும் சிறந்த அணியாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. தமிழ் நாட்டு கபடி வீரர்களின் பங்கேற்பால் இந்தியணி உலக அளவில் விளையாடி பலமுறை தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

இளவட்டக்கல் :

இது ஒரு திறன் சோதிக்கும் விளையாட்டாகும். மறவர் இனத்தவர் மணவினை கொள்வதற்கு இவ்விளையாட்டைப் பயன்படுத்துவர். முறைப் பெண்ணினைத் திருமணம் செய்வதற்கும் விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்வதற்கும் இத்திறன் சோதிக்கும் விளையாட்டு தேர்வு நிலையாக உள்ளது. ஒரு பெண்ணினைப் பலரும் விரும்புவர். அப்போது பெண்ணின் தந்தை'யார் இளவட்டக் கல்லினைத் துக்கி உயர நிறுத்துகிறாரோ? அவருக்கு என் பெண்ணைத் தருவேன்' என்று அறிவித்து விடுவார்.

விழாக்காலத்தில் ஊருக்குப் பொதுவான இடத்தில் இதற்கான போட்டி நடைபெறும். போட்டியில் கலந்து கொள்பவர் இளவட்டக் கல்லைத் துக்கித் தலைக்கு மேலே பிடித்துக் கீழே போட வேண்டும். இவ்வாறு செய்தவர் வென்றவராகக் கருதப்படுவார். கிராமத்துப் பெரியவர் இதற்குப் பஞ்சாயத்துக்காரராக முன்னிற்பார். இவர் கூறும் நடுநிலைத் தீர்ப்பே இறுதியானதாக இருக்கும். பண்டைக் காலத்திய மக்களுக்குக் கையினால் பெரிய கல்லினைத் துக்குவதும் நகர்த்துவதும் வாழ்க்கையோடு சேர்ந்த தேவையாய் இருந்தது. நாகரிக வளர்ச்சியில் அத்தேவை இல்லாமல் போகவே, அதுவே உடல்திறன் காட்டும் விளையாட்டாக வளர்ந்தது.

மறவர் இனத்தவர் பணம், நகை போன்றவைகளை முதன்மையாக கருதுவது இல்லை. பெண்ணை மணந்து கொள்கின்றவன் உடல்திறன் உடையவராக இருக்க வேண்டுமென்பதையே விரும்புவர். அவ்வடிப்படையில் இன்றளவும் அவர்களிடையே நிலை பெற்றிருக்கிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்திலும் அதன் சுற்றுபுறங்களிலும் இவ்விளையாட்டு நிலவி வருகிறது.

ஓட்டம் :

சிறுவரால் பொழுது போக்க ஆடும் தொடுதல் விளையாட்டின் செய்கையே ஓட்டம் விளையாட்டிலும் இடம் பெற்றாலும், உடல் திறனை தேர்வு செய்வதே ஓட்டம் விளையாட்டின் நோக்கமாக இருக்கிறது. திருமணம் நடந்த ஆண்டில் புதுமணப்பெண் ஆடி மாதத்தில் அவள்தாய் வீட்டிற்கு வருதல் கள்ளர், மறவரிடையே இன்றளவும் வழக்கத்திலுள்ளது. மாதத்தின் இறுதி நாளன்று இப்போட்டி விளையாட்டு நடத்தப்படும்.

அவ்வூரிலேயே திறமையாக ஓடுபவர்களுக்கும் புதுமணமகனுக்கும் இடையில்தான் போட்டி அமைந்திருக்கும்.

புதுமணமகன் முன்னால் நின்று கொள்ள, உள்ளூர்காரர் பின்புறம் நின்று கொள்வார். கூட்டத்தில் பொதுவாக இருப்பவர் ஓடுவதற்குச் சைகை காட்டியவுடன் இருவரும் குறிப்பிட்டத் துரத்தினை ஓடிக் கடந்து வர வேண்டும். பின்னால் வருபவரைத் தொட விடாமல் ஓடிக் கடந்து வந்தால் மணமகன் திறன் உடையவர் என்று கருதப்படுவார். பழங்காலத்திலிருந்தே நிலவி வரும் இவ்விளையாட்டைத் தற்கால ஓட்டப் பந்தத்துடன் இணைத்துப் பார்க்கலாம்.

இரட்டை மாட்டுப் பந்தயம்:

இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட சிறு தட்டுவண்டியினை இப்பந்தய விளையாட்டில் பயன்படுத்துவர். குறிப்பிட்ட துரத்தினை இத்தட்டு வண்டியின் மூலம் முதலில் கடந்து திரும்பி வருவது பந்தயத்தின் நோக்கமாக உள்ளது. கிராமிய தேவதைகளின் வழிப்பாட்டு விழாவினை ஒட்டி இவ்விளையாட்டும் நடைபெறும்.

பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு வண்டிக்கும் இரண்டு பேர் இருக்கலாம். ஒருவர் வண்டியினை ஓட்டுபவர். இன்னொருவர் உதவியாளர். ஓட்டுபவருக்கு உதவியாளர் திறமையுள்ளவராக அமைய வேண்டும். ஏனெனில் ஓட்டுபவர் வண்டியில் உட்கார்ந்து கொண்டு காளைகளை விரட்டி ஓட்டிக் கொண்டிருப்பார். உதவியாளர் வண்டியில் ஏறாமல் பின் தொடர்ந்து ஓடி வர வேண்டும். மாட்டின் வேகத்தினை அதிகப்படுத்த ஓட்டுபவர் பல உத்திகளைக் கையாள்வார். கூர் ஆணி வைத்த தார்க்குச்சியினைக் கொண்டு மாட்டின் குதப்பகுதியில் குத்துவார். வலி தாங்காத காளைகளும் வேகமாக ஓடும்.

பந்தயத்தில் கலந்து கொள்ள நினைப்பவர் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், கலந்து கொள்ளும் வண்டிகளின் எண்ணிக்கையில் வரையரையேதுமில்லை. பந்தயத்தில் வெற்றி பெற்றவருக்குக் கிராமத்தலைவர் பரிசுகளை வழங்குவார். குதிரைப் பந்தயத்திற்கு நகரத்தார் எவ்வளவு முதன்மை கொடுக்கின்றனரோ அது போல கிராமத்தார் மாட்டுப் பந்தயத்திற்கு முதன்மை கொடுக்கின்றனர்.

மோடி விளையாட்டு:

உடல்திறனைச் சார்ந்த விழாக்கால விளையாட்டுகளில் மோடி விளையாட்டும் ஒன்று. மதுரை வட்டாரப் பகுதியில் தேவாங்குச் செட்டியார் என்ற வகுப்பினரிடையே இவ்விளையாட்டு வழக்கத் திலுள்ளது. சவுண்டம்மன் வழிப்பாட்டின் போது, பொங்கல் முடிந்த மறுநாள் இவ்விளையாட்டு நடத்தப்படும். பொங்கல் முடிந்த மறுநாள் காலையில் மஞ்சள் நீர் தெளித்து விளையாடுவர். மாலையில் மோடி விளையாட்டு இடம் பெறும்.

கோவில் பூசாரிகள் மட்டுமே இவ்விளையாட்டில் கலந்து கொள்ள இயலும். இரண்டு பூசாரிகள் எதிரெதிரே நின்று கொள்வர். இவர்களுக்கிடையே தேங்காய், உலக்கை, முட்டை, வாழைப்பழம், ஆட்டுக்கால், வாழைத்தண்டு, கரகம் ஆகிய ஏழு பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும். ஒரு பூசாரி இப்பொருட்களையெல்லாம் எதிர்ப்பூசாரி எடுக்கவியலாதவாறு பாதுகாப்பார். இன்னொரு பூசாரி இப்பொருட்களை ஒவ்வொன்றாய் எடுத்துவர முயலுவார். பொருள்களை எடுக்கும் பொழுது குட்டிக்கர்ணம் போட்டுக் கொண்டே போக வேண்டும். எடுத்து வரும் போதும் குட்டிக்கர்ணம் போட்டுக் கொண்டே வர வேண்டும்.

பொருட்களைப் பாதுகாக்கும் பூசாரி, பொருளினை எடுக்கும் போது விபூதியினைப் போட்டு விடுவார். எடுக்கும் பூசாரி மேல் விபூதி பட்டுவிட்டால் அவர் இறந்தவர் போல கீழே விழுந்து விட வேண்டும். யாராவது ஒருவர் அவரைத் துக்கி வந்து அவர் இடத்திற்குக் கொண்டு வர வேண்டும். மறுபடியும் அவர் முன்போலத் தொடருவார். இவ்வாறு ஏழு பொருட்களையும் தன்னுடைய பக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டால், விளையாட்டு முடிவுற்றதாகக் கருதப்படும். விபூதி பயன்படுத்தப்படுவதால் மோடி விளையாட்டு என்றால் மந்திர விளையாட்டு என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</