வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நாட்டுப்புறக் கலைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் நடைபெறும் நாட்டுப்புறம் சார்ந்த சார்ந்த நிகழ்வுகளின் ஒளி / ஒலித்தொகுப்பினையும், கட்டுரைகளையும் இந்தப் பகுதியில் காணலாம்.
 
 

முடச்சிக்காடு புதியபாரதி
-----------------------------------------

எழுத்தால் இந்த சமூகத்தை புணரமைக்க முடியும என்று நம்பும் இளம் பத்திரிகையாளர். பெரும் பின்புலம் இல்லாத ஒரு கிராமத்தில் இருந்து பலத்த பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இவரை தற்காலிகமாக மீட்டுள்ளது சென்னை மாநகரம். அரசியல் ஈடுபாடு மிக்கவர். சுற்றுச்சூழல் ஆர்வலர். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் பிறந்த இவர், இயற்கை வேளாண்மை பற்றி விழிப்புணர்வு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இவரது கவிதைகள் "நாங்களும் சில பூக்களும்" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 'கூடாரம்' என்ற பெயரில் இலக்கிய இதழ் நடத்திய அனுபவமும் உண்டு. தமிழின் பிரதான வார இதழில் 2 தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகள் நூலாக வரவுள்ளன. இருளர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைநிலை, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி ஆய்வு செய்து வரும் இவர் அது பற்றிய நூலொன்றை விரைவில் வெளியிட இருக்கிறார். தமிழக ஆறுகளின் இயற்கைச்சூழலும், இப்போதைய இழிநிலையும என்றொரு நூலும் தயாராகி வருகிறது. சென்னையின் பிரதான கானா பாடகர்களில் ஒருவரான ' மரணகானா விஜியின்' சர்ச்சைக்குறிய வாழ்க்கை வரலாறை தொகுத்து "சாக்கடை சரித்திரம்" என்ற பெயரில் நூலாக வெளியிட இருக்கிறார்.

 
     
     
     
     
வாயில் TS  நாட்டுப்புறக் கலைகள் நாட்டுப்புறக் கலைகள் வாயில்

தப்பாட்டம்

முடச்சிக்காடு புதியபாரதி ilamurasu@gmail.com

ஆதி மனித சமூகம் தங்கள் கூடுதலுக்காகவும், தங்கள் குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்தவும், விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் எழுப்பிக் கொண்ட சத்தம் தான் பறையாட்டத்தின் மூலம். பறை என்றால் சொல், அல்லது "உணர்" என்று பொருள். ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி, கேட்போரையும் ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் இந்த அரியக் கலை இன்று ஜாதிய அடையாளமாக மாறிவிட்டது சோகம்.

விலங்குகளை கொன்று, தின்று மிஞ்சிப்போகும் தோலை எதிலேனும் கட்டிவைத்து, காய வைத்து மனம் போன போக்கில் அடித்து ஆடிய முதல் ஆதி மனிதன் தான் முதல் தப்பாட்டக் கலைஞனும் ஆவான். காலப்போக்கில் இது கலைவடிவமாகவும், வாழ்வியல் உணர்ச்சிகளை உணர்த்தும் சத்தமாகவும் மாற, திருமணம், இறப்பு, சிறு தெய்வ திருவிழா நிகழ்வுகள் என மக்களின் அன்றாட

வாழ்க்கையின் அத்தனை சுக துக்கங்களிலும இடம் பெறும் இசையாகியது.

ஆரிய வருகைக்குப் பின் வருணாசிரம சமூக அடிப்படை மேலோங்கிய தருணங்களில், கடினமான, இசைக்க சிரமமான இசைக்கருவிகளை பிறருக்கும், இலகுவான இசைக்கருவிகளை தங்களுக்குமாக மேலாதிக்கவாதிகள் பிரித்துக் கொண்டனர். மேலும் தொழில் சார்ந்த ஜாதிய கோட்பாடு, கலை நிகழ்த்துவோரையும் ஜாதி சார்ந்து பிரித்து வைத்தது. அதன்படியே ஆதி திராவிட தமிழர்களின் இசைக்கருவியாக தப்பிசை ஒதுக்கப்பட்டது.

"தாழ்த்தப்பட்டவர்கள்" எனச் சொல்லி பலநூறு ஆண்டுகள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சமூகங்கள், உரிய கல்வி கிடைக்காமல், நாகரீக நீரோட்டத்தில் இணைய முடியாமல் தவித்த தருணங்களில், அவர்களின் வாழ்க்கைமுறையையே காரணமாக கூறி, அகோரகமாகப் பார்த்து மேலும் இழிநிலைப்படுத்தியது நவீன சமூகம். அவர்களின் வாழ்வோடு கலந்திருந்த பறையாட்டத்தையும் சாவு மேளம் என இகழ்ந்தது.

ஒரு கட்டத்தில் பறையடித்தல் என்பது ஜாதிய குறியீடாகவும், அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் மாறிவிட, அச்சமூகத்தின் விடுதலை வேட்கை கொண்ட இளைஞர்கள் பறையடித்தலை அவமானமாக கருதத் தொடங்கினர். இவ்விதம் மெல்ல, மெல்ல அக்கலை அழியும் நிலைக்கு வந்தது.

"தப்பு" என்பது ஒரு வகையான தோலிசைக் கருவி. இதை "பறை" என்று சொல்வாரும் உள்ளார்கள். மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்டவடிவமான சட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை இழுத்துக்கட்டி, ஒட்டி பறை செய்யப்படுகிறது.

மாட்டுத்தோலை சட்டத்துடன் இழுத்து ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பசை, புளியங்கொட்டையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள பெரும் சிறப்பு, தப்பிசைக்கும் கலைஞர்களே இசைக்கருவியையும் செய்து கொள்ளும் திறன் பெற்றவர்களாக இருப்பது தான்.

பறையை அடித்து இசைக்க இரண்டு குச்சிகளை பயன்படுத்துவார்கள். இடது கையில் வைத்திருக்கும் குச்சி சிம்புக்குச்சி. இது ஒன்னே கால் அடி நீளம், 1 செ.மீ அகலத்தில் இருக்கும். மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும். வலது கையில் வைத்திருக்கும் குச்சிக்கு அடிக்குச்சி அல்லது உருட்டுக்குச்சி என்று பெயர்.

இது பூவரசு கம்பில் செதுக்கப்பட்டிருக்கும். இந்த குச்சி அரை அடி நீளமும், மூன்று செ.மீ சுற்றளவும் கொண்டதாக இருக்கும்.

சிறுதெய்வ வழிபாட்டு ஆலயங்களில் பால்குடம், பூக்குளித்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் இக்கலை நிகழ்வதுண்டு. இடைக்காலத்தில் பெருவாரியான ஆதி திராவிட மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதன் விளைவாக செபஸ்தியர், அந்தோணியர், ஆரோக்கியமாதா, வியாகுலமாதா, சந்தியாகப்பர் போன்ற கிறிஸ்தவ கோவில்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது.

இக்கலையின் சிறப்பே, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், ஒவ்வொரு உணர்ச்சிக்கும் தனித்தனி அடிவகைகள் உள்ளது தான். சப்பரத்து அடி, டப்பா அடி, பாடம் அடி, சினிமா அடி, ஜாயிண்ட் அடி, மருள் அடி, சாமிச்சாட்டு அடி, ஒத்தையடி, மாரடிப்பு அடி, வாழ்த்தடி என பல வகை அடிகள் உண்டு. இக்கலைக்கென பலர் இலக்கணங்களையும் வகுத்துள்ளனர். நேர்நின்று, எதிர்நின்று, வளைந்து நின்று ஆடுதல், அடிவகைகளை மாற்றுதல் என பார்வையாளனை ஈர்க்கத்தக்க ரசனைமிகுந்த கலையாடல்கள் இதில் உண்டு. தஞ்சா, மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் தப்பிசைக் கருவியோடு துணைக்கருவியாக தவில் பயன்படுத்தப்படுகிறது. தென்மாவட்டங்களில் டிரம் பயன்படுத்துகிறார்கள்.

தொழில்ரீதியாக கிராமப்புறங்களில் இசைக்கும் இக்கலைஞர்கள் இசைப்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். ஆடுவதில்லை. மூத்த கலைஞர்கள் பலருக்கு ஆடுவதில் உரிய பயிற்சியும் இல்லை. இந்த இசைக்கருவி அடிக்க, அடிக்க தொய்ந்து போவதால் அடிக்கடி தீயில் கருவியை வாட்டி இசைக்க வேண்டியது அவசியம்.

பறையிசைக்க உடை இலக்கணங்களும் வகுக்கப்பட்டுள்ளன. இது பார்வையாளர்களை கவருவதற்கான யுத்தியாக கடைபிடிக்கப்படுகிறது. வேட்டியை தார்பாய்ச்சிக் கோர்த்து கட்டிக்கொண்டும், தலையில் பட்டையாக துணியைக் கட்டிக் கொண்டும் வண்ணமயமாக பறையை இசைப்பார்கள். இப்போது காலில் சலங்கை அணிந்து கொள்வதும் வழக்கில் இருக்கிறது. நடுவில் நிற்கும் கலைஞர் ஒவ்வொரு அடவுக்கும் சத்தமிட்டு, மற்ற கலைஞர்கள் அடுத்த அடவுக்கு தயார்படுத்துவார்.

கணீரென விழிந்து உணர்ச்சிகளை தட்டி எழுப்பும் இக்கலையை ஆக்ரோஷமான உணர்ச்சிகளை வெளிக்காட்டவும், விடுதலை வேட்கையை உணர்த்தவும் பயன்படுத்தும் பல குழுக்கள் தமிழகத்தில் கிளைத்திருக்கின்றன. ஆண்களுக்கு இணையாக பெண்களும் தப்பிசையை பயின்று மேடைகளை அதிர வைக்கிறார்கள்.

குறிப்பாக திண்டுக்கல்லை சேர்ந்த சக்தி கலைக்குழுவே தொய்ந்து கிடந்த இக்கலையை மீட்டெடுத்தது என்பது என் கருத்து. கன்னியாகுமரியை சேர்ந்த அருட்சகோதரி சந்திரா தலைமையில் இயங்கும் இந்த கலைக்குழுவில் பெண்கள் பறை இசைக்கிறார்கள். ஆண்களே அடிக்க சிரமப்படும் பறையை இவர்கள் லாவகமாகவும், சீராகவும் இசைப்பது மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் விளைவாக தப்பாட்டம் நிறைய மேடைகளை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

தப்பாட்டத்தை பிரதானமாகக் கொண்ட இக்கலைக்குழு இந்தியா கடந்து உலகமெங்கும் இக்கலையை சுமந்து சென்று பெருமை பெற்றது.

ஜாதிய ஒடுக்குமுறைக்கான அடையாளமாக கருதப்பட்ட இந்த கலை, இப்போது அடக்குமுறைக்கு எதிரான ஆயுதமாக உருமாறி விட்டது. பல்வேறு தலித்திய அமைப்புகள், ஜாதியம் சாராத விடுதலை கலைக்குழுக்கள், இடதுசாரிக் கலை அமைப்புகள் இன்று தப்பாட்டத்தை ஒரு ஆக்கபூர்வமான சக்தியாக முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

ஆனால், இன்னும் ஜாதிய மேலாதிக்கம் நிலவும் தென் மற்றும் கிழக்கு டெல்டா மாவட்டங்களில், "பறையடித்தல்" என்பது கீழ்ஜாதியினரின் "கட்டாய அடிபணிதல்" என்ற கருத்து வலுவூன்றி இருக்கிறது. அப்பகுதியில் வாழும் இளம் தலைமுறை இந்த ஜாதிய அடையாளத்தை வெறுத்து ஒதுங்குகின்றனர். இதை அவமதிப்பாக கருதும் ஆதிக்கவாதிகள் இந்த மக்களை வதைப்பதும், அதனால் விவகாரங்கள் தலையெடுப்பதும் அவ்வப்போது நிகழ்கிறது. பல்வேறு தலித்திய இயக்கங்கள் வீருகொண்டு எழுந்து விட்ட இக்காலக்கட்டத்தில், பல இடங்களில் இந்நிலை மாறிவிட்டாலும், ஒட்டுமொத்தமாக நீங்கிவிட்டதாக சொல்ல முடியாது.



தப்பாட்டம் - ஒளியும் ஒலியும்

Loading...

 


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</