வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை
இதழ்: 2 :: சித்திரை (May), 2015
   
 
  உள்ளடக்கம்
 
நகுலனின் இரு கவிதைகள் - விக்ரமாதித்தன் நம்பி
--------------------------------
மனிதன் - ஈ.பீ.டொங்காலா - தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
வந்தாரங்குடி - கண்மணி குணசேகரன் - தமிழ்மகன்
--------------------------------
கோடை - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோ நடத்திய சிறுகதை பயிற்சிப் பட்டறை - 1 - தினேஷ்
--------------------------------
மூர் மார்க்கெட் எரிந்து முடிந்தது - விட்டல்ராவ்
--------------------------------
அஞ்சலி : திருமதி. கமலினி செல்வராஜன் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
மொழியும், இலக்கியமும் - விட்டல்ராவ்
--------------------------------
 
   
 
1

 
 
 
 
   
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     




மூர் மார்க்கெட் எரிந்து முடிந்தது

- விட்டல்ராவ்


காலையில் செய்தித்தாளில் அந்த அதிர்ச்சிகரமான – சோக மயமான செய்தி வெளியாகியிருந்தது.

அந்தச் செய்தி ஒரு பேரலை போல எழுந்து அடங்க கொஞ்ச நாட்களாயிற்று. ஊரெல்லாம் அதே பேச்சாயிருந்தது. அந்த நிகழ்வுக்கு நிறையவே வர்ணங்களைப் பூசினர். அரசியல் ரீதியானதாக, திட்டம் போட்டு செய்ததாக பத்திரிகைகள் எழுதிக் குவித்தன. ஆனாலும் எவரும் “ஒழிஞ்சது சனியன்” என்ற குரலில் ஒலிக்காமல் ஒரு முகமாக துக்கத்தையே அனுஷ்டித்தனர். என் போன்ற பித்துக்குளிகளுக்கு அந்த அதிர்ச்சி அடங்க வெகு நாட்கள் பிடித்தது. மறுநாள் சிவா விஷ்ணு கோவிலுக்குப் போயிருந்த போது நண்பர் நீலகண்டனைப் பார்த்தேன். நீலகண்டன் ஒரு பேனா பித்தர். பழைய கால பேனாக்கள் மீது பிரேமை கொண்டவர். நமக்கு அது போன்று ஒரு பேனா தேவை என்றால், எவரிடமாவது எங்காவது அழைத்துச் சென்று வாங்கித் தருவார். அப்படிப்பட்ட பேனா புழக்கத்திலிருந்து நின்று போய் ஐம்பது அறுபது ஆண்டுகளாயிருந்தாலும், அதன் அசல் பாகங்கள் எதுவும் மாற்றப்படாத நிலையிலேயே வாங்கித் தருவார்.

அப்படிப்பட்டவரிடம் எனக்கு இங்கிலீஷ் Black Bird பேனா ஒன்று வேண்டுமென்று ஒருமுறை கேட்டபோது ஒரு வாரம் பொறுத்து வாங்கித்தந்தார். என்னிடம் எங்கள் பிதுரார்ஜித சொத்தாக மூன்று ஷீஃபர்ஸ் பேனாக்களிருந்தன. ஆனால் அவற்றை என் தந்தை எனக்கு விட்டுப் போனபோதே அவை உபயோகிக்க முடியாத நிலையில் இருந்தன. அவற்றின் பேரலுக்குள் ரப்பர் குழாய் ஒன்று பேனாவின் கழுத்துப் பகுதியோடு சேர்ந்திருக்கும். அந்தக் குழாயைத் தொட்டுக் கொண்டு சிறு நெம்பு கோல் ஒன்றை பேரலின் மேற்பரப்பில் பொருத்தப்பட்டிருக்கும். நெம்புகோலை அழுத்தினால் அது ரப்பர்க் குழாயைப் பலமாய் அழுத்தி மையை உறிஞ்சவோ, வெளியேற்றவோ செய்யும். எனக்குத் தெரிந்து அதை எப்படி அழுத்தினாலும், பேனா மையை உறிஞ்சவோ வெளியேற்றவோ மறுத்தது. மூன்று ஷீஃபர்ஸ்களையும் நீலகண்டனிடம் காட்டி என் பிரச்சனையைச் சொன்னேன். அவர் என்னை மூர் மார்க்கெட்டுக்கு அழைத்துப் போனார்.

மூர் மார்க்கெட் பிரதான சிவப்பு நிற இந்தோசார்சானிக் கட்டிடத்துக்கு வெளியில் வெளிச்சுற்றுச் சுவர் வரை பரந்து கிடக்கும் வெட்டவெளியில் ஏராளமாய் நாலாவித சாமான்களைக் குவித்துப் போட்டு விற்கும் கடைகளும், திருட்டுப் பொருட்களை வைத்து விற்கும் கடைகளும், பழைய சாமான்களை விற்கும் கடைகளும் நிறைய விரிக்கப்பட்டிருக்கும். டிசம்பர் – ஜனவரி மாதங்களில் இந்த வெட்டவெளியில் 1962 வரை சீன இளம்பெண்கள் வண்ணக் காகிதங்களால் தயாரித்த கண்ணையும் மனதையும் கவரும் அழகிய கிறிஸ்துமஸ் – புத்தாண்டு விளக்குகளைக் கொண்டு வந்து விற்பார்கள். சீன கிறிஸ்துமஸ் காகித விளக்குக் கூண்டுகள் புகழ் பெற்றவை. தரத்திலும் கவர்ச்சியிலும் உயர்ந்தவை. சீனப் பெண்களுக்கு அதைத் தயாரிப்பது ஒரு கலைரீதியான பொழுதுபோக்கும், உப வருமானத்துக்கான கைவினையுமாகும். சென்னையிலிருந்த சீனப் பல் மருத்துவர்கள், சீன காலணிக் கடைக்காரர்கள், சீன ஓட்டல்காரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இந்த அழகிய சீன இளம்பெண்களை “லுக்” விடுவதற்காகவே வருகை தரும் அன்றைய இளைஞர்கள் வெகு நேரம் பேசி வாக்குவாதம் பண்ணின பிறகு காகித விளக்குக் கூண்டை வாங்கிச் செல்லுவார்கள். 1962 – சீன ஆக்கிரமிப்புப் போரின் போது இந்தியாவிலும் சீன பகிஷ்கரிப்பு தீவிரமானபோது இந்த சீனப் பெண்களின் வருகையும், மூர் மார்க்கெட்டில் டிசம்பர் – ஜனவரிகளில் கிறிஸ்துமஸ் விளக்குக் கூண்டுகள் விற்கப்படுவதும் நிரந்தரமாய் நின்று போனது. இது ஒரு வகையில் சோகமான நிகழ்வு.

இச்சோக நிகழ்வை எனது நாவல் “காம்ரேடுகள்”-ல் நான் பதிவாக்கி சில அவசரகால நடவடிக்கைகளில் ஒரு நிகழ்ச்சியாய்க் கொண்டு வந்திருக்கிறேன். (காம்ரேடுகள் – நர்மதா வெளியீடு) வெளிச்சுற்று சுவரை அணைத்துக்கொண்டு எளிய நிரந்தர கடைகள் வரிசையாயிருக்கும். அவற்றில் ஒன்றுதான் கிருஷ்ணனின் பேனாக்கடை. புதிய பேனாக்களும் விற்பனைக்கிருந்தாலும் கிருஷ்ணனின் முக்கிய வியாபாரமே பழைய பேனாக்களை வாங்குவதும், விற்பதும் என்பதோடு, பேனா பழுது பார்ப்பதுமாகும். அவரிடம் என்னை நீலகண்டன் அழைத்துப் போய் அறிமுகப்படுத்தினார். இந்த கிருஷ்ணன் தான் எனக்கு மூர் மார்க்கெட் பழம் புத்தக வியாபாரி நாயக்கரை அறிமுகப்படுத்தி வைத்தவர். கிருஷ்ணன் என்னிடம் கேட்டார்.

“பேனா, எழுதணும் அவ்வளவு தானே?”

“ஆனா ஒரிஜினல் பாகங்கள் கிடைக்குமா?”

”நிச்சயமா கிடைக்காது. பேனாவை எழுதற மாதிரி பண்ணித்தரலாம்.”

“அப்படின்னா?”

இந்த மூணு பேனாவுக்கும் பேரலை மாத்திடுவேன். நிப், நாக்கு, கழுத்து, உறையெல்லாம் அசலா அப்படியே இருக்கும். பேனா பேரலை எடுத்து கடாசிட்டு புதுசா கடைஞ்சி செஞ்சு போட்டிரலாம். அதிலே இந்த ரப்பர், ட்யூபு, பிஸ்டன் எதுவுமிருக்காது. பள்ளிக் கூடப் பசங்கெல்லாம் வச்சிருக்காங்களே. அதுபோல, கழுத்தத் திருகியெடுத்திட்டு, பேரலை இங்காலே ரொப்பிக்க வேண்டியதுதான். மையை உறியற வேலையெல்லாம் இருக்காது. எதுக்கும், திருவள்ளூர்ல பேனா செய்யிற ஃபாக்டரியில குடுத்துக் கேட்கணும். ”

யோசித்தேன் , அப்போது நீலகண்டன், தன் ஜேபியிலிருந்த பழைய கால பார்கர் பேனாவை எடுத்து திறந்து காட்டினார்.

“இதை நான் தான் சாருக்கு இப்ப சொன்ன மாதிரி திருவள்ளூர் பேனா பட்டறையிலே பேரலைக் கடைஞ்சிப் போட்டுக் குடுத்தேன்.”

எனக்கு அது பிடித்திருக்கவே ஒப்புதலளித்தேன்.

இவ்வாறாக எனது முன்னோர்கள் விட்டுச் சென்ற எழுபத்தைந்து வருட பழைய ஷீஃபர்ஸ் பேனாக்கள் மூன்றையும் எழுதும் நிலைக்கு மாற்றிக் கொடுத்தார் கிருஷ்ணன்.

“இப்படியாயிட்டதே, நீலகண்டன்” என்றேன்.

“அதான் பாருங்கோ, என்ன அநியாயம்!” என்றார் நீலகண்டன்.

“நம்ம கிருஷ்ணன் கடை?”

“கிருஷ்ணனுக்கு பாதிப்பு எதுவுமிருக்காது. அவர் கடை மெயின் பில்டிங்கில இல்லையே. வெளியிலே காம்பவுண்டை ஒட்டியில்லே இருக்கு. மெயின் பில்டிங் மொத்தமும் ஷார்ட் சர்க்யூட் ஆயிட்டது. எல்லாம் எரிஞ்சு கருகிப் போச்சு. புஸ்தகக் கடைகள் முக்கியமா நாசமாயிட்டது...” என்றார் நீலகண்டன்.

மறுநாள், நான் மூர் மார்க்கெட் கட்டிடத்தைப் பார்த்தபடி நின்றிருந்தேன். தீப்பற்றி எரிந்த புகை வெளியில் அதிகமாய்ப் படர்ந்திருக்கவில்லை. உள்ளே நுழையவே மனசு கேட்கவில்லை. பேனாக்கடை கிருஷ்ணன் கும்பலாக அங்கங்கே நின்றிருந்த கடைக்காரர்களுடன் காணப்பட்டார். பிரதான சிவப்பு நிற இந்தோசார்சானிக் கட்டிடம் முழுக்க எரிந்து தணிந்திருந்தது. உள்ளே யாரும் போக வேண்டாமென எச்சரித்தபடியே காவல்துறையினர் சிலர் ரோந்து வந்து கொண்டிருந்தனர். எனவே உள்ளே போய்ப் பார்க்க முடியவில்லை. கிருஷ்ணனிடம் சென்று விசாரித்தேன்.

“நீங்க சொல்ற புஸ்தகக் கடைங்க எதுவும் மிஞ்சியிருக்காதுங்க” என்றார்.

“எல்லா புஸ்தகக் கடையுமா?”

“அப்படித்தான்...” என்று கூறியவர், என்னை ஒருபுறமாய்ப் பார்த்து சற்று தூரம் அழைத்துச் சென்றார்.

“இது விஷயம், இப்படி ஏற்படும்னு முன்னாடியே தெரிஞ்சாப்பல, யாரோ முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கைப் பண்ணியிருக்காப்பல, கொஞ்ச கடைக்காரங்க ஜாக்கிரதையிட்டிருக்காங்கன்னு பேச்சு. சில புஸ்தகக் கடைக்காரங்களும் அப்படித்தான் தப்பிச்சிருக்காங்க. முக்கியமான விலை ஜாஸ்தியான புஸ்தகங்களையும் மரச்சாமான்களையும் முன்னதாகவே கொஞ்சம் கொஞ்சமாக எடுத்திட்டுப் போயிட்டாங்கன்னு பேசிக்கிறாங்க..”

ஆச்சரியமாயிருந்தது. ஆதங்கமும் ஆச்சரியமுமாய் எனக்கு, திருப்தியுறாதவனாய் மீண்டும் மீண்டும் கேட்டதையே வெவ்வேறு விதமாய்க் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“முதலியாரு?”

“அவரும் இன்னும் கொஞ்சம் பேரும்தான் அதிக பாதிப்பில்லாம தப்பினவங்கன்னு பேச்சு. முந்திகிட்டு ஜாக்கிரதையாயிட்டாங்க.”

“ஐயரு?”

“அவர் கடை தேறல்லே”

அடுத்த கேள்வியை நான் சற்று தாமதித்தேதான் கேட்டேன். கேட்கத் தயங்கியே கேட்டேன். சாதகமான பதிலாய் வரவேண்டுமே என்ற பதைபதைப்போடு கேட்டேன்.

“நம்ம நாயக்கரு?”

ஒரு நிமிஷம் மெளனமாயிருந்து விட்டுச் சொன்னர் கிருஷ்ணன்.

“அவரு ஒரு மாதிரியாயிட்டாராம்.”

“அப்படீன்னா?”

“ஒரு மாதிரி மெண்டலாயிட்டாரு.”

“பார்த்தீங்களா?”

“ பார்த்துட்டுத்தான் சொல்றேன்.”

“நாயக்கரை நான் பார்க்க முடியுமா?”

“செய்யலாம்.”

“எப்ப?”

“நாளை மறுநா போலாம். நேரா அங்கேயே வந்திடுங்க..”

“அவர் சொன்னபடியே மூர் மார்க்கெட் வளாகத்துக்குப் போய் நின்றேன். எரிந்துபோன பிரதான சிவப்புக் கட்டிடத்தைச் சுற்றி வெளியே நானாவிதமான ஏராளமான கடை தினுசுகளுண்டு. ஆனால் ஓரிரண்டு கடைகளைத் தவிர மற்ற எல்லாக் கடைகளுமே மூடிக்கிடந்தன. வெட்ட வெளியில் பரப்பி வைத்து விற்கும் நாளாங்காடிகள் எல்லாவற்றையும் அப்படியப்படியே கட்டி மூடி வைத்திருந்தனர். வெட்ட வெளியின் ஒரு ஒதுக்குப் புறமான திசையில் விக்டோரியா டவுன் ஹாலையொட்டி வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வரும் சுற்றுலா பஸ்கள் கொஞ்சம் நின்றிருக்கும். சுற்றுலா என்று நகரைச் சுற்றிப் பார்க்க வருபவர்களுக்கான முக்கிய இடங்களில் இந்தப் பழமையான மாபெரும் அங்காடி வளாகமும் இத்தனை காலமாயிருந்த ஒன்று. இப்போது அந்த வெட்டவெளியில் அத்தகைய சுற்றுலா பஸ்கள் எதுவும் காணப்படவில்லை. கும்பல் கும்பலாய் கடைக்காரர்கள் மட்டும் அங்கங்கே நின்றபடி மெல்லிய குரலில் பேசிக்கொண்டு எரிந்து போய் நிற்கும் சிவப்பு நிற கட்டிடத்தையே அண்ணாந்து பார்த்து எதையாவது சொல்லிக் கொண்டிருந்தனர். கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்பதுமாயும், அதற்குச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வதுமாயும் அவர்கள் எல்லாருமே ஒரு ரகசியம் பேசுவது போல பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள், எரிந்து போனதற்கும், வயிறெரிந்து போனவர்களுக்கும் இரங்கல் தெரிவிப்பதுபோல தம் கடைகளை மூடி விட்டு, கட்டி வைத்துவிட்டு, குழுக்குழுவய், கும்பல் கும்பலாய் நின்று மெல்லிய குரலிலேயே பேசிக்கொண்டிருந்தனர். இப்போது போலீஸ் கண்காணிப்பு இருப்பதாய்த் தெரியவில்லை. யாரோ சிலர் உள்ளேயிருந்து வெளியில் வந்து கொண்டிருந்தனர்.

ஒருவரையணுகி கேட்டேன்,

“பேனாக் கடை கிருஷ்ணன் வர்லீங்களா?”

“வருவாருங்க... வருவாரு.”

நான் அப்படியே நடந்து மூர்மார்க்கெட் பிரதான கட்டிடத்தை ஒரு முறை வலம் வந்தேன். உள்ளே எரிந்து கருகியவற்றை வாரிக்கொண்டு வந்து பின்புற வெட்டவெளியில் குவியல் குவியலாய்ப் போட்டிருந்தார்கள். ஒரு பெண்மணி குவியல் ஒன்றின் அருகே அமர்ந்து பிலாக்கணம் போட்டு அழுதுப் புலம்பிக் கொண்டிருந்தாள். பையன்கள் கொஞ்சம் பேர் தமக்கு பரிச்சயமான தெருநாய்கள் பின் தொடர்ந்து வர, நம்பிக்கையை இழக்காமல் குப்பைக் குவியல்களைக் கிளறிக் கிளறி உருப்படியாக எதாவது அகப்படுமாவென்று பார்த்துக் கொண்டிருந்தனர். நான் தைரியமாய் பின்புற நுழைவாயில் ஒன்றின் வழியே ஏறி உள்ளே போனேன். அந்தக் காட்சி..

மின்சார வயர்கள் கருகி, உருகித் தொங்கியும் ஜவ்வு ஜவ்வாய் ஒட்டிக் கொண்டிருந்தன. ஒட்டடை நூலாம்படைகள் கரிபடர்ந்து அறுந்தும் அழிந்தும் அழியாமலுமாய் கரிபடர்ந்த கருப்புச் சுவர் மூலைகளை ஆறுதல் கூறிக்கொண்டு அப்பியிருந்தன. இனம் தெரியாத என்னென்னவோ வஸ்துக்கள் எரிந்து இன்னும் அகற்றப்படாது யார் வரவையோ எதிர்நோக்கியும் எரித்ததற்கான சாட்சியாகவும் கிடந்தன. நாசம் – சர்வ நாசம். சுவரெங்கும் கரிபடர்ந்து கோரக் கருமையாய்..

எது சங்கமேஸ்வர ஐயரின் புத்தகக் கடை இருந்த இடம், எது முதலியார் கடையிருந்த இடம், எது நாயக்கர் கடையிருந்த இடம், என்றெல்லாம் அடையாளம் சட்டென்று கண்டு கொள்ள முடியாதபடி – எல்லாம் கரி, எல்லாம் கருப்பாய்.. ஓவென்று வானத்தைப் பார்த்துக் கத்திக் கதறித் தத்தித் தரிகடம், தத்தரிகிடம், தத்தரிகிடம், தித்தோம்..

பிறகு வெளியில் வந்துவிட்டேன். அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து, அந்தப் பழமையான கட்டிடத்தை இடித்துத் தரைமட்டமாக்கி ரெயில்வே இலாகாவிடம் ஒப்படைக்கப்போவதாய்த் தெரிந்தது.

1900-இல் கட்டப்பட்டு எண்பத்தைந்து ஆண்டுகளாய் ஜீவித்திருந்த ஒரு மாபெரும் குஜிலி (Gujili) மகாவிபத்துக்கு இரையாகிவிட்டிருந்தது. ஒரு பழம் புத்தகக் கருவூலமாய் – புத்தக அருங்காட்சியகமாய் விளங்கிய இடம் நள்ளிரவில் மின்சாரத் தீக்கு இரையாகிக் கருகிப் போன சோகம். சுற்றுலாப் பயணிகளுக்கான வெவ்வேறு அருங்காட்சியகங்களின் பட்டியலிலிருந்து மூர் மார்க்கெட் என்ற பெயர் அடித்து நீக்கப்பட்டது. நிரந்தரமாக.

கிருஷ்ணன் வந்துவிட்டார். ச

இருவருமாய் சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் இரு சக்கர வண்டியில் போய்க் கொண்டிருந்தோம். காரணீஸ்வரர் கோயில் குளத்தையும் தாண்டிவிட்டோம். கிருஷ்ணன் வண்டியை ஓரங்கட்டினார். அது பெரிய விசாலமான வீடு. உள்ளே நுழைந்தோம். சாவு நடந்து முடிந்த பிறகு குடி கொள்ளும் அமைதி போல ஒரு நிலவரம். நாயக்கர் நாற்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்தார். உட்கார வைக்கப்பட்டிருந்தார் என்பதே சரியாகும்.

“நாயக்கரே வணக்கம்”என்றேன்.

திருதிருவென்று விழித்தார். பிறகு பழையபடியே எங்கோ வெற்றிடத்தில் பார்வையை ஊன்றிக் கொண்டார்.

“என்னைத் தெரியிதா, நாயக்கரே?”

பிரயோஜனமில்லை.

என் பெயரை இரு முறை சொல்லிப் பார்த்தேன்.

இல்லை.

“எங்களையே அவருக்குத் தெரியல்லீங்க...” என்றார் அவரது மனைவி.

“டாக்டரைப் பார்த்தீங்களா?”

“பார்த்தோம். பெரிய அதிர்ச்சியால இப்படின்னு சொன்னாரு. மருந்தெல்லாம் குடுத்திருக்காருங்க.”

புறப்பட்டுவிட்டோம். அதற்குப் பிறகு நாயக்கர் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.

வாழ்வின் சில உன்னதங்கள் - விட்டல்ராவ்

புத்தக அறிமுகத்திற்காக மட்டுமே விட்டால்ராவின் "வாழ்வின் சில உன்னதங்கள்" நூலில் இருந்து இந்தக் கட்டுரை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலே செல்க...(go to top)
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </