வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை
இதழ்: 2 :: சித்திரை (May), 2015
   
 
  உள்ளடக்கம்
 
நகுலனின் இரு கவிதைகள் - விக்ரமாதித்தன் நம்பி
--------------------------------
மனிதன் - ஈ.பீ.டொங்காலா - தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
வந்தாரங்குடி - கண்மணி குணசேகரன் - தமிழ்மகன்
--------------------------------
கோடை - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோ நடத்திய சிறுகதை பயிற்சிப் பட்டறை - 1 - தினேஷ்
--------------------------------
மூர் மார்க்கெட் எரிந்து முடிந்தது - விட்டல்ராவ்
--------------------------------
அஞ்சலி : திருமதி. கமலினி செல்வராஜன் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
மொழியும், இலக்கியமும் - விட்டல்ராவ்
--------------------------------
 
   
 
1

 
 
 
 
   
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     




மொழியும், இலக்கியமும்

- விட்டல்ராவ்


சென்னையில் பருவமழை, புயலின் சீற்றத்தோடு, நடைபாதையில் கடை விரிப்பவர்கள் பாடு படு திண்டாட்டம். கடை விரித்திருக்கும் கரீம் பாய் இதற்கு விதி விலக்கல்ல. பத்து நாட்களாகி விட்டது. மழை ஓய்ந்து வெயிலடிக்கத் தொடங்கியது. கரீம் பாய் தன் புத்தகங்களை தினமும் கடையை மூடியதும் கட்டுக்கட்டாகக் கட்டி பெரிய பெரிய பழைய சாதிக்காய்ப் பெட்டிகளில் அடுக்கி பழைய தார்ப்பாலின் துணித் துண்டுகளால் சுற்றிக் கட்டி ஓர் ஓரமாய் வைத்துவிட்டுப் போவார். மழைக்காலத்தில் எப்படியும் இந்தப் பெட்டிகளுக்குள் மழை நீர் புகுவது சகஜனமான ஒன்று. மழை ஓய்ந்து வெயிலடிக்கையில் அவரும் அவரது பெரிய மகனும் வந்து அவற்றை எடுத்துப் பிரித்து தர்க்காவை ஒட்டி உள்ள காங்கரீட் நடைபாதை நெடுக பரப்பி வைத்துக் காய விடுவார்கள். வெறும் நியூஸ் பிரிண்ட் தாளாலும் பிற சாதாரண தாள்களானாலுமான புத்தகங்களும் பத்திரிகைகளும் நீரில் நனைந்தால் அதிக சேதமுறாது. அதுவே விலயுயர்ந்த உள்நாட்டு வெளிநாட்டுத் தாள்களாலான பத்திரிகையானாலும், புத்தகமானாலும் சேதமடையும். தாள்கள் ஒன்றோடொன்று நன்றாக ஒட்டிக்கொண்டு, வெயிலில் காய்ந்தவுடன் பிரிக்க முடியாதவாறு ஒட்டிக்கொண்ட நிலையில் நாசமாகும். இந்த முறை வெயிலடிக்கத் தொடங்கி பத்து நாட்கள் கழிந்தும் கரீம் பாயையோ அவரது மகனையோ பார்க்க முடியவில்லை. மழைநீரில் நனைந்த பெட்டிகள் அதே நிலையில் கிடந்தன.

இன்னும் பத்து நாட்கள் போயிற்று. லைஃப் இதழ்கள் இரண்டு வெளிவந்து விட்டன. ஒன்றை திருவல்லிக்கேணி பைக்ராஃப்ட்ஸ் சாலையோரக் கடையில் வாங்கிவந்தேன். அன்றிரவு அப்துல் ரஹீம் அந்த அதிர்ச்சியான தகவலைக் கொடுத்தார்.

“நம்ப கரீம் பாய் காலமாயிட்டாராம். இருபது நாளாச்சாம்.”

அதிர்ச்சியோடு அடக்கமுடியாத துக்கமும் ஏற்பட்டது.

மெல்ல சுதாரித்துக்கொண்டு சொன்னேன்.

“அவருக்கு கொஞ்சம் காசு பாக்கி வச்சிருக்கேன். ஒரு இருபத்தைஞ்சு ரூபாயிருக்கும்” என்றேன்.

நாங்களிருவரும் அவர் வீட்டைக் கண்டுபிடித்து, போய் அந்தக் குடும்பத்துக்கு ஆறுதல் கூறலாமென்று நினைத்தோம்.

ரஹீமுக்கு கரீம் பாய் இறந்து போன செய்தியைச் சொன்னவர் தர்காவைச் சுத்தம் செய்யும் கிழவர் அவரிடமே கேட்டு, கரீம் பாயின் வீட்டு விலாசத்தைப் பெற்று வந்தார் ரஹீம். நாங்களிருவரும் ஞாயிற்றுக் கிழமையன்று பிளாசா தியேட்டர் வளாகத்திலிருந்து எல்லிஸ் சாலைப் பகுதியைக் குறுக்கு வழியில் சென்றடைய, ஒரு சமயத்தில் ஒரு ஆள் மட்டுமே நுழையக்கூடிய பொந்து ஒன்று பிளாசா சுவரிலுண்டு. அதில் நுழைந்து எல்லிஸ் சாலையை அடைந்து, பல்வேறு சந்து பொந்துகள் வழியே மூக்கைப் பொத்திக்கொண்டு தாயார் சாஹிப் தெருவையடைந்தோம். தெருமுனையில் கோணிப்படுதா தொங்கிய பழைய வீட்டுக்கு முன்னால் போய் நின்றோம். கோணிப் படுதாவை விலக்கிக் கொண்டு அவரது மூத்த மகன் வந்தான்.

“யாரு?”

“கரீம் பாய்…”

“அவரு மகுத்தாயிட்டாரு.”

சிறிது நேரம் மெளனம்

“பழைய புஸ்தகம் வாங்கின கணக்குக்கு நா நூறு ரூபா பாக்கித் தரணும்.” என்று கூறிவிட்டு ரஹீமிடம் காதில் சொன்னேன்., “பாயோட மனைவிகிட்டே குடுக்கலாமா?” என்று.

ரஹீம் கூறினார்.

“அவங்கள வெளியாம்பளைங்க பார்க்கக்கூடாது. பார்க்கவும் முடியாது. அவங்க இத்தா இருக்காங்க.”

நான் கரீமின் மகனிடமே நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு புறப்பட்டு வருகையில் ரஹீம் கேட்டார்.

“இருபத்தைஞ்சு ரூபானு சொன்னீங்க?”

“எனக்கு கணக்கு பாக்கிறது… பாய் பழகினதுக்கு ஒரு ஞாபகமா… பாவம் அவருக்கு சாகறதுக்குள்ளே ஒரு தபா ஹஜ்ஜீக்குப் போயிட்டு வரணும்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு. பணம்கூட சேர்த்துகிட்டு வர்றதா சொல்லுவாரு.”

அதற்குப் பிறகு அவரது மூத்த மகன் கடைவிரித்து வைத்துப் பார்த்தான். ஒரு நாள் கடையிருந்த இடத்தில் இலைகளும் கிளைகளுமாய் சிதறிக் கிடக்க ஏழெட்டு ஆடுகள் இலைகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. ஆடுகளை மேய விட்டு விட்டு தர்கா புறமாய் உட்கார்ந்திருந்தான் ஆட்டுக்காரன். அங்கிருந்த பெரிய மரத்தை மின்சார வாரியம் வேரோடு வெட்டிச் சாய்த்திருந்தது.மரமிருந்த இடத்தில் வாரியம் வாரியம் பெரிய அறையொன்றைக் கட்ட இருப்பதாகத் தெரிந்தது. கரீமின் பழம்புத்தகக் கடை மவுண்ட் ரோடைக் கடந்து எதிர் நடை பாதையில் வெலிங்க்டன் தியேட்டர் அருகில் கொண்டு போய் பரப்பி வைக்கப்பட்டது. ஓரிரு முறை அங்கு போனபோது கரீமின் மூத்த மகனிடமிருந்து மோசமான சாராய நெடி வீசும். ஆறு மாதம் கழித்துப் போனபோது கடையில்லை. பிறகு நிரந்தரமாகவே அந்தக் கடையில்லை.

நான் கரீம் பாயைப் பற்றிச் சொல்லிவிட்டு மெளனமாய் உட்கார்ந்திருந்தேன் மூர் மார்க்கெட் நாயக்கர் கடையில்.

“மாசம் ஒரு வாட்டி வா , வந்து பாரு. லைஃப் பத்திரிகையிலெல்லாம் நிறைய வருது நம்மகிட்டே” என்று கூறிவிட்டு ஒரு கட்டை எடுத்து வைத்தார். பழையதும் புதியதுமாய் எல்லாம் லைஃப் இதழ்கள்.

அமெரிக்க பத்திரிக்கைகள் சோவியத் யூனியன் விஷயங்களை கூடியமட்டிலும் நக்கலாக , தாக்குதலோடு, வெளிப்படையாக மட்டந்தட்டி – குற்றம் காணும் தொனியிலே எழுதி வந்த காலம் அது. 1958 - மார்ச் லைஃப் இதழில் மாபெரும் தொடர் கட்டுரையொன்றை The Russian Revolution எனும் தலைப்பில் தொடங்கிற்று. நான்கு பாகங்களில் அமைந்திருந்தது கட்டுரை. சிறந்த ஓவியங்கள், மிக அரிய புகைப்படங்கள் துணையுடன் கட்டுரை அமைந்திருந்தது. ருஷ்ய புரட்சி பற்றி ஓர் அமெரிக்க வணிக இதழ் எவ்வாறு எழுதியிருக்கும் என்பதை எல்லோரும் ஊகித்துக் கொள்ள முடியும். மற்றொரு கட்டுரை1967 லைஃப் இதழில் குறிப்பிடும்படியாய் வெளிவந்தது. The intimate Recollections of Stalin’s Daughter. அந்த இதழின் அட்டைப்படமே ஸ்டாலின் மகள் ஸ்வெட்லானா அலுலுயேவாவின் சிரித்த முகத்தைத் தாங்கி வந்தது. அந்த சிரித்த முகம் ஸ்வெட்லானா நியூயார்க்கிலிருந்த போது போஸ் கொடுத்தது. இக்கட்டுரை “Twenty Letters to a Friend” எனும் தலைப்பில் ஸ்டாலின் மகள் ஸ்வெட்லானாவின் நூலை ஹார்ப்பர் ரோ நிறுவனம் பிரசுரித்தபோது , அதிலிருந்து உருவாக்கப்பட்டது. அரிதான புகைப்படங்கள் சேர்க்கப்பட்டிருந்தன இரு நீண்ட பகுதிகளாய் இரு லைஃப் இதழ்களில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை மிக முக்கியமானது.

ஆங்கிலம் மொழி குறித்து அதி நீண்ட கட்டுரை ஒன்று நான்கு பெரும் பகுதிகளாய் லைஃப் இதழ்களில் வெளியானது. முக்கிய விஷயம் 1963-ல் லைஃப் ஆங்கில மொழியைப் பற்றிய இருபதாம் நூற்றாண்டு கணிப்புகளை கட்டுரையாக்கி வழங்கிற்று. மொழி குறித்த பொதுவான கருத்துக்களும் விவாதங்களும் இக்கட்டுரையின் நெடிய ஓட்டத்தில் காணக்கிடைக்கின்றன. 1953 – 54 லைஃப் இதழ்களில் நாம் வாழும் பூமியைப் பற்றிய “The world we live in” என்ற கட்டுரைத் தொடரை எழுதிய Lincoln Barnett தான் 1963- 64 லைஃப் இதழ்களில் The English Language எனும் கட்டுரைத் தொடரை தொடங்கி வைத்தார். இதற்கான கோட்டோவியங்களை ஓவியர் Edward Sorel வரைந்திருந்தார்.

சென்னைஅல்லது மதறாஸ் பட்டணம் நீண்ட கால ஆங்கிலேய சம்மந்தம் கொண்டது. ஆங்கில மோகம் சிலபோது அடிமைத்தனமாய்க் கூட இங்கே தோன்றக்கூடும். ஒட்டுமொத்தமாக இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களில் – பஞ்சாபி – ஆங்கிலம், ஆந்திர – ஆங்கிலம், தமிழாங்கிலம், கன்னட – ஆங்கிலம், மலையாள – ஆங்கிலமென்று பேச்சு வழக்கில் பெருமைப்படக்கூடிய அல்லது நகைக்கக்கூடிய விதத்தில் நடமாடுகிறது. இதையே லிங்கன் பார்னட் ஆங்கில மொழி பற்றிய தம் நீண்ட கட்டுரைத் தொடரின் தொடக்க வரியாக கூறுகிறார்.

“Everyone speaks or thinks he speaks English” என்று.

ஜெர்மன், ஃப்ரெஞ்சு, ஸ்பானிஷ், அரபிக், இத்தாலியன், ஜப்பானிஸ், ருஷ்யன் ஆகிய பிற உலகமொழி அறிஞர்கள் தங்கள் மொழிகள் ஆங்கிலத்தால் பெற்றுள்ள தாக்கம், தத்தம் மொழிகள் ஆங்கிலத்தில் செய்துள்ள தாக்கம், என்பது குறித்து அடுத்த பகுதியில் எழுதியிருக்கிறார்கள்.

நான்காம் பகுதி சுவையானது. அமெரிக்க ஆங்கிலம் தனித்துவமிக்க வேறுபட்ட ஆங்கிலமாய் வந்திருப்பதை ஜெஃபர்சனும், நோவா வெப்ஸ்டரும் கூறியதிலிருந்தும் ஆஸ்கர் வைல்டு மற்றும் ஜார்ஜ் பெர்னார்டு ஷா இருவரும் இந்த அமெரிக்க ஆங்கிலம் – பிரிட்டிஷ் ஆங்கிலம் குறித்துப் பேசிய கருத்துக்களையும் கட்டுரையாசிரியர் தக்க சமயத்தில் எடுத்து வைக்கிறார்.

இதே பகுதி, ஆங்கில மொழியை வளப்படுத்திய இந்தியமொழிகள், ஆங்கிலம், இவற்றிலிருந்து தத்து எடுத்துக்கொண்ட இந்திய மொழி வார்த்தைகள் என்பன குறித்தும் பேசுகிறது.

இறுதிப் பகுதியை, “The Decline and Fall of Good English – How English is being massacred” எனும் தலைப்பில் ஆங்கிலம் எவ்வாறு சரிவுற்று வீழ்ச்சியுற்றது. நல்ல ஆங்கிலம் எவ்வாறெல்லாம் கொலை செய்யப்பட்டு வருகிறது என்பதை Dwlight Macdonald எனும் மொழியறிஞர் விளாசுகிறார்.

லைஃப் பத்திரிகையின் கலை இலக்கியப் பங்களிப்பை எடுத்துச் சொல்ல அதன் ஏராளமான இதழ்கள் முன்வருகின்றன. ஓவியக்கலை பற்றிய கட்டுரைகள் அற்புத வண்ணப் படங்களோடு ஐரோப்பிய ஓவியர்கள், அமெரிக்க ஓவியர்கள், கீழை நாட்டு ஓவியர்கள், இவர்களது படைப்புகள் என்பனவும், அதே ரீதியில் சிற்பங்கள், சிற்பிகள் குறித்தும் ஏராளமான கட்டுரைகள், திரைப்படங்கள் பற்றியது என்றால் நடிக – நடிகையர், இயக்குனர்கள், இவர்கள் பங்கு பெற்ற உலகப்புகழ் பெற்ற திரைப்படங்கள் என்றிருக்கும் கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரையும் உபயோகமுள்ள அரிய படங்களைக் கொண்டிருக்கும்.

இறுதியாக இலக்கியத்துக்கான லைஃப் பத்திரிக்கையின் பங்களிப்பை சில உதாரணங்களோடு சொல்லி முடிக்கலாமென்று.

லைஃப் சர்வதேச பதிப்பு – பிப்ரவரி- 1963ல் மகத்தான இலக்கிய கட்டுரைத் தொடர் ஒன்று வெளியானது. ஷெல்லி - பைரன் (Percy Bysshe Shelley and Byron) எனும் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர்களின் இத்தாலிய தொடர்பு பற்றி அரிய கட்டுரைத் தொடர், லைஃப் இதழின் சர்வ தேச பதிப்பாசிரியரான A.B.S.Whipple எழுத, அதற்கான அரிய புகைப்படங்களை David Less எடுத்தளித்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிகள் ஷெல்லியும் பைரனும் இங்கிலாந்தில் ஒருவித ராஜதுரோக நடவடிக்கையிலீடுபட்டவர்களாய் நாட்டைவிட்டு வெளியேறி – தங்களைத் தாங்களே நாடு கடத்திக் கொண்டவர்களாய் இத்தாலியில் புகுந்தார்கள்.

ஃபிளாரன்ஸ், வெனிஸ், பைசா முதலான அழகிய இத்தாலிய நகரங்கள் ஷெல்லியையும், பைரனையும் அழகியல் ரீதியாக ஆட்கொண்டு எந்தெந்த விதமாய் அவர்களின் கவித்துவ செயல்பாடுகளை ஊக்குவித்தும் பாதித்தும் மேன்மையுறச் செய்தன என்பனவற்றையெல்லாம் கட்டுரை ஆராய்ந்து சொல்லுகிறது. அவர்களை அசத்திய அழகிய இத்தாலியக் கட்டிடங்கள், கட்டுமானங்களின் கலை யழகை – அது பற்றிய அவர்களின் கவிதை வரிகளைக் கொண்டு கட்டுரையாசிரியர் விவரிக்கிறார். இரு பகுதிகளாய் அமைந்து இரு லைஃப் இதழ்களில் இடம்பெற்ற இக்கட்டுரையும், கட்டுரைக்கான கனவில் மிதக்கும் வண்ணம் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், 1819-ல் ஷெல்லி எழுதிய ஒரு புத்தியின் வரிகளிலிருந்து தொடங்குவதாய் விப்புள் எடுத்தாள்கிறார். ஷெல்லியின் மகத்தான படைப்பான Prometheus unbound என்ற நூலுக்கு அவர் எழுதிய முன்னுரைஅதிமுக்கியமானது. அதில் ஷெல்லி கூறுவார்;

”A poet is the combined product of such internal powers as modify the nature of others; and as such external influences as excite and sustain these powers; He is not one, But both. Every man’s mind is, in this respect modified by all the objects of nature and art; by every word and every suggestion which he ever admitted to act upon his consciousness; it is the mirror upon which all forms are reflected and in which they compose one form. Poets, painters, sculptors, and musicians are in one sense, the creators, and in another, the creations, of their age.”

1968 – ஏப்ரல் லைஃப் இதழின் அட்டைப்படம் பிரமிப்பூட்டவல்ல கோணத்திலமைந்த வியட்நாம் தலைவரும் வியட்நாம் விடுதலை வீரருமான ஹோசிமின் அவர்களின் பெரிய அளவு வண்ணப் புகைப் படத்தைத் தாங்கி வந்தது. இவ்விதழில் ஷெல்லியின் மனைவி மேரி ஷெல்லி எழுதிய மிக முக்கியமான திகில் நாவலான “Frankenstein” குறித்த அரிய ஆய்வுக் கட்டுரை Samuel Rosenberg என்பவரால் எழுதப்பட்டு வெளிவந்தது. இத் திகில் நாவலை மேரி ஷெல்லி எழுதினதில் அவரது கணவரும் புகழ்பெற்ற கவிஞருமான பெர்ஸி ஷெல்லியின் பங்கு என்ன என்பதையும் ஆராய்ந்து சொல்லப்பட்டுள்ளது.

கவிதைக்கான இலக்கியப் பக்கங்களை அவ்வப்போது ஒதுக்கி வந்த லைஃப் பத்திரிகை சில அசாதரண பிரபல மரணங்களின் போது இயற்றப்பட்ட அரிய கவிதைகளையும் வெளியிடத் தவறினதில்லை. அவ்வாறான சோகம் மிக்க ஒரு தருணம் – பிரபல ஹாலிவுட் நடிகையும் செக்ஸ் தேவதையுமான மர்லீன் மன்றோவின் மரணம் – தற்கொலை. மர்லீன் மன்றோ தற்கொலை புரிந்து மரணமடைந்தபோது உலக முழுக்க கவிஞர்கள், கதாசிரியர்கள், ஓவியர்கள், புகைப்படக் கலைஞர்கள், அரசியல் வாதிகள், இந்திய சாமியார்களில் சிலர் என்றெல்லாம் மிகுந்த துக்கத்துக்கு உள்ளானார்கள். தத்தம் வழியில் தத்தம் துக்கத்தை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். லைஃப் பத்திரிகை மர்லீன் மன்றோவின் அரிய புகைப்படங்களை, வாழ்க்கை வரலாற்றை, அவரது காதலர்களையெல்லாம் வெளியிட்டதோடு அவரது மரணம் குறித்து அமெரிக்கக் கவிஞர்கள் எழுதிய அரிய கவிதைகள் சிலதையும் வெளியிட்டது.

மர்லீன் மன்றோவின் நிஜப்பெயர் நார்மா ஜீன் என்பது; அந்தப் பெயரை உச்சரித்தே கவிதைகள் சில எழுதப்பட்டன. What really killed Marilyn… எனும் தலைப்பில் அற்புதமான கட்டுரையை Clare Boothe என்பவர் எழுதியிருந்தார். புகழ்பெற்ற அமெரிக்க கவிஞரும் நாடக ஆசிரியருமான Norman Rostens மர்லீன் மன்றோவுக்கு மிகவும் வேண்டியவர்., மர்லீன் , கவிஞரது பதினான்கு வயது மகள் பட்ரீஷியாவின் கல்விச் செலவுக்கான 5000 டாலர் உதவித் தொகையை வழங்கியவர்.நார்மன் ரோஸ்டன் மர்லீன் மன்றோவின் தற்கொலை – மரணத்துக்கான காரணத்தைப் பூடகமாக்கி கவிதை எழுதினார். அதை லைஃப் இதழ் மர்லீன் மன்றோ சிறப்பிதழில் வெளியிட்டது. மிக எளிய – உருக்கமான அக்கவிதை “எலிஜி” மர்லீன் மன்றோவின் நிஜப்பெயரான நார்மா ஜீன் என்பதை வைத்து எழுதப்பட்டது.

Elegy

Who killed Norma Jean?
I, said the city,
As a civic duty,
I killed Norma Jean

Who saw her die?
I, said the night,
And a bedroom light,
We saw her die.

Who caught her – blood?
I, said the fan,
With my little pan,
I caught her blood.

Who’ll make her shroud?
I, said the lover,
My guilt to cover,
I’ll make her shroud.

Who will dig her grave?
The tourist wil come,
To join in the fun,
He will dig her grave.

Who’ll be chief mourners?
We who represent,
And lose our ten percent,
We’ll be chief mourners.

Who’ll bear the pall?
We, said the press,
In pain and distress,
We’ll bear the pall.

Who’ll toll the bell?
I, screamed the mother,
Locked in her tower,
I’ll pull the bell.

Who’ll soon forget?
I, said the page,
Beginning to fade,
I’m first to forget.

- Norman Rosten


ஒரு புகழ்பெற்ற மகத்தான படைப்பெழுத்தாளர் காலமான பிறகு – நூற்றாண்டு காலம் போன பிறகும் கூட – இது நாள் வரை அச்சில் வராத அவரது எழுத்து ஏதாவது இருக்குமா என்ற தேடல் உலகெங்கும் நடைமுறையிலிருக்கும் ஒரு முக்கிய இலக்கிய நிகழ்வு. அப்படிப்பட்ட பற்பல தேடல்களில் சாத்தியப்பட்ட பற்பல நிகழ்வுகளில் ஒன்றுதான் புகழ்பெற்ற அமெரிக்க படைப்பெழுத்தாளர் Mark Twain எழுதி, முடிக்காத நிலையில் விட்டுப்போன பிரசுரிக்கப்படாத நாவல். இவரது புகழ்பெற்ற நாவல், Huckleberry Finn. Huck மற்றும் Tom Sawyer என்ற சிறுவர்களின் சாகசச் செயல்கள், அவர்கள் எதிரிகளிடம் பிடிபடல், பிடிபட்டு சித்திரவதைக்குட்படல், தப்பித்தல் போன்ற சம்பவங்களைக் கொண்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல். இந்நாவலைத் தொடர்ந்து அவர், இச்சிறுவர்கள் செவ்விந்தியர்களிடையே சிக்கிக் கொண்டதை வைத்து எழுதத் தொடங்கி 18,000 வார்த்தைகள் வரை நாவலை எழுதியவர். அதை அப்படியே அம்போவென விட்டு விட்டுப் போய்ச் சேர்ந்து விட்டார். தொடரப்படவேயில்லை. முற்றுப் பெறாத அந்த அரைகுறை நாவல் ஒன்பது அத்தியாயங்களோடு நின்று போனது.

Huckfinn and Tom sawyer among the Indians என்ற தலைப்பிலான நாவலை ட்வைன் ஏன் கைவிட்டு விட்டார் என்பது மர்மமாகவே தோன்றுகிறது. அதே சமயம் ட்வைன், இதுபோல நிறைய எழுத்துப் படைப்புகளை முடிக்காது விட்டு வைத்திருக்கிறார். தனக்கு சிந்தனை வறண்டதாகத் தோன்றும்போது தான் எழுதிக் கொண்டிருக்கும் விஷயத்தை அப்படியே விட்டு விட்டு பிறகு பிறிதொரு நாள் படைப்பு ரீதியாகத் தான் “பாட்டரி சார்ஜ்” ஆனதாய் உணரும் போது மீண்டும் அந்த பணியைத் தொடருவார் என்பது அமெரிக்க இலக்கிய வட்டாரத்து செய்தி, ட்வெய்ன் முடிக்காது விட்டுப் போன படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகள் கலிஃபோர்னியா பல்கலைக் கழக நூலகமொன்றின் அறை முழுக்க அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ட்வெய்னின் ஒரேயொரு மகளான Clara Samossond இறந்த போது இவை கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது மார்க் ட்வெய்னின் முக்கிய முடிக்கப்படாத நாவல் “இந்தியர்கள்” (செவ்விந்தியர்கள்) ட்வெய்ன் படைப்புகளில் வல்லுனரும் சிகாகோ பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியருமான Walter Blair என்பவரின் முயற்சியில் இதுவரை பிரசுரமாகாத அப்படைப்பு லைஃப் ஆசிய பதிப்பின் 1969 – ஜனவரி இதழில் பிரசுரமாகியது. தனது ஆய்வின் முடிவாக, ட்வெய்ன் என்ன காரணத்தால் இந்நாவலை முடிக்காமல் விட்டுவிட்டார் என்பதை Blair கூறுகிறார். லைஃப் பிரசுரத்துக்காக அற்புதமான வண்ண ஓவியங்களை தீட்டியிருப்பவர் James Mc Mullan எனும் ஓவியர்.

இறுதியாக, லைஃப் பத்திரிகையின் முக்கிய பங்களிப்பாக அது வெளியிட்டு வந்த சிறப்பு இதழ்கள் சிறப்பு இரட்டையிதழ்கள் பற்றி ஓரிரு விஷயங்கள். உலகெங்கும் பத்திரிகைகள், சிறப்பு மலர்களை, சிறப்பிதழ்களை வெளியிடுகின்றன. லைஃப் அதிலும் நிகரற்ற பணியைச் செய்திருக்கிறது.

அன்றைக்கென்னமோ, நாயக்கர் வாட்டத்தோடு காணப்பட்டார். என்னைக் கண்டதும் மலர்ச்சியோடு சிரிக்கும் அவர் முகம் சிறுத்துத் தொங்கியிருந்தது.

“நோட்டீசு வந்திருக்குங்க…” என்றார் கரகரத்த குரலில். “என்ன ஏது?” என்று கேட்டேன்.

“மூர் மார்க்கெட்டை எடுக்கப் போறாங்களாம். ஜீவை எடுத்தாச்சு. இதையும் எடுக்கப் போறதாக. ரயில்வே காரனுக்கு எடம் வேணுமாம். இது ஏற்கனவே தெரிஞ்சதுதான். ரெண்டு நோட்டீசு அனுப்பிச்சிட்டாங்க. காலி பண்ணித் தரணுமினு ஸ்ட்ராங்கா அனுப்பிச்சிருக்காங்க.”

சிறிது நேரம் மெளனம்.

“லைஃப் டபுள் இஷ்யூ இருக்கு பாருங்க” கூறிவிட்டு மூன்றை எடுத்துப் போட்டார்.

உலக சினிமாவுக்கென ஒப்பற்றதொரு சிறப்பிதழைத் தயாரித்திருந்தது லைஃப். மற்றொன்று புகைப்படக்கலைச் சிறப்பிதழ். புகைப்படக் கலைக்கு இதுவரை எந்தப் பத்திரிகையும் செய்திருக்காத வகையில் 1967 - ஜனவரி லைஃப் இதழ் Photography Special Double Issue-வைத் தயாரித்து வெளியிட்டது. நாயக்கரிடம் கிடைத்த மற்றொரு அதி சிறப்பான – முக்கியமான இரட்டைச் சிறப்பிதழ் – The Bible Double Issue 1965 – ஏப்ரல் இதழை பைபிள் சிறப்பிதழாகத் தயாரித்து வெளியிட்டது லைஃப்.

இது மிக மிக அற்புதமான இதழ். விவிலிய நூல் தொடர்பாயும் கிறிஸ்துவ சமயம் தொடர்பாயும் சகல விவரங்களை ஆய்வு ரீதியாய் ஒப்பற்ற புகைப்படங்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற ஓவியங்களோடு ஏராளமான கட்டுரைகளால் நிரப்பி தயாரிக்கப்பட்டது இச்சிறப்பிதழ்.

நன்றி: விட்டல்ராவ் – வாழ்வின் சில உன்னதங்கள் – நர்மதா வெளியீடு

புத்தக அறிமுகத்திற்காக மட்டுமே விட்டால்ராவின் "வாழ்வின் சில உன்னதங்கள்" நூலில் இருந்து இந்தக் கட்டுரை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலே செல்க...(go to top)
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </