வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை
இதழ்: 2 :: சித்திரை (May), 2015
   
 
  உள்ளடக்கம்
 
நகுலனின் இரு கவிதைகள் - விக்ரமாதித்தன் நம்பி
--------------------------------
மனிதன் - ஈ.பீ.டொங்காலா - தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
வந்தாரங்குடி - கண்மணி குணசேகரன் - தமிழ்மகன்
--------------------------------
கோடை - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோ நடத்திய சிறுகதை பயிற்சிப் பட்டறை - 1 - தினேஷ்
--------------------------------
மூர் மார்க்கெட் எரிந்து முடிந்தது - விட்டல்ராவ்
--------------------------------
அஞ்சலி : திருமதி. கமலினி செல்வராஜன் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
மொழியும், இலக்கியமும் - விட்டல்ராவ்
--------------------------------
 
   
 
1

 
 
 
 
   
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
வந்தாரங்குடி - கண்மணி குணசேகரன்

- தமிழ்மகன்


சென்ற ஆண்டில் வெளியான நாவல்களில் அதிகம் கவனம் பெறாமல் போன சமகால சரித்திர நாவல் வந்தாரங்குடி.

அந்த நாவல் நான்கு விஷயங்களுக்காகப் போற்றப்பட வேண்டும்.

அது வன்னியர் சங்கம் அந்த சமூகத்து மக்களிடையே எப்படி இடம் பிடித்திருக்கிறது என்பதைச் சொல்கிறது. இது நேரடியாகப் புரிந்துகொள்ளக் கூடிய - பெரும்பாலும் எல்லோராலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட முதல் அம்சம்.

இந்த உலகில் தலித் இலக்கியம் என்று போற்றப்படும்போதோ, நகரத்தார் வாழ்வியல் - நாட்டுக்கோட்டை அரசர் என்று சிலாகிக்கும்போதோ, சைவப் பிள்ளைமார் சரித்திரம் என ஏற்கும்போதோ இருக்கிற மனநிலை இடைநிலை சாதியினரை அணுகும் படைப்புகளில் இல்லாமல் போனது ஏன் என்ற கேள்வியை முன் வைக்கிறது.

சாதியை ஆதரிப்பது அல்ல இதன் நோக்கம். சாதி அடுக்குகளை அணுகுவதில் இருக்கும் சிக்கல் இது என்றே பார்க்கிறேன்.

இது முற்று முழுக்காக வன்னியர் சமுதாய மக்கள் அதிகம் வாழும் கடலூர் மாவட்டத்தைச் சித்தரிக்கிறது. நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அமைக்க வேண்டி அங்கு அப்புறப்படுத்தப்பட்ட கிராம மக்களின் வலியைச் சொல்கிறது. அதிலே பாதிக்கப்பட்டவர்கள் 99 சதவிகிதம் வன்னியர்கள். அவர்களை வன்னியர்கள் என்று சொல்லாமல் ஜாட் இன மக்கள் என்றா சொல்ல முடியும்? ஆக, அது வன்னியர்களின் கதை.

1980-களில் அந்தப் பிரச்னையைக் கையில் எடுத்து பேசுபவர் டாக்டர் ராமதாஸ். அந்த இன மக்கள் அனைவருமே அவரால் விடிவுகாலம் வந்துவிடும் என்று நம்புகிறார்கள். அவரே நாவலில் வருகிறார். அவருடைய கட்சிக்காரர்கள் வருகிறார்கள். இது எதுவுமே தவிர்க்க முடியாத நாவல் களத்தின் பகுதிகள்.

அதே காலகட்டத்தில் நிகழ்ந்த இட ஒதுக்கீடு போராட்டம் நாவலில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏறத்தாழ 30 பேர் சுட்டுத்தள்ளப்பட்ட நிகழ்ச்சி. எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் தமிழகம் ஸ்தம்பித்த போராட்டமாக வரலாற்றில் சொல்லப்படும் அந்த நிகழ்ச்சியும் வன்னியர்கள் சம்பந்தமானது. அது மரம் வெட்டி சாலையில் போடப்பட்ட நிகழ்வாகச் சித்திரிக்கப்படுகிறது. 69 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டி நடைபெற்ற மக்கள் எழுச்சி அது.

ஆனாலும் வந்தாரங்குடி என்ற இந்த நாவல் வன்னியர் இனத்தைச் சித்திரிக்கும் நாவல் என்று பொதுவாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இந்தக் கதையில் நான் கண்ட தவறு ஒன்று உண்டு. அதன் ஆசிரியரான கண்மணி குணசேகரனின் பார்வையில் விவரிக்கப்படும் காட்சிகளின்போதும் ராமதாஸை, அய்யா என்றே விளிப்பது அவசியமற்றது. அதை அவர் நிச்சயம் தவிர்த்திருக்க வேண்டும். பா.ம.க. இளைஞர்களைப் பற்றிய விவரணைகள் வரும்போது லட்சியவாதம் தொனிக்கும் ஒரு நடையைக் கட்டமைத்திருப்பதும் அந்த இயக்கத்தின் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையைச் சார்ந்ததாகவே வெளிப்படுகிறது.

இரண்டாவது இந்த நாவலில் கையாளப்பட்டிருக்கும் மொழி. ஏற்கெனவே நடுநாட்டு சொல் அகராதி வெளியிட்ட கண்மணி குணசேகரனின் சொல் ஆட்சிக்கு பல இடங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

''டேய் நீ அவனுக்கு பண்ணக்காரன்னா ஊத்தற பழைய கஞ்சிய குடிச்சுட்டு ஒழவு வெட்டியான் வேல பாத்துக்கிட்டு ஒழுங்காப்போ.. நீ வந்து இங்க பஞ்சாயத்தம் பொளக்கிற வேலைய வுட்டுடு. இப்ப இவனால உள்ள போவலாம்னு இருக்கிறன். உன்னால உள்ள போவ வெச்சிடாத'' - கதை மாந்தர்கள் இப்படித்தான் பேசுகிறார்கள்.

இத்தகைய அரிதாரம் பூசாத உரையாடல்கள் நம்மை நடுநாட்டுக்கு கைபிடித்து அழைத்துச் செல்கின்றன. மொழியின் உயிர் அதன் வட்டார வழக்கில் இருக்கிறது. அதை அவர்கள் பேசுகிற பேச்சோடு நிறுத்திக்கொண்டு, ஆசிரியரின் வர்ணனைகள் உரைநடைத் தமிழில் அதாவது பொதுத் தமிழில் சொல்லியிருப்பது கூடுதல் சிறப்பு. சில ஆசிரியர்கள் கதை சொல்லலையே அந்த வட்டார வழக்கில் அமைக்கின்றனர். அது போன்ற சித்ரவதை இருக்க முடியாது. அத்தகைய தவற்றை கண்மணி செய்யவில்லை.

மூன்றாவது அம்சம் இதன் பின்னணி. 1980களில் நடைபெறும் இந்தக் கதையில் அதற்கான சரித்திரப் பின்னணி ஆணித்தரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பா.ம.க-வின் வளர்ச்சி, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் இட ஒதுக்கீட்டுக்காக உயிர்பலி சம்பவங்கள் அனைத்தும் உயிரோட்டமானவை.

நெய்வேலி சுரங்கத்துக்கான ஆரம்ப நோட்டீஸ் விநியோகம் முதல், மக்களை வெளியேற்றி வேறு எங்கோ தொலைதூரங்களில் வந்தாரங்குடியாக அமர்த்துவது வேரோடு பிடுங்கி எறியப்படும் வலியை உரக்கச் சொல்லுகிறது.

அந்த எளிய மக்களின் வயல் சார்ந்த வாழ்க்கை எப்படி சின்னபின்னமாகிறது என்பது தத்ரூபமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கிராமத்தைவிட்டுக் கிளம்பும்போது, மஞ்சள் இழைக்கும் கல்லையும் மாடுகட்டும் கயிரையும் ஆடு, மாடுகளையும் பானைகளையும் பிரதான சொத்துக்களாக சுமந்து செல்வது துயரத்தின் உச்சம்.

நான்காவதாக, குடி பெருமை என்று ஒன்று உண்டு. அது அவர்கள் குடியிருக்கும் இடத்தினால் அமைவது. இன்று அமெரிக்கா, நாளை நார்வே என்று வேலை கிடைக்கும் இடம் எல்லாம் ரூம் நம்பரை மாற்றிக்கொள்வது போல ஒரு கிராமத்தான் தன் குடியிருப்பை மாற்றிக்கொள்வது எளிதானது அல்ல. அதுதான் இந்த நாவலின் மையம் என்றும் கருதுகிறேன்.

மரத்தின் ஒரு கிளையை வெட்டியதற்காக, பக்கத்து வீட்டுக்காரர்களோடு ஏற்படும் சண்டையில் கதை ஆரம்பிக்கிறது. ஒரு சிறிய கிளை. அது வெட்டப்பட்டதற்காக உறவுக்காரர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொள்ளும் அளவுக்கு விரோதம் வளர்க்கிறார்கள்.

ஆனால், வாழ்க்கைதான் எத்தனை அபத்தமானது. நிலக்கரி சுரங்கத்தினால் அந்த மரம், அந்த நிலம், அந்த சண்டை எதுவுமே பொருளிழந்து போகிறது. யாருக்குமே எதுவுமே சொந்தமில்லை என்கிற அநீதி... சட்டப்படி நிறைவேற்றப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்காக ஆட்சியாளர்கள் தீவிரமாக இருக்கும் இந்த நேரத்தில் இந்த நாவலைப் படிப்பது மேலும் அர்த்தம் மிக்கதாக இருக்கிறது.

தமிழினி
25 ஏ, தரைத்தளம், முதல் பகுதி,
ஸ்பென்ஸர் பிளாஸா,
769, அண்ணாசாலை,
சென்னை- 2.
தொலைபேசி: 044-28490027.
வந்தாரங்குடி,
கண்மணி குணசேகரன்,
விலை ரூ.500/-

மேலே செல்க...(go to top)
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </