வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கட்டுரைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்யுங்கள்
 
 
 

 

 

 

 

 
     
     
     
   
கட்டுரைகள்
1
 
 
     
     
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கட்டுரைகள் கட்டுரைகள் வாயில்


கொஞ்சம் நியாயம்... கொஞ்சம் அக்கப்போர்

மௌத்கல்யாண் புதன், 21-04-2010 ; 10:20 PM

தனது சுதந்திர தாகத்தைத் தணிக்க...

தணிக்க வழியில்லாத பசியின் கொடுமையைத் தாங்கிக்கொள்ள...

கஞ்சா போன்ற போதை வஸ்துவின் உதவியை நாடி...

பிறகு அதன் அரவணைப்பில்...

ஒரு கோவில் யானையிடம் தேவைக்கதிகமாக "விளையாட" முயன்றதால்...

பாரதி எனும் ஏழைக் கவிஞர் அமரர் ஆனார் என்பதைக் கூறும் அதே மூச்சில்...

பிரிவினைவாதம் மூலமாக தனது ஆரம்ப அரசியல் அடித்தளத்தை அமைத்த...

தமிழக முதல்வர் கலைஞரை...

தேவைக்கு அதிகமாகப் புகழ்ந்து, பெரும்பாலான படைப்பாளிகள் பிழையாகப் பிழைப்பு நடத்தப் பழகிவரும் இக்காலத்தில்...

இதனை எழுதும் என்னைப் பலர் பித்தன் என்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை...அச்சமில்லை...கூச்சமில்லை!

பாரதியின் காலத்திற்குப் பிறகு அவரது எழுத்துக்கள் பலர் பெரும் பணம் சம்பாதிக்க உதவின, உதவிக்கொண்டே இருக்கின்றன.

1882-ல் பிறந்த பாரதி 1921ல் இயற்கை எய்தினார்

அவர் வாழ்ந்த காலத்திற்கேற்ப பாரதி அரிய கருத்துக்களை, இன்றுள்ள கம்ப்யூட்டர்கள் போன்ற கருவிகளின் உதவியின்றி, வறுமையின் பிடியில் வாடியும் அச்சமின்றிக் கூறி அமரரானார்.

பாரதியைப் பெரிதும் கவர்ந்தவர்களுள் பெர்ஸிபிஷ் ஷெல்லி (1792-1822) என்ற ஆங்கிலக்கவிஞரும் ஒருவர். ஷெல்லியின் ஜீவகாருண்யக் கொள்கைகள் தான் பாரதியைப் பெரிதும் பாதித்தன என்பார்கள்.

ஓர் ஆங்கிலேயப் பாராளுமன்ற உறுப்பினரின் மகனாகப் பிறந்த ஷெல்லி பேச்சாற்றலற்றவர் ஆகையால் உரிமைகளுக்காகப் போராட முடியாத உயிரினங்களை, உண்பதற்காகக் கொல்வோர்களைக் ''கொடிய காட்டுமிராண்டிகள்'' என வர்ணித்தவர்.

அவரால் கவரப்பட்ட பாரதி அந்நியர்கள் ஆட்சியில் அடிமைகளாக வாழ்ந்த நமக்கும் மிருகங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லாததை உணர்ந்து, சுதந்திர எண்ணங்களை நம்மில் விதைத்தார்.

தமிழில் மட்டுமே அவரது எழுத்துக்கள் பிரபலமாகியிருந்தால், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்சு, இந்தி, வங்கமொழி, ஏன் வட குஜராத்தில் மட்டுமே அதிகமாகப் பேசப்படும் ''கச்சி''போன்ற மொழிகளைக்கூட நன்கறிந்தவர் பாரதி.

ஆனால் பாரதி ஒரு சிறந்த கவிஞர் மட்டுமல்ல பத்திரிகையாளராகவும் இருந்தபடியால், உரைநடையிலும் அவர் வல்லவராகத் திகழ்ந்தவர்.

வெள்ளையனின் ஆட்சியை வெறுத்தாலும் அவனது மொழியை வெறுக்கவில்லை அவர்.

அவரது காலத்தில் மட்டுமல்ல, தமிழ் எழுத்தாற்றல் உள்ள பலர் இன்றும் கூட ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கிறார்கள் என்பதையும் சொல்லியாக வேண்டும்.

பாரதிதாசன், பாவலர் வரதராஜன் போன்ற கவிஞர்கள் மற்றும். கு.ப.ரா. வ.ரா. க.நா.சு, தி.ஜ.ர. போன்ற பிரபல எழுத்தாளர்கள் பலரும் கூட, அவர்களது தகுதிக்கேற்ப தங்கள் வாழ்நாளில் பணம், புகழ் சம்பாதிக்கவில்லை என்பது உண்மை. அம்மாமேதைகளின் காலங்களில் கம்ப்யூட்டர்கள் போன்ற கருவிகள் இன்று எழுத்தாளர்களுக்கு உதவுவதுபோல் அமைந்து இருக்கவில்லை தான்.

ஆனால்...
கம்ப்யூட்டர்களில் தேர்ச்சி பெற்ற, இக்காலத்தில், தமிழில் ஜனரஞ்சகமாக எழுதிப்புகழ்பெற்ற, சமீபத்தில் மறைந்த சுஜாதா என்கிற ரங்கராஜன் கூட எழுத்துக்கள் மூலமாக தகுந்த அளவு பெயர், புகழ், செல்வம் ஆகியவற்றை சம்பாதிக்கவில்லை என்ற எனது வாதத்தை அடுத்து வரும் பத்திகள் நிரூபிக்கும்.

நிற்க
பாரத நாட்டு மொழிகளில் 'எழுத்துழைப்புக்கு' தகுந்த ஊதியம் கிடைக்கவில்லைஎன்று அங்கலாய்க்க்கும் அதே நேரத்தில் நம்மவர்களுக்கும், வளர்ந்த நாடுகளின் எழுத்தாளர்களுக்கும் இடையே சிலஅடிப்படை வித்தியாசங்கள் உள்ளன என்பதையும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்ற பழமொழிக்கேற்ப இரு எழுத்தாளர்களுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரிக்கிறேன்.

இன்று உலக எழுத்தாளர்களில் மிகப்பிரபலமாக இருப்போர்களுள் ஒருவர் ஃபிரடரிக் ஃபோஸைத். 1938-ல் பிறந்த இவர் ஆரம்ப காலத்தில் ஒரு பத்திரிகையாளர். ஆங்கில செய்திஸ்தாபனங்களான ராய்ட்டர்ஸ் மற்றும் பி.பி.சி. நிறுவனங்களில் 1961 முதல் 1967 வரை வெளியுறவுச் செய்தி முகவராகவும், போர் நிருபராகவும் பணிபுரிந்தார்.

ஃபிரடரிக் அனுப்பிய சில செய்திகளை பி.பி.சி. அமைப்பால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகவே, வேலையைத் துறந்து 1968ல் முழுநேர எழுத்தாளரானார். 1969ம் ஆண்டு 35 நாட்களில் தனது முதல் முழுநீள புதினமான ''தி டே ஆப் தி ஜக்கால்'' -- அதை தமிழில் ''நரியின் நாள்'' என்று மொழி பெயர்க்கலாம் - எழுதி முடித்தார்.

சுமார் ஒன்றரை ஆண்டு காலம் இவர் பதிப்பகங்களின் ஏஜெண்டுகளிடம் கெஞ்சிக்கொண்டிருந்த நேரத்தில் அக்கதையின் முக்கிய பாத்திரமான பிரான்ஸ் நாட்டு அதிபர் சார்லஸ் டி கால் இயற்கை எய்தினார்.

அதில் சிக்கலென்னவென்றால் அந்த நாவல் டி காலைக் கொல்லத் தீட்டப்பட்ட, ஆனால் முறியடிக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் பற்றியது.

''யோவ், சாதாரணமாகச் செத்தவனைக் கொல்ல சதின்னு ஒரு கதையைச் சொல்ல வந்துட்டியே? எவன்யா படிப்பான்?'' என்று பதிப்பகத்தார்கள் கிண்டல் செய்தனர்.

ஃபோர்ஸைத் சேமித்து வைத்திருந்த பணம் கிட்டத்தட்ட காலியான நேரத்தில் ஒரு பதிப்பகம் அவர் மீது பரிதாபப்பட்டு ஆயிரம் பிரதிகளை வெளியிட்டது. பத்திரிகை விமர்சனங்கள் அப்புத்தகத்தை வானளாவப் புகழ்ந்தன. 1971ல் மட்டும் அப்புத்தகம் சுமார் 50000 ஆயிரம் பிரதிகள் விற்றது. சில கோடி பிரதிகள் விற்பனையான பிறகும். அப்புத்தகத்தின் புதிய பதிப்புகளை உலகம் முழுதும் உள்ள கடைகளில் இன்றும் காணலாம்.

பற்றாக்குறைக்கு 1973ல் ஃப்ரெட் ஜிமமர்மேன் அதைப் படமாக்கினார். அதுவும் சக்கைப்போடு போட்டது.

அதே கருவை வைத்து 1997 ஆம் ஆண்டு ''தி ஜக்கால்” என்ற வேறொரு ஆங்கில வெற்றிப்படமும் வெளிவந்தது.

ஃபோர்ஸைத் நாவல்களை விரும்பிப்படிக்கும் கோடானுகோடி ரசிகர்களுள் நானும் ஒருவன்.

1989ல் ஃபோர்ஸைத்தின் படைப்பான ''தி நெகோஷியேட்டர்'' என்ற நாவலில் ' ஒரு கற்பனை அமெரிக்க ஜனாதிபதியின் மகன், இடுப்பிலுள்ள பெல்ட்டில் பொருத்தப்பட்டுள்ள வெடிகுண்டு வெகுதூரத்திலிருந்து இயக்கப்பட்டு கொல்லப்படுவதாக' சித்தரிக்கப்பட்டிருந்தது.

ஃப்ரெடரிக் ஃபோர்ஸைத்

1991ல் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொல்ல ஐடியா வழங்கிய புத்தகம் இதுதான் என்ற பேச்சு அடிபட்டது.

1992ல் நான் லண்டனில் இருந்தபோது மிகவும் சிரமப்பட்டு ஃபோர்ஸைத்தை தொடர்பு கொண்டேன்.

நகரிலிருந்து சுமார் 60 மைல் தூரத்தில் ஒரு சிறு கிராமத்தில் தான் வசிப்பதாகவும், அடுத்த நாள் மதியம் சரியாக பன்னிரண்டு மணிக்கு மேல் சுமார் ஒரு மணிநேரம் பேசலாம் என்றும் தொலைபேசியில் தெரிவித்தார் ஃபோர்ஸைத்.

அவர் வீட்டுக்குச் செல்ல சரியான வழி, ரயிலின் எண், வழி தவறினால் தொலைபேசி மூலம் உதவும் எண்கள் போன்ற விஷயங்களைத் தெளிவாக விளக்கிச் சொன்னார் அவர்.

பொதுவாகவே வெள்ளையர்கள் நேரம் தவறாமல் சந்திப்புக்களை நிகழ்த்துவார்கள். அத்தனை புகழ் வாய்ந்த எழுத்தாளர் எப்படி நடந்து கொள்வாரோ என்ற கவலையுடன், சற்று முன்னதாகவே லண்டன் கிங்ஸ் கிராஸ் என்ற ரயிலடியிலிருந்து வண்டி ஏறினேன்.

ரயிலில் அதிகம் கூட்டமில்லை. அவர் வசிக்கும் கிராமம்தான் கடைசி ஸ்டேசன். அங்கு நான் மட்டுமே ரயிலிருந்து இறங்கினேன். மிகச்சிறிய இரயிலடி. பயணச் சீட்டு கொடுப்பவர், வாங்குபவர், பரிசோதகர், நிலைய மேலாளர் என்ற எல்லாப் பணிகளையும் செய்ய ஒருவர் மட்டுமே இருந்தார்.

வெள்ளையர்களைத் தவிர அந்த கிராமத்தில் வேறு யாரையும் பார்த்திராத அந்த நபர், ''யாரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?'' என்று, பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டே வினவினார்.

''எழுத்தாளர்'' என்று நான் ஆரம்பிப்பதற்குள், ''நீங்கள் அடுத்த ரயிலில் தானே வருவதாக இருந்தீர்கள்? உங்களை ஒரு மணிநேரம் பொறுத்துத்தானே ஃபோர்ஸைத் சந்திப்பதாக உள்ளார்?'' என்று அந்த மனிதர் சற்று ஆச்சரியத்துடன் கூறினார்.

'' ஒரு உலகப்புகழ் வாய்ந்த எழுத்தாளர் ஒரு சாதாரண நிருபரின் வருகையைப் பற்றி இவ்வளவு அக்கறையுடன் இருக்கிறாரே'' என்ற எண்ணம் என் முகத்தில் பிரதிபலிப்பதை கவனித்த அந்த இரயில் நிலைய ஊழியர் தொடர்ந்து, ''ஃபோர்ஸைத் உங்களை, தானே இங்கு வந்து அழைத்துச் செல்வதாக இருந்தார். ஆனால் அவருக்கு இன்னும் சுமார் ஒரு மணி நேரம் பணி இருப்பதால், ஒன்று நீங்கள் இங்கு காத்திருக்கலாம், இல்லையேல் இங்கே வாடகைக்கார் இருக்கிறது. அதில் நீங்கள் அவர் வீட்டுக்குச் செல்லலாம் என்றார்.

அது உண்மையிலேயே ஒரு குக்கிராமம்.

''ஃபோர்ஸைத் வெளியே சென்றிருந்தால் என்ன செய்வது?'' என்று சிந்திக்கலானேன்.

''அவர் இன்னும் கிளம்பியிருக்க மாட்டார். நீங்கள் புறப்பட்டவுடன்அவரிடம் தொலைபேசியில் தகவல் சொல்லி விடுகிறேன்'' என்றார் ரயில் சிப்பந்ததி.

சுமார் 1 கிலோ மீட்டர் செல்வதற்குள், வண்டியிலிருந்த கம்பியில்லா இணைப்பின் வழியாக ''ஃபோர்ஸைத் பாதி வழியில் என்னை அழைத்துச் செல்வதாக கூறிவிட்டார்'' என்ற செய்தியை ரயில் அலுவலர் தெரிவித்தார்.

ஒரு பிரம்மாண்டமான பங்களா 12 படுக்கை அறைகள், 10, 12 வரவேற்பறைகள் மற்றும் ஒரு அலுவலகம், அதை ஒட்டிய கேரேஜுகளில் அரை டஜன் விலை உயர்ந்த பளபளக்கும் ''விண்டேஜ்'' சொகுசு கார்கள் ஆகியவற்றைக் கண்டு பிரமித்தேன்.

'' வீட்டைக் சுற்றி சுமார் 60 ஏக்கரா பரப்பளவில், 70 பந்தயக் குதிரைகளுக்குப் பயிற்சி அளிக்கும் பண்ணை இருக்கு. உங்களுக்குக் குதிரை சவாரி செய்யும் எண்ணமோ, பழக்கமோ உண்டா?''

ஃபோர்ஸைத்தின் குரல் கம்பீராக இருந்தது.

''எனக்குக் குதிரைகளைப் பிடித்தாலும் அவற்றின் மீது சவாரி செய்து பழக்கமில்லை. எங்கள் ஊரில் சிலநேரங்களில் ரயில்களை திடீரென ரத்து செய்து விடுவார்கள். அதனால் சற்று முன்னதாகவே..' என்று பேச்சை ஆரம்பித்தேன்.

அவரது கதா பாத்திரங்களையும், அவற்றின் அரசியல் பின்னணியும் பற்றி விவாதித்தால் மனிதருக்குப் படு குஷி.

எங்களது உரையாடலிலிருந்து சில பகுதிகள்.

''உங்களுடைய படைப்புகளில்'' டாக்ஸ் ஆஃப் பார்'' என்ற புத்தகத்தைத் தவிர எதிலுமே சமூக ரீதியான ''மெசேஜ்'' இருந்ததில்லையே?''

'' நான் கதை எழுதுபவன். அதற்கேற்ப ஏதாவது மெசேஜ் அமைந்தால் சரி. மற்றபடி யாருக்கும் உபதேசம் செய்வதால் எந்தப் பயனும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.''

'' உங்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட கருவின் உதவியால்தான் எங்கள் நாட்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்று பேசிக்கொள்கிறார்கள்''.

''ஊர்வாயை அடைக்க முடியாது. ஆனால் பதவியிலிருப்போரையோ, அல்லது முக்கியத் தலைவர்களையோ கொல்லும் பழக்கத்தை மத்தியகிழக்கு நாடுகளில் பல நூற்றாண்டுகளாகச் செய்து வருகிறார்கள். அதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட போதை வஸ்துவின் பெயர் ஹஷிஷ். அதை உட்கொள்ளச் செய்து முக்கியஸ்தர்களைக் கொல்ல, ஏவிவிடப்படுபவர்களைக் குறிக்க உருவான ஆங்கில வார்த்தைத்தான் ''அஸாஸின்''. அதாவது கொலையாளி .. கொள்கைக்காக, பகைமைக்காக, நாட்டுப்பற்று என்றுநினைத்து இப்படிப்பட்ட தவறுகளைச் செய்யத் தூண்டுபவர்கள் காலங்களுக்கேற்ப கருவிகளைத் தயாரிப்பதில் வல்லவர்கள். உங்கள் புராதனகால அரசர்களைக் கொல்ல ''விஷ கன்னிகைகள்'' தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட வில்லையா? ஒரே வித்தியாசம், அன்று வெடிமருந்து இருக்கவில்லை''.

''இன்று ஆங்கில எழுத்தாளர்கள் அளவுக்கு உலகின் பிற மொழி எழுத்தாளர்கள் வளர்ச்சியடைந்ததாகவோ, வசதியுடன் வாழ்வதாகவோ தெரியவில்லையே?''

''ஜப்பான் முதல் ரஷ்யா வரை என்னால், வளர்ச்சி அடைந்த எழுத்தாளர்களின் ஒரு நீண்ட பட்டியலைத் தர முடியும். பழங்காலத்திலிருந்து நிகழ்காலம் வரை, எழுத்தில் ஆழமும் வலுவும் இருந்தால், புகழும், பணமும் தானாகவே வரும் என்பதுதான் உண்மை. உதாரணத்திற்கு, இராமாயணத்தைப் படைத்த வால்மீகியும், மகாபாரதத்தை உருவாக்கிய வியாசரும், அவர்கள் காலங்களில் அரசர்களால் போற்றப்பட்டதாகப் படித்திருக்கிறேன். இன்றைய வெற்றிபெற்ற ஆங்கில எழுத்தாளர்களின் வசதிகளுக்குக் காரணம், படைப்புகளில் உள்ள செய்திகளின் அடிப்படை உண்மைகள். இராமாயணத்திலும் பாரதத்திலும் பல இடங்கள். ஆயுதங்கள், நாடுகள் என பல உண்மையான விஷயங்கள் வருணிக்கப்பட்டுள்ளன. அந்த இலக்கியங்கள் அழிவற்று இருப்பதற்கு அவற்றின் அந்த ஆழமும் ஆராய்ச்சியும் முக்கிய காரணங்கள். மேம்போக்கான எழுத்துக்களை எல்லோரும் மறந்துவிடுவார்கள். இக்காலத்தில், தமிழில் தமது மனைவி சுஜாதாவின் பெயரில் எழுதும் ரங்கராஜன் என்ற படைப்பாளிக்கு நல்லபெயர் இருப்பதாக கேள்விப்படுகிறேன். அவரது கதைகளில் ஜனரஞ்சகமான விஷயங்களுக்கிடையில் பல தகவல் தரப்படுகின்றன என்கிறார்கள்''.

ஃபோர்ஸைத் எழுதிய நாவல்களின் விற்பனை அமோகமாக இருப்பதன் காரணத்தினால் அவர் எழுதாத சில நூல்களைவிட, சில இந்தியப் பதிப்பாளர்கள் அவர் பெயரில் வெளியிட்டு கொள்ளை லாபம் அடித்திருப்பதையும், அவரது படைப்புகளை திருட்டுத் தனமாக வெளியிட்டு சம்பாதிப்பதையும் அவர் அறிந்திருந்ததோடு அவற்றின் நகல்களையும் தனது அறையில் வைத்திருந்தார்.

''இப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாதா?'' என்று கேட்டேன்.

'' உலகளவில் புத்தகங்களும் பாடல்களும் சகட்டுமேனிக்குத் திருடப்படுகின்றன. இந்தத் திருட்டுப் பூனைகளுக்கு மணிகட்டுவது என்பது கிட்டதட்ட நடக்காத காரியம்''.

''உங்கள் படைப்புகளுள் உங்களை உலகுக்கு உணர்த்திய ''ஜக்கால்'' புத்தகத்தின் திரை வடிவத்தைத்தவிர, பிற படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லையே?''

''ஃபிரெட் ஜிம்மர்மேன் எனது கதையைக்கெடுக்காமல் படமெடுத்தார். அது ஓடிற்று. இப்போது 'திரைக்கதை அமைக்கிறேன் பேர்வழி' என்ற கதையின் ஓட்டத்தை சில அரைவேக்காடுகள் கெடுக்கிறார்கள். கதை எனதாக இருந்தாலும், திரைக்கதையை கெடுத்த புண்ணியவான்கள் தங்கள் பெயர்களை அவற்றுடன் இணைத்து குற்றத்தை ஏற்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதால் நஷ்டம் எனக்கல்ல''.

எனக்கு ஒரு மணி நேரம் மட்டுமே ஒதுக்கியிருந்தாலும், என்னுடன் சுமார் 5 ணி நேரம் உரையாடினார் ஃபோர்ஸைத்.

இடையிடையே அவரே காஃபி தயாரித்தார்.

நான் சைவ உணவு மட்டுமே உண்பதால் என்னை அவரது சமையலறைக்குள் அனுமதித்து அங்கிருந்த காய்கறி, மசாலாக்களுடன் நான் தயாரித்த உணவை அவரும் ருசித்துச் சாப்பிட்டார்.

நான் லண்டனுக்குத் திரும்பும்போது ஃபோர்ஸைத் தானே வண்டியோட்டிக்கொண்டு வந்து இரயிலில் வழியனுப்பினார்.

சில மாதங்கள் கழித்து நான் தமிழ் எழுத்தாளர் சுஜாதா அவர்களை சென்னையில் சந்திக்க நேர்ந்தது.

சுஜாதா

ஃபோர்ஸைத் பற்றி ஆர்வமாகப் பேசமுற்றபட்டபோது, சுஜாதா தட்டிக் கழித்தார்.

''அவர் எழுதின முதல் புத்தகத்துக்கு ஜக்கால்னு ஏதோ ஒரு டைட்டில் இருப்பதாக ஞாபகம். ரொம்ப விஸ்தாரமா, வாசகர்களுக்குத் தேவை இல்லாத பல செய்திகளை அதில் படிச்சேன்னு நினைக்கிறேன்.

அவருக்கு இருந்த வேலைப்பளுவின் காரணமாக சுஜாதாவால் எனக்கு 10 நிமிடங்களை மட்டுமே ஒதுக்க முடிந்தது போலும்.

சுஜாதா ஆங்கிலம் மிக நன்கு அறிந்தவர். ஃபோர்ஸைத்துக்கு ஆங்கிலத்தைத் தவிர, வேறு எந்த இந்திய மொழியும் தெரியாது. ஆனால், அவர்பிற மொழிகளிலுள்ள பிரபல எழுத்தாளர்களைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தார்.

சுஜாதா தமிழ் மொழியின் தலை சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்பதில் ஐயமில்லை. இன்றைய தமிழ் எழுத்தாளர்களுக்குள் மிகவும் வசதியாக வாழ்ந்தவர் சுஜாதா. தென் சென்னையில் அமைந்திருந்த அவரது 'அம்சான' ஃப்ளாட்டின் இன்றைய மதிப்பு சுமார் ரூபாய் 1.5. கோடி.

ஃபோர்ஸைத் வீட்டின் மதிப்பு 17 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூபாய் 50 கோடி. அவரது சொத்து மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 250கோடி.

1935ல் பிறந்து இவ்வருடம் மறைந்த சுஜாதா தனது வாழ்நாளில் 100 நாவல்கள், 10 நாடகங்கள், 250 சிறுகதைகள், பல திரைப்படங்களுக்கு வசனம் என்று எழுதிக்குவித்திருக்கிறார்.

ஃபோர்ஸைத் இது வரை 18 புத்தகங்கள் தான் எழுதியிருக்கிறார். இதில் இரண்டு சிறுகதைத்தொகுப்புகளும் அடங்கும். அவற்றில் சில திரைப்படங்களாகியுள்ளன. சுஜாதா ஒரு அரசாங்கப் பணியில் இருந்து கொண்டே எழுதினார்.

ஃபோர்ஸைத் வேலையைத் துறந்து - தனது எழுத்தை மட்டுமே நம்பி இருந்தார்.

சுஜாதாவின் எழுத்துக்கள் பல லட்சம் மக்களை கவர்ந்தது என்பதில் எனக்கு ஐயமில்லை.

ஆனால் - தனது எழுத்துக்களை உலகம் முழுதும் பரவச் செய்வதில் ஃபோர்ஸைத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றிக்கான காரணங்கள் -அவர் குறைவாக எழுதினாலும் அதன் உலகத் தரம், அவர் தெரிந்து வைத்திருந்த செய்திகளின் கூர்மை, பிறரிடம் அவர் பழகும் முறை ஆகியவையாகத்தான் இருக்க முடியும்.

பண்டைக்காலத்து எழுத்துலகச் சிற்பிகளை எடுத்துக்கொள்வோம். அங்கீகாரம் எளிதாகக் கிடைத்து விடுவதில்லை என்பதற்கு இரு சான்றுகள்.

இன்று உலகப் பொதுமறை என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திருக்குறளின் ஆசானை ''வள்ளுவன் தனை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு'' என்று சிறப்பித்துக் கொண்டாடி இருக்கிறார் மகாகவி பாரதி.

ஆனால் திருக்குறள் அரங்கேற மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்துப் பொற்றாமரைக் குளத்தில் ஒரு 'அக்கினிப்பிரவேசமே' செய்ய வேண்டியதாயிற்று.

சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின் திருக்குறளுக்குக் கிடைத்திருக்கும் சிறப்பினைப் பார்ப்போம்.

பைபிளுக்கும், குரானுக்கும் அடுத்தபடியாக உலக மொழிகளில் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்டிருப்பது திருக்குறளே.

இந்திய மொழிகளான இந்தி, பஞ்சாபி, வங்காளி, குஜராத்தி, சௌராஷ்டிரா, ராஜஸ்தானி, ஒரியா, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், மட்டுமல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், லத்தின், ரஷ்யன், போலிஷ், செக், டச்சு, ஃபின்னிஷ், ஸ்வீடிஷ், ஜப்பான், சீனம், அராபிய, சிங்கள, பர்மிய, மலாய் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் அந்த மறைநூல் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது நமக்குப் பெருமை தரக்கூடியது.

கவிச் சக்கரவர்ததி என்கிற பெயர் கம்பருக்கு கிட்டக் காரணமாக இருந்த ராமகாதையை அரங்கேற்ற அனுமதிகோரி எத்தனை முறை தில்லை தீட்சதர்களிடம் அவர் மன்றாடி இருப்பார்.

இன்று கம்பரின் கவியமுதை வேறு, வேறு மொழிகளைப் பேசுவோரும் சுவைத்து மகிழ்கிறார்கள்.

பல ஆயிரம், பல நூறு ஆண்டுகளுக்கு முன் பனை ஓலை ஏடுகளில் எழுத்தாணியால் எழுதப்பட்ட திருக்குறளும் கம்பராமாயணமும் இன்று காலத்தை வென்று எண்ணற்றோர் படித்து இன்புறும் இலக்கிய வரிசையில் சேர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?

அவற்றில் உள்ள கருத்தாழமும் பொருட் செறிவும் அற்புதமான சொல் அழகும்தானே.

நமது சமகால தமிழ் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் 'லாண்டரிக் கணக்குகள்' கூட அச்சேறி பலரும் படிக்க நேர்ந்தது. ஆனால் ஃபோர்ஸைத்தின் வார்ப்புகளைப் போல அதன் வீச்சு எல்லாத் திசைகளையும் எட்டாமல் போனதற்கு அவற்றினுடைய கருத்துக்களின் ஆழக்குறைவும், அவர் பிறரிடம் பழகிய முறையும் காரணங்களோ?

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</