வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
கட்டுரைகள்
1
 
 
     
     
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கட்டுரைகள் கட்டுரைகள் வாயில்

சன்மானம்

அ.முத்துலிங்கம்

கடந்த வாரம் ஒருநாள் நான் வழக்கம்போல கீழ் அறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். மனைவி மேலே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று மேலேயிருந்து சத்தம் வந்தது. அப்படிக் கத்தினால் இரண்டு காரணம்தான் இருக்கும். ஒன்று, சுடுதண்ணீர் பானையை காலிலே போட்டுவிட்டார். இரண்டு, 649 லொத்தரில் 10 மில்லியன் டொலர் விழுந்துவிட்டது. இரண்டையும் சமாளிக்கும் தைரியத்தை மனதில் உண்டாக்கிக்கொண்டே மேலே ஓடினேன். தொலைக்காட்சியில் பிரபல எழுத்தாளர் திரு வெங்கட் சாமிநாதனின் உருவம் தெரிந்தது. ஒரு நிகழ்ச்சியில் இவர் நிபுணராக அழைக்கப்பட்டு கருத்து சொல்லிக் கொண்டிருந்தார்.

என்னுடைய மனைவிக்கு வெங்கட் சாமிநாதன் என்றால் மிகப் பெரிய ஆதர்சம். அவருடைய ஒரு புத்தகத்தையும் படித்தது கிடையாது. இது வேறுவிதமான மரியாதை. ரொறொன்ரோவில் எங்கள் வீட்டுக்கு அவர் மூன்று தடவை வந்து மனைவி சமைத்த உணவை உண்டிருக்கிறார். புத்தகங்களை எப்படி வெ.சா கறாராக விமர்சிப்பாரோ அப்படியே கறாராக சாப்பிடும் உணவையும் விமர்சிப்பார். மூன்றாவது நாள் சாப்பிட்டபிறகு என் மனைவியின் ரசத்தை புகழ்ந்து தள்ளிவிட்டார். நான் அது சொதி என்று நினைத்திருந்தேன். அன்றிலிருந்து மனைவிக்கு அவரிடம் பெருமதிப்பு ஏற்பட்டிருந்தது. தொலைக்காட்சியில் அவரைப் பார்த்து அப்படி அலறியதற்கு அதுதான் காரணம்.

நானும் தொலைக்காட்சியில் மீதி நிகழ்ச்சியையும் பார்த்துவிட்டு வெ.சாவுக்கு அவரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன். அவருடைய பதில் மின்னஞ்சலில் மறுநாளே வந்தது. ‘அவர்களாகவே அழைத்தார்கள். காரிலே வந்து கூட்டிப் போனார்கள். திரும்பவும் காரிலே வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். ஆனால் சன்மானம் ஒன்றுமே தரவில்லை.’ நான் அவருக்கு ஆறுதல் சொல்லி பதில் எழுதினாலும் என் மனம் இதையே சிந்தித்தபடி இருந்தது. நான் 19வது வயதில் எழுதத் தொடங்கினேன். ’எப்படியானாலும் பிரசுரமானால் போதும். சன்மானமே தேவையில்லை’ என்றுதான் அந்தக் காலத்தில் நினைப்பு இருந்தது. தினகரனில் வெளிவந்த என்னுடைய சிறுகதைக்கு சன்மானமாக பத்து ரூபாவுக்கு காசோலை வந்ததும் திகைத்துப்போய் நின்றது நினைவுக்கு வருகிறது. எத்தனை பெரிய காசு அது. அன்றிலிருந்து இன்றுவரை சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள், நாவல் என்று எழுதியாகிவிட்டது. சன்மானம் என்று பார்த்தால் ஒரு பத்து வீதம் எழுத்துக்குக்கூட அது கிடைத்தது என்று சொல்ல முடியாது. சமீபத்தில் என்னுடைய மகன் எழுதிய கட்டுரை ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் பிரசுரமாகி அவனுக்கு சன்மானமாக ஒரு தொகை கிடைத்தது. எவ்வளவு என்று கேட்டேன். சொன்னான். நான் 19 வயதில் இருந்து இன்றுவரை எழுதி எனக்கு கிடைத்த சன்மானத்தின் கூட்டுத்தொகையிலும் பார்க்க மகனுக்கு ஒரு கட்டுரையில் கிடைத்த பணம் அதிகமாக இருந்தது.

நியூ யோர்க்கர் பத்திரிகை மிகப்பெரியது. அதிலே ஒரு சிறுகதை எழுதுபவருக்கு 5000 டொலர் கிடைக்கும். ஓர் எழுத்தாளருக்கு அது எத்தனை பெரிய சன்மானம். அதே சமயம் ஆங்கில சிறுபத்திரிகைகள் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் சன்மானம் வழங்குகிறது. ஆனால் அது நியூ யோர்க்கர் போல பெரிதாக இருக்காது. பத்திரிகையின் நிதி நிலைமைக்கு தக்கமாதிரி சன்மானம் அமைந்திருக்கும். ஆனால் இலவசமாக ஒரு படைப்பை எழுத்தாளரிடம் இருந்து பெறும் வழக்கம் கிடையாது. தமிழில் இது எப்படியோ வழக்கமாகிவிட்டது. மரவேலை செய்பவருக்கு கூலி கிடைக்கிறது; வண்ணம் பூசுபவருக்கு பணம் கிடைக்கிறது, ரோட்டு வேலைக்காரருக்குகூட சம்பளம் என்று ஒன்று கொடுக்கிறார்கள். ஆனால் எழுத்தாளர் மட்டும் இலவசமாக எழுதித் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பது தொடர்கிறது.

சில காலத்துக்கு முன்னர் ஓர் ஓவியர் எனக்கு அறிமுகமானார். என்னுடைய சிறுகதைகளை தான் படித்திருப்பதாகக் கூறினார். எப்படி, எங்கே படித்தீர்கள் என்று ஆவலோடு கேட்டு மகிழ்ச்சிப் படுவதற்கு தயாரானேன். அவர் பதில் சொல்லாமல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். ‘ஏன் உங்களுக்கு தெரியாதா? உங்கள் சிறுகதைகளுக்கு ஓவியம் வரைந்திருக்கிறேன்.’ என்றார். ‘அப்படியா? உங்கள் படங்களுக்கு சன்மானம் கிடைத்ததா?‘ என்று கேட்டேன். அவர் இல்லை என்று சொல்வார் அவருடன் சேர்ந்து துக்கம் கொண்டாடலாம் என நினைத்தேன். அவர் ஆர்வம் குறையாமல் கிடைக்கிறதே என்று சொன்னதுடன் எவ்வளவு என்றும் சொன்னார். என்னுடைய எந்தச் சிறுகதைக்கும் அப்படியொரு தொகை கிடைத்ததில்லை. எனக்கு பெரும் அதிர்ச்சியாகிவிட்டது. எழுதுவதை விட்டுவிட்டு இனிமேல் படம் வரைய ஆரம்பித்தால் என்னவென்று என்னை தீவிரமாக யோசிக்க வைத்தது. அது எப்படி எழுதியவருக்கு ஒன்றுமில்லை ஆனால் அந்தச் சிறுகதைக்கு படம் வரைந்தவருக்கு சன்மானம் கொடுக்கிறார்கள் என்பது புரியாத மர்மமாகவே ஆகிவிட்டது. நான் அவர் குறிப்பிட்ட சிறுகதையை இரண்டு வாரங்களாக எழுதினேன். ஏறக்குறைய 40 மணித்தியாலங்கள். இதற்கு படம் வரைவதற்கு ஓவியருக்கு நாலு மணித்தியாலங்கள் தேவைப்பட்டிருக்கும். இருந்தும் ஓவியருக்கு நல்ல சன்மானம் வழங்கப்பட்டது. பத்து மடங்கு அதிக நேரம் உழைத்திருந்த ஆசிரியருக்கு ஒன்றுமே கிடையாது.

இங்கிலாந்தில் 1812ம் வருடம் சார்ல்ஸ் டிக்கின்ஸ் பிறந்தபோது ஆங்கிலத்தில் 66 நாவல்களே இருந்தன. அந்தக் காலத்தில் நாவல்கள் எழுதுவது மரியாதையான தொழிலாகப் பார்க்கப்படவில்லை. சார்ல்ஸ் டிக்கின்ஸ் 1870ல் இறந்தபோது நாவல் இலக்கியத்தைப் பற்றிய உலகப் பார்வை மாறிவிட்டது. நாவலை தொடராக எழுதி பிரபலமாக்கியது சார்ல்ஸ் டிக்கின்ஸ்தான். அவருடைய மூளையில்தான் அவர் எழுதும் கதைகளுக்கு சித்திரம் வரைந்து பிரசுரித்தால் வாசகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று தோன்றியது. அந்தக் காலத்தில் நல்ல சித்திரங்கள் வரைபவர் என்று பெயரெடுத்த Samuel Luke Fildes என்பவரை அணுகி தன்னுடைய கதைகளுக்கு சித்திரம் வரையக் கேட்டுக்கொண்டார். இருவரும் கலந்தாலோசித்து எப்படி சித்திரங்கள் அமையவேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். அப்படியே கதையுடன் சித்திரமும் வெளிவரும். ஒலிவர் ட்விஸ்ட் நாவலுக்கு சித்திரம் வரைந்தது George Cruikshank என்பவர். சார்ல்ஸ் டிக்கின்ஸ் இறந்தபிறகு தான்தான் ஒலிவர் ட்விஸ்ட் நாவலுக்கு கரு கொடுத்து எழுதவைத்தவர் என்று அவர் அதற்கு உரிமை கோரினார் என்பது வேறு விசயம்.

இப்படி ஆரம்பித்துத்தான் சிறுகதைகளுக்கு படம் வரையும் மரபு ஏற்பட்டது. இப்பொழுது ஆங்கிலத்தில் சிறுவர் கதைகளுக்குத்தான் படங்கள் வரையப்படுகின்றன. பெரியவர்கள் கதைகளுக்கு படம் வரைவதில்லை ஆனால் புகைப்படங்கள் வெளியாவதுண்டு. ஏனோ இந்த மரபு இன்றும் தமிழ் பத்திரிகைகளில் தொடர்கிறது. ஒருமுறை பத்திரிகாசிரியரிடம் பேசியபோது ’ஏன் சிறுகதைகளுக்கு படம் போடுகிறீர்கள்?’ என்று கேட்டேன். அவர் கையிலிருந்த செல்பேசியால் பல்லைத் தட்டிக்கொண்டு சொன்னார் ’படங்களை பார்த்து வாசகர்கள் ஈர்க்கப்பட்டு சிறுகதைகளைப் படிக்கிறார்கள்’ என்று. ஒரு படத்தைப் பார்த்து வாசகர்களைக் கவரும் விதமாகத்தான் தற்போதைய சிறுகதைகள் இருக்கின்றன என்று நினைத்துக்கொண்டேன். ஓவியர்களை உற்சாகப் படுத்தவேண்டும். ஊக்கம் கொடுத்து அவர்கள் சித்திரங்கள் பல வாசகர்களைச் சென்றடையவேண்டும். அவர்கள் பொதுவான படங்கள் வரைந்து கொடுக்கலாம். அவற்றை பத்திரிகைகள் வெளியிடலாம். ஆனால் எதற்காக அவர்கள் சிறுகதைகளுக்கு படம் வரைகிறார்கள். அதனால் அவர்களும் சிறுமைப்பட்டு சிறுகதை ஆசிரியர்களும் சிறுமைப்படுகிறார்கள்.

நான் ஒரு சிறுகதை எழுதி அது பத்திரிகையில் பிரசுரமானால் அதன் தலைப்பை பார்த்துவிட்டு என் சிறுகதையை படிக்க ஆரம்பிக்கலாம். அல்லது என்னுடைய பெயரைத் தெரிந்துகொண்டு சிறுகதைக்குள் நுழையலாம். அல்லது சிறுகதையின் முதல் பத்து வசனங்களைப் படித்துவிட்டு அந்த சிறுகதையை படிப்பதா விடுவதா என்பதை தீர்மானிக்கலாம். ஒரு படத்தை பார்த்து சிறுகதையை வாசிக்கத் முடிவெடுப்பது என்பது ஓர் எழுத்தாளருக்கு எத்தனை அவமானம். அதிலும் பார்க்க கூடிய அவமானம் சித்திரம் வரைந்தவருக்கு சன்மானம் கொடுத்து எழுத்தாளரை கவனிக்காமல் இருப்பது.

ஒருமுறை என்னுடைய கதை ஒன்றுக்கு சித்திரம் வரைந்திருந்தார்கள். அதிலே ஒரு பெண் உட்கார்ந்து தலையிலே சீப்பை வைத்து சீவிக்கொண்டிருந்தார். அந்தக் கதையில் எந்த இடத்திலும் ஒரு பெண் தலை முடி சீவவில்லை. ஒருவேளை கதை ஆரம்பிக்க முன்னர் சீவியிருப்பார் அல்லது முடிந்த பின்னர் சீவியிருப்பார். இந்தப் பெண்ணுக்கும் சிறுகதைக்கும் என்ன சம்பந்தம்? வேறு ஏதோ சிறுகதைக்கு கீறிய படம் என்னுடைய சிறுகதைக்கு தவறாக வந்திருக்கலாம். அல்லது பொதுவான சில சித்திரங்களை வரைந்து வைத்து அவ்வப்போது அவற்றை பயன்படுத்துகிறார்களோ தெரியவில்லை. ஒரு வாசகர் படத்தை பார்த்துவிட்டு சிறுகதையை படிக்காமல் போவதையும் நான் கவனித்திருக்கிறேன். இந்த நிலையில் ஒரு சிறுகதைக்கு படம் போடுவதில் பெரிய பயன் எதுவும் இருப்பதாக எனக்குப் படவில்லை.

சங்க நூல்களில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது ஆற்றுப்படை இலக்கியம்தான். உலகத்தில் வேறு எந்த இலக்கியத்திலாவது இப்படியான படைப்புகள் இருக்கின்றனவா என்று விசாரித்ததில் இல்லையென்றே சொல்கிறார்கள். ஒரு பாணன் அரசனைத் தேடி வருகிறான். பாடிப் பரிசு பெற்று திரும்பும்போது இன்னொரு பாணனை பார்க்கிறான். அவனை அவன் ஆற்றுப்படுத்துகிறான். இன்னமாதி ஓர் ஊரில் இன்னமாதிரி ஓர் அரசன் இருக்கிறான். அவனிடம் பாடிப் பரிசு பெற்றுக்கொண்டு நான் திரும்புகிறேன். நீயும் அவ்வாறே போய் பாடி பரிசு பெறலாம் என்று அவனுக்கு எப்படி அந்த ஊருக்கு போவது என்று வழி சொல்கிறான். அந்தக் காலத்தில் வரைபடமோ, திசைப்பலகைகளோ, GPS ஓ கிடையாது. இப்படி யாராவது வழி சொன்னால்தான் உண்டு. இந்தப் புலவர் போய் பாடிப் பரிசு பெறுவார். பின்னர் அவர் திரும்பும்போது இன்னொரு புலவருக்கு சொல்வார். அவர் போய் பாடி பரிசு பெறுவார். எறும்புகள் உணவு கண்டதும் ஒன்றுக்கு ஒன்று செய்தி பரிமாறி எல்லா எறும்புகளும் அந்த திசையில் படை எடுப்பதுபோல புலவர்களும் புறப்படுவர்.

இதிலே ஒரு ரகஸ்யம் இருக்கிறது. அனைத்து அரசர்களும் தேரும், யானையும், பொன்னும், மணியும் கொடுத்து புலவர்களை வழியனுப்புவதில்லை. புறநானூற்றில் ஓர் அருமையான பாடல் உள்ளது. பெருங்குன்றூர் கிழார் வயிறு எரிந்து பாடியது. ஒன்றும் இல்லை என்று அரசன் சொன்னால் புலவர் திரும்பியிருப்பார். அப்படிச் சொல்லவில்லை. பரிசு வருகிறது வருகிறது என்று நம்பிக்கையூட்டியதில், புலவர் பல நாள் வாசலில் நின்று களைத்து வெறுங்கையோடு வீடு திரும்புகிறார். ‘நீ பெரிய வள்ளல் என்று நினைத்து உன்னிடம் வந்தேன். தருவாய் தருவாய் என நினைத்துக் காத்திருந்தேன். வீட்டிலே ஒன்றுமில்லை. பசியோடு மனைவியும் என் குழந்தையும் காத்திருக்கிறார்கள். நான் திரும்புகிறேன். நீ வாழ்க.’ ஈயாத பல அரசர்கள் இருந்ததால் ஓர் அரசன் தந்தவுடன் புலவர்கள் அவனை ஒருவருக்கொருவர் அடையாளம் காட்டுவது அவசியமாகிறது. அவர்களும்போய் பாடி பரிசு பெறுகிறார்கள். இந்தக் காலத்தைப் போல அந்தக் காலத்திலும் சன்மானம் கொடுக்காமல் அலைக்கழித்த அரசர்கள் பலர் இருந்தார்கள்.
ஆங்கிலத்தில், சார்ல்ஸ் டிக்கின்ஸ் காலத்தில், ஒரு புத்தகத்துக்கு இவ்வளவு என்று பதிப்பாளர் முன்கூட்டியே பணம் கொடுத்துவிடுவார். புத்தகங்கள் வெளியிட்டு காசு பார்ப்பது சிரமமான காரியம்.

ஆனால் சார்ல்ஸ் டிக்கின்ஸ் ஆரம்பத்தில் இருந்தே எழுத்துக்கு சன்மானம் வாங்கும் விசயத்தில் எச்சரிக்கையாக நடந்துகொண்டார். அவரிடம் அப்போதெல்லாம் பணம் இல்லை. அவர் Pickwick நாவலை பத்திரிகையில் தொடராக ஒவ்வொரு மாதமும் ஒன்றரை பக்கம் எழுதினார். அதற்கு 15 கினிக்கள் சன்மானம் என்பது ஒப்பந்தம். தொடக்கத்தில் திருமணம் செய்துகொள்வதற்கு பணம் தேவைப்பட்டதால் இரண்டு மாத சன்மானத்தை முன்பணமாக பெற்றுக்கொண்டார். இப்படி பணக்கஷ்டத்தில் ஆரம்பித்த அவர் வாழ்க்கையில் போகப்போக செல்வம் கொட்ட ஆரம்பித்தது. ஒவ்வொரு எழுத்துக்கும் கறாராக பணம் அறவிடத் தயங்கவில்லை. ஓர் ஆங்கில எழுத்தாளர் வாழும்போதே அத்தனை பணக்காரர் ஆனதில்லை. இறந்தபோது அவரது சொத்து மதிப்பு 93,000 பவுண்டுகள். இன்றைய மதிப்பில் 10 மில்லியன் டொலர்கள்.
இப்படி தமிழில் எழுதி பணம் சம்பாதித்தவர்கள் யாருமில்லை. பாரதியும் புதுமைப்பித்தனும் அனுபவித்த வறுமை எல்லோருக்கும் தெரியும். கடந்த 50 வருடங்களில் ஒரு சிலர் தமிழில் எழுத்துக்கு நல்ல ஊதியம் பெறும் நிலை வந்திருக்கிறது. ஆனால் அது விதிவிலக்கு. அவர்கள் அடுத்தவரை ஆற்றுப்படுத்தவில்லை. பெரும்பாலான எழுத்தாளர்கள் மதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. அவர்களுக்கு தகுந்த சன்மானமும் கிடைக்கவில்லை. சங்ககாலப் புலவர் போல பலருக்கு வாசலில் நின்று வெறுங்கையோடு திரும்பிப் போகும் அவலம்தான் இன்றைக்கும்.

வட அமெரிக்க தொலைக்காட்சிகளில் அடிக்கடி காணப்படும் எழுத்தாளர் ஒருவரை தொலைபேசியில் அழைத்துக் கேட்டேன், ’அவருக்கு ஏதாவது சன்மானம் கிடைக்கிறதா?’ என்று. அவர் சொன்ன பதில் எனக்கு முற்றிலும் புதிதாக இருந்தது. அவருடைய நேர்காணல்கள் பல சானல்களில் வந்திருக்கின்றன. நிபுணராகவும் அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார். செய்தி சானல்களில் அவரை யாராவது பேட்டி கண்டால் அதற்கு சன்மானம் கிடைக்காது. அது செய்தி சம்பந்தமானது, சன்மானம் கொடுத்தால் செய்தியின் தன்மை மாறிப்போய்விட வாய்ப்பிருக்கிறது. ஆனால் நிபுணராகவோ வேறு விதமாகவோ பங்கு பற்றினால் அதற்கு சன்மானம் உண்டு.

அப்படிப் பார்த்தால் எழுத்தாளர் வெ.சா ஒரு நிபுணராக தொலைக்காட்சியில் பங்கேற்று ஐந்து நிமிடம் பேசியிருக்கிறார். இந்த தொலைக்காட்சி நிறுவனம் 10 செக்கண்ட் விளம்பரத்துக்கு 30,000 ரூபா அறவிடுகிறது என்று சொல்கிறார்கள். அப்படியானால் வெ.சாவின் 5 நிமிடத்துக்கு அவர்கள் ஊதியமாகத் தரவேண்டிய தொகை ரூபா 900,000. இதை அவர்கள் தரப்போகிறார்களா?

‘உங்களால் எங்களுக்கு 5 நிமிடம் வீணாகிவிட்டது. அந்த நேரத்துக்கு நாங்கள் விளம்பரமாக ரூபா 900,000 சம்பாதித்திருப்போம், அது நட்டமாகிவிட்டது. அதை நீங்கள் தரவேண்டும்’ என்று நிறுவனத்தினர் பெருந்தன்மையுடன் வெ.சாவிடம் கேட்காமல் இருப்பதற்கு மகிழவேண்டும்.

அ.முத்துலிங்கம்

http://www.amuttu.net/


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</