வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கட்டுரைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்யுங்கள்
 
 
 

 

 

 

 

 
     
     
     
   
கட்டுரைகள்
1
 
 
     
     
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கட்டுரைகள் கட்டுரைகள் வாயில்


புரட்சி வரட்டும் பயிர்கள் செழிக்க !

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

வளைந்தும் நெளிந்தும் செல்லும் வண்டிப்பாதையின இருமருங்கிலும் வேலிகளாய் நீளும் கிளுவை, திருகுக்கள்ளி, விடத்தாரை, கற்றாழை, மஞ்சனத்தி இவற்றினூடே புதர்களாய் இஞ்சியும், சிறு இலந்தையும், காட்டாமணக்கும், கருநொச்சியும் கூட ஒட்டி உறவாட குன்றிமணி கொடிகளும் ஊனான் கொடிகளும், பாலைக்கொடிகளும் ,பின்னிப்படர்ந்து கிடக்கிறது. இப்பொது தூரத்தில் வருவது சலங்கை ஒலியாலும், சக்கரங்களின் சத்தத்தாலும் ஒரு இரட்டை மாட்டு வண்டிதான் என்று அறிய முடிகிறது.

இருள் இன்னும் முழுமையாய்க் கரையாத கார்கால விடியல். கடந்துபோன இரவில் பெய்த மழையில் குண்டும் குழியுமாகி செம்புல நீருக்குள் தவளை ரீங்காரமிட வந்து கொண்டிருக்கிற வண்டி நிறைய அறுத்த நெல் நாற்று கட்டுகள். இடமும் வலமும் குழிகளிள் சக்கரங்கள் குதித்து ஏறி இறங்கினாலும். வண்டியை குடை சாயாமல் கொண்டு சேர்ப்போம் எனும் நம்பிக்கையில் வண்டிக்காரன் மாடுகளை சுளீர் என சாட்டையால் அடித்து விரட்டுகிறான். வாயாடி வள்ளியும், பூப்பெய்தவுடன் வார்த்தைகளை அவள் வாசலில் இட்ட கோலம்போல் அளந்து பேசுகிறாள். அறுபது வயது தாண்டிய வெளுத்துப்போன கருப்பாயி கிழவியும். தூரத்தில் வரும் ஆண்மகனை பார்த்து தன் கை இடுக்கையில் களவாணி பய போல எட்டிப்பார்த்த கொங்கயை பதினாறு முழ சேலையால் சட்டென்று இழுத்து மூடிக்கொள்வாள் .இப்படித்தான் கும்மாளமும் சந்தோஷமும் கொட்டிக்கிடந்த அவ்வூர் மக்களுக்கு தீபாவளி திருநாள். பொங்கல் பெருநாளன்று வந்தால்தான் பட்டணத்திற்க்கு போய் வரும் வழக்கம் இருந்தது. எதிரி கூட தன் வீட்டிற்கு வந்தால் விலா புடைக்க விருந்து படைத்து வாய் வலிக்க சிரிக்க வைத்து பகைமையைத்துரத்தும் பண்பு விளைந்தவர்கள். கிராம மக்களிடம். கை நிறைய காசு பணம் இல்லாவிட்டாலும் மனம் நிறைய மகிழ்சியோடு வாழ்ந்தார்கள்.வந்த விருந்தினர்களுக்கு உணவளித்து வரும் விருந்தினர்களுக்கு காத்திருக்கும் மேண்மை குணம் கொண்டவர்கள் நம் தமிழர்கள்.

பட்டணத்து நாகரீகம் மெல்ல மெல்ல தொற்று நோய் போல கிராம மக்களை உண்ண ஆரம்பித்தது. அலங்காரம்,பண்பாடு ,பழமை என யாவும் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து அந்நிய கலாச்சாரங்களை நினைத்து மத ஊடுருவல்களின் மயக்கத்திலும் மதிகெடத்தொடங்கினார்கள். ஆதலால் தொன்மங்களும் வேர்வழிச்சிந்தனைகளும் நாகரீக நஞ்சால் மறையத்தொடங்கின.

இன மொழி நில அடையாளங்களை இழந்து, அறிவு மயங்கி ,இதயம் சுருங்கி சிலர் முக மூடிகளையே முகங்களாய் அணிந்து ,குழுவியல் சிந்தனயை மறந்து தனித்தனி தீவுகளாய் போனான் இன்றைய தமிழன் ,குறிப்பாக கிராமத்து மக்கள்.

இதெற்கெல்லாம் ஆணிவேராய் இருந்த நமது பசுமை, ஒழிந்தும், பருவமழை பொய்த்ததும் அளவுக்கு மீறிய அறிவியல் முன்னேற்றத்தாலும் விளை நிலங்களை விற்று விட்டு அடுக்கங்களில் ஆவல் கொண்டனர் மக்கள். ஆறு, குளங்கள், வயல் வரப்புகள் ஆடு மாடு ,தென்னை பனை, தேன் திணை,நெல் கறும்பு, மஞ்சள் என அத்தனையும் இழந்து உறங்கும் சாய பட்டறைகளால் சாக்கடை நாற்றத்தால் விலை கொடுத்து வாங்கி தினம் ஒரு வியாதியால் அவதிக்கு ஆளாகி கொண்டு இருக்கிறோமே.

வேட்டி, சேலை, பாவாடை தாவணியை மறந்து அறை நிர்வாணமாய், பாட்டிகள் கூட நைட்டிகளில் உலாவருகிற அவல நிலை இன்று கிராமங்களிலும் தொற்றிக்கொண்டதே. அடுக்ககங்கள் போக எஞ்சியிருந்த கொஞ்ச நிலங்களிலும் உழவுத்தொழில் செய்ய யாருமே முன் வருவதில்லை. காய்நெல் அறுத்துகளம் கொண்டு சேர்க்க ஆளில்லை இன்று கிராமங்களில்.

காடுகளை அழித்து காணுமிடமெல்லாம் கட்டிடங்களை புறாக்கூடுகளாக கட்டுவதும், மணலை உடைத்து தார்ச்சலைகளை அமைப்பதும், பிளாஸ்டிக் பொருட்களை அளவின்றி பயன்படுத்தி, நிலத்தடி நீருற்று அடைபட்டு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பருவமழை பெய்வதும் பொய்த்து போனது. அன்று “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என மழை வேண்டி பாடியது சிலப்பதிகாரம். ஆனால் இன்று “புயல் போற்றுதும், பெரும்புயல் போற்றுதும்” எனப் புதுப்பாட்டு பாடினால்தான் மழை வரும் போலும். ஏனோ புயலின் புண்ணியத்தால்தான் மழையைப் பார்க்கிறோம். அப்படி பெய்கிற மழையால், பருவம் தவறி பெய்வதால் பயிரேறிய விவசாய நிலங்கள்தான் அழிகின்றன. உண்பவர்க்கு வேண்டிய உணவை தந்து தானும் உணவாக பயன்படுவதுதான் மழை என்றான் வள்ளுன்.

“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை”

ஆனால் பருவம் தவறி பெய்வதும், புயலின் புண்ணியத்தால் பெய்வதுமான பெருமழையில் யாருக்கு என்ன பயன்?

மரங்கள் இருக்கும் இடத்தில்தான் மழை வரும். நீர் இருக்குமென தமிழனின் நீர்நிலையறிவு சொல்வதை இலக்கியங்களின் வாயிலாக அறிகிறோம். பறிபோனது விவசாய நிலங்கள் மட்டுமன்று. நமது தமிழிய மருத்துவம் சொன்ன முதன்மையான மூலிகைகளும் இனி நமக்குச் சொந்தமில்லை. ஏனெனில் அமெரிக்கனுக்கு விலைபேசப்பட்டுவிட்டது. எவை எவையென நீங்களறிந்தால் நெஞ்செரியும்.

“பூண்டு, மஞ்சள், வெங்காயம், வெந்தயக்கீரை, வேப்பிலை வாழையிலைச்சாறு, வல்லாரைக்கீரை, கடுகு, சுக்கு, சீரகம்” என இவையணைத்தும் இனி நமக்கில்லை.

இப்படியே போனால் நாளை நமக்கென எந்த அடையாளமும் இல்லாமல் போய்விடுமோ என்ற மன உளைச்சல் வாட்டுகிறது.

இயற்கை கொடையாய் வழங்கிய கங்கை, யமுனா, பிரமபுத்திரா என்னும் மூன்று நதிகளிலும் கிடைக்கிற நீர் இந்திய நீர் வளத்தின் 77 விழுக்காடுகளைத் தொடுகிறது. வற்றாத இந்த ஜீவநதிகளின் நீர்வளம் கனிசமாகக் கடலில் கலந்து வீணாகிறது.

1945 இரண்டாம் உலகப்போரில் குண்டு மழையில் பொசுங்கிய (ஹிரோஷிமா, நாகசாகி) ஜப்பான் இன்று உலகின் முதல் தரத்தில் அணுகுண்டுகளையே முறியடித்து அவன் முதனிலை பெறும்போது, எல்லா வளங்களையும், (உலகின் வளமான மண்வளம் கொண்டது இந்தியாதான் என்கிறார்கள் புவியியல் வல்லுநர்கள்) ஜீவ நதிகளையும் வைத்துக்கொண்டு இன்னும் பின்தங்கிய நிலையில் நாம்.

இத்தனை வற்றாத ஜீவநதிகள் இருந்தும் தண்ணீரை விலைகொடுத்து வாங்குகிறோம். பசும்பாலைவிட பச்சத்தண்ணீர் விலை அதிகம். தமிழன் தண்ணீரை விலை கொடுத்த வாங்கியதால் எந்த வரலாறு சொன்னது; மினரல் கம்பெனிக்காரர்கள் கிராமங்களுக்குச் சென்று அப்பாவி மக்களின் மூளையை சலவை செய்து, ஆசை காட்டி, வீட்டில் ஒருவருக்கு வேலை கொடுப்பதாக ஏமாற்றி அத்தனை கிணறுகளையும் விலை கொடுத்து வாங்கிவிடுகிறார்கள். பாவம் கிராமத்தானுக்கும் மினரல் வாட்டர் குடிப்பது பேஷனாகிவிட்டது. நீர் இருக்கிற வரை உறிஞ்சிவிட்டு வறண்ட கிணறுகளை பார்த்து பார்த்து கண்ணீரால் நிரப்புங்கள் என அப்பாவி மக்களுக்கு டாட்டா காட்டிவிட்டு சென்று விடுகிறார்கள். பணம் இன்றி வறுமை வாட்டுவதால் பகைமையுணர்வு பெருகி வன்முறைக்கு ஆளாகிய கிராம மக்கள். வன்முறை உயிர்ப்பலியாகிறது. கலவரத்தில் இறந்தவர்களை, அவர்களுக்கு தாய்ப்பாலாய் தண்ணீர் தந்து உயிர்வளர்த்த அவர்களின் கிணறுகளிலேயே அவர்கள் புதைக்கப்படுர்கள். இப்படித்தான் கிராமியக் கிணறுகள் சமாதிகளாய் மாறிக்கொண்டு இருக்கின்றன. எஞ்சிய மக்கள் பிழைப்பு தேடி வேறோர் கிராமம். பிறந்த மண்ணிலேயே அகதிகளாகும் அவலநிலைமை நம்மை துறத்திக் கொண்டேதான் இருக்கின்றது. இப்படித்தான் நாகசாகியாய், ஹிரோஷிமாவாய் நம் கிராமங்கள் இன்று.இது இருபுறம் இருக்க... இலவசம் என்ற பெயரில் நம்மை பிச்சைக்காரர்கள் ஆக்கும் மகத்தான கொடுமை. எதற்கு இலவசம். போக்க்குணம் தமிழினின் இயல்பு. இயற்கை மரணமெண்திய சிசுவைக்கூட அதன் மார்பில் வாளால் கீறி புதைக்கிற வழக்கம் தமிழனுடையது. எங்கள் மண் எங்களுக்கே சொந்தமென இந்த மண்ணிலே புதைப்பதுதான் தமிழியப் பண்பாடு. எரிப்பது என்பது அவர்களின் கலாச்சாரம். இந்த வீரம் செறிந்த இனத்துக்கு இலவசம். மாற்றுத் திறனாளிகளுக்கும் கூட (ஊனமுற்றோர்) சுயமரியாதை சிந்தனையோடு உழைக்கும் போது கூன், குருடு, செவிடு, கைகால் ஊனமில்லாத தமிழினத்துக்கு இலவசம் ஏன்? இதோ இந்த புத்தாண்டுக்குள் கூட தள்ளுபடி இலவசம் என்று எத்தனையோ நிறுவனங்கள் 10 விழுக்காடு 20 விழுக்காடுகள் ஏன் பாதிக்கு பாதி 50 விழுக்காடுகள் என தங்கள் பொருள்களை விற்பனை செய்வதை விடுத்து, ஆலைகளை, தொழிற்சாலைகளை உருவாக்குங்கள். உழைக்க மக்கள் காத்திருக்கிறார்கள். அவர்களும் உயர்வார்கள், உங்களையும் உயர்த்துவார்கள்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் பொதுவுடமைச் சிந்தனையை உலகுக்கு சொன்ன தமிழன் கணியன் பூங்குந்தன். முதன்மொழி தமிழும் முகிழ்த்த முதுபெரும் நிலமும் தமிழகம்தான். இதையெல்லாம் படித்தும், கேட்டும்தான் பெருமை கொள்ளமுடிகிறது. பார்த்து மகிழ தமிழன் தயார் நிலையில் இல்லை. தொன்மம் உணர்த்த ஒரு பெரும் புரட்சி வேண்டும். ஃபிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, நெல்சன் மாண்டேலா, மாசேதுங், ஆஸ்சன் சூகியூ போன்ற மண்மீட்பு போராளிகள் யாரேனும் இங்கு தோன்றுவார்களா? (ஏன் ஹிட்லரும், இராபர்ட் கிளைவும் கூட அவரவர் மண்ணுக்காகப் போராடியவர்கள்தான்) ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பார்கள். சேர சோழ பாண்டியர்களிடமும் சேர்ந்து வாழாத வரலாற்றுப் பிழை உண்டு. தமிழா! நமக்கு வராதா இங்கிலாந்தில் ஆரம்பித்த அந்த பசுமைப் புரட்சி?

தமிழ் எடுத்து வாழ்த்தவா முடியும் இந்த புத்தாண்டை!


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</