வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கட்டுரைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்யுங்கள்
 
 
 

 

 

 

 

 
     
     
     
   
கட்டுரைகள்
1
 
 
     
     
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  கட்டுரைகள் கட்டுரைகள் வாயில்


ஒரு கவிதை நாடகமாக அரங்கேறியது

வெளி ரங்கராஜன் 21-12-2010 ; 12:02 AM

அண்மையில் விஜய் மகேந்திரனின் சிறுகதை விமர்சனக் கூட்ட நிகழ்ச்சி ஒன்றில் கூத்துப் பட்டறை நடிகரான தம்பி சோழன் கவிதை நிகழ்வொன்றை நிகழ்த்திக் காட்டினார். ஒரு எளிமையான வெளிப்பாட்டில் தன்னுடைய உடல்மொழியின் துணை கொண்டு ஒரு நெருக்கமான சூழலை உருவாக்கி அவர் கவிதையை அண்மைப்படுத்திய விதம் ஈர்ப்பு கொண்டதாக இருந்தது. நம்முடைய நவீன நாடக நிகழ்வுகள் சூழல் சித்தரிப்பு மற்றும் அரங்க அமைப்பின் பிரத்யேத்தன்மை காரணமாக இடம் பெயர்ந்து எடுத்துச் செல்லப்பட முடியாத நிலையிலேயே உள்ளன. அதிக பொருட்செலவு மேற்கொண்டே அவைகளை இடம் பெயர்க்க இயலும் என்பதால் நாடகத் தளத்தில் மேற்கொள்ளப்படுகிற செறிவான பல படைப்பு முயற்சிகள் ஒரு தடவைக்கு மேல் நிகழ வாய்ப்பில்லாதாகவே உள்ளன. சில மாதங்களுக்கு முன் வங்காள நாடகக் காரரான பிரணாப் முகர்ஜி (இவர் வங்க நாடகாசிரியர் பாதல் சர்க்காருடன் பணிபுரிபவர்) நாட்டுப்புறவியல் மையத்திலும் ஐஐடி வளாகத்திலும் தன்னுடைய தனி நபர் நாடக நிகழ்வு ஒன்றை குறிப்பான சில பொருள்களின் துணையுடன் நிகழ்த்தி ஒரு நெருக்கமான உரையாடலை உருவாக்கிய விதம் அதிக படைப்புணர்வும், கற்பனையும் கொண்டிருந்தது. கூத்துப் பட்டறையின் இன்னொரு நடிகையான வினோதினி கூட அண்மையில் பாமாவின் சாமியாட்டம் சிறுகதையைத் தழுவி அமைந்த தன்னுடைய தனி நபர் நாடக நிகழ்வை வீட்டு முற்றங்களில் நிகழ்த்திக் காட்டி ஒரு ஆழ்ந்த பதிவை உருவாக்கினார். இதுபோன்ற முயற்சிகளின் லகுத்தன்மையும் எளிதில் இடம் பெயரும் தன்மையும் நாடக நிகழ்வுகளின் இருப்புகளை விரிவுபடுத்தும் சாத்தியங்கள் கொண்டிருப்பது ஒரு நம்பிக்கையூட்டும் அம்சமாக இருந்தது.

நடிகர் தம்பி சோழன் ரமேஷ் பிரேதனின் பலூன் வியாபாரி என்ற கவிதையை நிகழ்த்திக் காட்டினார். இந்த பலூன் வியாபாரி தான் கோமாளியாகி குழந்தைகளை குதூகலப்படுத்துபவன். அவர்களது கற்பனையில் பிடிபடாத மருட்சியூட்டும் பல படிமங்கள் பலூன்கள் வடிவில் கைகளுக்குக் கிடைக்கும்போது அந்தக் குழந்தைகளின் ஓட்டமும் விளையாட்டும் கொண்டாட்டமும் அதிகரிக்கின்றன. பலூன் வியாபாரி ஊதிக் கொடுத்த பாம்பு பலூனை எடுத்துக் கொண்டு ஒரு குழந்தை ஓட இன்னொரு குழந்தை கீரி பலூனுடன் அதைத் துரத்துகிறது. அப்போது தேரில் பவனி வந்த சாமி பலூனின் கழுத்தை பாம்பு பலூன் சுற்றி கீரியை பயமுறுத்துகீறது. கீரி பலூன் குழந்தையின் கையைக் கடித்து பிடி விலக்கி தாவி ஓடிவிடுகிறது. பாம்பையும் கீரியையும் இழந்து அழும் குழந்தைகளுக்கு ஆப்பிள் பலூன்களை தின்னக் கொடுத்து அவர்களின் குதூகலத்தை பலூன் வியாபாரி மீட்டெடுக்கிறான். பௌரானிகத்தின் புனைவுகளில சிக்குறும் விளையாட்டு கோமாளிகளாலும் குழந்தைகளாலும் மீட்பு பெறுகிறது.

கருப்பு, சிவப்பு என வண்ணங்களின் பெயர்களை சொல்லிக் கொண்டு கோமாளியாக பலூன் வியாபாரி பார்வையாளர்களிடையே நுழையும்போதே சூழலில் ஒரு நாடகத் தளத்தின் உணர்வு உருவாகிவிடுகிறது. இங்கும் அங்கும் ஓடி பலூன்களை எடுத்து வந்து பார்வையாளர்களிடம் கொடுக்கும்போது எல்லோரும் குழந்தைகளோடு ஒரு வேடிக்கை உணர்வு தொற்றுகிறது. ஆட்டத்தையும் காட்சி சொல்லாடலையும் அவர் அதிகரிக்க அதிகரிக்க கவிதையின் வீச்சுக்குள் மெல்ல மெல்ல பார்வையாளர்கள் நகர முடிகிறது. நடிகரது உடல் தன்மையின் நெகிழ்வும் நெருக்கமும் கவிதையின் கற்பனைத் தளத்தை மேலும் மேலும் அண்மைப்படுத்துகிறது. வாயிலிருந்து வரும் வார்த்தைகளைக் கொண்டே நாடகத்தை எதிர்கொள்ளப் பழகிய நம் சூழலில் இந்த உடல் தன்மையின் நெருக்கம் எதிர்கொள்ளப் பழகிய நம் சூழலில் இந்த உடல் தன்மையின் நெருக்கம் கவிதையின் அண்மையை சாத்தியப் படுத்தியதை விநோதமாகப் பார்க்க முடிந்தது. கடைசியில் இவை நேற்றைய என் கனவில் என கவிதை சொல்லி முடிக்கும்போது யதார்த்தத்தின் அபத்தம் சூழலில் மெல்லப் பரவ ஆரம்பித்தது. இதுதான் அந்தக் கவிதை

கோமாளிகள் நிறைந்த திருவிழாவில்
பலூன் வியாபாரியான நான்
குழந்தைகளின் குதூகலத்திற்கான
கோமாளியாகிறேன்
நான் வாய்கொண்டு ஊத
நீல நிறப்பாம்பு படமெடுக்க
அதன் வால்முனையை முடிந்து
குழந்தையிடம் கொடுத்தேன்
கூட்டத்திற்குள் பலூன் பாம்பை
தூக்கிக் கொண்டு ஓடினான்
கூட்டம் மருண்டு விலகியது
இன்னொரு பிள்ளை
கீரிப்பிள்ளை பலூனை பெற்றுக்கொண்டு
பாம்பைத் துரத்தினான்
கூட்டம் சிரித்து அலைமோதியது
பலூன்களால் கை கால் முகம் உடம்பு
எனச் செய்யப்பட்ட சாமி
தேரில் பவனி வந்தது
ஓடிச் சென்ற பாம்பு
சாமியின் கழுத்தில் சுற்றி
தலைக்கு மேல் படம் விரித்து
கீரியைப் பயமுறுத்தியது
குழந்தையின் கையைக் கடித்துவிட்டு
பிடிவிலக்கிக்கொண்ட கீரி
கூட்டத்துக்குள் தாவி ஒடியது
பாம்பையும் கீரியையும் இழந்த
இரு குழந்தைகள்
பலூன் வியாபாரியான என்னிடம் வந்தனர்
நான் அவர்களின் அழுத முகம் துடைத்து
ஆப்பிள் பலூன்களைத்தந்தேன்
தின்றபடி வீடு திரும்பினர்
நேற்றைய எனது கனவில்

அதிகார வழிபாடு கொண்ட பஜனைப் படைப்பாளிகளின் ஆரவாரக் குரல்கள் நிறைந்த நம் சூழலில் இந்த எளிய நிகழ்வு காத்தியப்படுத்திய கவிதை உரையாடல் மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.